Tuesday, January 6, 2009

"தோல்வி"

தோல்வி,என் தோல்வி,
என் தனிமை, தனி நிலை;
நீ எனக்கு மிக நெருக்கம்
ஆயிரம் வெற்றிகளைவிட,
உலகப் புகழ் அனைத்திலும்
என் நெஞ்சுக்கு மிக நெருக்கம்.

தோல்வி,என் தோல்வி,
என் தன்னறிவு, என் எதிர்ப்பறிவிப்பு,
இன்னும் நான் இளைஞன்
விரைவாளன் உன் வழி நான் அறிவேன்
வாடிப்போகும் வாகைப் பொறிகளில்
நான் சிக்கமாட்டேன்.
உன்னில் நான் கண்டேன் தனி நிலை
தவிர்ப்பும், இகழ்ச்சியும்.

தோல்வி, என் தோல்வி,
என் உடைவாளே, கேடயமே,
உன் விழிகளில் நான் படித்தேன்
முடிசூட்டுவது என்பது
அடிமையாக்குவது,
புரிந்து கொள்வது என்பது

மட்டம் தட்டுவது,
பற்றிக் கொள்வது என்பது
ஒருவனின்
முழுமையை அடைவது
பழுத்த பழமாகி
நுகர்ச்சிக்கு பயன்படுவது.

தோல்வி, என் தோல்வி,
என் துணிவான தோழனே,
நீ கேட்க வேண்டும்
என் பாடல்களை,
என் அழுகையை,
என் அமைதியை,

சிறகடிக்கும் ஒலியை
நீ மட்டுமே பேச வேண்டும்,
தூண்டிடும் கடல்களின் அழைப்பை,
இரவில் எரியும் மலைகளை,
நீ மட்டுமே செங்குத்தான
பாறை அமைப்பிலான
என் ஆன்மாவை அடைய முடியும்.

தோல்வி, என் தோல்வி,
என் இறப்பில்லா துணிவே,
நீயும், நானும் சேர்ந்து சிரிப்போம்
சூறாவளியுடன்,

நம்முள் இறக்கும் அனைத்துக்கும்
நாம் இருவரும் சேர்ந்தே
புதை குழி தோண்டுவோம்,
விருப்பத்துடன் நிற்போம் வெயிலில்,
நாம் தீங்கானவர்களாக.

( கலில் சிப்ரான் கவிதை- மொழி பெயர்ப்பு)

No comments: