Saturday, December 29, 2007

மோதல் கொலை கலாச்சாரம--3

தேசிய மனித உரிமை ஆணையம் மேற்பார்வை உள்ள அமைப்பாக, குற்றம் இழைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்தாலும், போதுமான மூல வளங்கள் இல்லாததின் காரணமாக, புலனாய்வு செய்யக் கூடிய ஊழியர் பற்றாக்குறை உள்ளதின் காரணமாக, பரிந்துரை செய்யக் கூடிய சட்ட அதிகாரம் மட்டும் உடையதாக விளங்குகிறது.

இதன் விளைவாக, காக்கி உடையில் உள்ளவர்கள் துறை ரீதியான ஒழுங்கு நெருக்கடிகள் மற்றும் புற நிலை அமைப்பின் மேற்பார்வையிடல் அதிகார அழுத்தமும் இன்றி, செயல் படுகின்றனர். மேலும் அரசாங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவுகள் 132 மற்றும் 197 ன் கீழ் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகியவைகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அரசு அனுமதி பெறுவது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. உடனடியாக நடக்கக் கூடியது இல்லை.எனவே மோதல் பெயரில் கொலைகள் செய்திடும் ,நிகழ்த்திடும் குற்றச்சாட்டுகள் எழும் காவல் துறை அதிகாரிகள, எவ்வித பாதிப்பும் இன்றி, எழுதப்படாத விதி விலக்காக திகழ்கின்றனர்.

அரசாங்கத்தின் அனுமதி ஒருவேளை கிடைத்தாலும் குற்றம் இழைப்பவரை கூண்டல் ஏற்றி தண்டனை அளிப்பது என்பது ,ஒரு நெடிய பல ஆண்டுகள் நீடிக்கும் நீதி மன்ற போராட்டமாகவும், பெருந்தடையாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும்போது, குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் பல கட்ட பதவி உயர்வுகள், அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்று இருப்பார்.

காலத்தின் தேவை
மோதல் கலாச்சாரத்தை போக்கி, பொறுப்பு கலாச்சாரத்தை காவல் துறையினர் மத்தியில் உருவாக்குவது என்பது பெரு முயற்சி ஆகும். இதற்கு பல முனை அணுகுமுறை தேவைப்படும். மிகப் பெரிய பிரசனை ஆயினும், இதிலிருந்து நம்மால் ஒதுங்கியிருக்க முடியாது.

நமது சனநாயக கொள்கைகளைக் காத்திட வேண்டுமெனில், மோதல் கொலைகள் சட்ட ரீதியான மற்றும் நியாயமான காவல்துறை பணி எனும் சிந்தனப் போக்கு காவல்துறையினர் மத்தியில், அரசியல்வாதிகள் மத்தியில் மற்றும் பொது மக்கள் மத்தியில் நீடிக்கும் வரையில் மாற்றத்திற்குரிய தடைகள் ஏராளம். கடுமையான துறை விசாரணை அமைப்புகள் உடனடி தேவையாகும்.

காவல்துறை சட்டங்கள மற்றும் காவல்துறை சீர்திருத்தம் தேவை.காவல்துறை குறிப்பேடுகள் தேவை. காவல் துறையினரால் இழைக்கப்படும் குற்றங்களை வகைப்படுத்தி, அதன் தீவிரத்திற்கு ஏற்ப குற்றம் இழைத்த காவல் அதிகாரியின் பதவி நிலைக்கேற்ப, நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகளை, நிர்ணயம் செய்திட வேண்டும்.


மோதல் கொலை கலாச்சாரம்- 2

நாட்டில் மோதல் கொலை கலாச்சாரம் மேலோங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, காவல்துறை, கொலை நிகழ்த்தும் சீருடையில் உள்ளவர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணமுடிப்பு,பதக்கம் ஆகிய வெகுமதிகள் அளித்து அவர்கள் கொலை நிகழ்த்த ஊக்கப்படுத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவது என்கின்ற போர்வையில் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பரிசுப் பொருட்களை அறுவடை செய்து மகிழ்ந்தனர். காவல்துறையின் அத்து மீறல் குறித்து புலன் ஆய்வு இன்றும் நிலுவையில் உள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நிகழ்த்திய பயங்கரம் காவல்துறையின் ஒழுங்கை மட்டுமில்லாது, பொது ஒழுங்கையும் வெகுவாக கெடுத்துள்ளது.

காவல்துறையின் அதிகார மீறல் போக்குகள், அதன் விளைவுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காவல் மரணங்கள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக காணப்படுவது, இச்சூழலில் ஆச்சரியப்படுவதாக இல்லை!

