Showing posts with label சமூக சூழல். Show all posts
Showing posts with label சமூக சூழல். Show all posts

Monday, October 29, 2018

வாண வேடிக்கை!



நள்ளிரவு வாண வேடிக்கை, நம் ஊரை மிஞ்சும் வாடிக்கை.ஆற்றங்கரையோரம் அணி,அணியாய் மக்கள் கூட்டம், அலை மோதாமல் அமைதியாக! விழித்திருந்து, விருந்து; மேசை தயாரிப்பில் ஒயின்/மது, உணவு வகைகள் சகிதமாக, இருண்ட சூழலில் மெழுகு வத்தி ஏற்றி, அமர்ந்து ஆற, அமர, உரையாடி, பிரஞ்சு விடுதலை நாள் பிறப்பை விரும்பி, வரவேற்று மகிழும் வெடிகள்.வியத்தகு வகைகள்.இதுவரை கண்டிராத இனிமையில். நம் மீது/நம் பக்கம் ஓடோடி வரும் செந்நிறம், பொன்னிறம்,நீலம், இளஞ்சிவப்பு என எண்ணற்ற வண்ணக் கூட்டில்,எண்ணக் குவியலில் பிசைந்து.

மரம் போன்ற காட்சி,இதய வடிவம், ஈச்ச மரம் போன்று, அவரவர் கற்பனைத் திறனுக்கு ஈடேற்றம்/விளக்கம் கூட்டிடும், விளக்கொளிகள்/விலக்கு ஒளிகள்.அரை மணி நேரத்திற்கு மேலும், அனைவரும், தன்னை மறந்து, விண்னை நோக்கி திருப்பிய விநோதம் அனுபவிப்பில் ஆனந்தம்.எழுத்தில் அவ்வுணர்வுகளை வடிக்க இயலாது.தளர்ச்சி போக்கிய, கிளர்ச்சி.குடைபோல் விரிந்து; காளான் போன்று கவிந்து, ஆல மரம் போல், அரச மரம் போல் தழைத்து; வேர் விழுது விட்டு; நீண்ட காட்சி, நெடிய மாட்சி!

குழந்தைகள், முதியோர், இளைஞர், ஆண்,பெண், நோயுற்றோர், மாற்றுத் திறனாளி உள்ளிட்ட மக்கள் திரள், தமது வாகனங்களை ஒழுங்காக நிறுத்தி, நடந்தே, "சான்த்ரு வீல்",- புளூவா-(பிரான்சின் ஒரு பிராந்தியம்), கடந்து,"லுவார்", ஆற்றங்கரை ஓரம் அமர்ந்து, கண்ணயராது கனிந்த/களித்த காட்சி விவரிக்க எழுத்துக்கள், போதா/ துணை நிற்கா !

Friday, March 2, 2018

சக மனிதர்

சக மனிதர் பழக்கத்தில் சந்தித்த இடர், சவால்கள் ஏராளம். சம்பவங்களின் மெய்மங்களில், விளைவுகளில் புலப்பட்ட அதிகார ஆசை, நெறி கடந்து, வெளிப்பாடு வெறியாகி நேர்மை இழந்து, நேசக்கரம் நீட்டி, வஞ்சக வலைவீசி, அணிசேர்த்து, தன்னழுத்த விசைக் கூட்டி விரைகிறது.

விளைவறியா வெற்று மாந்தர், களையுடன் கைகோர்த்து, நட்புப்  பயிர் நாசம் விளவித்து, நகை முகம் குழைத்து நாடகம் அரங்கேற்றம், நாள்தோறும் நம்பிக்கையுடன்!!

Saturday, February 24, 2018

மடைமாற்றம்!





போகிப்பண்டிகை இன்று.பிறந்த ஆண்டு விரைந்திட பொங்கல் நாள் வரிசையில், விடுமுறை அனுபவிப்பில் விழாக்கோலம்,  இல்லங்கள் தோறும் தேவை.

அவரவர் இயன்மைக்கு ஏற்ப, சூழல் அனுசரித்து கொண்டாட்டம். 'பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது' என்பார்களே,  எந்நிலையும் விருப்ப வெளிக்குள் அமைந்திடும் போது,மகிழ்ச்சி அளிக்கிறது.

சுய மகிழ்ச்சி,சுற்றத்தார் மலர்ச்சி, கூட்டங்களை சேர்த்து,பிணைத்திட வேண்டும்.வாழும் காலம் நொடியாகினும் விருப்பார்வத்துடன் பயணம் செல்ல பக்குவப்படுத்தி பயன்பெற வேண்டும்.

