Showing posts with label சுற்றுச்சுழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சுழல். Show all posts

Sunday, April 29, 2018

சமூக நலன்?



உங்களால் என்ன செய்ய முடியும்? அவர் நிறைய பணம் வைத்திருக்கிறார்; செலவு செய்திருக்கிறார். மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ மனைகள், கல்வி கூடங்கள் ஏக்கர் கணக்கில் நன்செய் நிலங்களையும், புன்செய் நிலங்களையும் விழுங்கியபோது, நீங்கள் என்ன செய்தீர்?  எங்கு போனீர்?

 புதுச்சேரி, திருவண்டார்கோவில் அருகில் மருத்துவக் கல்லூரி விளை நிலங்களை ஏப்பம் விட்டு எழும்பியபோது என்ன செய்தனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.இந்தப் பாதையின் தொடர்ச்சியாக, ஊசுட்டேரி தெற்குப் பகுதியில், ஏரிக்குத் தலைவாசலில், லட்சுமி அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி அமைத்து உருவாக்கி வந்தது.

 இதில் என்ன தவறு? ஏன்? இதை எதிர்க்க வேண்டும் அவர் கிறித்துவராக,வன்னியராக இருப்பதால், அவர் வளர்ச்சி பொறுக்கவில்லை! நீங்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வர வேண்டுமா?

இப்படியெல்லாம், பல பேச்சுகளை நாங்கள் சந்தித்து, கடந்த காலங்களில் சூழல் காக்கும், மக்கள் திரல் போராட்டங்களை முன்னெடுத்தும், அரசாங்கம் மசியவில்லை!

 கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில், மணக்குள விநாயகர் மருத்துவமனை/மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவைகளும் விளை நிலங்களை விழுங்கியவைதான்.புதுச்சேரி, கனகச் செட்டிக்குளம் பகுதியில் புன்செய் நிலப்பகுதியை விழுங்கிய, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்லூரி  இந்த வரையறைக்குள் வருகின்ற வணிக கல்வி முயற்சி/முன்னெடுப்புகள் தான்.

  புதுச்சேரி மாநிலத்தைச் சுற்றி, திருக்கனூர், திருபுவனை, கிருமாம்பாக்கம், கொரவளிமேடு, பாகூர், பரிக்கல்பட்டு போன்ற கிராம விளைநிலப் பகுதிகள், கல்வி வியாபாரத் தொழிற் கூடங்களால் உருமாறி, உருக்குலைந்து, கிராமியப் பொருளாதாரத்தை, நீர் நிலைகளை, ஆதாரத்தை மெல்ல,மெல்ல, அழித்து அடையாளம் தெரியாமல் ஆக்கிவிட்டன.

கல்விக் கூடங்கள் போதும், கழனிக் கூடங்கள் வேண்டாம் என்கின்ற மன மாற்றத்தை, நில வணிக நோக்கில், விளைபொருள் இலாபகரமாக இல்லாத வேளாண்மச் சூழலை பயன்படுத்தி, ஏற்படுத்தி உள்ளது முதலாளி வர்க்கம்.

படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் வைத்திடும் வாதம் வேடிக்கையானது. எல்லாம் முடிந்து விட்டது, விவசாயம் வேலைக்கு ஆகாது. பத்தாண்டுகளில் புதுச்சேரியில் நீர் கிடைக்காது. மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும். நிறைய பணம் குவித்தவர்கள் காசு கொடுத்து தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

அரசியல் உயர்மட்டத்தில் ஆலோசனை சொல்லக் கூடிய நீரியல் நிபுணர்களுக்கு இது தெரிந்துதான் நடக்கிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வறண்ட நிலமாக ஆக்குவதில் கற்றறிந்தவர்களின் கயமை வள்ளுவருக்கும் ஏற்புடையதல்ல!

கட்சி அரசியல் முழுநேர பிழைப்பினர், ஒரு சிலரை தவிர்த்து, தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என கல்வி நிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்து, உழைப்புச் சுரண்டலில் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

இயற்கையே தாய், அதனை அழித்து, விளைநிலங்களை பாழடித்து, ஏரிகளை தூர்த்து, குளங்களை மாய்த்து உருவாக்கப்படும் வளர்ச்சி எவ்வளவு விலை கொடுத்து எவரின் நிலை கெடுத்து என்பதை நீண்டகால சமூக நலன்களின் அடிப்படையில் ஆய்ந்தறிதல் வேண்டும்.

காலச் சக்கரம் விரைவாக சுழல்கிறது.காடுகளை அழித்தது;கழனிகளை அமைத்தது; நீர் நிலைகளை கெடுத்தது, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மணற்சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக, மூலை முடுக்கில் எல்லாம், சந்து பொந்துகளில் அமைத்தது சாதனைப் பட்டியல் அன்று. அது வேதனைப் பட்டியல்.பெய்யும் மழை நீர் பூமிக்குள் செல்லவிடாது, தடுப்புச் சுவர்களாக, அரண்களாக மாறி, சூழல் சீர்கேட்டை விரிவு படுத்தியுள்ளது.



