Showing posts with label சமூகவியல். Show all posts
Showing posts with label சமூகவியல். Show all posts

Saturday, October 27, 2018

தோட்டம்/ துப்புரவு


மருகன் இல் அமைந்த தோட்டத்தில், ஊட்டத்துடன்
ஓடி,ஆடி, அமைதியாக.
இரைச்சல் என்பதும், கரைசல் என்பதும் புறாக்களின், ஓயாத,'குக்கூம்,குக்கூம்',
மைனாவின் வருகை, பருத்த பழுப்பு நிற அணில் வகுப்பு,தேனீக்கள் ரீங்காரம்; வண்ணத்து பூச்சிகளின் வகை,வகை.இவைகளின் நிரலில் கரைந்த பொழுது.

இடையிடையே,ஒன்றிரண்டு வாகனங்கள் ஒலி,காற்றில் அடைந்திடும், வாயிற் புற வரிசையில்.சாலை மருங்கில், நேர்கோட்டில் நிற்கும் மரங்கள், உயரம் கூட ஒரேயளவு. கழித்து செப்பனிடும் பணியாளர், கவனமாக , களிப்புடன் புதன்கிழமைகளில்.

சாலையோரம் துப்புரவு கவசம் அணிந்து, உறிஞ்சும் கருவி துணையுடன் ஒருவர்.சில மணி நேரம் கழித்து தெருக்களை சுத்தம் செய்திடும் வாகனம், வியாழக் கிழமைகளில்.

 குப்பை வாரும் உந்து, பெரிய அளவில், வண்ணப் பெயர் தாங்கி, ஊழியர் இருவர்- ஒருவர் இயக்க மற்றொருவர் இறங்கி,ஒவ்வொருவர் வீட்டு முன்பும், முதல் நாளே குப்பைகளை, கறுப்புத்தாள் பையில் நன்கு திணித்து, முடித்து வைத்து, 'கிரே' வண்ண அஞ்சல் பெட்டி உயரத்தில், சக்கரங்கள் ஒரு பக்க சாய்வாக உள்ள துப்புரவான பெட்டி. எப்படி வைக்க வேண்டுமோ, அப்படி வைத்துவிட, எடுத்து வண்டியில் ஏற்றுகிறார், சிந்தாமல், சிதறாமல், சீராக, சிறப்பாக; ஈடுபாட்டுடன் இன்பமாக.


Sunday, May 13, 2018

'போர்வை வாதிகள்!

சமூக இயக்கங்கள், செயற்பாட்டுக் குழுக்கள், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு அமைப்புகளில் முன்னணித் தோழர், முனைப்பு காட்டுபவர், முன்முயற்சியாளர் போன்ற செறிவான செயல்பாடு உடையவர் என்ற அடையாளம் தன்முனைப்பில் கொண்டு சேர்க்கிறது.

இதனால் கூட அதிக சேதம் இல்லை! குடும்பங்களில் தோழமையுடன் பழக வேண்டியவர்கள், நிலை பிசகி, கதாநாயக சித்தரிப்பில், கவடு கூட்டி, பாலியல் கொடுமை இழைக்கின்ற போக்கு பரவலாகி பாதிக்கப்பட்டவர் வெளிப்படுத்த முடியாத அவலம்!

 இவரெல்லாம் மனித உரிமை, மண்ணுரிமை, சமூக நீதி என்கின்ற பல்வேறு பரிமாணங்களில் தம்மை வித்தியாசப் படுத்தி, உயர்த்தி, அதற்கென சிறு கூட்டத்தை தம் வளையத்திற்குள் வைத்து வலம் வருபவர்கள்.

வெளிப்படையான எதிரிகளை விட கூடிக்கெடுக்கும், குடி கெடுக்கும் இவர்கள், தந்தை பெரியாரைப் பேசுவார்; அண்ணல் அம்பேத்கரை புகழுவார்; மார்க்சியம், லெனினியம்; ஈழ விடுதலை இன்ன பிற முழக்குவார்! அதற்கும் ஆமாம் சாமியாக ஒரு கூட்டம் குடை பிடிக்கும். வியாக்கியானம் கூறும்.

பெண்ணுரிமையும் கூட இப்படிப்பட்ட பேர்வழிகளின் நிகழ்ச்சி நிரல்களில் உண்டு. தனி மனித ஒழுக்கம், நம்பிக்கை மோசடி, பெண்கள் மீதான வல்லாதிக்கம் கண்டு கொள்ளப்படாத செயல்களாக, இயக்கங்கள் தப்புத் தாளங்களின் பிடியில், சாமர்த்தியமாக சதுராடுகின்றன.

