Saturday, March 31, 2018

கண்ணாமூச்சி!











துயிலெழும்போது துலங்கிய எண்ணம், கிளம்பிய சிந்தனை; திரண்ட கருத்துக்கள்; வடித்திட ஏடெடுத்தபோது; வசப்படாத மாயம் பல தருணங்களில். மனத்தின் கண்ணாமூச்சி!

சுற்றி எழும் சத்தம், சந்தடி, வந்த அடி தெரியாமல் சிந்தனை வழி மாற்றிடும் வந்த விசையில் தங்க இயலாது!

தவித்த கணம் கடந்தும் தயாரிப்பிற்குள் வராது!   பல முறை இதுபோல் நிகழும், நீளும் .
உள்ளக் கடலின் ஓயாத அலை அடிப்பில் உற்சாகம் உடைந்து!

விழிப்பு






('போயம் அண்டர்ஸ் டாட் காம்', வலை தளத்தில்,' வேகிங்' என்கின்ற தலைப்பில் காளிதாசர் கவிதை ஆங்கில வடிவத்தின் தமிழ் மொழியாக்கம்- முத்துக்கண்ணு)


மனநிறை மனிதன் கண்டிடும் கண காட்சி
அன்றி,
ஒலி இழை அவனைத் தொடும் உணர்ச்சி,
நினைவுணரா விருப்பம்
நெஞ்சில் வழிந்தோடும்;
நினவில் கொள்.
அவன் விருப்ப வடிவேற்றம்;
தொடர்பிற்கு வெளியே அதுவேயாக;
இவ்வாழ்விற்கு முன்.
தன் பதிவேற்றத்துடன்
அவனுள் காத்திருக்கும்.

Friday, March 30, 2018

"அட்டைக் கடி"








கருவிழி அடையாளம்!
கைரேகை அடையாளம்!
எத்தனை அடையாளம் பாருங்க!
எல்லாம் எமக்குத்தான் கேளுங்க!

அட்டைக் கட்டி பிறந்தேன்!
கொட்டைக் கட்டி பறந்தேன்!
அட்டைக் கடியில்
அன்றாடம்.

படிப்படியாய் குருதியிழந்து
தெருப்படியாய்,
தேகம் குலைந்து;
தேசிய அடையாளம்.

மன வீக்கம்










எங்கா வச்சா எனக்கு தெரியல
ஏங்க வச்சா எதுக்கு புரியல
தங்க வச்சா தவிப்பு தாங்கல
பொங்க வச்சா பொறுக்க முடியல
வங்கை வச்ச நெஞ்சம் நீங்கல
வாடிப்புட்டா வாழ்க்கை நெருப்புல
தேடிப்பார்த்தால் தேடல் முடியல
தேங்கிப் போனான்
மன வீக்கம் வடியல

பெயரலாம்





முடுக்கலாம் முடக்கலாம்
முடக்கி அடுக்கலாம்
கலைக்கலாம்
கலைத்து அடுக்கலாம்

மறக்கலாம் நினைக்கலாம்
நினைத்து மறக்கலாம்
குறைக்கலாம் கூட்டலாம்
மறைக்கலாம்
மறைத்து
திறக்கலாம்
திளைக்கலாம்


திளைத்து திணறலாம்
முளைக்கலாம்
முளைத்து விளைக்கலாம்
வீழலாம்
வீழ்ந்து
பெயரலாம்

இருள்









( 'தி டார்க்'- கரோல் ஆண் டப்பி,
'போயம் அண்டர் டாட் காம்', வலை தளத்தின் கவிதை,
 மொழியாக்கம்- முத்துக்கண்ணு)


இருண்மை, பூங்காவாக

எக்கிடும் பந்தென, நிலவும்

சொக்கிடும் மனம்,

அச்சம் இல்லை எவை குறித்தும்.

(அயற்கோள்வாசி தவிர்த்து....)

பண்டமாற்று




(போயம் அண்டர் டாட் காம் வலை தளத்தில் ' பார்ட்டர்', தலைப்பில், சாரா டீசுடேல் எழுதிய ஆங்கில கவிதையின் மொழியாக்கம்- முத்துக்கண்ணு)

இனிமை மேம்படுத்திடும் வாழ்க்கை,
அழகு அதிசயம் அனைத்தும்,
நீல அலைகள் வெண்மையாகும் குன்றின்மேல் படர்ந்து,
மேலெழும்பும் தீச்சுவாலை தாலாட்டும் ஊஞ்சல் ,
குழந்தைகள் முகம் தூக்கி முறுவலுடன்,
அதிசயத்தை கோப்பையாக்கி கையில் ஏந்தி

இனிமை மேம்படுத்திடும் வாழ்க்கை,
பொன் வளைவாக இசை,
மழையில் நறுமணம் தரும் 'பைன்' மரங்கள்,
உம்மை நேசிக்கும் விழிகள், அரவணைக்கும் கரங்கள்,
உம் உணர்வுகள் இக்கணமும் மகிழ்வுறும்,
புனித சிந்தனைகள் இரவின் விண்மீனாக.

இனிமை வாழ்விற்கு இரைத்திடும் செல்வம்,
பெற்றிடு செலவினம் நோக்காதே,
மணித்தியான இசைவான அமைதிக்கு
எண்ணற்ற ஆண்டு துயரத்தை ஏற்றிடு,
பெருமகிழ்ச்சி சுவாசத்திற்கு
வசப்படுத்திய அனைத்தையும்
வழங்கிடு.

,

Thursday, March 29, 2018

திண்ணை வரை விடுதலை!





உறவுகளுடன் வாழ்ந்தால் பூக்கோலம்தான்! கரவுகளுடன் வாழ்ந்தால் சாக்கோலமா? உறவுகளை தொலைத்து உருப்பட முடியுமா? வளர்க்கப்பட்ட சூழல், வசம் தொலைந்த சுயம், வளைய வருமா?

 அங்கு செல்லாதே! இங்கு செல்லாதே! அடுக்கடுக்கான கட்டளைகள், சிறார் பருவத்தின் சிறகை கத்தரிக்க, தத்தி, தாவி தெருக்கதவைக் கடந்து திண்ணை வரை விடுதலை வெளிச்சம்;

காற்று புன் முறுவலுடன் வரவேற்க; கிட்டாத சிநேகிதம் எட்டிப் பார்க்க; சில கணம் சிட்டென பறந்தோடி; பொழுதுபோக்க; அழைக்கிறார் உள்ளிருந்து,' எங்கே சென்றாய்?

' வேனிற்காலம், வேர்க்குரு வாரிக்கொட்டும்; அம்மை ஆள் தேடும்!' குடும்ப எச்சரிக்கை ஒலிப்பானுக்கிடையில், விளையாட்டும் வினை சேர்க்கும்.

ஆட்டம் போட்ட அலுப்பில், பாட்டியின் அரவணைப்பில், விடுகதைகள் தாலாட்ட;  நீதிக்கதைகள்பாலூட்ட; தாழ்வாரக் காற்று தாளம் இசைக்க; வெண்ணிலா வெளிச்சம் தூக்கம் சேர்த்திடும் வெறுந்தரையில்!

நொறுக்கிடும் வெறி !

இறந்த மாட்டின் தோல் உரிப்பான்,
இறக்கு மதியாளரிடை
ஏற்று மதியாளன்;
கோ காப்பாளன்.

கோலடுத்து உரிப்பான் தோல்
உரிப்பான் ஊரறிய,
காவலும் ஒழுங்கும்;
எட்டிப்போக.

ஆவலுடன் பார்க்கும் மக்கள்,
அல்லல் போக்க துணை இல்லை!
துடித்தார் துவண்டார்;
உழைப்பின் பலன் யாதென புரிந்திடாது
புழுபோல் நெளிந்தார்;           

தசை கிழிய, ரத்தம்  கசிய,
ஏன் பிறந்தேன்? இழிசனமாய்!
என நொந்த நிலையில்;
வெந்த புண்ணின் வேதனை.

காவியின் கண்களில் கருணையை
சேர்க்கவில்லை!
கொத்து, கொத்தாய் மடித்து
 வீசிய கூட்டம் 2002ல்.

வெறியூட்டியே ஆயுதங்கள் கூட்டி,
ஆள் சேர்த்து ,
பெரும்பான்மை வெறி சேர்த்து,
நெறி பிறழ்ந்து நொறுக்கிடும்.

வாணர சேனைகள்
வலம் வரும்.
காவல் தடியேந்தி கவலையின்றி
'குசராத்தின் மாதிரி'

'இந்தியாவில் தயாரிப்போம்'
'ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்கிட,
ஒழித்திட ஆயுதம் தரிப்போம்'!!

Monday, March 26, 2018

கிளர்ச்சியாளர் ஓட்டத்தில்

கிளர்ச்சியாளர் ஓட்டத்தில்
            (  பிரிரோன தத்தா     
முது அறிவியல் கணிதம், இரண்டாம் ஆண்டு,
மத்திய பல்கலைக் கழகம், புதுச்சேரி.)



எல்லையற்ற அமைதி முகிலாக நெஞ்சங்களில்
அச்சமூட்டும் ஓசையின்மை உறைகிறது
களைப்புடன் படைகள் பின் வாங்கும்
வீண்மையில் தலைவர் இடித்துரைக்க.

இரைச்சலுக் கிடையில் ஓர் உயிர்
மனக் கசப்பிற்கு அப்பால் உதவியற்று
புரிதலற்று துரோகம் சுமந்து
பின் புலத்தில் தேங்கி நிற்க.

சிறுத்து மெலிவுற்று வெளிறிய பன்றி
தகைக் கயிற்றுடன்
பரிவுயிர்க்கான தேடலில்,
இவ்வேளை செக்கர் அந்தி வானம்
ஒன்றே இறுதியாக காண்பதென்பது
அறியாமல்.

நம்பிக்கை இளைஞன் எதிர்பார்ப்புடன் தளராமல்
தலைவரை பின் பற்றி முன்னோக்கி;
சச்சரவு யாவும் மறுத்து அறை கூவலுடன்
கழுத்தாழத்தில் மூழ்கி, தடம் பதிக்காது கிடக்கும்
துன்ப நெருக்கடியில்.

பெருமித பகைமை எண்ணங்கள் கருதுகோளாக
கையளவு இருத்தலில் சிலர்
கவனமற்று சூழ்நிலைமைகள் எவ்வாறு
என்ற பகற்கனவுடன்.

அரிமா நெஞ்சுர தலைவர் அணி வகுத்து முன்னேற
பிறர் பின் தங்கிடா அக்கறை கொண்டு
சோர்வுற்ற உடலுடன்
படைகள் பின்னிழுக்க
ஒழுங்குணர்வு பொடியாகி.

இரவு வளர்கிறது, குலைந்திடும் ஆர்வம்
சாக்கோளத்தை விழுங்கிட
படைகள் கடு நிலவெளியில் கால் ஏற்றி
கமுக்கமாக தம் கண்ணீர் துடைத்து.

அறிவதில்லை எவரும் யாது நிகழுமென்று
ஐயத்துடன் தள்ளாடி
உறுதி பிணைந்து தலைமையேற்று
பறைசாற்றிடும் புதிய விடியல் நோக்கி.

(மொழியாக்கம்- முத்துக்கண்ணு.)

சாட்டை சுழற்றுவார்!

ஆக்ரமிப்பு அரசியல்!
அரசியல் ஆக்ரமிப்பு!

எவரும் விலக்கில்லை,
அவரும் இவரும் .
அத்து மீறினார்!

அழகாய் ஊடகங்களில்
வலை தளங்களில்
வலம் வருகிறார்,
சுய நலம் சேர்க்கிறார்.

சாற்றிடும் குற்றம்
தம் அகத்தே மாற்றிட,
முனைந்திடார்.

போக்கிடம் சார்ந்தே
பொதுமை பேசுவார்.

நோக்கிடம் இதுவரை
அறிந்தோர்.