Saturday, April 28, 2018

நேப்பாள துயரம்!

சில ஆண்டுகளுக்கு முன் இமயமலைப் பகுதியை மையம் கொண்டு ஏற்பட்ட நில நடுக்கம், இமயமலை இருப்பையே சில மீட்டர் நகர்த்தியுள்ள இயற்கையின் சீற்றம், நாம் மறந்திருக்க இயலாது. அதன் விளைவாக நேரிட்ட நேப்பாள துயரம் குறித்து.

பேரழிவின் தொடக்கம்!
இமயமலை அடுக்கம்,
எதிர்கொள்ளும்
நடுக்கம்.

புவி அடுக்கின் முடுக்கம்
பொருதி வெளிப்படும்
அழுத்தம்.

பூமி அதிர்வின் வெளிச்சம்
புரியாத மனிதம்,
பொருமி வீழ்ந்திடும்
அவலம்.

அரசு அதிகாரம்,
 அலறியடிக்கும்
கலக்கம்,
ஆக்கினை செய்திட
ஆரம்ப முதலே,
 சுணக்கம்.

Friday, March 2, 2018

எரிவாயு!

தேர்தல் உமக்கு!
மாறுதல் எமக்கு!

பிரச்னை உமக்கு!
தீர்வு எமக்கு!

விளை நிலம் எமக்கு!
வீதி உமக்கு!

எரிவாயு எமக்கு!
எரி வயிறு உமக்கு!

வருவாய் எமக்கு!
வெறுவாய் உமக்கு!

Thursday, March 1, 2018

ஒலிப்பான்!

அடிப்பது உன் ஒலிப்பான்
என்றாய்!
வலிப்பது என் செவி!

'வைத்த கண்
வழிநெடுக வாங்காமல்' எனின்,
பொருள் உண்டு.

வைத்த கை வாங்காமல்
ஒலிப்பான் மீதெனின்,

பொருள் இல்லை!
பொறுப்பும் இல்லை!

மருத்துவக் கழிவுகள்

மருத்துவக் கழிவுகள் படும்பாடு சொல்லி மாளாது. புதுச்சேரி மாநிலத்தில் ஏழெட்டு பெரிய மருத்துவமனைகள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் செயல்பட்டு வருகிறது. தெரிந்தவரையில், புதுவை அரசு மருத்துவமனைக்கு, இந்திரா நகர், கோரிமேடு பகுதியில் ஒன்று உள்ளது. அதற்கும் சரிவர உட்கட்டமைப்பு, பணியாளர் போதிய அளவில் இல்லை என அரசுக்கு தெரிந்திருந்தும், கண்டும் , காணாமல் இருக்கிறது.

'சிப்மர்',  மத்திய அரசு மருத்துவமனையில் மட்டும், முறையான மருத்துவக் கழிவுகள் அகற்றும் ஏற்பாடு, சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின்படி உள்ளது.

இதுமட்டுமின்றி, பல தனியார் சிறிய அளவிலான மருத்துவமனைகள், புற்றீசல் போல்   பெருகி உள்ள நிலையில், இவற்றிலிருந்து தினசரி உருவாகும், மருத்துவக் கழிவுகள் எவ்வாறு கையாளப்படுகின்றன?  இதில் ஏகப்பட்ட குளறுபடிகள் நிலவுவதாக, விவரம் அறிந்தவர் கூறுகின்றனர்.

இது குறித்த கவலை, இவ்வாறு வெளிப்பட்டது;

காத்திடும் மருத்துவம்
கழித்திடும் கசடுகள்,

கண்டபடி சென்றிடும்
காற்றில்.

கட்டுப்படுத்துவர் யார்?
கவலை கொள்வார் யார்?

மனிதம் அழித்தாய்!

மலை வெடித்து
கொழிக்கிறாய்!

மரம் வெட்டி
சேர்க்கிறாய்!

மனல் எடுத்து
செழிக்கிறாய்!

வெட்டி, வெட்டி கொழிக்கிறாய்!
வட்டி ,முதலுடன் செழிக்கிறாய்!

கெட்டியான தரையும்
தொட்டி போட்டு,

தட்டி, கட்டி ,
ஆழம் பெய்து,

தாளம் போட்டு
பாதாளம் ஆக்கி,

பாழ் விளைத்தாய்!
மனிதம் அழித்தாய்!

Friday, October 24, 2008

முதல் மரியாதை!

வேளாண்மைக்கு விடைகொடுத்தோம்!


முதல் மரியாதை!


