Saturday, June 30, 2007

குருடர்கள்...

நேற்றிரவு மின்வெட்டு. இருள் கவிழ்ப்பு, வெளிச்சம் உன் தயவில். உன் இருத்தலும் எமக்கு நினைவு. ஆவென அனைவரும் அன்னாந்து பார்க்க ஆகாயம் வெளிச்சம். இயற்கையைக்கூட நோக்க நேரம் இல்லை, அக்கறை இல்லை. பரபரப்பான மனிதனுக்கு.

இப்படி சொல்லலாமா?


மின் வெட்டு காலங்களில்
உன் வெளிச்சம்,

நிலவுக் குருடர்கள்
நாங்கள்.

கடமை இல்லையா?

ஆரம்ப பள்ளி கல்வியில், ஐம்பது சதம் மாணவர் தொடரவில்லை கல்வியை, கூறுகிறார் புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநர். கல்வியில் முதலிடம், மருத்துவத் துறையில் முதலிடம் என அடுக்கடுக்காக சாதனை விளம்பரம் செய்து, 'மார் தட்டி' விழா எடுக்கும் 'மகான்கள்' என்ன கூறுவார்?,' சாதனைத்திலகம்', 'கடவுளின் அவதாரம்', என்ன பதில் தரப்போகிறது? அடித்தள மக்கள் கேட்கிறார்.


மாநிலத்தில், 2000 லிருந்து இதுவரை 2630 பேர் தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதில் 14 முதல் 44வரை வயதுள்ளவர்கள் அடக்கம், என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் வளர்ச்சி, முன்னேற்றம், எந்தவகையில் அமைகிறது.


குற்ற நடவடிக்கையில் தண்டனை பெற்றவர்கள் 2003 வரை, 22 வயதுக்கு குறைவானவர்கள் 177 ஆகும். 23 வயதிலிருந்து 40 வயதுக்குள் 337 பேர் தண்டனை பெற்றவர்களாக உள்ள சூழலில், குற்ற செயலில் ஈடுபடும் இளைஞரை திருத்தும் பொறுப்பு, கடமை, புதுச்சேரி அரசுக்கு இல்லையா? மனித வளத்தை காக்கும், மேம்படுத்தும் கடமை, நிர்வாகத்திற்கு இல்லையா?

இனிப்பு!

நீளும் நாக்கு!
கசப்பு!

என்றாலும்,
எச்சில் ஊறும்
ஏமாறுவாரா என்று,

நலம் இருந்தபோது
தவிப்பு இல்லை!

நாள் எல்லாம்
சுவை ஊறும்,

'வாய் கட்டி
வயிற்றைக் கட்டி'
வாழ வேண்டும்,

பேறு கால
' தாயைப் போல்'

Friday, June 29, 2007

மனிதனாக...?

"நீங்க தெய்வம்"
"நான்
இன்னும்
"அதுவாக, இதுவாக"

Saturday, June 23, 2007

பிள்ளையார்குளம்?

கருவடிக்குப்பம் பிள்ளையார்குளம் காலம் காலமாக மழை நீர் தேக்கி வைத்த குளம். மேட்டுப்பகுதிகளில் வழிந்தோடி வரும் நீரைத் தேக்கி வைத்து நிலத்தடி நீரை ஊக்கி, உயர்த்திய குளம். கழித்துக் கட்டப்படுகிறது, கழிவுநீர் பிடிப்பிற்கு.

அவலம், அக்கறை அற்ற அரசு. இயற்கை மீது கிஞ்சிற்றும் நசையற்ற, பசையற்ற அரசு. புனரமைப்பு, ஏரிகள் முடிந்தன? தற்போது குளங்களில் இறங்கி உள்ளனர்!

Friday, June 22, 2007

சாவூப்பூ

சாவுக்கா பூத்தோம்!
'சாவூப்பூ'
என்று
ஏன் அழைத்தீர்?


'சாவூப்பூ' 'பட்டிப்பூ'
எட்டி வைத்தீர்!


எசமானுக்கு புரிகிறது,
எம்மிடம்
சாரம் இருக்கிறது,
இரத்தப் புற்றுக்கு

Sunday, June 17, 2007

சமூக நீதி?

தடுமாற்றமா?
இல்லை!
தனி மாற்றம்!
அனைவருக்கும்
பொதுவானவன்!
'பொதுவுடமையாளன்'

பெரும்பான்மைக்கு
எதிரானவன்!
சனநாயகவாதி!
சமதர்மவாதி!

உசுப்பி விட்டேன்!
இதுகாறும்,
உள்ளேயிருந்து!
உருப்படி
தேறவில்லை!