சாக்கிடம் அகன்று ,
சாட்டை சுழற்றுவார்!

Sunday, March 25, 2018

இறப்பு.......




ஆன்மா கலந்து விடுகிறது ஆண்டவனிடம்,
சமயக்குரு.
கட்டவிழ்கிறது அழியாக் கூறுகளாக,
மெய்யறிவாளர்.

முடிகிறது பிறப்பு ஆயினும் பொலிவுறுகிறது மறுபிறப்பாக,
புதிர் அறிவர்.
கற்பனை உலகிற்கான தியாகம், ஈகம்,
பொதுவுடமையாளன்.

நிலவறையில் நெடுந்துயில்,பகுத்தறிவாளன்.

எம் வருகை எமக்கே தெரியாது, இறப்பின்
குழப்பம்.

காட்சிப் படிமத்தில் மடிந்தது பன்முறை,
மெய்மையில் அன்று.

கவலை ஏன் சாவை எண்ணி?, நிகழ் கணத்தில்
நீ வாழும்போது, வினவுகிறது வாழ்க்கை


(ராஜேஷ் ஆய்வு மாணவர், பயன்முறை உளவியல் துறை, புதுச்சேரி பல்கலைக் கழகம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை, தமிழில் தருகிறேன்)


'மியாவ்,'மியாவ்,'

முன்னாளில் முழங்கிய நான்,
முணகினேன்! மூச்சிரைத்தேன்!
முடிக்கவில்லை!

குறிப்புகள் எண்ணத்தில் ஏராளம்
வெளிப்படுத்த மனதில் தாராளம்,
இயலவில்லை!
தமிழ்ச் சங்கத்தில்.

ஒலி பெருக்கியும் ஆவலுடன்,
சபை குறிப்புகள் கேட்டிட
தீட்டிய செவிகள்,
நிறையவில்லை!
உரை நிறைவில்லை!

தழு தழுத்த நா
தண்ணீர் கேட்க,
இரைப்பு ஒய்வு கேட்க,
நண்பர்கள் போதும் என்று கூற,

ஆர்ப்பரித்து முழங்கிடும் நான்,
மிசை போல்,
'மியாவ்,'மியாவ்,' முணகினேன்"

இல்லத்தரசியிடம் அனுபவம்
நகைச்சுவையாக,
வெளியிட்டேன்;
வெம்பிடாமல்;
வெட்கப்படாமல்!

Saturday, March 24, 2018

மறந்தேன் அல்ல!





விட்டுச் சென்றேன் விலகிச் சென்றேன் அல்ல
பழகிச் சென்றேன் பழித்துச் சென்றேன் அல்ல
தொட்டுச் சென்றேன் தொடர்ந்து சென்றேன் அல்ல
முட்டிச் சென்றேன் மோதிச் சென்றேன் அல்ல

எட்டிச் சென்றேன் எக்கிச் சென்றேன் அல்ல
கட்டிச் சென்றேன் கவர்ந்துச் சென்றேன் அல்ல
ஒட்டிச் சென்றேன் வெட்டிச் சென்றேன் அல்ல
பழகிச் சென்றேன் பழித்துச் சென்றேன் அல்ல

உலவிச் சென்றேன் குலவிச் சென்றேன் அல்ல
கூடிச் சென்றேன் குழப்பம் விளைத்தேன் அல்ல
தேடிச் சென்றேன் தொலைத்துச் சென்றேன் அல்ல
மூடிச்சென்றேன் முழுமை அறிந்தேன் அல்ல

பாடிச் சென்றேன் பழமை மறந்தேன் அல்ல
பூட்டிச் சென்றேன் புதுமை மறந்தேன் அல்ல

பின்னணி என்ன?

புதுச்சேரியில் கம்பி வட சேவை (கேபிள் தொலைக்காட்சி) வழங்கும் நிறுவனங்கள் சந்தாவாக உருவா.100 வீதம் வாடிகையாளர் வசம் வசூலித்து வருவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்தி பத்திரிக்கையில் வெளியிடப் பட்டிருந்தது.மேலும், கம்பி வட சேவை அமைப்புகள் சந்தா தொகையை-கட்டணத்தை- உயர்த்த அனுமதி கேட்டிருந்ததாக அதற்கு அரசாங்கம் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இதில், ஒரு உண்மை யாதெனில், ஒவ்வொரு வாடிக்கையாளர் வசமும் சந்தா தொகையாக, மாதம் ஒன்றுக்கு உருவா.200 வீதம் வசூல் செய்யும் போது, உருவா.100 வசூல் செய்வதாக தவறான தகவல் அளிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, இணைப்புகளின் எண்ணிக்கையும் குறைத்து காண்பிக்கப்படுகிறது.

பெரும்பாலும், கம்பிவட சேவை நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் அல்லது அரசியல் அதிகாரத்திற்கு மிகுந்த நெருக்கம் உள்ளவர்களால் நடத்தப்படுவதால் இதுபோன்ற, முறைகேடுகள் துணிவாக நடைபெறுகின்றன.

நகராட்சிகளும், கொம்யூன் பஞ்சாயத்துகளும் 10% விழுக்காடு, "கேளிக்கை வரி", அவரவர் அளிக்கும் கேபிள் இணைப்புக் கணக்கை சரியானதாக எடுத்துக் கொண்டு, சோதனை ஏதும் செய்திடாமல்,மிகக் குறைவாகவே வசூல் செய்கின்றன.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில், டிக்கெட் முத்திரை இடுவது, சோதனை செய்து, சரியான எண்ணிக்கையை, காட்சிகளின் அடிப்படையில் இறுதி செய்து," கேளிக்கை வரி" வசூல் செய்திடும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள், கம்பி வட சேவையில் அரசாங்கத்திற்கு வெகு காலமாக வரி இழப்பை பல இலட்சங்களில் அல்லது கோடிக்கணக்கில் ஏற்படுத்தியுள்ளன.

 மேலும், சினிமா திரையரங்குகளை வரி பாக்கிக்காக சீல் வைத்திடும் அதிகாரம், கேபிள் தொலைக்காடசி ஒலிபரப்பு நிறுவனங்களிடம் தயக்கம் காட்டுவதின் பின்னணி என்ன?

Thursday, March 22, 2018

அன்றும்! இன்றும்!






கொஞ்சினேன் அன்று
-குழந்தைப் பருவம்

கெஞ்சினேன் இன்று
-குமரப் பருவம்

விஞ்சினாய் அன்று
-விளையாட்டாய்

விளாசினாய் இன்று
-வினையாட்டாய்

தாங்கினேன் அன்று
-தைரியமாய்

ஏங்கினேன் இன்று
-இயலாமையாய்

மெட்டப்பா!

(திரை பாதிப்பா? திடீர் பாதிப்பா? பாடல், தேடல்.எனக்குள் வினவினேன், இவ்வாறு. கேட்டுப் பாருங்கள்)

என்னப்பா? என்னைப் பாரப்பா!
எந்த ஊரப்பா? என்ன பேரப்பா?
சின்னப்பா,
சிறந்த பேரப்பா!

உன்னப்பா உயர்ந்த ஆளப்பா!
தின்னப்பா,
திகட்டும் இனிப்பப்பா!
பண்ணப்பா,
பழகிப் பாரப்பா!

குந்தப்பா கூடி நில்லப்பா!
கந்தப்பா,
கருணை பொழியப்பா!
சந்தப்பா,
சங்கடம் தீர்க்கும்பா!

உண்மையைப்பா
உடனே உணரப்பா!
வந்தப்பா,
வராத மெட்டப்பா!

பழுத்த வேலைக்காரன்!

(நாளுக்கு நாள் வரிச் சுமையேற்றும் அரசாங்கம் குறித்து நண்பர் ஒருவர் இப்படி கூறினார்)


வரி வரியாய்ப் போடறான்,
வாய் கிழியப் பேசறான்.

வளங்கள் யாவும் தீர்க்கறான்,
வடிகட்டி கசடு அளிக்கிறான்.

மடைமாற்ற அரசியல் வைக்கிறான்,
மாட்டிக்கிட்டு நம்ம ஆளு
தவிக்கிறான்;
மரியாதை அடகு வைக்கிறான்.

மனங்களில் மதத்தை ஏற்றுகிறான்.
ஒளிப்பிழம்பை ஒதுக்கி
 உணர்ச்சி வெறி சேர்க்கிறான்;
ஓயாது வீண் வேலை பார்க்கிறான்.

ஒய்யார பிரித்தானிய கலை தூக்கறான்.

பேச்சுக்கு வரி விதித்து
மூச்சுக்கும் வரி விதிப்பான்,
முடிச்சுக்கும்.

வேரறுக்கும் பெரு வணிகம்
 நொடியில்,
வேண்டுதல் வேள்வியில்
மொட்டை அடிக்கும்.

பலி பீடத்தில் மக்கள்,
பறிபோகும் பாகங்கள்
நுட்பமாய்.

பன்னாட்டு முதலாளியம்!
பழுத்த வேலைக்காரன்!!

Wednesday, March 21, 2018

வரி!








வரிக்குள் வரி
வகை வகையாய்ப் பறி!

வறண்டிடும் நெறி
வாழ்க்கையின் கதி!

பறிக்கும் முறை
விரிக்கும் வலை!

உருண்டெழும் கலை
வெகுண்டெழா நிலை!

வேதனையில் சிலை!

சனநாயகம் அழிகிறதா?

நண்பர்களே!

பிப்ரவரி 17, 2018ல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதன் சுருக்கம், பின்வருமாறு.

சனநாயகம் அழிகிறதா?
அமெரிக்காவில் உள்ள மற்றும் உலகளவில் அறியப்பட்ட, அறிவுசார் சமூகம் மற்றும் அறிஞர்கள், அண்மைக் காலமாக சனநாயகம் அழுகிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை எழுதியும், பேசியும் வருகின்றனர்.அவர்களில் சிலர் மத்திய நிலை தாராளவாதிகள், பிறர் மித போக்குள்ள பழமைவாதிகள் ஆகும்.

தற்பொது நிலவிடும் அரசியல் சூழ்நிலையில் வெளிப்படையான பாசிச சர்வாதிகாரிகளைக் காட்டிலும் அச்சுறுத்தல், பிரபலமான அதிகாரத்துவம் படைத்தவர்கள் மூலம் வஞ்சகமாக,உள்ளிருந்தே, நாடாளுமன்ற தேர்தல் சனநாயக அலகிற்குள் சனநாயகத்தை உறிஞ்சி வருகின்றனர் என்று அவர்கள் அனைவரும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவர்களில் ஒருவர், 'டேவிட் புரூம்', அமெரிக்காவின் சனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து சென்ற வாரத்தில், புரூக்கிங்சு நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமது கவலையை பகிர்ந்து கொண்டார்.

.சமீபத்தில் வெளியிட்ட தமது புத்தகத்தில்--'டிரெம்போ கிரேசி: தி கரப்ஷன் ஆப் தி ரெப்பப்ளிக்'கில், அமைப்புகள் அல்லது அரசியலமைப்பு சட்ட விதிகள் ஊடுருவி வரும் அதிகாரத்துவத்திற்கு எதிராக நிற்க, போதிய வல்லமை அற்றதாக உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

." அரசியலமைப்பு சனநாயகம், முதலில் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முற்றாக ஈடுபாடு உடையதாக அமைக்கப்பட்டுள்ளது". தற்போதைய அதிகாரத்துவ தலைவர்கள் மற்றும்  அவரை இயல்விப்போர், தமது சுய விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றனர்.

 அதுபோல், ஆர்வார்டு பல்கலைக் கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள், ஸ்டீவன் லெவிட்ஸ்கி மற்றும் டேனியல் சிப்லாட் தமது புத்தகத்தில்--அவ் டெமாக்ரெசிஸ் டைய்: வாட் இஸ்ட்ரி டெல்ஸ் யு.எஸ். எபவ்ட் அவுர் புயூச்சர்- அமைப்புகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னதிகார ஆட்சியாளர்களை ஆள, செல்வாக்கு செலுத்திட போதுமானவை அல்ல.