உணவுப் பயிர்களுக்குசிறிது காலம்!


பணப் பயிர்களுக்குபாதை வகுத்தோம்!


சிறு தொழில்வரவேற்று!


பேட்டைகள் அமைத்தோம்!


தொழிற்பேட்டை!தோதாக!


விளைநிலங்கள் நிலை உயர்த்தி!


நீரின்வழி மறித்து!


பெருந்தொழில்கள்!வரவேற்றம்!


பெட்டிகளுடன்!


கழிவுத்தொட்டிகள்ஆயின!


வாழ்வும்! வளமும்!


நிலத்தடியும்!நீரும்!


காற்றும்!வளர்ச்சிக்காயின!


வாழ்வுக்கில்லை!


நிறுவனங்கள்!


எல்லைக் கடந்து!


விளைவு தேவையில்லை!


நிலம் தேவையில்லை!


தொழிலும் ஆலையும் போதும்!


எழிலும் சோலையும்!


எதற்கு?


நிலக் கடலை வணிகம் போல்!


எண்ணெய் பிழிசெக்குபோல்!


ஆட்டி அசைத்து!


சக்கையும் பிழியும்!சாகசம்!


செக்கும் தோற்கும்!


பணக் குவிப்பு!


வளர்ச்சி!

Tuesday, October 14, 2008

எமக்காக!

சம்பங்குட்டை கதை
முடிப்பு !
அருகன் நகரில் !


மனை வணிகம்
மீறல் !
அரசு நிலம் !
புறத்தில்
வெளி !


மழை நீர் வாங்கி!
ஆற்றில் செலுத்தும்!
ஆராவரமின்றி!
ஆண்டாண்டு ஆட்சி!
இயற்கையின் மாட்சி!


விட்டு வைக்க மாட்டோம்!
பாதை அமைத்து1
பாலம் அமைத்து!
மண்ணைக் கொட்டி
தூர்த்து விடுவோம்!


ஆட்டைக் கடித்து!
மாட்டைக் கடித்து
அரசு நிலம் !
பொதுப் பயன்!
இயற்கை ஏற்பாடு!
எமக்காக!

Saturday, December 8, 2007

புண்ணிய புதுவை!

போக்கும் சரியில்லை!
போக்குவரத்தும்!
சட்டமும்!

இல்லை!
ஒழுங்கும்!
சாலைகளில்!
வேலைகளில்!


மாரியும் இல்லை!
மாறுதலுமில்லை!
கோரிய மழையும் ,
வடகிழக்கில்
இல்லை!


கால் பங்கு மழையும்,
கவலை
தீர்க்க வில்லை!
ஏரிகள் ஏதும்,
நிறையவில்லை!


படகு,
உணவு விடுதி,
சுற்றுலா வளர்ச்சி!
பொழுது போக்கு
குறைவில்லை!


தண்ணீர் விளையாட்டு!
நீர் இருந்தாலும்....
நேரிய வழி,
எமக்கு
தேவையில்லை!

தவி,
புட்டியலுடன்....

Sunday, June 3, 2007

அணு உலை!

உயிருக்கு வைக்கும்
உலை!
கழித்து கட்டும்
கலை!
காலனி ஆதிக்க
நிலை!

அடுத்தது மனிதனா?

புலிகளைக் காப்போம்!
பாதி எண்ணிக்கையை
அழிப்போம்!
மத்தியப் பிரதேசத்தில்!


அடுத்த ஐந்து ஆண்டுகளில்
மீதி
அழிப்போம்!


சிங்கங்களை மட்டும்
விட்டு வைப்போமா!
சிரியாவில், ஈராக்கில்,
ஈரானில், பாக்கிசுத்தானில்,
இந்தியாவில்,


கதை முடிப்போம்,
ஆசியாவின்
எழுத்தை மாற்றுவோம்,
விரைவாக,


மனித வளர்ச்சிக்கு,
வழி விட
வேண்டாமா!


ஐரோப்பா, ஆசுத்திரேலியா,
வட அமெரிக்கா,
விலங்கினங்களின்,
பெருந்திரள் அடர்த்தி,
வகை வகையாக ,
ஒரு காலம்.


குடியிருப்புகள்,
குத்தீட்டியாக,
அழித்தொழித்தன.


சிங்கமா? ஒட்டகமா?
லாசு வேகாசு
நகரத்திட்டா?
சிலிகான் பள்ளத்தாக்கா?


முன்னேற்றம், முன்னேற்றமாக
ஒரு கட்டத்தில்
விடை கொடுக்கும்
விலங்கினங்களின்
பட்டியல்,
வளர்ச்சி அடைந்த
மனிதனுக்கும்.


பின்தங்கியவன்,
முன்னேற்றம்
அடையாதவன்,
விலங்குகளின்
பாதையிலா?