வரும்படி சேர்ந்தது!
வெளிப்படையாய்
ஒடுக்கப்படும் சமூகங்களை,
ஒருவருக் கொருவர்
எதிராக நிறுத்த,
முனைகிறேன்,
முனைவன் அல்லவா?

13 சமூகங்களின்
ஐக்கியம்
ஐக்கிய முன்னணி
ஆதரிக்கும்
எனக்குத் தேவையில்லை!


இவர்களின்
உரிமைக்கு
குரல் கொடுக்காத
நான்
இவர்களின் குரல் வளைக்கு
கொடுக்காக,
இராசசுத்தானை வாசிக்கிறேன்!


53 சமூகங்களின்
'சிறுபான்மை',
ஆதிக்க உணர்வுக்கு,
ஆக்கினை செய்திட,
இறக்கு மதியாளர்
ஊதுகுழல் ஆனேன்!


உரிமைக்குரல்
இழந்தேன்!
'சுய மரியாதை
சுக்கிராச்சாரியார்'
சூழ்ச்சியில்,


அறிந்தே
அணி மாறினேன்!
முன்னே!
அரசியல் யதார்த்தம்,
நடைமுறை வென்று!

எங்கெங்கு காணினும்......

செங்கல் சூளையில்
வெந்தணல் புழுவாக,
வெறுங்காலுடன்,


முகத்தில்,
கை கால்களில்,
சூடு போட்டனர்,
கொத்தடிமையாக,


கொடுமை,
செஞ்சீனத்தில்,
செங்கொடி நிழலில்.


தோழர்
செங்கல் சூளை,
சூளை வேலைக்கு
விலக்கு இல்லை.


இந்தியா ஆனாலும்,
'சமதர்ம'
பூமியானாலும்,


சந்தடி இல்லாமல்,
ஒடுக்கு முறை,
உரிமை
நசுக்கு முறை.

காவு கொடுப்போம்!

சொல்லாமல் வளர்த்தனர் அன்று!
சொல்லாமல் ஒழித்தனர் இன்று!
வீட்டிற்குள் இருக்கும் மரத்திற்கு
விடை கொடுப்போம்!


உத்தரத்தில் இருந்தாலும்,
சத்திரத்தில் இருந்தாலும்,
சாய்த்திடுவோம்.


சாவு கொடுப்போம்,
வளர்ச்சிக்கு
காவு கொடுப்போம்,
சடுதியில்.


கற் குவியல்களை கொட்டி,
கருங்கல் தளம் அமைப்போம்,
நெற் குவியல்களை
நெட்டித் தள்ளுவோம்.


கம்பிகளை நம்பி வெம்பி
வாழ்வோம்,
வெப்பம் மிகுதி ஆனால்,
மின் விசிறி, குளிரூட்டி,
குவிமையமாக
கூட்டிற்குள் அமர்ந்திடுவோம்.


குவலயம் சூடானால் என்ன?
கூட்டம் கூட்டமாக,
மனிதர்கள் இறந்தால் என்ன?


வணிகம் எனக்கு,
வசதி எனக்கு,
அசதி போய் விடும்,
ஆயுள் கூடிடும்.

Wednesday, June 13, 2007

கோகிலம் வாழ்க!

கூவி ஓய்கிறாய்
கூட்ட மனிதரிடை
அன்றாடம்
அரிதாய்
உன் குரல்
செவி மடுப்போர்
எவர் உள்ளார்


மாந்தோப்பு
மண்டியிருந்த சாவடி
மண்ணில்
பச்சை பரப்பியிருந்த
நிலம்
உம் புலம்


ஒண்டிக் குடியாய்
ஓயாத நெரிசலில்
ஒலி எழுப்பும்
வாகனங்களுக்கு
இடையில்
கிலியுடன்
வலம் வரும்
வாழ்க்கை


குயில்களின் கோட்டம்
குமிழி ஆன பின்னும்
நம்பிக்கை
உமக்கு அதிகம்


நாளெல்லாம்
உம் இருத்தலை
எம் செவிகளுக்கு
பண்பலையாக
ஓயாமல்
அளிக்கிறாய்


ஒன்றிரண்டு பேராவது
ஒப்பிடுவார்
உள மகிழ்வார்


உணர்வு பெற்ற
மண்ணின் கீதம்
மறந்து விடவில்லை
மறைந்தும் விடவில்லை

Sunday, June 10, 2007

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு-- வரலாறு-1

படிக்கும் வரலாறு, படிப்பினை வரலாறா?
வரலாற்றில் மறைக்கப்பட்ட உள்ளதுகள் எவ்வளவோ!
ஒரு சான்று,

புதுவையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக இட ஒதுக்கீடு உரிமையை 1989 களிலேயே விளக்க இயக்கமாக, பாகூர் கொம்யூன், வில்லியனூர் கொம்யூன், மண்ணாடிப்பேட்டை கொம்யூன், அரியாங்குப்பம், முதலியார்பேட்டை, காலாப்பட்டு போன்ற பகுதிகளில் மிதிவண்டி பயணமாக மேற்கொண்டு பாடுபட்டு உழைத்தவர்கள் பெரும்பாலும் இம் மண்ணின் மைந்தர்கள்.


செந்தமிழர் இயக்கத் தோழர்கள் முத்துக்கண்ணு, அபிமன்னன், அரிமா வளவன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை முண்ணனித் தோழர். காலஞ்சென்ற தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு இளைஞர் பேரவைத் தோழர் கோ.சுகுமாரன், மார்க்சிய லெனினிய கட்சியின் தோழர் சோ.பாலசுப்ரமணியன், நட்பு குயில்கள் தோழர். சீனுதமிழ்மணி, புதுவை புத்தக நடுவத்தின் தோழர். காலஞ்சென்ற இராமமூர்த்தி, பாகூர்த் தோழர்கள் மஞ்சினி, வேலுமணி போன்றவர்கள்.


தொலைபேசித் துறையின் தோழர்கள் மகேந்திரன், மதியழகன், அன்பழகன், சின்னத்துரை ஆகியோரும் குறிப்பிடத் தக்கவர்கள். பேராசிரியர் இளங்கோ, தோழர் இலக்கியன், தோழர். இரவிக்குமார், தோழர். அழகிரி, தோழர். அருணன், தோழர். மாலதி மற்றும் வில்லியனூர் தோழர்கள்.

மிதிவண்டி பயண பிரச்சாரத்தின் முடிவில், துரை முனுசாமி திருமண நிலையத்தில் கருத்தரங்கம் நடை பெற்றது. பொதுக்கூட்டம் , கலை நிகழ்ச்சி ஆகியவை செஞ்சிசாலை திறந்த வெளி அரங்கில் நடைபெற்றது. மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தோழர். கண்ணபிரான், பேராசிரியர் கல்யாணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


தோழர் பழமலய் மற்றும் அவரது தோழர்கள் கலை நிகழ்ச்சி நடத்தினர். பின்னாளில் ஏம்பலம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆக இருந்த திரு. நீலகங்காதரன் போன்றவர்கள் அப்போதைய முற்சிகளுக்கு ஆதரவாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயலவில்லை!

படர்ந்து சென்றாய்,
பறந்து வென்றாய்.
தொடர்ந்த நான்
தோல்வியில்.


பின்னோக்கி பலனில்லை!
அந்த நாள்,
உன்
இந்த நாளோடு,
போட்டியிட......

Saturday, June 9, 2007

அதிர்வுகள்

எப்பொழுதும் உணர்தல் இல்லை!
ஆயினும் உண்மை!
அளவும் தன்மையும் கூடும் போது,
ஏதம்!
சேதம்!
எங்குமில்லா
சோகம்!

அடுத்தது....

உரசல் உணர்வில்
உல்லாசம்!

தொங்கிய பயணம்
தொடரவில்லை!

எதிர் வாகனம்
அதே உணர்வுடன்!

உருக்குலைந்தனர்!

பயணங்கள் முடியவில்லை!
உரசலை எதிர்நோக்கி!

அடுத்தது எப்போ?

கண்ணீர்த்திவளை!

தீவக நாடு அவர்களுக்கு!


கண்ணீர்த் திவளை எங்களுக்கா?


காலமெல்லாம்.


காலனி ஆதிக்கங்களைக் கடந்து,


மார்க்கங்களின் மாட்சியைக் குலைத்து,


திக்கற்று,


திவளையும் வறண்டு,


தீவிர வாதத்தின் கிடிக்கிப் பிடியில்


நொடி நொடியாய்,


அணு அணுவாய் அல்லல்,


அலைக்கழிப்பு,


சொந்த மண்ணில் சோகங்களாய்


புலம் இழந்து,


புலம்பித் திரிந்து ,


வளம் இழந்து,


வாழ்க்கை இழந்த



தொல்குடி!


தோற்கும் குடி!

ஒதுக்கீட்டில்...........