தன்னுணர்வே தலையாயது. தவிக்கும், தாவிக் குதிக்கும் மன உணர்வுகளை வரையறை செய்து, ஒழுங்கியற்றி ஓங்கிட வேண்டும்.நெருக்கடிகளையும், நெளிவு சுளிவுடன் சந்தித்து சமாளித்து, தகு தருணங்களாக மடைமாற்றம் செய்யும் மனப்பயிற்சி இன்றைய சமூகக்கொ ந்தளிப்பு,  ஆரவாரத்துக்கிடையில்  தவிர்க்க இயலாத அவசியம்.

Wednesday, July 27, 2011

தாய்மை

தாய்மை அடைவது ஓர் அரிய வரம். அனவருக்கும் வாய்ப்பது கடினம். இயற்கையின் தீர்மானம் எப்படி என்பதை எவரும் தீர்க்கமாக அறிந்திலர். அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் அதிகம் உள்ள இக் கால சூழ்நிலையிலும், தாய்மை அடைவதில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து, தீர்வு காண்பதில் மருத்துவம் திக்கு முக்காட வேண்டி உள்ளது.

மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் பெண்களுக்கு, நிறைய நலவழி தகவல்கள், அங்கன்வாடி வழியாகவும், தாய்சேய் நலத்துறை வாயிலாகவும் அளிக் கப்பட்டாலும், அனைவரும் இவ்வழி காட்டுதலின்படி நடக்கிறார்களா!
அது கேள்விக்குறிதான்.

தனியாக மருத்துவரிடம் மாதந்தோறும் ஆலோசனைகளுக்கு செல்லும் பேறுகால மகளிரும், அவரின் கணவன்மார்களும், மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா என்றால், அதுவும் கூட அவ்வளவாக நிறைவளிக்கும் சேதியாக இல்லை!

ஊடகத்தின் செல்வாக்கு அதிகமான சூழலில் கூட, பல்வேறு அரிய மருத்துவ கருத்துகள், ஆலோசனை இலவயமாக அளிக்கப்பட்டாலும் , காற்றில் கரையும் கானமாக,, கவனத்தில் கொள்ளாத, கடைபிடித்து ஒழுகாத போக்கு, மிகுதியாக உள்ளது.

தாய்மை அடையும் படித்த மகளிரும் கூட, உணவுப் பழக்கம்,பயிற்சி, மருந்து எடுத்துக் கொள்ளுதல், மனநிலை ஆரோக்கியம் கொள்ளுதல் ஆகிய பண்புகளை பிசகாமல், தொடர்ந்து மேற்கொள்ளும் அக்கறை செறிவாக இல்லை.

ஒரு நாள் வாசித்தால் போதும், அடுத்த நாள் அல்லது மறுமுறை பார்த்துக் கொள்ளலாம். தேர்வுக்கு முன் படித்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடும் போக்கு, அக்கறையற்ற அணுகு முறை ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும் போதுதான் மீள்பார்வை வளையத்திற்குள் வருகிறது.

மனத்தை பிழிந்து கொள்வது, கண்களை கசக்கி கொள்வது கலக்கம் அடைவது, எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைவது, உணர்ச்சிவயப் படுவது, உரத்தக் குரல் எழுப்புவது போன்ற எதிர்மறை போக்குகள் பற்றிய பாதிப்புகளை புரிந்து கொள்ளவேண்டும்.

தாமாக அறிந்து கொள்ளவில்லை எனினும்,பிறர் வழி அறிந்து கொள்வது, அடுத்தவர் சொல்லும் ஆதரவு எண்ணங்களை நிதானமாக எடுத்து உணர்வது மிகவும் அவசியமாகும்.

கணநேரம் தானே, என்ன நிகழப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை, தொடர்கதையாகும்போது, தொல்லைகள் எல்லைகளை தாண்டி விடுகிறது. சிக்கலும் ஆழமாகி,சிந்தனை சிதறுகிறது. விளவு மோசமாகிறது.

ஆனந்தம் காணவேண்டிய சூழல், மகிழ்சியுடன் அளவளாவும் நிலைமை, துயரம் மிகுந்ததாகிறது . இதயம் கணக்கிறது. இமைகள் சுமைகள் ஆக, உள்ளழுத்தம் அருவியாக, ஓவென்ற இரைச்சலுடன், சூறாவளி நாடகம் அரங்கேறுகிறது. .

