Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Tuesday, April 24, 2018

கணக்கன் ஏரியும், கழிவு நீர் சுத்திகரிப்பும்- ஒரு பார்வை.

.

புதுவை மாநிலம் 493 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாகும்.புதுவைப் பகுதி மட்டும், 293 சுதுர கிலோ மீட்டர் அளவுடையது..புதுவை மாநிலத்தில் சிறியதும், பெரியதுமாக 86 ஏரிகள் உள்ளன.

கணக்கன் ஏரி:
புதுவை உழவர்கரை நகராட்சி எல்லைக்குள், வழுதாவூர் சாலைக்கு தெற்கில்; புதுச்சேரி நகரத்தின் இதயப் பகுதியில்;  13 எக்டேர் பரப்பளவில் 1.838 சதுர கிலோ மீட்டர் நீர்ப்பிடிப்பு;  கொள்ளளவு கொண்ட பழமையான ஏரியாகும்.

ஏரிக்கு நீர் கொண்டு சேர்க்கும் கால்வாய்கள்:

1.தெலாசுப் பேட்டை கால்வாய்
2.மேட்டுப்பாளையம் கால்வாய்
3.சண்முகாபுரம் வெள்ளவாரி

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட வேளாண்மைப் பகுதிகள், நகரமயமாக்கல் தாக்குதலின் விளைவாக, இவ்வேரிக்கு ஆயக்கட்டு பகுதிகள், தற்போது அறவே இல்லை.

சாக்கடை நீர்- மாசு அடையாமல் பாதுகாப்பு:

3 வடிகால்கள் வழியாக, ஏரியை நோக்கி பாய்ந்து வரும் சாய்க்கடை நீர், உழவர்கரை மேட்டு வாய்க்கால் மற்றும் மோகன் நகர் சாய்க்கடை கழிவு வாய்க்கால்களுக்கு அனுப்பப்பட்டு, கணக்கன் ஏரி மாசடையாமல் காப்பாற்றப் பட்டு வருகிறது.புதுச்சேரி நகர புறப்பகுதியில், மழைநீர் பிடிப்பு பகுதியாக, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் ஏரியாகவும் விளங்குகிறது.

புதுவையில் பாதாள சாக்கடைத் திட்டம்:

கழிவுநீர் மேலாண்மை, பொதுநலம் ஆகியவற்றின் அடிப்படையில் முதன் முதலாக, 1980ல், ஒருங்கிணைந்த நகர வளர்ச்சித் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடைத் திட்டம், புதுவை அரசு பொதுப்பணித் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது.

நகரம் மற்றும் நகர்ப்புறம்- மண்டலங்கள் பிரிப்பு:

1.புதுச்சேரி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
2.முத்தியால்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
3.முதலியார்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
4.நெல்லித்தோப்பு, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
5.இலாசுப்பேட்டை, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
6. தட்டாஞ்சாவடி, அதனை சுற்றியுள்ள பகுதிகள்
7.முத்தரையர்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்
8. மூலகுளம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்
9.ரெட்டியார்பாளையம், அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

கழிவுநீர் சேகரிப்பு இறைப்பு / சுத்திகரிப்பு நிலையங்கள்:

1. குருசுக்குப்பம்
2.தெபசான்பேட்டை
3.துப்ராயப்பேட்டை
4.இலாசுப்பேட்டை

மேற்காணும் நான்கு நிலையங்கள், 98 கிலோ மீட்டர் அளவிற்கு பாதாள சாக்கடைத் திட்டத்தில் தம் பணியை செய்து வருகின்றன.இதன்படி 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு  செயல்பாடுகளினால், 30% விழுக்காட்டு மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

இலாசுப்பேட்டை நிலையம், புதுவையின் வடக்கு பகுதியில், 7கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.நாள் ஒன்றுக்கு 12.5 மில்லியன் லிட்டர் கழிவு நீரை கையாள்கிறது. இது, 15.3 மில்லியன் லிட்டர் அளவிற்கு மேம்படுத்திடும் உத்தேசம் உள்ளது.துப்ராயப்பேட்டை நிலையம், நகருக்கு மேற்குப் பகுதியில், 2 கி.மீ. தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் 2.5 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, கடலில் விடுகிறது. இலாசுப்பேட்டையில் 125 ஏக்கர் பரப்பளவில் கழிவு நீர் சுத்திகரிப்பு பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள்

14 சாக்கடை நீர் சேகரிப்பு திட்டங்கள் அரசாங்கத்தின் உத்தேசத்தில் உள்ளது. அதில், கழிவு நீர் சுத்திகரிப்பு, கீழ்க்காணும் இடங்களில்/பகுதிகளில், 2008 ஆம் நிதியாண்டில் செய்து முடிப்பது என முடிவு செய்யப்பட்டது.