அவர்கள் வசம் ஊடகம் மற்றும் தனியார் துறை கட்டுப்பாட்டில் உள்ளது, அவர்கள் அரசியல் விளையாட்டு விதிகளை மாற்றி எழுதி அரசியல் எதிரிகளுக்கு எதிராக திருப்பி வருகின்றனர்.

" தன்னதிகாரத்திற்கான தேர்தல் பாதையின் முரண்பாடான துயரம் யாதெனில், சனநாயகக் கொலையாளிகள் சனநாயகத்தில் உள்ள அதே அமைப்புகளை பயன் படுத்துவதேயாகும்--படிப்படியாக, நுணுக்கமாக ,மேலும் சட்ட ரீதியாக- பயன் படுத்தி அதை அழிப்பதேயாகும்"

தன்னதிகாரம் மிக்கவர்கள் எங்கிருந்தோ வருபவர் இல்லை. ஏற்கனவே நிலவிடும், இயல்விக்கும் நிலைமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மிக தந்திரமாக, விரிவுபடுத்தி, தேசியவாதம் மற்றும் மத உணர்வுகளை ஈர்க்கும் தவறான முன்னெடுப்புகளை , ஏற்கனெவே பாதிப்பிற்கு உள்ளாகும்  அடித்தட்டு மக்கள் மத்தியில் செய்கின்றனர்.

அமெரிக்காவில், அவ்வாறான நிலைமை உள்ள அரசியல் தளங்கள்: தேர்தல் முகாமிற்கான நிதி அளிப்பு ஏற்பாடு மற்றும் ஊடகத்தின் வளைப்பு ஆகும்.

இச்செய்திகள், நமது நாட்டு சனநாயகப் போக்கையும் தொட்டு, தோலுரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

வன விலங்குகள் ஆணையம்!

வனவிலங்குகளுக்கு எதிரான வன்மங்கள் தொடர்கதையாகிறது! மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாநிலப் பகுதிகளில். தொடர்ந்து பெட்டிச் செய்தியாக, பேசும் செய்தியாக ஊடகங்களில் சில நாட்கள்.வனத்துறை அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை; வனத்துறை அமைச்சர் நேர்காணல், அத்துடன் அடங்கிப் போகும்.

வனப்பகுதிகளில் உள்ள தோட்டப் பயிர்கள் நாசம்; குடியிருப்புகள் சேதம்; ஓரிருவர் சாவு ஆகியவற்றுடன், மனித உடமை அழிப்பு, உயிரிழப்பு செய்திகளின் அழுத்தம் அதிகமாக, வனவிலங்குகளின் இழப்பு; வாழ்விட அழிப்பு; உணவுப் பற்றாக்குறை; காட்டுப்பகுதிகளில் நிலவும் வறட்சி ஆகிய பிரச்னைகளில் தீர்விற்கு இதுவரை ஆக்கபூர்வ செயல் நடவடிக்கை அரசிடம் இல்லை!

பல தளங்களில், துறைகளில்; மேம்போக்காக செயல்படும் அரசு நிர்வாகம்; ஆட்சி அதிகாரம் இப் பிரச்னையிலும் நீண்ட நெடிய, நிலைப்பான தீர்வுகாண முனைப்பும், முன்னோடித் திட்டமும் இல்லை!

 மனிதர் வாழ்ந்தால் போதும், அவர் வாக்காளர், அடுத்தடுத்த தேர்தலில் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற உணர்வு, முந்துரிமை, விலங்குகள் தானே அவை! என்கின்ற அலட்சியம், அவை என்ன செய்துவிடப் போகிறது? என்னும் அலட்சிய மனப்பான்மை, போக்கு மேலோங்கி விளங்குகிறது.

சூழல் காப்பாளர்களும், சிறுபான்மை அளவில் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தாலும், அதன் வீச்சிற்கு ஆதரவு அளித்திடும் ஊடகங்கள் , மிகச் சிலவே! மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும், இத்தகைய கொடுமை அவர்களது அமைப்பு விதிகளுக்கு, செயற்பாட்டு வரையறைகளுக்குள் வரவில்லை என ஒதுங்கி வருகிறார்கள் அல்லது பதுங்கி வருகிறார்கள்!

மனித உரிமைக்கு பல ஆணையங்கள் உள்ளது போல், வன விலங்குகள் வாழ்வுரிமைக்கு ஆணையம் ஒன்று அரசாங்கம் அமைத்திட வேண்டும்.

வன உரிமைச் சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றை முறையாக நிர்வகித்து, பாதுகாத்திட செயல்திட்ட ஏற்பாடுகள்,

மாவட்ட ஆட்சியர் , மக்கள் பிரதிநிதிகள், வனத்துறையினர் ஒருங்கிணைந்து, சூழல் பாதுகாப்பின்  ஒரு முக்கிய அம்சமாக வனவிலங்குகள் வாழ்விடப் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் என்பதே,

 மனித நேயம் உள்ள சூழல் காப்பாளர்களின் ஒருமித்த கோரிகைக் குரல் ஆகும். அரசு செவி சாய்க்குமா?

Tuesday, March 20, 2018

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு!

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு- எதிர்த்து திரையரங்கினர் போராட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு காலத்தில், சிறியதும் பெரியதுமாக, 30க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் இருந்தன.ஒரு காலத்தில் 'கெப்லே தியேட்டர்'; 'தகர கொட்டா'; 'டென்ட்டு கொட்டா' என்று எமது தந்தை கூற கேள்விப் பட்டிருக்கிறேன்.

 நான் அறிந்தது 'கந்தன் கொட்டா'; 'நியூடோன் டாக்கீஸ்'; 'கண்ணம்மை டாக்கீஸ்'; 'சிவகாமி டாக்கீஸ்'; 'வீனஸ் தியேட்டர்'; 'ராஜா டாக்கீஸ்' போன்றவைகள்.இராமன் திரையரங்கம்; 'ஜெயராம் திரையரங்கம்'; 'ஜீவா ருக்மணி' பிற்காலத்திய சேர்க்கைகள்.

 1980களில்,'ஆனந்தா மற்றும் லிட்டில் ஆனந்தா'- இரட்டை திரையரங்குகள் பலராலும் பேசப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து சினிமாத்தொழில் நலிவுற்றதால், தாக்குப் பிடிக்க இயலாமல் பல திரையரங்கங்கள் மூடுவிழா கண்டன, தொழில் மாற்றம் பெற்று, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இலாபகரத் தொழிலுக்கு உருமாற்றம் பெற்றன.

இவ்வகையில் 20 திரையரங்குகள் மூடப்பட்டன. நிலைமையை உணர்ந்த அப்போதைய அரசாங்கம், தமிழ்த் தலைப்பிட்ட தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தலைப்பிட்ட தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டும் 'கேளிக்கை வரி' விலக்கு தொடர்ந்து அளித்தது.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் 25% விழுக்காடு கேளிக்கை வரியாக சினிமாத் தொழிலுக்கு நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தது.இதில் 10% விழுக்காடு 'திரையரங்க பராமரிப்பு' செலவிற்கு போக, மீதம் திரையரங்கங்கள் செலுத்தி, நாள் ஒன்றுக்கு பல இலட்சங்கள் புதுவை அரசுக்கு வருவாயாக அளித்து வந்தன.

இந்நிலையில், 1.07.2017 முதல், மத்திய அரசு விதித்த 'சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டம், 2017, புதுவை அரசாங்கம் சட்டப்பேரவையில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. அதன்படி, 100 உருவாய்க்கு குறைவான 'டிக்கெட் கட்டணத்திற்கு' 18% விழுக்காடு' கேளிக்கை வரியாகவும்; 100 உருவாய்க்கு மேல் உள்ள கட்டணத்திற்கு 28% விழுக்காடும்  கேளிக்கை வரியாக; விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திரையரங்குகள், மாநில அரசு விதிக்கும் 25% விழுக்காடு, மத்திய அரசு விதிக்கும் 28% விழுக்காடு, ஆக மொத்தம் 53% விழுக்காடு' கேளிக்கை வரியாக", ரசிகர்கள் தலையில் சுமத்தி, வசூல் செய்து வருகின்றது.

ஒரு குடும்பம் பொழுதுபோக்கு செலவாக, கூடுதலாக 28% விழுக்காடு கொட்டி அழவேண்டியிருக்கிறது. சம்பள உயர்வு; கூலி உயர்வு இத்தனை சதவீத உயர்வு காணாத நிலையில், மறைமுக வரி, இதுவரை இல்லாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலக வங்கியே அதன் அறிக்கையில், அதிகமாக மறைமுக வரி  வசூல் செய்யும் நாடு என்று சுட்டிக் காட்டி உள்ளது.

'ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி விதிப்புக் கொள்கை' முழக்கம் என்னவாச்சு? சினிமாத் தொழிலுக்கே, "இரட்டை வரி விதிப்பு" இப்படியாக இருக்கும் போது மற்ற தொழில்கள் குறித்து சொல்ல வேண்டியது அவசியமில்லை. மக்களை வரி விதிப்பில் உறிஞ்சிடும் வஞ்சகம் மிகக் கொடுமையானது!

 இந்த இரட்டை வரி விதிப்பை எதிர்த்து, ஒரே தருணத்தில், " கேளிக்கை வரியாக", மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் செலுத்த இயலாது, ஒரு வரி மட்டுமே செலுத்துவோம் என்கின்ற போராட்டம், ஒரு வகையில், நுகர்வோர் உரிமைக்கான போராட்டமாகவும், நாம் காண வேண்டியுள்ளது.

 பல நுகர்வோர் அமைப்புகள் இது குறித்து, அதிக அக்கறை எடுக்காமல், எம்மால் தெளிவு படுத்திய பிறகும், நுகர்வோர் விழா கொண்டாட்டங்களிலேயே மூழ்கி உள்ளது.

16, மார்ச், 2018 முதல், தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் திரையரங்கள் குறித்து அரசாங்கங்கள் கண்டு கொள்ளவில்லை!

துணைநிலை ஆளுநர் , முதலமைச்சர்,  உள்ளாட்சித் துறை அமைச்சர், துறை செயலர் ஆகியோரைச் சந்தித்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியும் உரிய சாதகமான உத்தரவு  கிடைக்கவில்லை!

அனைவரும்  விழிப்புணர்வு பெற்று, அணிதிரண்டு வெகு மக்களின் வாழ்வாதரத்தை பலமுனைகளிலும் நுட்பமாக அழித்திடும் சூழ்ச்சியை வெல்ல, போராட வேண்டும்!

Monday, March 19, 2018

நிரந்தரம் இல்லை!

பெற்றது பெருமை சேர்க்கவில்லை!
உற்றது உரிமை சேர்க்கவில்லை!
விற்றது பொருள் குவிக்கவில்லை!
கெட்டது சேர்ந்திருக்க முடியவில்லை!

விட்டது வீடு சேரவில்லை!
தொட்டது துலங்கவில்லை!
தோல்வியும் துயரம் என்பதில்லை!

வேள்வியில் வெற்றி கிடைப்பதில்லை!
கேள்விக்கு விடை தெரிவதில்லை!
பல்லவியுடன் பாடல் முடிவதில்லை!

பிடிவாதம் சாதிப்பதில்லை!
பிணக்குகள் நிரந்தரம் இல்லை!

கணக்கு வாழ்க்கையில்லை!
கானல் நீர்
தாகம் தீர்ப்பதில்லை!

காலங்கள் நின்று போவதில்லை!
கோலங்கள் மகிழ்ச்சி அளிப்பதில்லை!
குவலயம் நின்று போவதில்லை!

வாகன ஓட்டி

எட்டிச் செல்ல
முட்டிச் செல்கிறான்.

தூசியென, முன்நில்
முதியவரை,
வீசிக் கடக்கிறான்.