Thursday, July 31, 2008

"சகிப்புத் தன்மை"

உண்ணா நிலை!
ஊரெங்கும்!
வெள்ளிக்கிழமை விரதம்
போல்!

உழைக்கும் மீனவர்!
தொடரும் துயரம்!
துண்டில் மீன் போல்!
துமிக்கியின் பிடியில்!

இலங்கைக் கடற்படை!
இடைவிடாது!
இழைக்கும் இன்னல்!
சொல்லி மாளாது!

என்றும் ஏந்தும்
கை!
இன்றும்
ஏந்தும்!
ஏதிலி போல்!

சுரந்த சோகம்!
பறந்து சென்றது!
பந்தலின் கீழ்!

காந்திய வழி!

"ஆசிய சோதி"

வேட்டை! நல்ல வேட்டை!
நாட்டில்! நம் காட்டில்!
நல்ல மழை!

பேரம்! நல்ல பேரம்!
நேரம்! நல்ல நேரம்!
"குதிரை பேரம்"

அரேபியாவை விஞ்சும்!
வேகம்!
எம்மிடம்! தாழ்வாரத்தை
தாண்டி!

உள் அரங்கில்!
ஓயாத வேட்டை!
சாயாது பொழுது!

ஆற்றல்! அணு தேவை!
எமக்கு! அட நமக்கு!

யார் சொல்வது!
ஏழை நாம் என்று!

கோடியில் புரளும்!
மக்கள் நாயகம்!
இரண்டாவது நாயகம்!

அழியா சேதி!

Sunday, July 22, 2007

சென்னை கருத்தரங்கம்

'போலி மோதல் படுகொலை எதிர்ப்பு கருத்தரங்கம்', 21.07.07, சென்னையில் நடைபெற்றது. கொச்பெட் சுரேசு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) உட்பட, பலர் பேசினர்.


கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலும், அரசை எதிர்த்து, காவல் துறையை எதிர்த்து 'போர் முரசம், அடிப்பது போல் முழங்கினர்.எவ்வித அரசியல் கருத்துக்களையும் பேசுவதற்கு, எழுதுவதற்கு இந்திய அரசியல் சட்டம் உரிமை அளித்துள்ளது. ஆயுதபாணி அரசியலை, சட்டங்கள் ஏற்கவில்லை.



என்றாலும், இவ்வகை அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் மீது, அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது, இந்திய தண்டணைச் சட்டம் விதித்துள்ள முறைகளுக்கு முரணாக, மீறலாக அமைகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குறைந்த பட்ச பலத்தை பயன்படுத்துவது என்பது குறித்து, பல உயர் நீதி மன்றங்கள், உச்ச நீதி மன்றமும், பல வழக்குகளில் கண்டிப்புடன் காவல் துறை கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு குறித்து, தெளிவாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளது.



காவல் துறையானாலும், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை காலில் போட்டு மிதிப்பது, குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை மீறுவது, எப்படி சரியானது ஆகும். 'சட்டத்தின் ஆட்சியை' அப்பட்டமாக மீறுவது, எந்த வகையில், 'சீருடைக்கு' ஒழுங்காகும்.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள அதிகாரம் எவர் கொடுத்தார்? சனநாயகத்தை மதிக்கும் மக்கள் கேட்கிறார்.

'தற்பாதுகாப்பு' உரிமை என்பது ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவரை 'முடித்துவிடுவது', என்கின்ற நோக்கத்தில், நடுநிலைமை இன்றி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் கொலைக் குற்றம் ஆகும் என்பது வெளிப்படை. இருந்தாலும், நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு முறையும் செல்லும் வசதி பாதிக்கப்படும் மக்கள் பிரிவினரால் சாத்தியமா?

துப்பாக்கி, அல்லது ஆயுதம் ஏந்தாத, 'உடனடியாக ஆபத்து விளைவிக்கக்கூடிய திறன் இல்லாத', கருத்து ரீதியாக செயல்படும் அரசியல்காரர்கள் மீது, நவீன ஆயுதம் போன்ற கருவிகளை உபயோகிப்பது சமமற்ற அதிகார மீறலாகும்.

தற்போது, சமூக தணிக்கை போன்ற கருத்து ம்க்களிடையே வலுவூக்கம் பெற்று வரும் சூழலில், சீனா போன்ற நாடுகளில் 'சமூகத்திற்கான காவல்' எனும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், ஆங்கிலேயர் உருவாக்கித் தந்த காவல் துறை சட்டம் இன்றும் அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் நடைமுறையில் உள்ளது சரியானது ஆகுமா?