1. கணக்கன் ஏரி- 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு
2.துப்ராயப்பேட்டை, 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு
3.இலாசுப்பேட்டை 24 மில்லியன் லிட்டர் நாள் ஒன்றுக்கு.

கணக்கன் ஏரியில் கழிவு நீர் சுத்திகரிப்பு - ஏன்?

கழிவு நீர் சேகரிப்பது, சுத்திகரிப்பு செய்ய வேண்டியது, நகர சீரமைப்புத் திட்டத்தில் அவசியமானது ஆகும். இதில் இரு வேறு கருத்துகளுக்கு இடமில்லை.எனினும், மழை நீர் சேகரிப்பு நீராதார அமைப்பாக பன்னெடுங்காலமாக விளங்கிடும் மிகப் பழமையான கணக்கன் ஏரிப் பகுதியில், இத்தகைய திட்டம் மேற்கொள்வது ஏரியின் நிலைப்புத் தன்மையை பாதிக்கும்.

படிப்படியாக கழிவு நீர் கலந்து, கழிவுத்தொட்டியாக உருமாறி, சீர்குலையும், சிறப்பிழக்கும். நெடிய நோக்கில் ஏரி இருந்த இடம் தெரியாமல், சுவடு மறைந்து போகும்


Wednesday, March 21, 2018

வன விலங்குகள் ஆணையம்!

வனவிலங்குகளுக்கு எதிரான வன்மங்கள் தொடர்கதையாகிறது! மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாநிலப் பகுதிகளில். தொடர்ந்து பெட்டிச் செய்தியாக, பேசும் செய்தியாக ஊடகங்களில் சில நாட்கள்.வனத்துறை அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை; வனத்துறை அமைச்சர் நேர்காணல், அத்துடன் அடங்கிப் போகும்.

வனப்பகுதிகளில் உள்ள தோட்டப் பயிர்கள் நாசம்; குடியிருப்புகள் சேதம்; ஓரிருவர் சாவு ஆகியவற்றுடன், மனித உடமை அழிப்பு, உயிரிழப்பு செய்திகளின் அழுத்தம் அதிகமாக, வனவிலங்குகளின் இழப்பு; வாழ்விட அழிப்பு; உணவுப் பற்றாக்குறை; காட்டுப்பகுதிகளில் நிலவும் வறட்சி ஆகிய பிரச்னைகளில் தீர்விற்கு இதுவரை ஆக்கபூர்வ செயல் நடவடிக்கை அரசிடம் இல்லை!

பல தளங்களில், துறைகளில்; மேம்போக்காக செயல்படும் அரசு நிர்வாகம்; ஆட்சி அதிகாரம் இப் பிரச்னையிலும் நீண்ட நெடிய, நிலைப்பான தீர்வுகாண முனைப்பும், முன்னோடித் திட்டமும் இல்லை!

 மனிதர் வாழ்ந்தால் போதும், அவர் வாக்காளர், அடுத்தடுத்த தேர்தலில் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற உணர்வு, முந்துரிமை, விலங்குகள் தானே அவை! என்கின்ற அலட்சியம், அவை என்ன செய்துவிடப் போகிறது? என்னும் அலட்சிய மனப்பான்மை, போக்கு மேலோங்கி விளங்குகிறது.

சூழல் காப்பாளர்களும், சிறுபான்மை அளவில் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தாலும், அதன் வீச்சிற்கு ஆதரவு அளித்திடும் ஊடகங்கள் , மிகச் சிலவே! மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும், இத்தகைய கொடுமை அவர்களது அமைப்பு விதிகளுக்கு, செயற்பாட்டு வரையறைகளுக்குள் வரவில்லை என ஒதுங்கி வருகிறார்கள் அல்லது பதுங்கி வருகிறார்கள்!

மனித உரிமைக்கு பல ஆணையங்கள் உள்ளது போல், வன விலங்குகள் வாழ்வுரிமைக்கு ஆணையம் ஒன்று அரசாங்கம் அமைத்திட வேண்டும்.

வன உரிமைச் சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றை முறையாக நிர்வகித்து, பாதுகாத்திட செயல்திட்ட ஏற்பாடுகள்,

மாவட்ட ஆட்சியர் , மக்கள் பிரதிநிதிகள், வனத்துறையினர் ஒருங்கிணைந்து, சூழல் பாதுகாப்பின்  ஒரு முக்கிய அம்சமாக வனவிலங்குகள் வாழ்விடப் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் என்பதே,

 மனித நேயம் உள்ள சூழல் காப்பாளர்களின் ஒருமித்த கோரிகைக் குரல் ஆகும். அரசு செவி சாய்க்குமா?