வாக்கிற்காக,
அரசியல் உறுதி,
ஒதுக்கீட்டில்,
'சாட் பிரிவினர்',
'குர்சார் பிரிவினர்',
பழங்குடி தகுதி
வாக்குறுதி அரசியல்,
தேர்தல் கால தேறுதல்,
உறுதியாய் நிற்கும்
மக்கள் முன்,
உறுதிவாக்கு அம்பலம்,
'மீனா' பிரிவினர்,
வீணாக கிண்டி விடுதல்
கிழக்கிந்திய கம்பெனி தோற்கும்
கீழை ஆரிய அரசியல்,
ஆதிக்க அரசியல்.

Sunday, June 3, 2007

அணு உலை!

உயிருக்கு வைக்கும்
உலை!
கழித்து கட்டும்
கலை!
காலனி ஆதிக்க
நிலை!

அடுத்தது மனிதனா?

புலிகளைக் காப்போம்!
பாதி எண்ணிக்கையை
அழிப்போம்!
மத்தியப் பிரதேசத்தில்!


அடுத்த ஐந்து ஆண்டுகளில்
மீதி
அழிப்போம்!


சிங்கங்களை மட்டும்
விட்டு வைப்போமா!
சிரியாவில், ஈராக்கில்,
ஈரானில், பாக்கிசுத்தானில்,
இந்தியாவில்,


கதை முடிப்போம்,
ஆசியாவின்
எழுத்தை மாற்றுவோம்,
விரைவாக,


மனித வளர்ச்சிக்கு,
வழி விட
வேண்டாமா!


ஐரோப்பா, ஆசுத்திரேலியா,
வட அமெரிக்கா,
விலங்கினங்களின்,
பெருந்திரள் அடர்த்தி,
வகை வகையாக ,
ஒரு காலம்.


குடியிருப்புகள்,
குத்தீட்டியாக,
அழித்தொழித்தன.


சிங்கமா? ஒட்டகமா?
லாசு வேகாசு
நகரத்திட்டா?
சிலிகான் பள்ளத்தாக்கா?


முன்னேற்றம், முன்னேற்றமாக
ஒரு கட்டத்தில்
விடை கொடுக்கும்
விலங்கினங்களின்
பட்டியல்,
வளர்ச்சி அடைந்த
மனிதனுக்கும்.


பின்தங்கியவன்,
முன்னேற்றம்
அடையாதவன்,
விலங்குகளின்
பாதையிலா?

தெரியாமல்!

எனக்குத் தெரியாமல்

நீ!

உனக்குத் தெரியாமல்

நான்!

எனக்கும் உனக்கும்

தெரியாமல்,

எவரெவர்!

Saturday, June 2, 2007

கேட்கிறார்!

வாய்ப்புக் குறைவு
வேளாண்மைக்கு!
வாய்ப்பு அதிகம்
தொழிற்சாலைக்கு!
'வளர்ச்சி மன்ற'
கூட்டத்தில்
முன் வைப்பு.


வாய்ப்பு அழித்தது
யார்?
ஊட்டம் ஒழித்து
வாட்டம் கூட்டியவர்
யார்?

கொண்டாட்டம்!

கொண்டாடுவோம்
குழந்தைகள் நாள்!
உலக நாள்!

'ஊர் குழந்தைக்கு
ஊட்டி வளர்ப்போம்'
தம் குழந்தை
தானாக
உயருவார்!

நம்மிடம்...

அனைத்தும்
உண்டு

நன்றி?

உம்மை?

'சன்மார்க்கம்',
'சமரச மார்க்கம்'
'சாகச சந்தையை'
மிஞ்சும்
சாதனைகள்!

நிந்தை நுட்பம்
அறிந்த யாம்,
சந்தை நுட்பம்,
விந்தை நுட்பம்,
அறிந்திலோம்!

நில்!

உள்ளூன்றி
பார்!
சொல்லூன்றி
சொல்!
செயலூன்றி
செய்!
பயனூன்றி
நில்!

சுயம் இழந்து!

சாலைகளில் அலகு
இரு மருங்குகளிலும்
வரிசையாய்
திடீர் முளைப்பு!

'வள்ளுவர்', 'வல்லவர்',
'தமிழகம்', 'தளபதி',
'உயிர்', 'மூச்சு',
'குறள்,' 'ஓவியம்'
'குணக் குன்று'.

இரு வண்ணம்
இவர் எண்ணம்!

'ஏற்றும் தமிழர்'
'ஏற்ற தமிழர்'
ஏறுமாறாய்,
தாறுமாறாய் தமிழகம்.


வெகு காலமாய்,
உயர்வு நவிற்சியில்,
சுயம் இழந்து.