Wednesday, May 30, 2018

நவீன குசிலார்!

"ஈயம், பித்தளை, செப்பு பாத்திரம் வாங்கறது
பேரிச்சம் பழத்திற்கு வாங்கறது"

தெருத்தெருவாய் வருவாய்
தெம்பாய் தருவாய்!
கந்தை கோணியில் கழித்து கட்டும்
சாமான்கள் சேகரிப்பாய்!
தராசு முள் முனைக்காமல்
பேரிச்சை தருவாய்!
பள்ளி நாளில் கண்ட காட்சி!
நடமாடும் குசில் கடை!
நலமாக்கும் பண்டமாற்று.

நவீன குசிலார்!
பெருமுதல் ஊட்டி,
வளம் சுரண்டி,
ஊர்  தாண்டி,
நாடு கெடுத்து,
நலம் கெடுத்து,

இழப்பை பிழைப்பாக்கி
இறுதி யாத்திரை!

ஊதியம் வைப்பார்
உயிருக்கு!

கூராய்வார்








அயராது ஆராய்வார்
ஆராய்ச்சி கூராய்வார்
பதறாது பதுக்குவார்
சிதறாது பிதுக்குவார்
சீண்டி சிணுங்குவார்
கிண்டி கிளறுவார்
உண்டி உயர்த்துவார்
உழைப்பில் உருப்படி
கூட்டுவார்
ஊர் அறிவார் உறவறியார்
உள்ளது அறியார்

சேர்ப்பாய்!









வருவாய் இழந்த வெறுவாய்!
பெறுவாய் பெருமை
தருவாய்!
உழைப்பாய்! உண்மை உணர்வாய்!
உயர்வாய்! உடமை எடுப்பாய்!
வெடுப்பாய் விளைந்த நிலை கடப்பாய்!
துடுப்பாய் பயணம் சேர்ப்பாய்!
கடுப்பாய் தூர்ந்த மனம்
கழிப்பாய்!
வெளுப்பாய்! வேற்றுமை விடுப்பாய்!
களிப்பாய்! கவலை மறப்பாய்!

Tuesday, May 29, 2018

தயாரா?







ஆட்சியே நீ யார் பக்கம்?
மக்கள் பக்கமா?
பெருவணிகத்தின் பக்கமா?
கொழுக்கும் முதலாளியத்தின் பக்கமா?
இழக்கும் தொழிலாளி பக்கமா?
வளங்கள் மக்களுக்கா?
சுரண்டும் முதலீட்டுக்கா?
வாக்களிக்கும் மக்கள்
எதிர்த்திடும் திட்டம்!
வரிசையாக நுழைக்கும்
கட்டம்!
அரசாங்கம்! மக்களை விட
அதிகாரம் படைத்ததா?
பொது வாக்கெடுப்பு நடத்த தயாரா?

தேறுவாய்!








அழையாத வீட்டிற்கு
ஆளாய்ப் பறக்கிறாய்!
அனுமதி இல்லாமல்
அக்கறை(ரை) சேர்க்கிறாய்!
இக்கறை(ரை) இனிமை
இடக்காக நினைக்கிறாய்!
சர்க்கரை நினைப்பு!
சங்கட முளைப்பு!
கருப்பட்டியாய் உருப்படி
தேறுவாய்!
உடல் நலம் கூட்டுவாய்!

மரண சாட்சி!








சுட்டாய்!
 நீ கெட்டாய்!
தீயிட்டாய்!
தீச்சுவலை சுவைப்பாய்!
திணிக்கிறாய்
 வன்முறை,
தீராத பசிகொண்டு,
காவல் துறையை நம்புகிறாய்!
இராணுவத்தை நம்புகிறாய்!
மக்களை நம்பாய்!
மக்கள் ஆட்சி!
மரண சாட்சி!

Friday, May 25, 2018

தூத்துக்குடியில்....




அடிக்கல் நாட்டினாய்!
அடுத்தவன் அழிவென்று
விரட்டியதை,
அரவணைத்தாய்!

ஆரம்பித்து வைத்தாய்!
அழிவை ஆசிர்வதித்தாய்!
ஆளுமை செய்தாய்,
நன்கொடை நிரந்தரம் ஆக்கினாய்,
நாசத்திற்கு துணை போனாய்.

பாதிப்பில்,
பதறிய மக்கள்,
பழுதடைந்த உடலொடு,
சில பத்தாண்டுகள் பரிதவித்து
திகைத்தனர், திண்டாடினர்.