Friday, October 17, 2008

எங்கே!

மரம் எங்கே!
மனிதர் இங்கே!

குளம் எங்கே!
குழாய் இங்கே!

ஏரி எங்கே!
நிறுத்தம்
இங்கே!

மண் எங்கே!
வண்டிகள்
இங்கே!

ஆறு எங்கே!
'லாரிகள்'
இங்கே!

கழனி எங்கே!
கட்டிடம் இங்கே!

நீர் எங்கே!
கடல் இங்கே!

வானம் எங்கே!
வாழ்க்கை எங்கே!

பட்டிப்பூ

சாவுக்கா பூத்தோம்!
எம்மை எப்படி!
அப்படி அழைப்பீர்!

கடற்கரை சாலைகளில்!
சன்னியாசித் தோப்பில்!
பாப்பம்மா இடுகாட்டில்!

வெண்மை நிறத்தில்!
வெளிர்,
முளரி நிறத்தில்!
அலை, அலையாக!

அது சாவுப் பூ!
பறிக்காதே!
என்பார்

கல்லறை
வாணரப் பேட்டையில்!
காட்சிப் பொருளாக!
எட்டிப் போய்!

எம்மை !
தொட்டியில் கூட
வைக்கவில்லை!

வாழ வைக்கும்
எம்மை!
விலக்கி வைத்தீர்!

எசமானுக்கு புரிகிறது!
'வேப்பிலையை
தம் மாப்பிள்ளை'
என்றவர்!

இரத்தப் புற்றுக்கு
எம்மிடம் !
சாரம் இருக்கிறது
என்று!

Tuesday, October 14, 2008

கிருமாம்பாக்கம்!

கிருவிகள் !
கருவிகளுடன் !
களம் இறங்கி !
பாத்திகள் கட்டி!
பள்ளாங்குழி ஆடி!

நீர் ஆதார
ஊருணி!
ஊரின் அச்சாணி!
கழட்டினார்!
இரால் பண்ணை!
ஏரி மறித்து!

என்றும் போல்!
இன்றும்!
எமது அரசு!
கிருமமாய்!

Thursday, June 19, 2008

சுற்றுலா !

முன்னேற்பாடு செய்யா
முடங்கிய நிர்வாகம்!
முடக்கத்தானையும்
தோற்கடிக்கும்!

தூர்வாரும் பணி
தொலைவில் வைத்து!
கற்கள் கொட்டும்!
காசுகள் புரளும்
'கவின் மிகு கடல்'

ஈச்ச மரம் இளிக்கும்!
குடை விரிக்கும்!
பகலில்!

நீர் ஊற்று!
கடலின் உள்!
இலட்சங்கள்!
ஏப்பம்!

Friday, May 30, 2008

கொள்ளை!

ஆற்று மணல் கொள்ளை!
சேற்று மணல் கொள்ளை!
செம்புலம் செதுக்கி!
நம் புலமா!
ஐயுறவு கொள்ளும்
நிலை!

ஆழம் அகலம்
ஆற்றின் பரப்பை
ஒக்கும்!

இயற்கை மீது
ஆதிக்கம்!
இடைவிடாது
கொள்ளை!

தடை இன்றி
வியாபாரம்!
தண்ணீர் மட்டம்
கீழிறங்கும்!

ஆட்சியர்
எவரும் அலட்சியம்!
காட்சியர் கோலம்!
காலம் போக்கும்!

Saturday, May 24, 2008

சீர் அழித்து வருகின்றனர்.....

ஏரிகளில் தண்ணீர் குடி நீர் பயன்பாட்டுக்கு". உலக நீர் நாளில் உரை. செய்தித் தாள்களில் வண்ணப் படத்துடன் செய்தி, சென்ற ஆண்டு மார்ச் 21ல்.

"ஊசுட்டேரியில் மீன் பிடிக்க ஏலம், கோர்க்காடு ஏரியில் மீன் பிடிக்க ஏலம்", "கிருமாம்பாக்கம் ஏரியில் இறால் வளர்ப்பு, தனியார் முயற்சி". இதுவும் செய்தி. ஊடகங்களில் வலம்.