இரண்டாவதாக, போலி மோதல் சாவுகள் பிரச்சனையில் பாரபட்சமற்ற, நம்பகமான புலனாய்வு செய்வதற்கான துறை ஏற்பாடு முற்றிலும் இல்லை. சரியான விசாரனை இல்லாமல், குற்றம் இழைப்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்திடுவது என்பது ,அதிக நம்பிக்கை அளிப்பதாக இல்லை.

Monday, December 24, 2007

உதயமானேன்!

தமிழா!
நம்பினேன்!
உருப்படுவாய் !
உரிமை காப்பாய் !

மொழி காப்பாய்!
வழி திறப்பாய்!
என்று!

விழித்திருந்து,
உறங்க வைத்தாய்!
உரிமை கிறங்க
வைத்தாய் !

'சேதுவை மேடுறுத்தி
வீதி சமைப்பாய்'
என்று!
நீ !
சேத்துப்பட்டில்
வீதி சமைத்தாய் !

சோத்துப் பாட்டிற்கு
கையேந்தும் சோதனை!
தமிழ்நாடு!

சாதனை செய்ய
ஏன் மறந்தாய்?

திக்கெட்டும் செல்வாய்!
செல்வம் கொணர்வாய்!
சிங்காரத தமிழ்
ஏற்றுவாய்!
என்றிருந்தேன்!

ஏறினாய்! நீ !
ஏமாந்தது!
தமிழ்!

படத்தை போட்டாய் !
பாடத்தை மறந்தாய்!

ஆனந்த சுதந்தரம்
அடைந்தாய் என்றேன்!
ஏமாற்றமே !

ஆனந்தம்
இல்லை !
சுதந்தர ம்
இல்லை!
சந்தி சிரிக்க,
வைத்தாய் !

உழைக்கும் கூட்டம்
உயர்வில்லாது !
சுரண்டும் கூட்டம்,
சொர்க்கபுரி
அமைத்திட!

உலகமயமாக்கும்
ஊடுருவச் செய்தாய் !

ஊர் உயர,
உழவு உயர,
யாது செய்தாய்?

' நந்தியாய்,
சிங்கூராய்,
கலிங்கமாய்,
குர்கானாய்,'
'சிறப்பு' செய்தாய் !

ஏரின் பெருமயை
நீரில் கரைத்தாய்!
' நீண்ட பயணத்தை'
நிர்கதியாக்கினாய் !

'வேண்டினேன்
பராசக்தியை'
'மீண்டும் பிறந்திட,
வேர்களைக் காத்திட',

உதயமானேன்!
'ஏ.கே ௨007'
உடன்!

Tuesday, December 18, 2007

யாருக்காக?

உணவு பாதுகாப்பு
2008ல்,

* இந்தியாவில் உணவுப் பண்டங்களின் விலை மிகவும் அதிகரிக்கும;

* வேளாண்மை உணவுப் பண்டங்கள் உற்பத்தி மிகவும் குறைந்து போகும;

* ஐ.நா. மன்றத்தின் புள்ளி விவரப்படி,கிராமப் பகுதியில், தானியங்கள் நபர் ஒன்றுக்கு,
152 கிலோ கிராம் மட்டுமே கிடைக்கிறது.
* 1990ல் கிடைத்த அளவிற்கு 23 கிலோ கிராம் குறைவாகவே கிடைக்கிறது.

* மிகுந்த வறிய நிலையில் உள்ள மக்களில் 30% விழுக்காட்டினர்,

நபர் ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 1700 கலோரிகள் மட்டுமே உட்கொள்கின்றனர்,

* உலக நாடுகளின் குறைந்த பட்ச தரம், 2100 கலோரிகள், நாள் ஒன்றுக்கு

70% சதவீத வருவாய் செலவு செய்து, 1700 கலோரிகளுக்கும் குறைவான உணவு சாப்பிட்டு வாழும் சூழலில், வளர்ச்சி வீதம்; உயரமான கட்டிடங்கள்; கணணி வளாகங்கள்; அழகிய தார்சாலைகள்; புதிய தொழிற்சாலைகள் போன்ற புற வளர்ச்சி நிலைகள். யாருக்காக?

66% விழுக்காட்டினர் நாள் ஒன்றுக்கு 20 உருவாய்க்கும் குறைவான வருவாயில் ! அரசியல் சட்டம் சொல்லும்"இந்திய மக்களாகிய நாம், நமக்கு நாமே அளித்துக் கொண்ட..." யாருக்காக?