தீர்வளிக்கும் ஆட்சி என
நம்பினர்!
நம்பிக்கை மோசம்,
நாடக வேடம்
நாளெல்லாம்,
உள்ளும் வெளியும்!

சுகம் சேர்த்தாய் சொந்தங்களுக்கு!
வழியின்றி வாழ்வாதாரத்திற்கு
வகையின்றி,
சிறுகச் சிறுக நலம் கெட்டவர்,
சிதறியிருந்தவர்,
சீர்தூக்கி,
செறிவாக முன்னெடுத்த,
இழப்பதற்கு ஒன்றும் இல்லை
சூழல் உரிமை,
அரசியல் களம்!

தீவிரம் அடைந்தபோது, திகைப்புற்ற
கையூட்டு அரசியல்,
கை நழுவுகிறதே
கதறல்!
பெருவணிக நன்றி மறவா
பாய்ச்சல்!

மக்கள் மீது மேய்ந்தாய்!
ஆலை சார்பாய்!
அரியணை சார்பாய்
ஆவி பறித்தாய்!

கூற்றும் அஞ்சும் கொடுமை கூட்டினாய்!
கோலோச்சும் கேள் பகை,
தூத்துக்குடியில்...........



Wednesday, May 23, 2018

பெருவணிக இலாபப் பசி-' ஸ்டெர்லைட்'

சுடுவார்!
சுட்டுப் பொசுக்குவார்!
எதிரியைப் போலே, ஏறி படுத்து
குறிபார்த்து!
 ஆயுதந்தரித்து!
எண்ணிக்கை அதிகரிக்க
கெக்கலி கொட்டுவார்!
இறந்து விழும் உடல்கள் கண்டு
எள்ளி நகையாடுவார்!

வாழ்வாதாரத்திற்கான போராட்டம்!
உமக்கும் சேர்த்துதான்!
அதிகார வர்க்கமும்
சுவாசிப்பது' ஸ்டெர்லைட்
நச்சு' காற்றைத்தான்!

புற்றுநோய், பொல்லாத நோய்
பொசுகென போய்ச் சேர்வதும்
பொதுவானதுதான்.
சேவகம் செய்வதற்கும் அறம்
உண்டு!

ஊரைப் பகைத்து, உறவைப் பகைத்து
உயர்த்தும் கை! ஒடுக்கும் தடி!
வெடிக்கும் குண்டு!
ஒழுங்காகுமா?

சுருண்டு விழுந்தவர், சுய நலத்திற்காகவா
போராடினார்?
உயிர் துறந்தவர், ஓட்டு வாங்கவா?
ஓடி, ஓடி அடிபட்டார்!
 மிதிபட்டார்!

சந்ததி காத்திட
சத்தமிட்டு, ஓலமிட்டு
வாழ்வுரிமை காத்திட,
வக்கில்லா ஆட்சியின்
போக்கு உணர்த்திட,

 பெருவணிகக் கூட்டத்தின் இலாபப் பசிக்கு
இரையாக விருப்பமின்றி,
 இயற்கைத் தாயைக் காத்து,
காற்றையும் நீரையும் வாழ்வுரிமை
 என அறுதியிட்டு,
 ஆர்ப்பரித்த கூட்டத்தை,
அரச அதிகார வெறியில்,
ஆவி பறித்தனர்!

சகிப்பின்மை அரசியலின்
 இன்னொரு முகம்!
சனாதன  கூட்டணியின்
கோர முகம்!

தமிழ்ச் சமூகமே!
வீரத் தியாகம் வீண் போகாது!
ஒன்றுபடு! உரிமைக் குரல் எழுப்பு!

போராடு! பகையை எதிர்கொள்!
 எல்லைகளைக் கடந்து ஆதரவு தேடு!
 பயங்கரவாதத்தின் முகமூடி கழற்று!
 வ.உ.சி.பிறந்த மண்ணின் பெருமை உயர்த்து!
 பாரதியின்அக்னி குஞ்சாக
 பகை வெல்!

எல்லை இல்லை











உன்னை எனக்கு பிடிக்கவில்லை!
உண்மை அது இல்லை!
நன்மை புரியவில்லை!
நலம் இழப்பு அறியவில்லை!
குணம் இழப்பு குழப்பமில்லை!
கூடி வாழ விருப்பமில்லை!
தனி மனித தவிப்பு எல்லை!
தாங்கி நிற்க யாரும் இல்லை!