புதுச்சேரி இயற்கை சூழல், மழை நீரை மட்டுமே நம்பி வாழக்கூடிய அடிப்படை, வடகிழக்கு பருவமழை; தென் மேற்கு பருவமழை; இவை இரண்டுமே நீர் ஆதாரம். தமிழ் நாட்டில் ஓடும் பெண்ணை ஆறு, செஞ்சி ஆறு ஆகியவை நீர் பிடிப்பு பகுதிகளாக, புதுவையில் அமைந்துள்ள ஏரிகளுக்கு, காலங் காலமாக ஊட்டம் அளித்து வருகிறது.

பருவ மழை என்பது நிச்சயமற்றத் தன்மை உடையது. மேல் தண்ணீரைத் தரும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், மக்களுக்கு வேளாண்மைக்கும், குடி நீருக்கும் வாழ்வளித்து வருகிறது.

எனினும் அரசாங்கம், 1968- 69ல் வறட்சி ஏற்பட்டு, புதுவை மக்கள் அல்லல் பட்டதை மறந்து விட்டதாக தெரிகிறது, 1972ல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் புதுவையில் பெருகி வரும் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஆழ் குழாய் கிணறுகளை அமைத்தது.

அதிக அளவில் நீர் தேவை பெருகியதற்கு ஏற்ப, நீர் மேலாண்மைத் திட்டங்கள் இதய பூர்வ முயற்சியாக, நடவடிக்கையாக, புதுவை அரசு மேற் கொள்ள வில்லை. மாறாக, நீர் அதிக அளவில் உறிஞ்சும், நீர்த் தேவை அதிகம் உள்ள தொழிற்சாலகள், எடுத்துக்காட்டாக, காகித தொழிற்சாலைகள்; அல்கலித் தொழிற்சாலைகள்; குளேரைட் தொழிற்சாலைகள்; வேதியற் தொழிற்சாலைகள் ஆகியவைகள் நல்ல விளை நிலங்களுக்கு அருகில்; ஆற்றங்கரைகளில்; செம்மண் நீர் பிடுப்பு பகுதிகளில்; கடற்கரைக்கு அருகில் அமைத்து ,அதன் கழிவுகளை அரவமின்றி கடலிலும் , ஆற்றிலும், நிலத்தடி நீரிலும், தொடர்ச்சியாக விட்டு, புதுவையின் நீர் ஆதாரத்தை பெரிதும் சீர் அழித்து வருகின்றனர்.

Sunday, March 2, 2008

உளவு செயற்கை கோள்!

குப்பைத் தொட்டி ஆக்கினாய்
பூவுலகை!
போதாது என்று
வெப்பம் சேர்த்தாய்!
வேகமாய்!

உலகைக் கெடுத்தது
போதாது என்று !
வெளியைக் கெடுத்து
வருகிறாய்!
யாருக்கும் தெரியாமல்!
ஊருக்கும் புரியாமல்!

உளவுக்காக விண்ணில்!
எண்ணிலா
செயற்கை கோள்கள்!
அடுத்த நாட்டின்
அந்தரங்கத்தை
அரவமின்றி
ஆயும் உணர்ச்சி!
காணும் கிளர்ச்சி!

குட்டு பட்டு விட்டால்!
குண்டு விட்டு!
கண்டம் பாய்ந்து !
தீக்கிரையாக்கும் வித்தை!


விண்வெளியைப் பாழ்படுத்தும்
தன்னதிகார வெறி !
அறிவியல் முதிர்ச்சி!
ஆராவரம்!
தொழில்நுட்பம்!

மண்பதை மாசு முடிந்தது!
விண்பதை மாசு ஆரம்பம்!
எதிலும் குப்பை சேர்க்கும்!
எம் திறமை!
வெளியிலும்!
கொடியேற்றம்!

Tuesday, December 4, 2007

இந்தியா- வளர்ச்சிக் குறியீட்டு எண்!

இந்தியா, அய்க்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128க்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது, இது நல்ல செய்தி அல்ல. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 1990லிருந்து, ஆன்டுதோறும் மனித வளர்ச்சி அறிக்கையை தயாரித்து வருகிறது. வளர்ச்சித் திட்டத்திற்குப்பின் மக்களை மையப்படுத்தும் நோக்கத்திற்கு, முக்கியம் அளித்து இவ்வறிக்கையை தயாரித்து வருகிறது.

1. வாழ்நாள் நீட்டிப்பு
2. முதியோர் கல்வி அளித்தல்
3. மக்களின் வாழ்க்கைத்தரம்,

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவ்வறிக்கை தயார் செய்து, இறுதி செய்யப்படுகிறது.