முணு முணுப்புடன்
முகம் இறுக்கி,
முறுக்கி வெல்கிறான்.

சாலையில் சவாரி
சாகச களமாடி,

'பொசுக் பொசுக்' கென்ற
பாய்ச்சலில்,
பந்தைய  விசையேற்றி;         

சரக்கென்று
பாயும் கத்தி போல;

நிலை தடுமாற்றி
நிர்க்கதியாக்கினான்.

பெண்களைப் பேணுவோம்!

(புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை கவியரங்கம், 18.03.2018, ஞாயிறு,, மாலை ஜோதி கண் மருத்துவமனையில் நடைபெற்றது.அப்போது வாசித்த கவிதை)

பெண்களைப் பேணுவோம்!

உன்னுள் பாதி அவளில்லை!
உயிரில் பாதி அவளாகும்.
கண்களில் பாதி அவளில்லை!
கண்ணின் பாவையே அவளாகும்.
உள்ளதென்பது நீயாயின்,
உண்மையென்பது அவளாகும்.

கருவான போதும் போராட்டம்!
கழிந்த பிறகும் போராட்டம்!
போராட்டமே வாழ்க்கையாக- அவள்
ஓர் 'இடது சாரி'

எங்கிருந்து எழுவது?


சுயத்தில் விடுதலைப் பெற வேண்டும்;
சூழ்ச்சி தாண்டி எழ வேண்டும்;
கவிந்திடும் சூழல் புரிதல் வேண்டும்;
கவின்மிகு தலைமை ஏற்க வேண்டும்;
பெண்கள் பெருமைப் புலம் வேண்டும்;
பெருவெளிப் பயண நிலை வேண்டும்.

Sunday, March 18, 2018

காடழியின் நாடழியும்!

(இலக்கியச் சோலை இலக்கிய மன்ற கவியரங்கம், 17.03.2018ல் 'செகா' கலைக் கூடத்தில் நடைபெற்றது. அப்போது அளித்த கவிதை.)

காடழியின் நாடழியும்!

காடை அழித்தான்! கழனி அளித்தான்!
மேட்டை அழித்தான்! தோட்டம் அமைத்தான்!
நோட்டம் பார்த்தான்! அணைகள் எழுப்பினான்!
அழிவின் தொடர் அயராது நீட்டினான்!

பசி அடங்கா பெருவணிகக் காலடியில்;
கான் நலன்கள்,கனிம வளங்கள், உயிரினங்கள்.
தோண்டியதைத் தாண்டியும் துடைத்தெடுத்தான்,
துரித உணவு அங்காடி போல்;
துயரம் சேர்த்தான்.

மலைமக்கள் ஆதாரம் அழித்தான்,
அவரின் அடையாளம் சிதைத்தான்;
நவீன 'தலிபான்' ஆக.

நீண்டிடும், 'தேரி', 'நர்மதை', வரிசை
நித்திலத்தில் இறக்கி, அதிர்ந்திடும்;
சூழல் பன்மயக் கேடுகள்.
சூழ்ந்திடும் அழிவின் கோடுகள்!

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது" "கெளரி லங்கேஷ்"

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது"
"கெளரி லங்கேஷ்"

கறுப்புக் கருத்தின் வெறுப்புத் தீயில் வீழ்ந்தாய்!
துமிக்கியே அஞ்சும் துணிவுக் கருத்தின் துடிப்பு நீ!
நடிப்பு ஊடகரிடை எதிர் துடுப்பு போட்டாய்!
எது வரினும் ஏற்பேன் என்றாய்!

நக்கியே வாழும் மனிதரிடை, எக்கியே நடை பயின்றாய்!
ஏக்குழுத்து மிடுக்காய்!
நாவின் வலிமை நாள்தோறும் பறைசாற்றி,
நாச வெறியரின் நா வன்மை உடைத்தாய்!

கருத்துரிமை,சகிப்பு, சரிநிகர் உணர்வூட்டி,
சந்ததி ஒருங்கிணைத்தாய்!
தந்தை வழியில் சமரசம் துறந்து,
சனாதன சங்கிலி அறுத்தாய்!

அச்சுறுத்தல், அலறல், எச்சரிக்கை
அலட்சியம் செய்தாய்!
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி அணியில்
இலட்சியப் பயணம் கூட்டினாய்!

ஒற்றைப் பரிமாண அரசியல் இருப்பை,
ஓங்கி நொறுக்கினாய்!
கருத்தாயுதம் தரித்தாய்!

தோட்டாக்கள் தோற்கும்,
இழிவின் இருள் கிழித்த உம் சிந்தனைகள்!
ஊர் எட்டும் உலகு எட்டும்!
ஓயாது உம் பயணம்!

("புதிய உறவு", சிற்றிதழ், புதுச்சேரியில் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை, தற்போது பதிவேற்றம் காண்கிறது)

Friday, March 16, 2018

புதுச்சேரியில் போராட்டம்!

தமிழகம்-புதுச்சேரியில் விதைக்க முற்படும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த, புதுச்சேரியில் போராட்டம்!.

லெனின், பகத்சிங், அம்பேத்கர், பெரியார் சிலைகள் அல்ல மக்கள் சிந்தாந்தங்கள் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய மக்கள் மேடை, ஜீவா திடல், சாரம், புதுவையில், 15, மார்ச், 2018, மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது.

அதில், பாரதிய சனதா- ஆர். எஸ்.எஸ். கூட்டணி, மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும், சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல் மற்றும், தலித் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தது.

பாசிச தலை எடுப்பை எதிர்த்து; சனநாயக சக்திகள் ஒன்று திரண்டு; சகிப்புத்தன்மை உடைய; மக்கள் சனநாயக;  மதச்சார்பற்ற; சமதர்ம இந்தியாவைப் படைக்கும் அவசியத் தேவை குறித்தும்  நிகழ்ச்சியில் பேசப்பட்டது..

Thursday, March 15, 2018

புறக்கணிப்பு

இன்று, உலக நுகர்வோர் நாள்(15.03.2018). புதுச்சேரி அரசு மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவை அமைத்திடாமல், 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்து, நுகர்வோர் நலனில் அக்கறையற்று வாளாவிருக்கிறது.


இச்செயலை கண்டிக்கும் வகையில், புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், புதுச்சேரி, தலைமை அஞ்சலகம் முன்பாக, உலக நுகர்வோர் நாள் புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம், காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்வில், பல்வேறு பொதுநல அமைப்புத் தலைவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

Wednesday, March 14, 2018

பனை

மயிர் சாட்சி மனிதரிடை
உயிர் சாட்சி!
உருக்குலைந்த மாட்சி
ஊருக்குள் காட்சி!

சதுர் வேதியன்








குழவியைக் கிள்ளுவேன்,
தொட்டிலை ஆட்டுவேன்.

அக்கறை அரசியல்
அரங்கேற,
 அரிதாரம்பூசுவேன்.

நரிதார வேள்வி
நடைக் கூட்டி,

சதிகார சங்கம் ஏற்றி
சதுராடுவேன்.

சதுர் வேதியன்
அன்றோ?

உடையுமா?







சிலை உடைப்பால்
சிந்தனை உடையுமா?

நிந்தனை அரசியல்
நின்று நிலைக்குமா?

வெறுப்பு உமிழ் வேகம்
விவேகம் சேர்க்குமா?  

உறுப்பு குறைவு
உடல் உறுதி சேர்க்குமா?

கறுப்பு மனம்
கரை சேர்க்குமா?

மறுப்பு கருத்து
மட்டம் ஆகுமா?


தலை நிமிர் தமிழகம் !






வழி காட்டி விவசாயி,
போராட்ட மொழி கூட்டி
களமாடி,

'நாசிக்'கிலிருந்து
'ஆசாத்' மும்பை,
நெடும் பயணம்.

வறுமை நீங்கிட
உரிமை கோரி,
கிளர்ச்சி.

தளர்ச்சி போக்கிடும்
நிவாரணம் கோரி,
ஒருங்கிணைந்த
 விவசாயி,

திசைவழி காட்டும்
திக்கெட்டும் சேர்க்கும்

படிப்பினை
 பெறவேண்டும்


துடிப்புடன் துணை சேர
கடக்க வேண்டும்!




Tuesday, March 13, 2018

தமிழகத்திற்கு வழி காட்டும் மகாராட்டிரம்!

தமிழகத்திற்கு வழி காட்டும் மகாராட்டிரம்.

*விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தல்
*பருவம் தவறிய மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல்
*உரிய ஆதார விலையை நிர்ணயித்தல்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராட்டிர மாநில விவசாயிகள் நீண்ட காலமாக போராடி வந்தனர்.அவர்களின் கோரிக்கைகளுக்கு  அரசாங்கம் செவிசாய்க்காமல் இருந்தது.

அகில இந்திய விவசாயிகள் சங்கம், கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராட்டிர சட்டப்பேரவையை முற்றுகையிட, நாசிக்கில் இருந்து நடை பயணமாக 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தொலைவினை, இரவு பகலாக 5 நாட்களில் கடந்து வந்து, மும்பாய் ஆசாத் திடலில் போராட கூடினர்.

வீரம் செறிந்த விவசாயிகளின் திரட்சி, ஆட்சியாளர்களை, நிலை குலைய வைத்தது. நீர்ப்பாசனத்துறை அமைச்சர்,விவசாயிகளின் பிரதிநிதிகளிடம் பேசி, அவர்களின் அனைத்து  கோரிக்கைகளையும் ஏற்பதாக உறுதி அளித்தார்.

இதிலிருந்து, தமிழக விவசாயிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய படிப்பினை கிடைத்துள்ளது.கட்சி வேறுபாடுகளை களைந்து, கோரிக்கை முனையை கூர் படுத்தி, செயல் திட்டங்களை சீர்படுத்தி, போராட உறுதி ஏற்று களத்தில் இறங்குவார்களா? அல்லது கலைந்து போவார்களா?

Monday, March 12, 2018

புளித்த மா

பேசிக் கொண்டே இரு
சிறு பொழுது கடந்து

ஏசிக் கொண்டே இரு
பெரும்பொழுது தொலைத்து

வாசிக்க மனமின்றி
யோசிக்க குணமின்றி

புளித்த மாவின்
நொதிமம் கூட்டி

மகுடி தரித்து

( நேற்று சந்தித்த பிரபலம் ஒருவர் பற்றிய எதிரொலி)

கல்லறை மறந்த
 சில்லரை மனிதன்!

சொல்லறையின் சுகவாசி!

அரசியல் வியாபாரம்
 என்றாகி,

வியாபாரம்
 அரசியல்  என்றேறி!

துலாபாரம் மறைத்த
 துச்சாதனன்!

எள்ளல் மன்னன்!

மகுடி தரித்து
பகடியுடன்.

பதவியில்!

எகத்தாளம்

எதற்கெடுத்தாலும் ஏளனம், எகத்தாளம், ஒரு சிலர் வெளிப்பாடு.
சுளிப்பும், வலிப்பும் அவர் தோற்றம்.சுடு சொற்கள், சட சடவென வெளிக்கிளம்பும்.

 அழகிய முகம் அட்டகோணமாக, பட,படப்புடன், நிதானம் இழந்து, செவி மடுக்கும். சிந்தனை குறைந்து சில நேரம்.

அடுத்தவர் கூறுவதை தடுத்தாள்வதே சரி என்னும் பக்குவம். பழக்க, வழக்கமாக, இவரது வாழ்க்கைப் பயணம்.

விரைந்த வேகம்

2017 ஆம் ஆண்டு சென்றதை பரிசீலனை செய்த போது)

கரைந்த பொழுதுகள்
நிறைந்த நினைவுகள்
கலைந்த மேகம்
விரைந்த வேகம்


பிரிந்த சோகம்
பிரியாத நேசம்
அறிந்த வேகம்
அறியாத ஊக்கம்
உருண்ட உலகம்
உள்ளுக்குள் கலகம்

Sunday, March 11, 2018

விழிப்பு!