இதுபோன்ற, 'போர்வை வாதிகளை',' முகமூடி மாந்தர்களை, மக்கள் சமூகம் அறியும் சூழல் உருவாக வேண்டும். வர்க்க எதிரிகளை விட மோசமான, பண்பாட்டுச் சிதைவு விளைவிக்கும் இச் சக்திகள்/சகதிகள் அப்புறப்படுத்தப்பட வேண்டும்.'

Saturday, May 12, 2018

'சோறு',

'சோறு', குறித்து அம்மாவின் உரையாடலில் உதிர்த்தவைகள். நினைவில் நின்றவை!

சட்டிச் சோறு
சாக்கடைச் சேறு

தண்டச் சோறு
உண்ட சோறு

திண்ண சோறு
மண்ணு சோறு

சோத்து மாடு
சோத்தால் அடித்த பிண்டம்
சோறு கண்ட இடம் சொர்க்கம்

இவையன்றி, பிள்ளைகளை திட்டும் வசை சொல்லாடல்கள் வரிசை,

 இதோ!

மாடு ஓட்டி வந்தேன், மணி ஆட்டி வந்தேன்
சோறு போடம்மா! சொக்கம்மா!

சோறு சாப்பிட்டா சொத்தை!
கூழு சாப்பிட்டா குண்டு!

வஞ்சனை நெஞ்சடைக்க, வரவு சோறு மாரடைக்க!

பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்,  என்கின்ற பக்குவம் கூறிடும் பதார்த்தமும் உண்டு.

84 அகவையில், பல வாழ்க்கை ஊடாட்டங்களில் தெறித்த, பழந்தமிழ்ச் சொல்லாடல்கள்/மரபு சொற்கள் மறைந்து கொண்டிருக்கிறது.புதிய தலைமுறை பேச்சு, வழக்கு, தாய் மொழியின் தடங்கள் இழந்து/தளங்கள் மறைந்து, மண்ணின் பெருமை அருகி வருகிறது!


Saturday, April 28, 2018

இழப்பு !

இறப்பு என்பது இயற்கை என்றாலும், துயரம், அழுகை, துடிப்பு ஆகிய உணர்ச்சிகள் நம்மை உலுக்கி விடுகின்றன. அதுவும், உறவுகளின் இழப்பு பலவித சங்கடங்களை ஏற்படுத்துகிறது.இயல்பு நிலை இழக்க வைக்கிறது.

நலக்குறைவினால் விளையும் இறப்பு, நமக்கு பல அனுபவங்களை உணர்த்துகிறது.இயற்கையை பேணாதது போலவே, இயற்கையின் அங்கமாகிய மனிதன் தன் உடல் நலத்தை பேணாது, மனம் போன போக்கில், மதி மயங்கி வாழ்கிறான்.பலவிதமான அவசியமற்ற பழக்க, வழக்கங்களுக்கு சிறையாகி, பின் இரையாகிறான்.

குடும்பப் பள்ளி அளித்திடும் கல்வி, அதன் வழி உருவாகிடும் முதற்கட்ட மனிதன், பள்ளியில் பக்குவப்படுத்தப்பட்டு, நடைபோட வேண்டும்.அதிலும், பல சிக்கல்கள். அமைந்திடும் ஆசிரியர், பள்ளிச் சூழல் ஆகிய புறநிலைகளின் செல்வாக்கு, மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

பலகீனங்களின் பிடியில், அதன் பழக்கத்தில் வளரும் குழந்தை மனதின், பல ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில், பல புதிய தடங்களை பதித்தாலும், முதல் இரண்டு கட்ட பட்டறிவு அவனை தடுமாற வைக்கிறது.

உணர்வு நிலையில் இவை யாவும் அறிந்தாலும், பின்னுக்கு இழுக்கும் பலம் வாய்ந்தது.சரியான வளர்ப்பு முறை, பள்ளிக்கல்வி முறை, கல்லூரி வாழ்க்கை ஆகிய தொடர் பயண நெடுகிலும், சீரான வாழ்க்கை; நெறிபடுத்தும் வாழ்க்கை மிக முக்கியமான வாழ்க்கைத் திருப்பங்கள் ஆகும்.

அடித்தளம் அமைத்திடும், பதியம் போடப்படும்  பருவங்கள் எனில் அது மிகையில்லை. வளர்ந்த வாழ்க்கையின் இறப்பும் இதை ஒட்டியே அமைகிறது என்கின்ற உணர்வும் பட்டறிந்தவர் அனைவரும் அறிந்திடும் உண்மையாகும்.

பதின்பருவ காதல்!

காதல் என்னும் கத்தரிக்காய்!

 அவர் இல்லாமல் நான் இல்லை! நான் இல்லாமல் அவர் இல்லை! இவ்வகை உணர்ச்சி தெரிப்புகள், அவசர கோலத்தில் , ஆசைவெளியில் கொட்டிடும் வார்த்தைகள்.இணைய தளத்தின் பழக்கம், இதய தளத்திற்கு செல்லாத சுணக்கம்.புற தோற்றம், ஒருவர் அக எழுச்சி, விருப்பம் ஆகிய தரவுக்குள் எடுக்கப்படும் முடிவுகள். பரிசீலனை செய்யப்படாத வைப்புகள்.