இந்திய அரசு கல்விக்கு 1991ல் 12.2% சத வீதம் செலவு செய்தது. 2005ல் 10.7% சதவீதமாக இது குறைந்துள்ளது. 58% சதவீத குழந்தைகள் மட்டுமே காச நோய் தடுப்பு ஊசி அளிக்கப்பட்டுள்ளது. 22% சதவீதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் வயிற்றுப்போக்கு அளிக்கப்படும் வாய் வழி மருந்து அளிக்கப்படுகிறது.

பசுமையக வளி வெளிப்படுதுதல் பிரச்சனையிலும், இந்தியா அதிக அளவு வெளிப்படுத்துதல் காரணமாக மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128 க்கு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 2050க்குள் பசுமையக வளி/ காற்று வெளிப்படுத்துதலை 1990ன் அளவிற்கு ஒப்பிடும்போது 50% சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் 80% சத வீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2020க்குள் 20 லிருந்து 30% விழுக்காடு வரை குறைத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி அடையும் நாடுகள் 20% சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. அய்க்கிய அமெரிக்க நாடு, ஆண்டு தோறும் நபர் ஒன்றுக்கு, 20 டன் அளவு பசுமையக வளியை வெளிப்படுத்துகிறது. மிக அதிக அளவிலான பசுமையக வளியினை வெளியிடுகிறது. இந்தியா ஆண்டு தோறும், நபர் ஒன்றுக்கு 1 டன் பசுமையக வளியை வெளியிடுகிறது.

Thursday, July 12, 2007

விடைதருமா?

ஆற்றில் ''லாரிகள்''
அலை அலையாக
அள்ளும்,
'அல்லும் பகலும்'
ஆழப்படுத்தும்,
காயத்தை.


"குருதியென நீர் பிடிப்பும்''
படிப்படியாக வற்ற,
சோகை,
"எம்மிடம் தங்க''
''தொகை உம்மிடம் தேங்க''


"ஆற்றல் மறவர்"
தேறினார்,
அதிகாரத்தில்,
அலங்காரத்தில்,


" மேட்டுப்பகுதி மட்டும்
மட்டமா"
" வெட்டி வீழ்த்துகின்றனர்"
''செம்மண் உடல்"
"சிதைந்து பாதாளமாக"

Sunday, June 17, 2007

காவு கொடுப்போம்!

சொல்லாமல் வளர்த்தனர் அன்று!
சொல்லாமல் ஒழித்தனர் இன்று!
வீட்டிற்குள் இருக்கும் மரத்திற்கு
விடை கொடுப்போம்!


உத்தரத்தில் இருந்தாலும்,
சத்திரத்தில் இருந்தாலும்,
சாய்த்திடுவோம்.


சாவு கொடுப்போம்,
வளர்ச்சிக்கு
காவு கொடுப்போம்,
சடுதியில்.


கற் குவியல்களை கொட்டி,
கருங்கல் தளம் அமைப்போம்,
நெற் குவியல்களை
நெட்டித் தள்ளுவோம்.


கம்பிகளை நம்பி வெம்பி
வாழ்வோம்,
வெப்பம் மிகுதி ஆனால்,
மின் விசிறி, குளிரூட்டி,
குவிமையமாக
கூட்டிற்குள் அமர்ந்திடுவோம்.


குவலயம் சூடானால் என்ன?
கூட்டம் கூட்டமாக,
மனிதர்கள் இறந்தால் என்ன?


வணிகம் எனக்கு,
வசதி எனக்கு,
அசதி போய் விடும்,
ஆயுள் கூடிடும்.

Wednesday, June 13, 2007

கோகிலம் வாழ்க!

கூவி ஓய்கிறாய்
கூட்ட மனிதரிடை
அன்றாடம்
அரிதாய்
உன் குரல்
செவி மடுப்போர்
எவர் உள்ளார்


மாந்தோப்பு
மண்டியிருந்த சாவடி
மண்ணில்
பச்சை பரப்பியிருந்த
நிலம்
உம் புலம்


ஒண்டிக் குடியாய்
ஓயாத நெரிசலில்
ஒலி எழுப்பும்
வாகனங்களுக்கு
இடையில்
கிலியுடன்
வலம் வரும்
வாழ்க்கை


குயில்களின் கோட்டம்
குமிழி ஆன பின்னும்
நம்பிக்கை
உமக்கு அதிகம்


நாளெல்லாம்
உம் இருத்தலை
எம் செவிகளுக்கு
பண்பலையாக
ஓயாமல்
அளிக்கிறாய்


ஒன்றிரண்டு பேராவது
ஒப்பிடுவார்
உள மகிழ்வார்


உணர்வு பெற்ற
மண்ணின் கீதம்
மறந்து விடவில்லை
மறைந்தும் விடவில்லை