நேற்றிரவு வெகுநேர விழிப்பு. சல்லிக்கட்டு-ஏறு தழுவல், தமிழரின் வீர விளையாட்டு, திட்டமிட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் தடை, உயிர்வதை காரணம் காட்டி, 'பீட்டா' அமைப்பின் வழக்கில் உச்சநீதி மன்ற நடவடிக்கை.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், கட்சி அரசியல் கங்கணம் கட்டி, இவ்வாண்டு தை மாதம் உறுதியாக சல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊடகங்களில் உற்சாக உத்தரவாதம் அளிக்கும்.

ஆளும் கட்சி வீச்சுரை,'இன்று ரொக்கம் நாளை கடன்' என்னும் அறிவிப்பாக, வெகு மக்களை புதிய கோணங்களில் திசைத் திருப்பும், ஏமாற்றும். காவிரி படுகையில்- கடைமடைப் பகுதியில் வேளாண் மக்கள் எதிர்கொள்ளும் துயரம், கொடுமை எழுத்தில் அடங்கா! சொல்லியும் மாளாது

.பயிர் காக்க உயிர் தொலைத்த உத்தமர்கள் பெட்டிச் செய்தியாக சில நாள்.தரவுகளை காத்திட தர்மத்தை விலை கொடுக்கும் அரசுகள், அரசியல் பலன்கள் இழந்திட விரும்பாது, சில ஆயிரங்கள் இழப்பீடு, இன்னல் போக்குமா?

நாடாளுமன்றமும், நிர்வாக அமைப்பும், நீதிமன்றமும் ஒரு மாநில அடித்தள மக்களுக்கு ஆதரவாக செயல் முனைப்பு காட்டாது, உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு உரம் போட்டு, மக்கள் கவனத்தை திசைத் திருப்பும் நடவடிக்கையை வெகு நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றுகிறது.

வேளாண்மையை ஒழித்திட்ட முந்தைய அரசு,உழவுத்தொழிலை ஒழித்திடு இன்றைய அரசு, உணவு உற்பத்தி மக்கள் நுகர்வுக்காக அல்ல ஏற்றுமதிக்காக என திட்டமிட்டு, பணப்பயிர்களை, மண்ணுக்கு பொருந்தாத வேளாண் விளைச்சல் பயிர்களை நடைமுறைப் படுத்தி, நாசமாக்கியது மட்டுமில்லாமல் இறக்குமதியை நம்பி, உள்ளூர் விவசாயத்தை படிப்படியாக ஒழித்து

தொழிற்சாலைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, பன்னாட்டு பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சூறையாட, மனித வளங்களை கூலி உழைப்பாளிகளாக்கிட, நுட்பமாக, சாமர்த்தியமாக,  கை கோர்த்து களப் பணியாற்றி வருகிறது.

இவ் வடிப்படையில்தான், தேசிய இனங்களின் கலாச்சார அடையாளங்களை, ஒவ்வொன்றாக, மொழி அழிப்பு/சிதைப்பு, விளை நிலம் ஒழிப்பு, மரபு ரீதியிலான கால்நடைகளை ஒழித்தல்,, வீர விளையாட்டுகளை முடக்குதல், தடை செய்தல் போன்ற பல்வேறு பரிமாணங்களில், கலாச்சார வல்லாண்மையை, பன்முகத் தன்மையை பாழ்படுத்தும், நாசப்படுத்தும் நயவஞ்சக செயல்களை, வாக்கு வங்கி அரசியல், முழு பலத்துடன், வலதுசாரி தேசிய வெறியாக, நிறைவேற்றி வருகிறது

(சல்லிக்கட்டு போராட்ட சமயத்தில், 15 சனவரி, 2017இல் எழுதியது. தற்போது பதிவு காண்கிறது)

கள்ள நெறி!

( சில கிறுக்கல்கள், சில மனிதரைப் பற்றி, சில சூழலில்)

குடி கெடுத்தவனிடம்
கும்மாளம் போடும்,
குள்ள நரி.

கலந்து எவரிடமும்
கல கலப்பு சேர்க்கும்,

காரியம் கூட்டும்
கள்ள நெறி.       



ஒதுக்கீடு

பணம் உள்ளவன் யாரும்
ஒரு சாதி
பலன் அடைய மட்டும்
அது தனி சேதி.


உழைத்து ஈகம்
 செய்பவன்,
உண்மையாய் நிற்பவன்.

பயன்படுகிறான்
பல்லரங்குகளில்,
பகடைக்காயாக.

உருட்டுபவன்
தேர்ந்தவன்,
அவன் தோளில் மேல்
உல்லாசமாக.

அங்கீகரிப்பில்!

Saturday, March 10, 2018

நிற்பார்!

(ஒட்டு கேட்கும் தன் தாயைப் பற்றி ஒரு நண்பர் இப்படி......)

ஒட்டிய வயிறு போல்
ஓசையின்றி,
ஓயாது,
 தலை சாயாது,
.

தீட்டிய செவியின்
ஈட்டி முனை
காட்டும் வெளிச்சத்தில்...

தலை கீழ் மாற்றம்!

வழக்கம் போல் முழக்கம்
இல்லை செயலில் முடுக்கம்,

இளகவில்லை
மன இறுக்கம்.

பகட்டுக்கான பேச்சாக
பதவிக்கான மூச்சாக,
இவ்வாண்டும் நீளும்,

உலக உழைக்கும் மகளிர் தினம்!

குடும்பத்தில் இல்லை உரிமை!
இல்லத்தில் இல்லை காப்பு!
பள்ளியில் இல்லை சமம்!
பாதகம் செய்யும் பல்கலை!

பணி இடம் சனி இடம்
வெளிச்சம் இழந்த சமூகம்.

வெட்டிச் சாய்க்கும் கோரம்!


ஆணாதிக்க தேசம்
அக்கிரம  நோய் என்று ஓயும்!


ஆட்சியாளர் அடையாள
நிவாரணம்!

அடங்கிடும் அதுவும் சில காலம்!
வேண்டுவது தலை கீழ் மாற்றம்!


,

Friday, March 9, 2018

விந்தையே!

ஊடகச் செய்தி
ஒவ்வொரு நாளும்:

"யானை அட்டகாசம்"
"பயிர்கள் நாசம்"
"கரடி பயங்கரம்"

"கதறிய மக்கள்'
"சிறுத்தை நடமாட்டம்"

"தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பதட்டம்"
"கூண்டு வைத்து பிடித்தனர்"
"மயக்க ஊசி செலுத்தினர்"
"வெடி வைத்து விரட்டினர்"

"அடித்தே கொன்றனர்"
"பால் கொடுக்கும் யானை"

"மதகடியில் ரயில் மோதி மரணம்"
"ஓசூரில் பேருந்து மோதி
பலத்த காயம்"

"15 தினங்களுக்குள் 5 யானைகள் பரிதாப மரணம்"

மனித உரிமை உரத்த பேசும்
ஓயாத குரல்கள்
விலங்கு உரிமை விலக்கி
வைப்பது விந்தையே!

சிந்தையெல்லாம்
தம்மைப் பற்றியே,
சுழலும் மனிதம்.

சூழல் உரிமை
உண்மைப் பேண
மறந்திடும்!

தந்தையர் தினம்

(தந்தையர் தின நினைவாக 1985ல் மறைந்த எமது தந்தை குறித்து எழுதியது தற்போது பதிவேற்றம்)

எனக்கு வாழ்த்து கூறுகிறார்
நன்றி உணர்ச்சியுடன்.
வாழ்த்துக்குரியவர் நீங்கள் தானே!
உங்களின் தொடர்ச்சிதானே
நான்,
என் வாரிசுகள்.

இப் பதவிக்குரிய தகுதி சேர்த்தவர்
நீங்கள்தானே!
தோழனைப்போல் தோளில் கை போட்டு,
துருவித் துருவி கேள்விக் கணைகள்
தொடுத்து,
விடை கண்டாயே!

பல விவரங்களில் பகுப்பாய்வுத்தேடி
உம் பட்டறிவை பக்குவமாய்
பகிர்ந்தாயே!
பல்லனுபவம் எமக்குச் சேர்த்து
சுமந்தாயே!

வெண்சுருட்டை விட்டு விடுங்கள்
கடுமையான இலச்சினை என்றதும்,
மாற்றி இலச்சினை 'கத்தரிக்கு'
மாறினாயே!
இலட்சியம் துறந்து!

மதுவின் கொடுமையை மறந்திட இயலாமல்,
மயக்கும் கூட்டம்
உம்மீது செல்வாக்கு செலுத்தி
கரைத்த செல்வம்,

நிலை உணர்த்த முயன்றபோது
பிள்ளை சொல்லுக்கு பெருமை சேர்த்து,
பெரிய பிள்ளைக்காக

அளவைக் குறைத்து,
 அங்காடி தவிர்த்து
வீட்டிற்குள் பழக்கத்தை,
மறைவாக தொடர்ந்தாயே!

வளர வளர
எம் கல்விப் பெருமை
ஊர் அறிய,
உறவு அறிய உழைத்தாயே!

உணர்வுடன் உயர்த்தினாய்!
நம்பிக்கை சேர்த்து.

எமக்கு பிறகு தாயுடன்,
உடன் பிறந்தாரைக் காத்திடுவேன்
கரை சேர்த்திடுவேன் என்று,

உயிர் ஊசல் நிலையிலும்
மருத்துவ மனையில்
 உள்ளவர்முன்னிலையில்,
 உறுதியுடன் உரைத்தாயே!

உமது பெரு வாழ்வின்
நினைவுகள் சுமந்து,
விலகிச் செல்லாமல் விருப்புடன்
கடமை செய்து,

கவலை கடந்து களிப்புடன்,
சலிப்பு கழன்று
 சந்ததி பெருக்கி,
வளமுடன் நன்றியுணர்வுடன்!

Thursday, March 8, 2018

கங்குல் கிழித்து!

(மெரினாவில் திரண்ட சல்லிக் கட்டு போராட்ட உணர்வை கண்டு, மெய்சிலிர்த்து அப்போது வடித்தது, தற்போது பதிந்தது)

ஆர்தெழுந்த கூட்டம்
ஆலம் விழுதென ஊட்டம்.

பொறுத்திருந்த போக்கு
போகியானது நேற்று.

பொங்கிய உணர்வு
வெளிப்பட்டது இன்று.

போக்குண்டு தமிழருக்கு
பொழுதைக் கடந்து,

போர்ப்படை திரண்டு,
பொங்கு கடல் சங்கநாதத்துடன்
பொருத்தி போராட்டம்.

அதிகாரம் ஆட்டம்
ஆலோசனை நீட்டம்,
அக்கறை காட்டும்.

சர்க்கரைத் தமிழனென்றக்
 கணக்கு தப்பாகி,
கருப்பட்டி தமிழனாக
கங்குல் கிழித்து,

கரம் உயர்த்தி
உரிமைக்குரல் ஓங்கி ஒலித்து,
கலை,பண்பாடு காத்திட
அறவழி நின்று,

அரசியல் பிழைத்தோர்க்கு
கூற்றமாகி,
அறிவின் வெளியில்
அகண்ட உணர்வில்,

திரண்ட நிலை,
இந்தியச் சமூகம்

உலகச் சமூகம்
மிரண்ட நிலை.

ஊடகம் மறைத்த உன்மைகள்
ஊழல் திரையிட்ட காட்சிகள்,

அத்தனையும் வெளிப்பட
 உண்மை நிசமாகி
 உயர்ந்து நிற்கிறது.

ஓயாமல் முழங்கி
ஒற்றுமை ஏற்றி!!

படிகார பார்வையாளர்!

வளர்ச்சி என்பது வணிகம்
வகை வகையாய் பெருகும்.

தடைகள் ஏதும் இல்லை!
கடைகள் மட்டுமே எல்லை!