மாறவில்லை.

ஆட்சி மாறினாலும்
காட்சி மாறவில்லை.

அவரைக் குறித்து இவர்
இவரைக் குறித்து அவர்,

மாறி, மாறி, குற்றச்சாட்டு,
பொறுப்பு சேர்ப்பு,
வெறுப்பு கோர்ப்பு.

யாவும் தீர்ந்தபாடில்லை!

தினம், தினம்
திண்டாடும் மக்கள்.
இங்கேயும் அங்கேயும்
எங்கேயும்.

வரிச்சுமை, நெறிச் சுமை
வாழ்க்கைச் சுமை,
வகை வகையாய்
சிக்கலில்.


வளம் இழப்பு!
நலம் இழப்பு!
நாடு இழப்பு!

Sunday, May 20, 2018

ஊடாடி










ஊடாடிப் பார்க்கிறாய்.
உறுதி நெய்ய வேர்க்கிறாய்!

தறி விலகி இழை பிசகும்.
தளம் ஏற்கிறாய்!

ஒடித்து முடித்து,
ஒடியேற்றி,

நெசவு சேர்க்கிறாய்!

முறிச்சது!










முட்டி நின்றது
எட்டிப் போனது
கட்டி நின்றது
கழன்று போனது

முட்டி தேய்ந்தது
முயற்சி செய்யுது
வெட்டி முறிச்சது
வேடிக்கைப் பார்க்குது.

கொட்டையானேன்!










விழுப்புரத்திலிருந்து, திருக்கோவிலூர் செல்லும் பேருந்தில், ஆலம்பாடியில் இறங்க வேண்டி, நெரிசலில் நின்று பயணப்பட்ட அனுபவம், இப்படி:

அடக்கி, ஒடுக்கி
அடுக்குக்குள்.
இடமும், வலமும் இடுக்கி,
இறுக்கி,
பிதுக்கும் கொட்டையானேன்!
கை தூக்கி
முன் பதித்தேன்!

கூடாது.




கெஞ்சியிருக்கக்
கூடாது,
அஞ்சியிருக்கக்
கூடாது.

தாழ்ந்திருக்கக்
கூடாது,
தவழ்ந்திருக்கக்
கூடாது.

எகிறியிருக்கக்
கூடாது
எடுத்தெறிதல்
கூடாது.

விட்டிருக்கக்
கூடாது
விலகியிருக்கக்
கூடாது

Friday, May 18, 2018

கோண கழி









விட்டு விட வேணுமா?
விடுதலைக் கூடுமா?
கட்டி அழ வேணுமா?
கவலைதான் தீருமா?
கொட்டி அழுதது போதாதா?
கோண கழி நிமிராதா?
வெட்டி முறிச்சது ஆகாதா?
முட்டி மோதி வாராதா?
திட்டித் தீர்த்தது சேராதா?
திடீர்த் திருப்பம் நேராதா?

போனான்....








அசைத்துப் பார்த்தான்,
அசந்து போனான்.
ஆட்டிப் பார்த்தான்,
ஆடிப் போனான்.
இடித்துப் பார்த்தான்,
இடிந்து போனான்.

வெடித்துப் பார்த்தான்,
வெளிறிப் போனான்.
துடித்துப் பார்த்தான்,
துவண்டு போனான்.
முடிக்கப் பார்த்தான்,
முடிந்து போனான்.

Thursday, May 17, 2018

உறிஞ்சும்!









கண்டது பேசுது
காரணமின்றி ஏசுது

உண்டது செரித்திடாது
உப்பிசம் ஆகுது

உழப்பை உறிஞ்சும் கூட்டம்
ஒய்யாரம் கூட்டுது

உண்மை உணரா
கடமை
ஓரம் கட்டுது

Tuesday, May 15, 2018

இல்லை!











ஆடித் தொலைத்திருந்தால்
அதிசயம் இல்லை!
ஆடாமல் தொலத்ததால்
ஆச்சரியம் இல்லை!
ஓடித்தொலைத்திருந்தால்
சோகம் இல்லை!
ஓடாமல் தொலைத்ததால்
யோகம் இல்லை!

போன இடம் தெரியல........

ஆட்டுக் கல்லும்
அடியில் சென்றது.
குத்து உரலும், உலக்கையும்
மூலைக்குச் சென்றது.

அதிரசப் பலகையும்
தொங்கியபடி நின்றது,
தொலைந்து போனது.