Friday, December 14, 2007

'மோதல் சாவு கலாச்சாரமும்', காவல் துறையும் 1

புசுகர் ராசு மற்றும் சோபா சர்மா

மோதல் சாவு போர்வையில், காவல் துறையினரால் இரண்டு வியாபாரிகள் கொல்லப்பட்ட வழக்கில், பத்து காவலர்கள் குற்றவாளிகள் என அண்மையில் தில்லி உயர்நீதி மன்றம தீர்ப்பளித்தது. இது, பெருகிவரும் மோதல் கொலை கலாச்சார பிரச்சனையை, சமூகத்தின் முன் நிறுத்தியுள்ளது. மோதல் சாவுகள் குறித்து பொது மக்கள:' இது காவல் துறையின் வழக்கமான, அவசியமான நடவடிக்கைகள் ஆகும் என்பது'.

மோதல் சாவு் குறித்து, காவல்துறை தீர்மானிக்கும் அதிகாரம் குறித்து, ஆய்வு செய்திட தீர்மானகரமான ஏற்பாடுகள் இல்லை.போலி மோதல் சாவுகள குறித்து எழுப்பப்படும் புகார்கள் குறித்தும புலன் விசாரணை செய்திட,சுயேச்சையான ஏற்பாடும் இல்லை என்பதே, நிலையை மிகவும் அபாய கட்டத்திற்கு தள்ளி உள்ளது எனலாம்.

வணிகர்கள் பிரதீப் கோயல் மற்றும் சகசித்சிங், புதுதில்லியில் நடு நாயகமான இடத்தில் காவல் துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் கண்டனக் குரலை எழுப்பியது. எழுந்த நெருக்கடியின் காரணமாக காவல்துறை ஆணையர் பதவி விலக நேரிட்டது. கொலை வழக்கு சி.பி.ஐ'ன் விசாரணைக்கு அளிக்கப்பட்டது.

பலியானவர்களின் குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள். இதன் காரணமாக வழக்கு முடிய பத்தாண்டுகள் ஆகியது என்றாலும், வழக்கத்திற்கு மாறான மன உறுதியுடன் வழக்கினை நடத்தினர். என்றாலும், பெரும்பான்மை வழக்குகளில் காவல்துறை வாதங்களை ஊடகங்களும், பொதுமக்களும், அவர்கள் கூற்றுப்படியே ஏற்கின்றனர்.

தில்லி கோனாட் பகுதி மோதல் கொலையிலும், காவலர்கள் தற்காத்துக் கொள்ள திருப்பிச் சுட்டதின் காரணமாகவே அவர்கள் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. உண்மையில், கொலை செய்யப்பட்டவர்கள் உடல் அருகே பழைய துப்பாக்கியை வைத்து தடயங்களை மாற்றினர்.எனினும் அவர்கள் சொல் எடுபடவில்லை.

அதிகரிக்கும் போக்கு
அண்மைக் காலமாக மோதல் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரப்படி (சம்மு காசுமீர் தவிர்த்து) 2002--03ல் 83 பேர் கொல்லப்பட்டனர்; 2003-௨004ல் 100 பேர் கொல்லப்பட்டனர்; 2004- 2005ல்-- 122பேர் கொல்லப்பட்டனர். உத்தரப் பிரதேசத்தில் இக்காலக் கட்டத்தில் 41, 48, 66 கொலைகள், காவல் துறையால் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆந்திராவில் 41 பேரும் கொல்லப்பட்டனர். அமைதியான மாநிலமான உத்தரக்கண்டும் 12 மோதல் கொலைகளை நிகழ்த்தி தம் கடமையை நிறைவேற்றியுள்ளது.

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அறிக்கை - மொழியாக்கம்

Tuesday, December 11, 2007

பாரதி நெஞ்சம்!

மொழிப்புலம் காத்திட,
வழிப்புலம்
செய்திருப்பான!
தமிழரைக் காத்திட,
தாண்டியும்
சென்றிருப்பான்!

தோள் வலியால்,
தமிழ்த் தேசியத்தைக்
காத்திருப்பான்!

இன்னலை எதிர்கொள்வதில்,
இன்முகம்
காட்டியிருப்பான்!
இறும்பூது
அடைந்திருப்பான்!

இமயத்தில் உலாவிய நீ,
தென் திசையை ,
இலகுவில் கடந்திருப்பாய்!

இந்திய தேசத்திற்கு,
இறவாப் புகழ்
சேர்த்திருப்பாய!

புதுப்பரணி பாடி,
தரணி புகழ்
தமிழனுக்கு
சேர்த்திருப்பாய!

சோம்பல் தமிழனின்
சோதனை தீர,
சூடேற்றியிருப்பாய்!

காட்டுத்தீயாய்
சனாதனவாதிகள்
சட்டையை உரித்திருப்பாய்!

உரிமைக்காத்திட,
ஊரைத் திருத்திட,
உலக்கையாய்
இடித்திருப்பாய்!
உணர்வை
எழுப்பியிருப்பாய்!