தனி மனித உரிமை, அதன் வீச்சு, அளவீடு, ஒருவொருக்கொருவர் எல்லைக்கோடு; அடுத்தவர் உரிமையை புரிந்து கொள்வது யாவும் தெளிவற்று பயணத்தில் இலக்கு. திருமண ஏற்பாடு. பெற்றோர்கள் பிள்ளைகளின் விருப்பத்திற்கு வலைந்து கொடுப்பது, பொருள் செலவழிப்பு, ஒரு சடங்காக, சம்பிராதயமாக போகிவிடும் சூழலும் ஏற்படுகிறது.

ஆரம்ப ஆர்வம், மதிப்பு, புரிதல் போக்குகள் எதிரெதிர் திசையில். புதிர்போட பொங்கிடும் ஆசை வலையத்திற்குள் சிக்கி, நிராசை நிகரம் தான் எனும் வணிக மனப்பாங்கு மேலோங்கும் சமூகப்போக்கில். கடவுள், சடங்கு, வழிபாடு யாவும் கடந்து சென்றிடும் பாதைக் கோடுகளாக நிற்கிறது.

உடல் சார்ந்து நிற்கும் பிரியம். அதனால் ஏற்படும் ஈர்ப்பு, பதின்பருவத்தின் நிகழ்வு.இது அகவியல் அடிப்படை.இவ்வுணர்ச்சி மேலோங்க, கட்டுகளை விட்டு விலகும் சூழல், புறநிலை போக்குகளால் உந்தித் தள்ளப்படுகிறது.

காட்சி ஊடகங்கள், கைபேசி முன்னேற்றங்கள் கணினி தொழில் நுட்பம் போன்றவை பெரிதும் தொடர் செல்வாக்கு செலுத்தும் நிலையில், நடைமுறை நாகரிகமாகவே இளைய சமுதாயத்தினரால் அங்கீகரிக்கப்பட்டு அமைந்து விடுகிறது.

வாழ்க்கை முறிவு, உறவு விரிசல், உடைந்த உள்ளம், இயல் நிகழ்வாகி நிலைமாற்றம் நீள்கிறது..........

Sunday, January 31, 2010

எயித்தியில் நில நடுக்கம்.

இலத்தின் அமெரிக்க தீவு நாடான எயித்தியில், நில நடுக்கம்.இரண்டு இலட்சம் உயிர்களைப் பறித்தது.பல இலட்சம் மக்களின் வாழ்க்கை ஆதாரமே சிதைந்து, சின்னா பின்னமானது.

குடிக்க நீர், உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு, யாவும் இன்று அந்நியமாகியுள்ள அவலம். சில ஆண்டுகளுக்கு முன் சூறைக் காற்றில், சுழன்ற அவர்கள் வாழ்க்கை, இன்று மீண்டும், இயற்கையின் சீற்றத்தில் சீரழிந்துள்ளது.

அண்டை நாடுகளின் உதவிக் கரங்கள், விரைவாக சேர முடியாத அவலம்.இயற்கையின் அடிக்கு இரையான உயிர்கள், சிதைந்து கட்டிடங்களுக்கிடையில், அப்புறப் படுத்திட, கெளவரமாக அடக்கம் செய்திட வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் வசிக்கும் எயித்தியின் பெண்மணி கூறுகிறார்,"என் உறவினர் உடலாவது கிடைத்தது, ஆனால் உடல்கள் கிடைத்திடாத என் இன மக்கள் துயரம் பெரியது".

போர் என்றால் அதி விரைவாக, மின்னலை விஞ்சும் தாக்குதல் மூர்க்கம்,உடனடி அழிவுக்கு ஏங்கும் போர் வியூகம், தொழில்நுட்பம், அணி சேர்க்கை, இராணுவ நடவடிக்கை, இயற்கை பேரழின் போது தாமதம் ஆவது ஏன்? எப்படி?

அழிவாற்றலில் முனைப்போடு,பிணைப்போடு செயல்படும் அறிவாற்றல், உயிர்காக்கும் செயல்களில் சுறு, சுறுப்பு எங்கே?

உலக சமுதாயம், நாகரிக சமூகம் பதில் கூறுமா?

பாதித்த மக்கள் மறு வாழ்வு விரைந்து நடக்குமா?