எச்சில் படிகமும்
எட்டிச் சென்றது.
பெட்மன் படுக்கையும்/கட்டிலும்
பெயர்ந்து போனது.

கற்பூரப் பெட்டியும்
கரையான் புகுந்தது.

நாலுகை தாவாரமும்
கிணறும், துணி துவைக்கும்
கல்லும்,
தொட்டி கக்கூசும்,
நினைவை விட்டுச்
சென்றது.

வேப்ப மரமும்,
கற்பூரவல்லியும்,துளசியும்,
பட்டுரோசாவும்,
 பழங்கதையானது.

அண்டாவும் , குண்டாவும்,
அடுக்குச் சட்டியும்,
மூக்குச் சொம்பும்,

அன்னக் கொத்தியும்,
அடுக்களையும்,
உரியும், உலையும்,
சாலும், கரவம்
சாய்ந்து போனது.

வெட்டிவேர் விசிறியும்,
தாழம் பாயும்,
ஈச்சம் படுக்கையும்,
எட்டிச் சென்றது.

பச்சைக் கிளியும், ஊஞ்சலும்,
சாமி படங்களும்,
 பூசை சிலைகளும்
போன இடம் தெரியல.........

Sunday, May 13, 2018

'போர்வை வாதிகள்!

சமூக இயக்கங்கள், செயற்பாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு அமைப்புகளில் முன்னணித் தோழர், முனைப்பு காட்டுபவர், முன்முயற்சியாளர் போன்ற செறிவான செயல்பாடு உடையவர் என்ற அடையாளம் தன்முனைப்பில் கொண்டு சேர்க்கிறது.

இதனால் கூட அதிக சேதம் இல்லை! குடும்பங்களில் தோழமையுடன் பழக வேண்டியவர்கள், நிலை பிசகி, கதாநாயக சித்தரிப்பில், கவடு கூட்டி, பாலியல் கொடுமை இழைக்கின்ற போக்கு பரவலாகி பாதிக்கப்பட்டவர் வெளிப்படுத்த முடியாத அவலம்!

 இவரெல்லாம் மனித உரிமை, மண்ணுரிமை, சமூக நீதி என்கின்ற பல்வேறு பரிமாணங்களில் தம்மை வித்தியாசப் படுத்தி, உயர்த்தி, அதற்கென சிறு கூட்டத்தை தம் வளையத்திற்குள் வைத்து வலம் வருபவர்கள்.

வெளிப்படையான எதிரிகளை விட கூடிக்கெடுக்கும், குடி கெடுக்கும் இவர்கள், தந்தை பெரியாரைப் பேசுவார்; அண்ணல் அம்பேத்கரை புகழுவார்; மார்க்சியம், லெனினியம்; ஈழ விடுதலை இன்ன பிற முழக்குவார்! அதற்கும் ஆமாம் சாமியாக ஒரு கூட்டம் குடை பிடிக்கும். வியாக்கியானம் கூறும்.

பெண்ணுரிமையும் கூட இப்படிப்பட்ட பேர்வழிகளின் நிகழ்ச்சி நிரல்களில் உண்டு. தனி மனித ஒழுக்கம், நம்பிக்கை மோசடி, பெண்கள் மீதான வல்லாதிக்கம் கண்டு கொள்ளப்படாத செயல்களாக, இயக்கங்கள் தப்புத் தாளங்களின் பிடியில், சாமர்த்தியமாக சதுராடுகின்றன.

இதுபோன்ற, 'போர்வை வாதிகளை',' முகமூடி மாந்தர்களை, மக்கள் சமூகம் அறியும் சூழல் உருவாக வேண்டும். வர்க்க எதிரிகளை விட மோசமான, பண்பாட்டுச் சிதைவு விளைவிக்கும் இச் சக்திகள்/சகதிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.'

Saturday, May 12, 2018

'சோறு',

'சோறு', குறித்து அம்மாவின் உரையாடலில் உதிர்த்தவைகள். நினைவில் நின்றவை!

சட்டிச் சோறு
சாக்கடைச் சேறு

தண்டச் சோறு
உண்ட சோறு

திண்ண சோறு
மண்ணு சோறு

சோத்து மாடு
சோத்தால் அடித்த பிண்டம்
சோறு கண்ட இடம் சொர்க்கம்

இவையன்றி, பிள்ளைகளை திட்டும் வசை சொல்லாடல்கள் வரிசை,

 இதோ!