விடை தேடிடும் மக்கள்
விடியல் யார் பக்கம்?

விளையாட்டில் தொலைப்பாய்!
விளைநிலங்கள் இழப்பாய்!

வீதியில் நிற்பாய்!
விதியென்று இருப்பாய்!

வளர்ச்சி என்பது வாழ்விழப்பா?
வாழ்வாதார அழிப்பா?

பொய்யுரை செழிப்பில்
புளுகு  மாந்தர்.

தலைவர் போர்வையில்
அறிவடகு வைத்திடும்,
ஆக்கினை அற்றவர்!

அதிகாரம் குவித்திடும்
சதிகார கூட்டத்தில்,

படிகார பார்வையாளர்!

வீரியம் இழந்தாயே!

எதை எதிர்த்து நின்றாயோ?
எதை எதிர்த்து வென்றாயோ?
அதை தொடர்ந்து சென்றாயா?

கதை முடிக்க நினைத்தாயே!
கதையில் நீ முடிந்தாயே!

விதையில் முளைத்து
விளைவில் கிளைத்திட,
வீரியம் இழந்தாயே!

உலைச்சல் வாழ்க்கையின்
உல்லாசம் நீட்டி,

வீணருடன் சேர்ந்தாயே!
விளைச்சல் இழந்தாயே!

சரித்திர புளுகில்!

தில்லி தலைநகரில் 16லிருந்து
தமிழக விவசாயிகள் போராட்டம்
தனித்து விடப்பட்டோர் தவிப்பில்
அரைநிர்வாணம்,

மண்டை ஓடுகளுடன்
இலைகள் ஆடையாக,
நடுத்தெருவில்.

நியாயம்கேட்டு
பிச்சை எடுக்கும் அவலம்.

விவசாயம் பிச்சை கேட்கிறது
'காசாயம் கண்டு கொள்ளவில்லை'!

அழிப்பவனிடம் நியாயம் கோரி
இழப்பவர் நிற்கிறார்.

துடிக்கும் உணர்ச்சி
துவண்டுபோக

தொலைநோக்கு
தளர்ந்துபோக,
தடம் பதித்து
சாதனை நிகழ்த்தி,

தொழில் வளம் புதுக்குவார்
கணினி உலகேற்றுவார்,
மின்னணு மோகினி ஆட்டம்
மிகை சேர்ப்பார்.

மேதினியில் பேச்சால்
 முழங்கி
மேதமை நீட்டுவார்,
மேட்டுக்குடி போற்றுவார்,

காட்டுக்குடி அழித்து
கழனித் தொழில் ஒழித்து.

'மக்கள் குரல்
மகேசன் குரல்' என்பதறியார்
மாநில அதிகாரம் குவிப்பார்.

தேர்தல் நோக்கே
தினந்தினம் தீனியாகி,
அதிகார போதை
அலவின்றி ஏற்றி,

அதிகார அரசியல் சதிராடி
'சந்தம் இசைப்பார்'
சங்கம் அமைப்பார்,
சாமானியர் இறப்பில்.

வேதனை தீரவில்லை!
விவசாயி வாழவில்லை!'

'சாதனை மனிதர் ஆட்சியில்'
சரித்திர புளுகில்,
தரித்திரர் எழவில்லை!

(விவசாயிகள் சென்ற ஆண்டு தில்லியில் போராடிய நிலை கண்டு துயருற்று, உடல் நலிவுற்றிருந்த நிலையில் அப்போது எழுதியது.தற்போது பதிவு காண்கிறது)

விட்டில் பூச்சி











சுற்றுப் பேச்சின் சுதந்திர
மனிதன்
பற்றுப் பேச்சின் பதம்
இழந்தவன்
கற்றுப் பேச்சின் கலை
மறந்தவன்
விட்டில் பூச்சியில் விடுதலை
கண்டவன்

இப்படி சில கிறுக்கல்கள்

.

உருண்டோடும் பணம்
ஓட்டமாக
சுருண்டுழும் மக்கள்
வாட்டமாக


படிக்கும் செய்தி
பிடிக்கவில்லை
பிடிக்கும் செய்தி
படிப்பவர் இல்லை
இடிக்கும் செய்தி
இடம் பெறவில்லை
முடிக்கும் செய்தி
முற்று பெறவில்லை


நெரிக்கும் வரி
நேர்ந்திடும் கதி



சுருங்கும் வயிறு
சோகத்தின் பயிறு


எதுவும் வியாபாரம்
எட்டிடும் துலாபாரம்

மக்கள் ஆட்சி
மாண்டிடும் காட்சி


தீயவரும் நல்லவரே!
தீண்டாமை உள்ளவரை!

Tuesday, March 6, 2018

ஆடி இப்படியாக!

ஆடி மாத அனுபவம். ஓர் இரவு, இப்படியாக!

  ஆடி மாதம் ஆலயங்களில் அன்றாடம் பூசைகள்.கஞ்சி வார்த்தல், கூழ் ஊற்றல்; சாமி ஊர்வலம்; வீதி உலா; நிகழ்ச்சிகள் வரிசையாக. தேர் வலம், வாத்தியங்கள் வரிசை சேர்க்க.இளைஞர் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்

.இடையிடையே வாண வேடிக்கை, பட்டாசுகள் வெடி, என கோலாகலம், கும்மாளம்.பகலில் தொடங்கி, இரவு நீளும். நிசப்த இரவின் நிம்மதி நெளியும், மனம் சுளிக்கும்.ஒலி, ஒளி பெருக்கிகளின் ஒய்யாரம்,ஓலம் கூட்டிசைக்கும்.அமைதி ஆர்ப்பரிப்பிடம் கெஞ்சும்.நிம்மதி தேடிய உறக்கம் கெஞ்சும், சப்தங்களின் ஆட்சியிடம்.

இரவு கடந்தும்,விடியல் நெருங்கும் வேளை, துயில் இழந்த குயில், காகம், பட்சிகள் ,உயிரினங்கள் துடித்தெழும், அச்சம் ஆடிப்போய் அரவத்துடன் குழந்தை அளறல், வீல் ஒலிபோல், விபரீதம் ஏதோ என்றுணர்ந்து, வைகறை வருத்தத்துடன் மூடி, மூடித்திறந்த விழிகள் எரிச்சலுடன், கடைசி வெள்ளி இதுதான் என்றறிந்தோ, என்றறியாமலோ பொழுது புலரும் பொருமலுடன், இருமலும் சேர்த்து.

 பொல்லாங்கு மனிதரின் போக்கு சகித்து.

பவனி.......!

கணக்கு பார்த்தேன்
பிணக்கு சேர்த்தேன்.

உள்ளதைச் சேர்த்தேன்
உளறல் என்றாய்!

உண்மையைச் சொன்னால்.......?

கள்ளமே வாழ்க்கையாக
கபடமே நடைமுறையாக,

வாழும் மாந்தர்,
வரிசையில் பவனி.......!

தேவையில்லை!

சத்தத்துடன் அவன்
சித்தத்துடன் நான்
அமைதியில் நான்
ஆர்ப்பரிப்பில் அவன்
சலசலப்பில் அவன்
சலனத்தில் நான்

சித்தம் தேவை!
 சத்தம் தேவையில்லை!

Monday, March 5, 2018

நினைப்பில்!

சனவரி மாதத்தில்(28) என நினைவு. ஒரு திருமண வரவேற்பிற்கு சென்றிருந்தேன்.பழைய நண்பரின் மகன் நிகழ்ச்சி. எப்படியாவது செல்ல வேண்டும் என்ற நினைப்பில்! கூடுதல் பயனாக பல பழைய நட்பு வட்டங்களையும் சந்திக்க இயலும் என்கின்ற ஆசையும்,ஆவலும் முந்தித் தள்ள விரைந்தேன்.

எதிர்பார்த்தபடியே பலரை சந்திக்க முடிந்தது. முகமன் கூற முடிந்தது.,சிலரிடம் உரையாடவும் வாய்த்தது. ஒரு சிலர் அக்கறையுடன், உடல் நலம் குறித்து உசாவினர். பொது நிகழ்ச்சியில் தற்போது சில சந்தர்ப்பங்களில் உங்களை சந்திக்க முடிகிறது என்கின்ற அவர்களின் விருப்ப உணர்வும் வெளிப்பட்டது.

சிலரிடம் நிகழ்ச்சிகளுக்கு என்னை அழையுங்கள் என்றும் கூற முடிந்தது.பத்திரிக்கையாளர் ஞானி அவர்களின் மறைவு அஞ்சலிக் கூட்டத்திற்கு என்னையும் அழைத்திருக்கலாமே! எனும் விருப்பார்வத்தையும் வெளியிட முடிந்தது.

பள்ளி நண்பன் குப்புராசுவிடம்,' பரிக்க்ஷா' வீதி நாடக இயக்க செல்வாக்கில், தாக்கத்தில், புதுச்சேரியில் 80களில் தொலைபேசித்துறை தோழர்கள்,சி.டி..பத்பநாபன் முன் முயற்சியில் பாவண்ணன்,மகேந்திரன்,மதியழகன், அன்பழகன்,வில்லியனூர் தோழர்கள் அருனன், சரவணன், மாலதி இன்னும் பலர் பங்குகொள்ள, ஒத்துழைப்புடன், 'விழிப்பு வீதி நாடக இயக்கம்' என்கின்ற பெயரில், பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியிருக்கிறோம்.

 'கூடங்குளம் அணு உலைத்திட்டம்',கருத்துருவான போதே அதற்கு கண்டனக்குரல் எழுப்பிய முதல் நிலம், புதுச்சேரி ஆகும்."அணு ஆபத்து தடுப்பு இயக்கம்" என்கின்ற பதாகையுடன், மேலங்கி அணிந்து, ஊர்வலமாக சென்று, புதுச்சேரி ஒதியஞ்சாலைத் திடலில் கூட்டம் நடந்தது.

நெடுமாறன், மணியரசன், அந்தன்கோமசு, அழகிரி ,ஞானி போன்றவர்கள் பங்குகொண்ட பெருந்திரள் விழிப்புணர்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.இவை குறித்து எல்லாம் பழைய நினவுகளின் பதிவுகளை அசை போட இயன்றது.

இவை குறித்து விரிவாக பதிவு செய்யும் முனைப்பு,  ஒருங்கிணைப்பு யாவுமின்றி, தனி ஆவர்த்தனமாக, தன்முனைப்பு போக்கில் புதுச்சேரியில் சில பத்தாண்டுகளாக மேலோங்கி நிலவி வரும், ஆரோக்கியமற்ற  சூழல் விரிவாகியுள்ள  நேர்வு குறித்தும் எங்கள் விசனம் விரிந்தது

.மனநிறைவுடன், பேராசிரியர்.இளங்கோ அவர்களின் மகன் திருமண வரவேற்பு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. தனித்தீவாக இல்லாமல், தீவுக்கூட்டமாக செயல்பட, தோழர்.இரா.சுகுமாரன், பத்திரிக்கையாளர்.பி.எஸ்.பாண்டியன் போன்றோரிடம் என் விருப்பத்தை பகிர்ந்து கொண்டேன் .

Sunday, March 4, 2018

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது"

ஆறு மாதங்களுக்கு முன் கர்நாடகாவில் வெறுப்பு அரசியலுக்கு பலியான பத்திரிக்கையாளர் தோழர்.கெளரி லங்கேஷ், அவர்களின் நினைவுக் கவியரங்கம்," புதிய உறவு", சிற்றிதழ் ,சிவசு அறக்கட்டளை மற்றும் இராதே அறக்கட்டளை ஆகியவை இணைந்து, "துப்பாக்கியால் சிதைத்திட முடியாது" எனும் தலைப்பில் இரண்டு மாதங்களுக்கு முன் நடத்திய கவிதைப் போட்டியின் நிறைவு விழா, புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில், இன்று(4.03.2018) காலை தொடங்கி நடைபெற்றது.

புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 120 கவிஞர்கள் கவியரங்கில் பங்கேற்று,அவரது துணிச்சல் மிக்க நினைவுகளை கவியாற்றல் மூலம் வெளிப்படுத்தினர். சாதி, சமய வேறுபாடு, கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயற்பாடு, ஒற்றை பரிமாண இந்துத்துவ நிரலை ,நியாயப்படுத்தி, தனி மனித உரிமைகளை திட்டமிட்டு நசுக்குவது போன்ற ஆபத்தான ஒற்றை அடையாள அரசியலை, கடுமையாக விமர்சித்தனர்.


சமத்துவமின்மைக்கு எதிராக!


இந்திய சமூகச் செயற்பாட்டுப் பேரவை, புதுச்சேரி, சமத்துவமின்மைக்கு எதிரான போராட்ட வாரம் 19 முதல் 26 சனவரி, 2018ஐ முன்னிட்டு,

 சமத்துவமின்மைக்கு எதிராக உலகெங்கும் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.இந்தியாவில் தமது வாழ்விடங்களிலிருந்து கொடூரமாக விவசாயிகள், நகர ஏழை மக்கள், மற்றும் தெரு வியாபாரிகள் அகற்றப்படுவதை நாம் தடுத்திடுவோம்.

சமத்துவமின்மைக்கு எதிராக போராடுவோம் என்கின்ற முழக்கத்தை முன்னிறுத்தி, புதுச்சேரி, தலமை அஞ்சல் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்,  27, சனவரி அன்று காலை 10 மணி அளவில்  நடைபெற்றது.

அமைப்பாளர் சீனு.தமிழ்மணி, தோழர்.மோகனசுந்தரம், சி பிஎம் எல்.தோழர்.பாலசுப்ரமணியன், மீனவர் விடுதலை வேங்கைகள் தலைவர் மங்கையர்செல்வன், சமூகச் செயற்பாட்டாளர், முத்துக்கண்ணு மற்றும் பல சனநாயக அமைப்புகளின் தலைவர்கள், பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

உலக பொருளாதாரப் பேரவைக் கூட்டத்திற்காக சுவிட்சர்லாந்து டவோஸ் மலை வாச தலத்தில் வசதி படைத்த பகட்டுக் கூட்டாளி நாடுகள் சமத்துவமின்மையை அதிகரித்திடவே முகாமிட்டிருக்கின்றனர். சமத்துவமின்மையை மக்கள்தான் ஒழிக்க இயலும்.

சமமான உலகம் கோரி மக்கள் அணி திரள்கின்றனர் எல்லைகளைக் கடந்து, என்கின்ற உணர்வு பூர்வமான எண்ண ஓட்டங்களை, யதார்த்த நிலையிலிருந்து அனுபவித்திடும் துன்ப நிலைகளில் பாடம் பெற்று, உலக வணிகப் பேராசை, சுரண்டலுக்கு அடிபணியோம், என்பதை உரக்க உணர்த்திய  வெகுதிரள் போராட்டமாக  ஆர்ப்பாட்டம் அமைந்தது.

Saturday, March 3, 2018

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பில் குறைவில்லா கவனம் தேவை!
குழந்தை பிறக்கும் போது காணும் உற்சாகம், பொங்கிடும் அன்பு, மாதங்கள் செல்லச் செல்ல, ஆண்டுகள் தொட, மங்கிடும் மகிழ்ச்சி, மாறுதலில் தளர்ச்சி.

பெற்றோர் முதல் பொறுப்பாளராக கவனம் செலுத்த வேண்டிய காலத்தில்,திட்டமிடாது ஏனோ, தானோ என்று குழந்தையை பராமரிப்பது தற்போதைய காலக் கட்டத்தில் அதிகமா, பரவலாக காணக்கிடக்கிறது.

படித்தவர்கள் மத்தியில் பல அடுக்குத் தடுமாற்றம்.

குழந்தையை காலைக் கடன் கழிக்க வைப்பது, குளிப்பாட்டுவது, பல்துலக்குவது  ,நல்ல ஆடை அணிவிப்பது, பக்குவமான உணவு வகைகளை, சத்தான வகைகளை, அறு சுவையும் படிப்படியாக பழக்குவது, கனிவாக உரையாடுவது, பெரியவர்களை மதிப்பது போன்ற நல்ல பழக்க, வழக்கங்களை விதைத்திடும் பருவம் ஆகும்.

 இந்த அணுகுமுறையில் பெரிய இடைவெளி தற்போது நிலவுகிறது. பெரியவர்கள் வாழ்க்கைச் சூழல், பதட்டம், கொந்தளிப்புடன், பிள்ளைகள் உளவியலை, உலகத்தை மறுத்து, மறந்து, உணர்ச்சியுடன் ஓடுவது, சாடுவது, இன்று பெரும்பாலும் நாம் காணக் கூடியதாக, பரவலாக இருக்கிறது.

செல்லிடைப்பேசி, தொலைக்காட்சி போன்ற ஊடக சாதனங்கள் நம்மை ஆதிக்கம் செலுத்திடும் அவலம் போதாது என்று, குழந்தையை சாப்பிட வைத்திட, தூங்க வைத்திட, ஏன்? அவர்களை சமாளித்திட வலிமையில்லாமல், வகை தெரியாமல் அவ் வளையத்திற்குள் தள்ளுவது பரிதாபமான குடும்ப அன்றாட நிகழ்வாக பல தருணங்களில் அமைகிறது.

விவரம் அறிந்த பெரியவர்கள் சுட்டிக்காட்டி, ஒழுங்கியக்க முனையும்போது எதிர்கொள்ளும் எதிர்வினை, நிலைமையை மேலும் சிக்கலாக்குகிறது.

குழந்தைக்கு கதை சொல்ல, பாட்டுப்பாட, அவர்களுடன் ஓடி விளையாட அவகாசம் எடுக்காது, நேரம் ஒதுக்காது, பொழுதை கழிக்கும் தந்தை, தாய் அவரவர் தன் விருப்ப போக்கில் தமது வேலையைப்  பார்த்திடும் ஒரு மோசமான சமூகம்.

இது குறித்து அக்கறை கொள்ளாத அரசாங்கம் மனிதவள மேம்பாடு, குழந்தைகள் நல மேம்பாடு, என பலப் பட்டியல் துறைகள், முழக்கங்களுடன் சாதனை வெளியிடும் சந்தடியுடன் சதா கால்மும். சமூக பொறுபுணர்ச்சி, அக்கறை இழந்து, முதல் பள்ளியான குடும்பமே இக்கோளாறில் தொடங்குகிறது என்றால், பள்ளிகள் குறித்து கேட்கவே வேண்டாம்.

அனைத்தும் சர்வதேச உயரத்தில், தகுதியில், விளம்பர பதாகை விரித்து தனியார் முயற்சி, தம்பிடி பிடுங்கிடும் தாளாளர் கூட்டம். குழந்தைகள் உளவியலை சிறுகச் சிறுக சீரழிக்கும் கல்வி வணிகத் தொழிலேற்புகள்.உடைந்த குடும்பம், போன்ற சிக்கலான சூழலில் பள்ளிக்கு வரும் குழந்தைகள். பள்ளிகளின் வகுப்பறைகள் தொகுப்பு வீடுகளாக, மாட்டுத்தொழுவங்களாக அடைத்து வைக்கப்படும் அவலம் அனைவரும் அறிவர்.

குளிரூட்டப்பட்ட வகுப்பறை விளம்பரம் விடுதியை நினவுபடுத்தும்.பள்ளி வளாகத்திற்குள் விளையாட்டுச் சாதனங்கள், ஏற்பாடுகள் அடையாளமாக, பெயரளவிற்கு மட்டுமே பெருமைச் சேர்க்கின்றன.

பயிற்சி பெறாத, திறன் போதாத ஆசிரியர்கள் சொற்ப சம்பளத்தில், ஒப்படைக்கப்பட்ட குழந்தைகளை சில மணி நேர வைத்திருப்பிற்கு பின், திருப்பி அளித்திடும் பண்டக பெட்டக காப்பீட்டு திட்டம் போல், அன்றாட அலுவல் மின்னும் விளம்பரம் முரசறைய,"மின்னல் பூச்சியாக", கூடங்கள் வரைமுறையின்றி, சுற்றிச் சுற்றி வலம் வருகின்றன. மளிகைக்கடை வியாபாரம்போல்.

குழந்தைக்கென நேரம் ஒதுக்கி அவர்களுடன், அவர்கள் பழகுவது ,உரையாடுவது,வெளியே உலா அழைத்துச் செல்வது, மனம் விட்டு ஆடுவது, பாடுவது போன்ற பழக்கங்கள் , அற்றுப்போய் விட்ட நிலைமை, நமது சமூகத்தின் மிகப்பெரிய தளர்ச்சி.

நல்ல குழந்தை வளர்ப்பு, சமுதாயத்தின் பொறுப்பு என்பதெல்லாம் ஊடக வெளிச்சமாகவே நின்று போய்விடுகிறது.உணர்வுகளில்  ஊன்றாது, உணர்ச்சிப் பெருக்கில் வாய்ப்பந்தல் போடப்படுகிறது நாள்தோறும்.

Friday, March 2, 2018

எரிவாயு!

தேர்தல் உமக்கு!
மாறுதல் எமக்கு!

பிரச்னை உமக்கு!
தீர்வு எமக்கு!

விளை நிலம் எமக்கு!
வீதி உமக்கு!

எரிவாயு எமக்கு!
எரி வயிறு உமக்கு!

வருவாய் எமக்கு!
வெறுவாய் உமக்கு!

நிரல்கள்

சிதறிய கனவுகள்
சிறைப்பட்ட உணர்வுகள்.

கறைபட்ட எண்ணங்கள்
குறை சேர்த்த குழப்பங்கள்.

நிறைகெட்ட செயல்கள்
கொந்தளிக்கும் நிரல்கள்.

சக மனிதர்

சக மனிதர் பழக்கத்தில் சந்தித்த இடர், சவால்கள் ஏராளம். சம்பவங்களின் மெய்மங்களில், விளைவுகளில் புலப்பட்ட அதிகார ஆசை, நெறி கடந்து, வெளிப்பாடு வெறியாகி நேர்மை இழந்து, நேசக்கரம் நீட்டி, வஞ்சக வலைவீசி, அணிசேர்த்து, தன்னழுத்த விசைக் கூட்டி விரைகிறது.

விளைவறியா வெற்று மாந்தர், களையுடன் கைகோர்த்து, நட்புப்  பயிர் நாசம் விளவித்து, நகை முகம் குழைத்து நாடகம் அரங்கேற்றம், நாள்தோறும் நம்பிக்கையுடன்!!

பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை!

தனியார்  கல்வி நிறுவனங்களில், பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரி வரை ஆசிரியப் பணியில், அலுவல் பணியில் சேர்ந்திடும் ஊழியர்கள் பணிநிலைமைகள் குறித்து பெறப்படும் தகவல்கள் நிறைவளிப்பதாக இல்லை.குறிப்பாக,பெண் ஊழியர்/ஆசிரியர்களின் நிலை மோசமாக உள்ளது.நாள்தோறும் பாலியல் கொடுமைகள்,தொல்லைகளுக்கு உள்ளாகும் ஆசிரியைகள் பலர் தம் இன்னல்களை வெளிப்படுத்த முடியாத அவலம்.

அப்படியே, சில சந்தர்ப்பங்களில், சகிக்க முடியாமல் வெளிப்படுத்திடும் சம்பவங்கள், புகார் அளவில், காவல் நிலையத்தின் இருப்புக் கதவைத் திறக்க முடிவதில்லை. பள்ளியின் தாளாளர் பெரும்புள்ளியாக, கட்சி அரசியல் தொடர்பானவர் என்றால், புகார் அளிப்பவருக்குத்தான் பிரச்னை அதிகமாகும். அடியாட்கள் துணையுடன், அதிகார மமதையுடன், ஆட்சி செலுத்திடும் 'கரும்புள்ளிகளை', தொட, காவல் துறையும் கவனம் செலுத்தாது.