Friday, January 15, 2010

வணிகத் திருவிழா- 2010

வணிகத் திருவிழா- 2010

புதுவையில் கோலாகலம்.உருவா70 இலட்சம் அரசாங்கம் ஒதுக்கீடு. பரிசுப் பொருள்கள் ஏராளம், புதுவை மக்கள் பரவசம்.புதுவை, சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ள, செயராம் திருமண நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுகர்வுப் பொருள்கள் கண்காட்சி.மக்கள் கூட்டம் அலைமோதும் கேளிக்கை. இந்த ஆண்டும் சாதனை சரித்திரம்! மக்களை மனச் சலவை செய்திடும் தந்திரம்! மாநில அதிகாரத்தின் எந்திரம்!

சிறிய மாநிலம்! சிறப்பான மக்கள்! எதையும் ஏற்றுக் கொள்பவர்கள்! தங்கள் வாழ்க்கை பிரச்னைகளைக்கூட மறந்து,இழுத்த இழுப்புக்கு இழப்புகளை ஏற்கும் இளியர்! புதிது, புதிதாக தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி பெரு வாழ்வு வாழ வேண்டும்! வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்! சாதா தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து, எல்சிடிக்கு மாற வேண்டும்!கடன் பட்டாலும் கவலையில்லை! பரிசுப்பொருள் கிடைக்க வேண்டும்!

நாளைப்பொழுதுக்கு உலையில் வைக்க அரிசி இல்லை! அதன் விலையும் அருகில் இல்லை! கிலோ அரிசிஉருவா 34! அது பரவாயில்லை! கிலோ அரிசி உருவா 1, பெயர் பதிந்து கொள்ளலாம்!வீட்டில் ஒருவருக்கு வேலை இல்லை! அரசாங்க வேலையும் காலி இல்லை!3000 பதவிகளுக்கு மேல் காலி செய்திட்டோம்! சிக்கன நடவடிக்கை! சீற வேண்டாம்!

தமக்கு என்ன நேர்கிறது. தம் வாழ்க்கையின் நிலைப் பாட்டை, உறுதி செய்யும் கடமை உணர்ச்சி வேண்டியுள்ள அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை திசை திருப்புகிறது.

காலத்தின் சரியான போக்கை அறிந்து கொள்ள வேண்டிய மக்கள், தம் இல்லங்களில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் முன்பு, நாள்தோறும் சீரழிந்த கலாச்சார சரக்குகளை, சில்லரையாக சீராக கொள்முதல் செய்து செரித்திடும் போக்கு,

தம் மீது தொடர்ந்து நப்பாசையாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தை எவ்வித விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளும் போக்கு ஒரு தரமான , அறிவார்ந்த மக்கள் சனநாயகத்தை வளர்த்திடுமா?

Saturday, October 4, 2008

புரியும்!

உள்ளிருந்து
கேட்டேன்!
வெளியே
உணர்ந்தேன்!

வெளியிருந்த
முரண்
சரியென்றது!

சரிந்தது!

அகன்று
நோக்கின்!

அளவு,
தன்மை,
ஆழம் புரியும்!

Saturday, June 28, 2008

நாட்டுக்குத் தேவை!

வெகு நாட்களாக மூடிக் கிடந்த,'சீவா ருக்மணி திரையரங்கம்' புதுச்சேரி வழுதாவூர் சாலையில்,பழைய 'செயராம்' திரையரங்கத்திற்கு எதிரில்,தற்போது'அட்லேப்'எனும் பெயரில், ரிலையன்சு நிறுவனம் வாங்கி, புதிப்பித்து, 'தசவதாரம்' திரைப்படம் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் அமைக்க,1977ல், அரசாங்கத்திடம் தடையில்லா சான்று கோரியபோது,அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் ஆக, புதுதில்லியிலிருந்து புதுவைக்கு மாற்றலில் வந்திருந்த, திரு.காந்த்,இ.கா.ப.அவர்கள்,பெருகிவரும் புதுவையின் போக்குவரத்தை காரணம் சுட்டி,எதிரெதிரெ இரண்டு திரையரங்கள் அமைத்திட அனுமதி அளிக்க முடியாது என உறுதியான முடிவினை அறிவித்தார்.

எனினும், அரசியல் அழுத்தத்தின் காரணமாக,இரண்டு திரையரங்குகளுக்கும் சொந்தக்காரர்கள்,உயர்சாதி பேராயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக, மக்கள் நலனுக்கு எதிராக, இவ்விரண்டு திரையரங்குகளும் அமைக்கப்பட்டன.

அதில் ஒன்று, உணவகமாகவும், விடுதியாகவும், சுற்றுலா மேம்பாட்டு அரசு மான்யங்களை விழுங்கி, கடன் தொகைகளை சாப்பிட்டு செம்மாந்து நிற்கிறது, தோப்பு துரவுகள் இருந்த இடத்தில்.