மாடு ஓட்டி வந்தேன், மணி ஆட்டி வந்தேன்
சோறு போடம்மா! சொக்கம்மா!

சோறு சாப்பிட்டா சொத்தை!
கூழு சாப்பிட்டா குண்டு!

வஞ்சனை நெஞ்சடைக்க, வரவு சோறு மாரடைக்க!

பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்,  என்கின்ற பக்குவம் கூறிடும் பதார்த்தமும் உண்டு.

84 அகவையில், பல வாழ்க்கை ஊடாட்டங்களில் தெறித்த, பழந்தமிழ்ச் சொல்லாடல்கள்/மரபு சொற்கள் மறைந்து கொண்டிருக்கிறது.புதிய தலைமுறை பேச்சு, வழக்கு, தாய் மொழியின் தடங்கள் இழந்து/தளங்கள் மறைந்து, மண்ணின் பெருமை அருகி வருகிறது!


வெம்பி!








சொல்லிக் காட்டாதே!
சோகம் கூடாதே!
தள்ளிப் போகாதே!
தளர்ந்து நிற்காதே!
அச்சம் சேர்க்காதே!
அலுத்துப் போகாதே!
வெம்பி சோராதே!
மனம்,
வெளுத்துப் போகாதே!

செரிமானம்.......












மாத்திரை மனிதன் யாத்திரை
தினமும்!
சிற்றுண்டிக்கு பின் குற்றுண்டி,
சிறு பொழுது அட்டவணை
அன்றாடம்,
அரைத்து தள்ளும்
செரிமானம்.......

Wednesday, May 9, 2018

பதில் யாது?

சிலை எடுப்பு அரசியல் சிறப்பு சேர்க்காது!
பொது நிலையில் செயற்பாடு உடையவர் இறப்பை, பகுத்தறிவில் சறுக்கி பதிவு செய்வது, மேலதிக சிறப்பியல்புகளை கூட்டுவது; மரணம் குறித்த பார்வையின் பழமைவாத, தொடர்ச்சியை மெருகேற்றுகிறது.

விமர்சனம் என்பதை விரோதமாக, குரோதமாக விளங்கிக் கொள்ளும் மனநிலை; நமக்கும் இறப்பு ஏற்பட்டால் இது போன்ற பாராட்டு/ நினைவேந்தல்/ சிலை எடுப்பு, நிகழ்வுகள் நடைபெறவேண்டும் என்கின்ற அவா அழுத்தம், விவாதத்தில் உள்ளுறையாக அமைகிறது.

குடும்பம் என்னும் அமைப்பின்/ நிறுவனத்தின் கொந்தளிப்பு /குலைவு, தனிமனித சீற்றம், ஆவேசம், நிலைமையை சமாளித்திட இயலாது, தன்முனைப்பு அணுகுமுறையில்;

 பெண்ணுரிமையை புறந்தள்ளி; குழந்தைகள் உரிமையைக் குலைத்து; தப்பித்துக் கொள்ளும்.தாக்குப் பிடிக்க இயலாத மனோநிலை, மனச்சிதைவு சமூக வினையாட்டாளர் வசமாகி, வாழ்வை வலிந்து முடித்துக் கொள்ளும் போது, இவ்வகை தன் பார்வை அவசியம்.

 நெருக்கடிகள் தாண்டி வாழ வேண்டிய தேவை சமூக விதியாகும் நேர்வில், சமூகப் பிரச்னைகளில் நடைபோடும், தடம் பதிக்கும் சமூகச் செயற்பாட்டாளர் எவ்வாறு உழைத்திட வேண்டும்/ முடியும் என்கின்ற பகிரங்க/ வெளிப்படையான விமர்சனத்திற்கு, நம்மிடம் உள்ள பதில் யாது?

உணரார்!








சொல் வீச்சில் சோர்வடைந்தவர்
கல் வீச்சில்,
கண்ணாடி உடைப்பில்.

உடைந்த வலி,
உருக்குலைந்த நிலை,
மறப்பார்.

பிறன் வலி அறியா
பேதமை.

மேதமை என்றறைவார்,
உள் வீச்சு உணரார்!

Monday, May 7, 2018

நானே!







எவனும் எனக்கு போட்டியில்லை!
எனக்கு நானே
போட்டியானேன்!

எவனும் எனக்கு எதிரியில்லை!
எனக்கு நானே
எதிரியானேன்!

எவனும் எனக்கு பகையில்லை!
எனக்கு நானே
பகையானேன்!