'தனி மனித உரிமை', ' பெண்ணுரிமை' ' பேசும்,  பதிவுகள் மேற்கொள்ளும் குடிமைச் சமூகம், கண்டும் காணாது தமிழ்ச் சங்கங்களில், அரங்குகளில் மேடையேறும், காணொலிக் காட்சி தரும், சாதனைப்பட்டியல் சேர்த்து நாள்தோறும்.

கல்வித்துறை, காசுள்ளவர் கைப்பாவையாக, பிரச்னை எதுவாகினும் தமக்கு தொடர்பில்லை எனும் நடுநிலைப் பார்வை, அரசாங்க உயர் அதிகாரம், பல ஊடகச் செய்திகளில் இதுவும் ஒன்றே!

சலனமற்று, ' மக்களாட்சி நிர்வாகம்', 'வெளிப்படை நிர்வாகம் , 'ஊழலற்ற நிர்வாகம்' என்கின்ற கவர்ச்சியான முழக்கங்கள் வாடிக்கையாக !
 வலம் வரும் வக்கனையாக!

சிட்டம் கட்ட!

முன்னிலைப் படுத்தியவன் அல்ல
என்னிலை ஏற்றம் கருதியவன் அல்ல.

உன்னிலை உணர்த்த
பொதுநிலை உணர்த்த,

பல நிலை கடந்தவன்,
பதவியைத் துறந்தவன்.

தன்நிலை இழுக்க
தன்னழுத்தம் சேர்க்க,

தமிழ் அமைப்பு
தலை சேர்ந்தவன் அல்ல,

பட்டறிவில் புடம் போட்டு
பக்குவம் பல அறிந்து,

இயக்கப் போர்வை துறந்து
தனியானேன்.

கூட்டம் தவிர்த்து
கூர்ந்தறிந்தேன் தொலைவில்.

வட்டத்திற்குள் வட்டம்
சிட்டம் கட்ட,

சிறுபான்மைக் கூட்டம்
சிதறிப்போக,

பெரும்பான்மை பொருள் தேடி
பொருமிய மனிதர்,

போக்கின் பொழுதுகள்
யாவும் அறிந்தேன்.

போக்கில்லை
அவருக்கு.

இறுகிய மனநிலை
ஈர்த்திடும்
அணி சேர்க்கை.


சொல்லாடல் சுரங்கத்தில்
மல்லாடல் மைந்தர்கள்.

சுகமான தருணங்களில்
அகமான ஆர்வலர்கள்.

வினையாடல் விட்டொழிந்த
வீணர்கள் ,
வினோத துரோணர்கள்.

விடுதலையில்லை!

வாழ்நாள் சிறைவாசிகள்!
கருத்தியலின் அடிமைகள்!!

Thursday, March 1, 2018

ஒலிப்பான்!

அடிப்பது உன் ஒலிப்பான்
என்றாய்!
வலிப்பது என் செவி!

'வைத்த கண்
வழிநெடுக வாங்காமல்' எனின்,
பொருள் உண்டு.

வைத்த கை வாங்காமல்
ஒலிப்பான் மீதெனின்,

பொருள் இல்லை!
பொறுப்பும் இல்லை!

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள் படும்பாடு சொல்லி மாளாது. புதுச்சேரி மாநிலத்தில் ஏழெட்டு பெரிய மருத்துவமனைகள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் செயல்பட்டு வருகிறது. தெரிந்தவரையில், புதுவை அரசு மருத்துவமனைக்கு, இந்திரா நகர், கோரிமேடு பகுதியில் ஒன்று உள்ளது. அதற்கும் சரிவர உட்கட்டமைப்பு, பணியாளர் போதிய அளவில் இல்லை என அரசுக்கு தெரிந்திருந்தும், கண்டும் , காணாமல் இருக்கிறது.

'சிப்மர்',  மத்திய அரசு மருத்துவமனையில் மட்டும், முறையான மருத்துவக் கழிவுகள் அகற்றும் ஏற்பாடு, சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி உள்ளது.

இதுமட்டுமின்றி, பல தனியார் சிறிய அளவிலான மருத்துவமனைகள், புற்றீசல் போல்   பெருகி உள்ள நிலையில், இவற்றிலிருந்து தினசரி உருவாகும், மருத்துவக் கழிவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன?  இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிலவுவதாக, விவரம் அறிந்தவர் கூறுகின்றனர்.

இது குறித்த கவலை, இவ்வாறு வெளிப்பட்டது;

காத்திடும் மருத்துவம்
கழித்திடும் கசடுகள்,

கண்டபடி சென்றிடும்
காற்றில்.

கட்டுப்படுத்துவர் யார்?
கவலை கொள்வார் யார்?

மனிதம் அழித்தாய்!

மலை வெடித்து
கொழிக்கிறாய்!

மரம் வெட்டி
சேர்க்கிறாய்!

மனல் எடுத்து
செழிக்கிறாய்!

வெட்டி, வெட்டி கொழிக்கிறாய்!
வட்டி ,முதலுடன் செழிக்கிறாய்!

கெட்டியான தரையும்
தொட்டி போட்டு,

தட்டி, கட்டி ,
ஆழம் பெய்து,

தாளம் போட்டு
பாதாளம் ஆக்கி,

பாழ் விளைத்தாய்!
மனிதம் அழித்தாய்!

திரிசங்கு

வாழ்க்கையின் தொடக்கமே தடுமாற்றமாயின், தடம் மாற்றம் தவிர்க்க இயலாதது.தனி மனிதனாக, தன்னிச்சையாக தீர்மானிக்கும் துணிவின்மை.குடும்பத்தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவது/உடன்படுவது. ஏதோ சில புரிந்து கொள்ளாத நிர்ணயிப்புகளை நிபந்தனைகளாக முன்மொழிந்து சில நடைமுறைக்கு வந்தபோது வெற்றிக் களிப்பில்.

மெய்யாக,  குடும்ப வாழ்க்கை, மண வாழ்க்கைக்கு அவசியமென, உகந்த நிர்ணயிப்புகள் குறித்த, புரிதல் இன்றி, பல பத்தாண்டுகள் கழிந்த பின், பின்னோக்கிய பரிசீலனையில் பளிச்சிடுகிறது உண்மை. தவிர்க்க இயலா விதியின் கீழ், தடமாற்றமின்றி, எண்ணங்களை மடைமாற்றி வாழ்கிறேன்.

இதன் பிறகு என்ன செய்வது? இயலாமை நடையில் இன்முகம் பிதுக்கி, நாள்கள் கடத்துவத. நகரிகம் கருதி, பண்பென்று வேறு பொருள் கொள்ள முகமூடி தரிப்பு.

வாழ்க்கை கூத்தில், வண்ண, வண்ண விளக்கொளியில், வரிசங்க முழக்கத்தில் திரிசங்கு பயணம். தினம் ஒரு குணம், தீர்க்கமற்ற மனம்.

அடியார்!

முகமூடி அணிகிறார்,
தினம் ஒரு வண்ணத்தில்
திரிகிறார்!

திசைமாரி, பசை தேடி
அவதார ஆண்டவனின்,
அடியார்!

அவரையும் தாண்டி
 ரூபம் எடுக்கிறார்!

சுய ரூபம் தொலைத்து!
,
நன்மை ஒழிந்து
 தீமை வெல்ல,

தலைகீழ் நீதி
தரணிக்கு அளித்திட ,

புதியதோர்
 விதி செய்கிறார்!

புண்ணியக்கோடி!.

தனி நாட்டம்

தனி மனித விருப்ப விசையில் விரைந்திடும் மனிதன். தான் சர்ந்துள்ள குடும்பம், உறவுகள் தொலைத்திடும் மனிதன். தனி நலம் ஒன்றே உயர் நலமாக, உணர்வேற்றி  ஒட்டறுத்து ஒதுங்கும் போக்கு கூடுதலாகிடும் காலம் இது.

 என் நிம்மதி முந்துரிமை.இதற்கு தடையாக, குறுக்கீடாக நிற்கும் எவையும் ஏற்பில்லை.என்னை விட்டு விடுங்கள், எட்டிச் செல்கிறேன் என்கின்ற மனப்பான்மை கூடுதலாகி, கூட்டம் கலைந்து, தனி நாட்டம் அதிகரிக்கும்.

 தந்தை இல்லை! தாய் இல்லை! மனைவி இல்லை! குழந்தை இல்லை!.விட்டு விடுங்கள் எனக் கட்டறுத்துச் சென்றிடும் காலம்.பசையுணர்வு காய்ந்து, நசை உணர்வு நழுவி ஒதுங்கிடும் உள்ளம்.

 வளர்த்தது சரியா? வளர்ந்தது சரியில்லையா? கூடுதலாகும் விசாரணை! மனக் குளத்தில் நீண்டிடும் குமிழ் வளையங்கள் போல்.விடை காணும் நடை வீரியமாக. கரைந்திடும் பொழுது காலச் சக்கரத்தில்.

வேள்வியில் பயணம்

துயிலெழும்போது துலங்கிய எண்ணம், கிளர்ந்த சிந்தனை, திரண்ட கருத்துகள் வடித்திட ஏடெடுத்தபோது வசப்படாத மாயம்! பல தருணங்களில் மனத்தின் கண்ணாமூச்சி!
 சுற்றி எழும் சத்தம், சந்தடி, வந்த அடி தெரியாமல் திசைமாறிடும். திடம் குறைந்து.தங்காத நினவு குறித்து தவித்த கணம்,காலம் கடந்தும் தயாரிப்பிற்குள் வராது.
பலமுறை,இது போன்ற நிகழ்வுகள் நீளும்.  உள்ள வாரியின் ஓயா இரைச்சல், அலைக்கழிப்பில், உற்சாகம் உலர்த்தி.

எண்ணுவது ஏராளம்
எழுதுவது?

முடங்கிய செயல்முணு முணுப்புடன்
மூண்டிடும் துயரம்,
முக்கல் முணகலுடன்.

வேண்டிடும் அமைதி.
நீண்டிட
வேள்வியில் பயணம்.

வேதனை தீர்க்க!
சாதனை சேர்க்க!

நீண்டிடும் 'நிர்பயா'


மாண்டிடும் மனிதத்தின் சாட்சி
மாநிலந்தோறும்.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அரியாணா..............

குழந்தைப் பருவ, குமரப் பருவ
பெண்கள்,

சாதிய வெறிநாய்களின்,
 சனாதனப் பசியில்,

அடுத்தடுத்து அடுக்கடுக்காய்
 அக்கிரமம்.

வக்கிர வெறியில்
தலித் பெண்கள் கற்பழிப்பு,
உடல் சிதைப்பு,

பிணந்தழீயும் நடத்திய
நவீன நம்பூதிரிகளாக.


அரியாணா அக்கிரமம் வக்கிரமத்தின் உச்சம்.பதின் பருவ தலித் பெண் சிதைந்த உடல், 'சிந்த்' மாவட்ட கால்வாய்க் கரையில். கூட்டாக கற்பழிக்கப்பட்டு,உடல் சிதைக்கப்பட்டு, பிறப்புறுப்பில் பொருட்கள் திணிக்கப்பட்டு வன்மம்.பானிபட் மாவட்டத்தில் தலித் பெண் குழந்தை அண்டை அயலவரால் பலாத்காரம் செய்யப்பட்டு பிணந்தழீ நிகழ்த்தப்பட்டுள்ளது.அறிவிப்புகள் ஆயிரம் வந்தாலும் சாதிய வெறி, அணி திரட்சி அக்கிரம் எல்லைகளைக் கடந்து,மாநிலங்களைத் தாண்டி,
 நீண்டிடும் "தலித் நிர்பயா". மாண்டிடும் மனிதத்தின் காட்சி!
வெட்கப்பட வேண்டும்!
வளர்ச்சியும்! முன்னேற்றமும்!