புதுச்சேரியின் போக்குவரத்து சிக்கலை, பிரெஞ்சு ஆட்சி வரலாற்றில் இருந்து, அறிவியல் பூர்வமாக பரிசீலனை செய்த முதல் காவல்துறை அதிகாரி‍, திரு. காந்த் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

தாகூர் கலைக்கல்லூரி் பொருளாதாரப் பேரவையின்,ஆண்டு விழாவில்,அவர் பேசியபோது,புதுச்சேரியின் நகரம் திட்டமிட்டு் அமைக்கப்பட்டது.'புல்வார் சாலைகள்',சாலையின் இரு மருங்குகளிலும் மரங்கள் நடப்பட்டு, ஒரு கோழி முட்டை வடிவில், அன்றிருந்த கட்டைவண்டி,இழுவை ரிக்சா, மிதிவண்டி, குறைந்த எண்ணிக்கையிலான மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்து நகரம் ஆகும் என்றார்.

1980களில் அவர், மாறிவரும் போக்குவரத்து தேவைகளை கணக்கில் கொண்டு, கருத்தில் இருத்தி, புதுவையின் எதிர்கால போக்குவரத்து பிரச்சனையை, ஆட்சியாளர்கள் அறிவு பூர்வமாக திட்டமிட்டு, கையாள வேண்டும் என்றார்.

ஆனால்,தற்போது மீண்டும் 'அட்லேப்' பெயரில், திரையரங்கம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியை, மக்கள் மீது திணித்துள்ள‌து. நிறைய சலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில்,தேசிய புள்ளி விவரங்கள், புதுச்சேரிக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளது.

புதுவையின் நகர வளர்ச்சி குறித்து, போக்கு வரத்து நெருக்கடி உள்ளடக்கி, நீண்டகால அடிப்படையில் திட்டமிடுதல் என்பது ஏட்டளவில் மட்டும் உள்ளது.கண்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைப்பது; குடியிருப்பு பகுதிகளில் அனுமதிப்பது;நீர் போக்குவரத்து பாதைகளை மறித்து கட்டிடங்கள்; பொழுதுபோக்கு அம்சங்களை அமைப்பது; குளங்களை தூர்ப்பது; ஏரிகளில் அத்து மீறுவது ஆகிய போக்குகள் மிக விரைவாக கட்டுமீறி, புதுவையைச் சுற்றிலும் தன்னல ஆர்வத்தில், பொது நலன்களுக்கு விரோதமாக, தங்கு் தடையின்றி நடைபெறுகிறது.

இத்தகைய மீறல்களை ஒழுங்கு படுத்த‌ வேண்டிய, நீண்ட‌ நெடிய செயல் பொறுப்பு மிக்க,கடமை உள்ள அரசாங்கமே, இப்போது நாட்டுக்குத் தேவை!

Sunday, February 17, 2008

அமைதியாக அழிந்து வரும் மொழிகள்

சான் நோபல் வில்போர்ட்

மொழியாக்கம்.மு.முத்துக்கண்ணு

தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.

சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இவ்வாய்வு, தேசிய நிலநூல் கழகம் மற்றும் அழியும் நிலையில் உள்ள வாழும் மொழிகள் ஆய்வு நிறுவனத்தின், கள ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கண்டுபிடிப்புகள், தேசிய நிலம் மற்றும் மொழி குறித்த வலைப் பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது.

Sunday, November 25, 2007

பார்ப்பனத் தன்மை!

பார்ப்பனத் தன்மை என்பது உயர் சாதியினருக்கு மட்டும் சொந்தமான, அவர்களிடையே மட்டும் மண்டி கிடக்கின்ற பண்பு அல்ல? ஒடுக்கப்படும் மக்கள் மத்தியில், குறிப்பாக இச் சமூகத்தில் கற்றவர்கள் மத்தியில், அதிலும் சிறப்பாக, அரசு ஊழியத்தில் உள்ளவர்கள் இடையில், மிகவும் செறிவாகவே உள்ளது.

தங்கள் கண் முன்னே நிகழும் நிர்வாக சீர் கேடுகள், பெரிய அளவிலான முறைகேடுகள் ஆகியவற்றிற்கு துணை போகக் கூடியவர்களாக இருக்கின்றனர். கேட்டால், " எப்படி எதிர் நீச்சல் போட முடியும்?, போகும் போக்கிலேயே ஒட்டிக் கொள்வதும் அவர்களைக் கட்டிக்கொள்வதுமே உத்தி, நடைமுறைத் தந்திரம்", என பல்வேறு விளக்கங்களை எடுத்து வைக்கிறார்கள்.