கடல் கடந்து வாழும்
தமிழரின் ,
களை இழந்த,
நிலை உயர்த்திட!
ஏவுகணையாய்!

கண்டம் விட்டு
கண்டம்,
பாய்ந்திருப்பாய்!

காவிகளை மிதித்து
காவியம் நிகழ்த்த!
தமிழனின்
தனி மானம்,
பதித்திருப்பாய!

காலனை உதைக்கும்
வைர நெஞ்சம!
அஞ்சா நெஞ்சம்!

கோள் வாழ் குறை
கொதித்து,
மிதித்து,
கோணல் நிமிர்த்தியிருப்பாய!

குயில்களின் சோலை
எங்கும் புதுக்கி ,
புதுமை
கூட்டியிருப்பாய் !

காற்றும் மழையும்,
வானும், நீரும்,
நிலமும்,
மலையும், காடும்

நீக்கமற நிறைந்திடும்
புதுப் பாரதம்,
சூழல்
மாற்றியிருப்பாய!

Saturday, December 8, 2007

புண்ணிய புதுவை!

போக்கும் சரியில்லை!
போக்குவரத்தும்!
சட்டமும்!

இல்லை!
ஒழுங்கும்!
சாலைகளில்!
வேலைகளில்!


மாரியும் இல்லை!
மாறுதலுமில்லை!
கோரிய மழையும் ,
வடகிழக்கில்
இல்லை!


கால் பங்கு மழையும்,
கவலை
தீர்க்க வில்லை!
ஏரிகள் ஏதும்,
நிறையவில்லை!


படகு,
உணவு விடுதி,
சுற்றுலா வளர்ச்சி!
பொழுது போக்கு
குறைவில்லை!


தண்ணீர் விளையாட்டு!
நீர் இருந்தாலும்....
நேரிய வழி,
எமக்கு
தேவையில்லை!

தவி,
புட்டியலுடன்....

Tuesday, December 4, 2007

இந்தியா- வளர்ச்சிக் குறியீட்டு எண்!

இந்தியா, அய்க்கிய நாடுகள் சபையின் மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128க்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது, இது நல்ல செய்தி அல்ல. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 1990லிருந்து, ஆன்டுதோறும் மனித வளர்ச்சி அறிக்கையை தயாரித்து வருகிறது. வளர்ச்சித் திட்டத்திற்குப்பின் மக்களை மையப்படுத்தும் நோக்கத்திற்கு, முக்கியம் அளித்து இவ்வறிக்கையை தயாரித்து வருகிறது.

1. வாழ்நாள் நீட்டிப்பு
2. முதியோர் கல்வி அளித்தல்
3. மக்களின் வாழ்க்கைத்தரம்,

ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இவ்வறிக்கை தயார் செய்து, இறுதி செய்யப்படுகிறது.

இந்திய அரசு கல்விக்கு 1991ல் 12.2% சத வீதம் செலவு செய்தது. 2005ல் 10.7% சதவீதமாக இது குறைந்துள்ளது. 58% சதவீத குழந்தைகள் மட்டுமே காச நோய் தடுப்பு ஊசி அளிக்கப்பட்டுள்ளது. 22% சதவீதம், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை மட்டும் வயிற்றுப்போக்கு அளிக்கப்படும் வாய் வழி மருந்து அளிக்கப்படுகிறது.

பசுமையக வளி வெளிப்படுதுதல் பிரச்சனையிலும், இந்தியா அதிக அளவு வெளிப்படுத்துதல் காரணமாக மனித வளர்ச்சிக் குறியீட்டு எண் 126லிருந்து 128 க்கு கீழிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அய்க்கிய நாடுகள் சபையின் வளர்ச்சித்திட்டம் 2050க்குள் பசுமையக வளி/ காற்று வெளிப்படுத்துதலை 1990ன் அளவிற்கு ஒப்பிடும்போது 50% சதவீதம் குறைக்கப்பட வேண்டும் என இலக்கு நிரணயிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அடைந்த நாடுகள் 80% சத வீதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2020க்குள் 20 லிருந்து 30% விழுக்காடு வரை குறைத்துக் கொள்ள வேண்டும். வளர்ச்சி அடையும் நாடுகள் 20% சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டும் எனவும் அறிவித்துள்ளது. அய்க்கிய அமெரிக்க நாடு, ஆண்டு தோறும் நபர் ஒன்றுக்கு, 20 டன் அளவு பசுமையக வளியை வெளிப்படுத்துகிறது. மிக அதிக அளவிலான பசுமையக வளியினை வெளியிடுகிறது. இந்தியா ஆண்டு தோறும், நபர் ஒன்றுக்கு 1 டன் பசுமையக வளியை வெளியிடுகிறது.