அரசியல் சட்டம் அளித்துள்ள ஒதுக்கீடு உரிமை, சரியாக செயல்பட வேண்டும் என்னும் தார்மீகத் துணிவு இன்றி, அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக, கெட்டியாக தன்னை இணைத்துக் கொண்டு தாம் வந்த வழித் தடத்தையும் மறந்து, உயர் சாதியினரோடு உயிர் தொடர்பு கொண்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்படும் சமூகத்திற்கே எதிராக, முனைப்புடன் உயர் சாதியினரோடு அவர்களின் போர்வாளாக செயல்படுகின்றனர். பரந்த அளவில் தாக்குதலுக்கும் , பிரிவினை சூழ்ச்சிகளுக்கும் உணர்ந்தே வெளிப்படையாகவே செயல்படுகின்ற போக்கு, தொழிற்சங்க அரங்கிலே மிக அழுத்தமாக நடை பெறுகிறது.

Tuesday, November 6, 2007

"காட்டுத் தீ"

எழுதினார் விமர்சனம்!
மொழி பெயர்ப்பு,
இந்தியில் நூலாக,

அறிவுலக ஆக்கினை!
கதிர் வெளிச்சம்
பாய்ச்சினார்!
வட புலத்திற்கும்.

மடமைத் தீ விரட்டிய
"மானுடத் தலைவன்",

சனாதன,
ஆதிக்க சக்திகளை,
அடையாளப் படுத்திய
"காட்டுத் தீ"

வேண்டாம் கவலை!
உம் அறியாமையும்

சேர்த்தே பொசுக்கும்!
"ஆற்றல் வடவை",

எங்கள் தேசம்!!

கருத்து சுதந்திரம் கவலை இல்லை எமக்கு! இந்து மதத்தின் காலாட்படை நாங்கள்! பெரியார் யார்? வால்மீகி இராமாயணத்தில் இராமனைப் பற்றி என்ன எழுதி இருந்தால் என்ன? குடிகாரனோ? எப்படியோ? பண்பாடு அல்லவா?

உண்மையைக் கூற நீங்கள் யார்? கோல் உள்ளவன் இடம் ஆடும் குரங்கு அல்லவா? நீங்கள்! பசித் தீயை அணைத்தோம்! பக்தி தீயை விரைவு படுத்துவோம்! ஒரே பண்பாடு! ஒற்றைக் கலாச்சாரம்! ஓங்கி ஒலிப்போம்!இந்து தேசம்! எங்கள் தேசம்!உங்களுக்கு இடம் இல்லை!

மதச் சார்பற்ற நாடு! சமதர்ம சமுதாயம்! அரசியல் சட்டத்துக்குள் சிறை வைப்போம்! எவன் எழுதிய புத்தகத்தையும் கொளுத்துவோம்! அதை எழுதியவனையும்! எங்கள் மீது சட்டம் பாயுமா! நாங்கள் தான் அதன் மீது!

குசராத்! கோத்ரா யாகம், குண்டம் மறந்து போனதா! கோவை 'சொக்கபானை' மறந்து போச்சா! ஒரிசா பாதிரி தீக்கிரை மறந்து போச்சா! அயோத்தியின் அரங்கேற்றம்! அடுத்தடுத்து ஆசிர்வாதம்! அனைவரும் எம்மிடம்! அணி மாறியிருப்பினும் ஆன்ம இராகம் எங்களுடையதே!

Friday, November 2, 2007

அடக்கம்!

எந்த சிலைக்கும்,
மாலை மரியாதை!
எனக்கதில் இல்லை
வெட்கம்!

கூட்டத்தோடு கூட்டமாக
கரைந்திடுவேன்,
குதூகலம்
கூட்டிடுவேன்!

கூனல் உணர்வு
மாற்றிலேன்,
கூச்சம் ஏதும்
போக்கிலேன்!

'மனிதருக்கு அழகு,
மானமும் அறிவும்'
எமக்கு
அது இல்லை!

தேவை,
அதிகாரமும்!
ஆதிக்கமும்!

ஆண்டு கிடக்கிறது!
அனைவரும்,
எமக்கு......

பீடம்?

கூறியதும்
மறந்து போகும்!

ஏறிய பின்,
பாரிய
நோக்கமும்!
பட்டு போகும்!

நேரிய வழி,
நேற்றைய நெறி!
ஊருக்குத்தான்!

நம்பிக்கை?

இராமர் பாலம்
அழிக்கக் கூடாது!
நம்பிக்கை!
பண்பாட்டின்
அடிப்படை!

வாழ்ந்தானோ!
இல்லையோ!
காவிய நாயகன்!
காலத்தைக் கடந்தவன்!

அயோத்தியில் பிறந்தவன்!
ஆண்டை தகுதி
படைத்தவன்!
திராவிடன் முடி
முரித்தவன்!

வானரங்கள்
சிறப்பு பெற்றவன்!
அணிமாறிய அனுமான்!
அடிமையாக ஆண்டவன்!

மீண்டும்!
புத்தாக்கம் செய்கிறார்!
அடிமை வரலாற்றை,
அடையாளப்படுத்தி!

ஆதிக்கம் சாதிக்க,
நிலை நிறுத்தம்,
செய்கிறார்.

ஆராதனைக்கு,
பஞ்சமில்லை!
ஆரியக் கூட்டம்
ஆலைச் சங்காய்!!

Tuesday, October 2, 2007

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி குச்சார் இன மக்கள் மீண்டும் போராட்டம்!

காந்தி பிறந்த நாள் அன்று, குச்சார் சமூக மக்கள், இன்னும் காலங் கடத்தப்படும் தங்கள் கோரிக்கையைத் தீர்க்க, மாநில அரசை வலியுறுத்தி திரளாக சிறை நிரப்பும் போராட்டம் நடத்துகின்றனர். 500 ஆயிரம் மக்களுக்கு மேல் இராசசுத்தான் மாவட்டத் தலை நகரங்களில் ஏழு இடங்களில் கைதாகும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அறிய வருகிறது.

இதற்கிடையில், இப்போராட்டத்தை எதிர்க்கும் விதமாக, பழங்குடியினரின் அகில இந்திய மாநாடு செய்ப்பூரில் நடை பெறுகிறது. அதில் பழங்குடி இனத் தலைவர்கள், மத்திய அமைச்சரவையில் உள்ளவர்களும், கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் பிரிவு அல்லது உடைவு ஏற்படுவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என முழக்கம் செய்து உள்ளனர். ஒருபடி மேலே சென்று, இதனை 'செய்ப்பூர் அறிவிப்பு', என அவர்கள் பெயரிட்டுள்ளனர்.


பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரி, மே, சூன் மாதங்களில் காவல்துறையின் மனித உரிமை மீறலைச் சந்தித்து, சொல்லொண்ணா துயரங்களுக்கு ஆட்பட்டு, உயிர்களை இழந்து, உடமைகளை இழந்து, மாநில அரசின் உத்தரவாதத்திற்கு கட்டுப்பட்டு, நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தற்போது பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத சூழலில், அடுத்தக் கட்ட போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.


பிரித்தாளும், இராசுசுத்தான் பாரதிய சனதாவின் அரசு, குச்சாரின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் 'குச்சார் பிரச்சனைக்கு' செவி சாய்க்குமா? ' மீனா சமூகத்தினர்', மற்றும் இதர பழங்குடியினரை அவர்களுக்கு எதிராக நகர்த்தி உயர் சாதி அரசியலை முன் நிறுத்துமா?

Tuesday, September 25, 2007

ஆளும் வர்க்க உத்தி- கிரிக்கெட்

24 இரவு, தரையிலிருந்து ஆகாயத்தை நோக்கி, அலை அலையாய் சீறியது வான் வெடிகள், கூட்டம், கூட்டமாய் இளைஞர் பட்டாளம் ஆர்ப்பரிப்பு, ஆலைச் சங்கை அமிழ்த்திடும் சங்கொலி, கானகத்தை வீழ்த்திடும் ஊலை, குலவை ஒலிகள், விலங்குகள் அஞ்சும் வெடி. பாதையில் பயணப்படுவோர் பயந்து, சிலர் நயந்து, வெற்றிக் களிப்பு! பாக்கிசுத்தானை தோற்கடித்தது! பரவலான பேச்சு, அரசுத் துறைகளில் நிர்வாகம் நிழலுக்கும் கூட பஞ்சம்!

அரசியல்வாதிகள், குறிப்பாக சரத் பவார், இந்திய வேளாண்மைத் துறை அமைச்சர், பாராட்டு! கோடிக் கணக்கில் உருவாய் பரிசளிப்பு! கோலாகலம்! கும்மாளம்! இந்தியா சாதனை! அனைத்து செய்தி ஊடகங்களிலும் நாடகங்கள், அரங்கேற்றம்!!

விளையாட்டை, விளையாட்டு என்ற கோணத்தில் பார்க்காமல், நெறி பிறழ்ந்து, வெறியூட்டும் பார்வையில், மக்கள் திரளை மகுடியின் கீழ் ஆட்டி வைக்கும், மூளை சலவை செய்திடும் போக்கு, ஒரு சமூகத்தை, அதன் நிகழ்கால பிரச்சனைகளிலிருந்து எவ்வளவு தொலைவில் எளிதாக, திசை திருப்பி இழுத்துச் செல்ல முடியும் என்பதை, மீண்டும், மீண்டும், நமக்கு நன்கு தெளிவு படுத்துகிறது.

77 % விழுக்காட்டு இந்தியன், நாள் ஒன்றுக்கு உருவா 20 க்கும் குறைவாகவே சம்பாதிக்கக் கூடிய சமூக அவலத்தில் இருக்கும்போது, குறிப்பாக, விவசாயிகள் அன்றாடம் விதர்பா போன்ற மகாராட்டிரா மாநிலத்தில் தொடர்ந்து தற்கொலையில் நித்தம், நித்தம் செத்துக் கொண்டிருக்கும் போது, பிற பகுதிகளில், ஒரிசாவில், வங்காளத்தில் மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களில், வாழ்வாதாரம் இழந்து வாடும் பல்வேறு உயிரூட்டமான மக்கள் பிரச்சனைகளிருந்து, மக்களை திசைத் திருப்பும் சூழ்ச்சியில், ஆளும் வர்க்கம் பல்வேறு உத்திகளை கையாள்கிறது. அதில் ஒன்றுதான் கிரிக்கெட் விளையாட்டு.

விளயாட்டை அரசியலாக்கி, தொடர்ந்து இந்திய சமூகத்தில் அழுத்தமான பல பிரச்சனைகள், சிக்கல்கள் எழும்போது எல்லாம் பயன்படுத்தி, தொடர்ந்து பாக்கிசுத்தான் மீது தீராத வெறுப்புணர்வை, உரமூட்டி வருகிறது. இந்திய தேசிய வெறி உணர்வை, தீனி போட்டு மக்கள் மனங்களில், பகைமைத் தீயை வளர்த்து வருகிறது.

சகித்துக் கொள்வது, அடுத்தவர் உணர்வுக்கு, நம்பிக்கைக்கு மதிப்பளிப்பது போன்ற உயர்ந்த விழுமியங்களை எல்லாம் மக்கள் மனங்களில் இருந்து படிப் படியாக நுண்ணியல் செயல் பாடுகளின் வாயிலாக, விளையாட்டை பயன்படுத்தி, ஒரு சமூகத்தின் மனப் பான்மையையே சிதைத்து, செல்லரித்து, வேறுபாட்டு பகை உணர்வை வளர்த்து வருகிறது.

Friday, September 21, 2007

இராமனுக்கு பலியாகவா?

கருப்பசாமியும், கருகிய இன்னொரு தமிழனும், இந்துத்துவ வெறிக்கு பலி!கன்னட வெறி இன்னும் அடங்கவில்லை! கருத்துக்கு கருத்து பதிலாகுமே ஒழிய, வன்முறை பதிலாகுமா? அரசியல் தலைகளும், தத்து பித்து என உளறல்.

நிகழ்ந்த வன்முறைக்கு பதில் என்ன, தேசியம் கூறவில்லை! மாநிலமும் உருக்குலைந்த தமிழன் வாழ்க்கையை எண்ணவில்லை! வெறிகொண்டு ஓசூர் சாலையில் ஆயுதங்களுடன் விரட்டி, வழிமறித்து தமிழ் நாட்டு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்தை தடிகளால் அடித்து நொறுக்கி, கொளுத்தி, தமிழன் உயிரை எடுத்துள்ளது. இராமனுக்கு பலியாகவா?

படித்தவர்களும் பதில் இல்லை! வீடு தாக்கியது மட்டும்தான் வீதிக்கு வந்துள்ளது. நீதியின் கண்களுக்கு இறந்த தமிழர்களின் துயரம் தெரியவில்லை! சமதர்மம் பேசும் நாடு! மதச்சார்பின்மை பேசும் நாடு!

Wednesday, September 19, 2007

நெறியாகுமா?

புதுவை அரசு பொது மருத்துவமனையில் ஆகசுடு, 7ஆம் நாள், சிறு நீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக நாள் குறிக்கப்பட்டு அறுவை செய்யப்படாமல், மருத்துவரின் அலட்சியப் போக்கினால், 39 வயது மதிக்கத்தக்க தொழிலாளி அடுத்த நாளே இறந்தார். அவரது உறவினர் இது குறித்து போராட்டம் நடத்தினர். பிற அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து களம் இறங்கின. சிறுநீரகத் துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன்- சாவுக்கு காரணமானவர்-மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்டது.

இருப்பினும் மருத்துவர்களின் குழு, புதுவை ஆளுநர் அவர்களை சந்தித்தது. புதுவை முன்னேற்ற காங்கிரசும் சிறுநீரகத்துறைக்கு பொறுப்பான மருத்துவர் முருகேசன், சாவுக்கு காரணமானவர்,மீது மருத்துவ கவனக்குறைவு என இந்தியத் தண்டனச் சட்டப்பிரிவு 307ன் கீழ் பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு விலக்கிக் கொள்ளப்படது.

அவர் தொடக்கக் காலத்தில் சிநீரகப்பிரிவு தொடங்குவதற்கு காரணமானவர் என்பதற்காகவும் , தனக்கு வேண்டியவர் தன் குடும்பத்திற்கு மருத்துவம் பார்த்தவர் என்பதினாலும், ஒரு ஏழைத் தொழிலாளியின் சாவுக்கு காரணமான செய்கையிலிருந்து அவரை தனிப்பட்ட காரணங்களுக்காக காப்பாற்றுவது தார்மீக நெறியாகுமா?