Wednesday, February 18, 2015

பண நாயகத்தின்
சனநாயகம்

பாதை மாறிய 
தனி நாயகம்

கொடிகளின் அணி வகுப்பு
கொள்கைகளின் பிணி தொகுப்பு
வாழ்க்கை

உறக்கம்: நெடுநாள் ஒத்திகை
மரணம்: ஓர் நொடி அரங்கேற்றம்
கூவி விற்கிறார் நெய்!
கூவாமல் விற்கிறார்
பொய்!
உலக தாய்மொழி நாள்

ஒவ்வொரு ஆண்டும் 21,பிப்ரவரி தாய்மொழி நாள் ஆகும்.கிழக்கு

பாக்கிசுத்தான் நாட்டில் வங்க மொழி பேசுபவரின் தாய்மொழி உரிமை

மறுக்கப்பட்டதின் காரணமாக, வங்க மொழி உரிமை, சமத்துவ உரிமை

 முன்னெடுக்கப்பட்டு, ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு சென்று,  உலக

தாய்மொழி நாள் அறிவிப்புக்கு காரணமாக அமைந்தது.


வங்க மொழி பேசுபவர், வங்காளிகள் தங்கள் பண்பாட்டு கூறுகளில் ஒன்றான

மொழி நலம்பேணுவதில்,காப்பதில் உரிமை உறுதிப்பாட்டில் இந்தியத்

 திருநாட்டின் பிறமொழி-பண்பாட்டு மக்களுக்கு வெளிச்சம் பாய்ச்சுபவர்களாக

விளங்குகின்றனர்.


இந்தியத் துணைக்  கண்டத்திலும், உலகப் பண்பாட்டு வரலாற்றிலும்,

செம்மொழி, தொன்மை மிக்க தமிழ்மொழி, தமிழினம் படும்பாடு, பறிபோய்க்

கொண்டிருக்கும் உரிமைகள் ஏராளம். சிதைந்து, சிதலமடைந்து

கொண்டிருக்கும் வாழ்வுரிமைகளில் , சிந்திக்க ஒரு மொழி,செயற்பட

ஒருமொழி,பிழைக்க ஒரு மொழி, தழைக்க ஒருமொழி என

அடையாளம் நாள்தோறும் தொலைந்து, அடிப்படை இழந்து, ஆர்ப்பரிக்கும்

அரங்க பதுமையாக தமிழர்கள்!


அறிவியல் ஏது? தொழில் நுட்பம் ஏது? என வினாக்கள் எழுப்பிடும் வினோத

கூட்டம்.காரணம் யாதென கவனமுடன் பரிசீலிக்கும் கண்ணியம் இழந்திடும்

 தமிழ் மக்கள்.


நிலம் உம் வசம் இல்லை! வளம் உம் வசம் இல்லை! பயம் உம் வசம் உண்டு!

பாசாங்கு உம் வசம் உண்டு! பள்ளிகளிலும்கூட பளிச்சென்ற ஆங்கிலம்,

 பிற மொழி பயின்றிட பரபரப்பு உண்டு! பேசத் தெரிந்தால் மட்டும்

போதும்.தமிழ் சோறு போடுமா? என்று விடைக்கும் மனப்பான்மை

பரவலாக.ஆட்சிக் கட்டிலில் அமர்வோரும் இதற்கு விதி

விலக்கல்ல.


வியாக்யானம் விசாலமாக,அளந்திடும் திறமை,மொழிப் புலமை

தனி மனிதனே தமிழ் மொழியின் உருவகமாக, பிம்பமாக போற்றிடும் சுவறி,

போக்கிலி மனம், பேதை குணம், பெருகி விளங்கிடும் கட்சி அரசியல்!

கும்மாளம், சிம்மாசனம்,சினேகம், சீர்திருத்தம் யாவும் சில்லரைக்காக!


இன்னும் எத்தனை பத்தாண்டுகள் சென்றாலும் மொழி நாள் நமது வழி நாளாக,

 விடியல் நாளாக சகல நிலைகளிலும், தமிழ் அரியணை ஏறும் நடைமுறை

தினமே மெய்யான தாய்மொழி நாளாகும் தமிழனுக்கு!


 அதுவரை பல தளங்களிலும் தமிழ் மக்கள் உரிமை, சனநாயக உரிமை

எடுத்துச் செல்லப்பட்டு, உரிமை மீட்பு இயக்கம் நமது வாழ்வின் செயல்முறை

இலட்சியம் ஆக வேன்டும்1

Friday, February 13, 2015

அரசியல்: உம் சேவை தொடர்ந்து நில்!

அதிகாரம்: எம் தேவை புரிந்து கொள்!

:
உயிர் தந்தாய்!
உடல் தந்தாய்!
உணர்வளித்தாய்!
உணவளித்தாய்!

உள்ளொளி வெளிச்சம்
பாய்ச்சி,
தன்னொளி குன்றினாய்!

தளர்வுற்ற  போதிலும்
தாளாண்மை கூட்டினாய்!

வேளாண்மை குறைந்திடும்
வேளையில்,

சூழல் மேலாண்மை
மெருகூட்டி,

மேன்மை காட்டினாய்!

(இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா நினைவாக)
விடுவித்த பிறகும்
சிறைக்குள்,

எம் பார்வையில்!

விடிந்தும் விடியாத
பொழுது,

உம் விடுதலை!

விரைந்து
தொழில் ஏற்கிறாய்!

கரைந்து
கடமை சேர்க்கிறாய்!

Thursday, February 12, 2015

இராணிப்பேட்டை சிப்காட் தொழிலாளர்கள் துயரம்
தொடர் கதையாகும் மரணம்!!
**********************************

கனவுகளின் பிடியில் கைதியாக
கதவுகள் ஏதுமின்றி,
நாளும் தேய்ந்து, ஓய்ந்து
உறங்கிய நீ,
உழைப்பத்தான் விற்று வந்தாய்
உயிரை அல்ல!

விடியல் உம்மை சகதியாக்கும்
கழிவுத் தொட்டி
பலி(ழி) வாங்கும்
கழிவோடு கழிவாக
கழித்துக் கட்டும்
கதி நீ அறியாய்!

பாதுகாப்பு முதலீட்டுக்குத்தான்!

பரிதாபம்,இரங்கற்பா,நிவாரணம்
இழப்பீடு!!

சடங்குகளின் பிடியில்
சாமர்த்திய நர்த்தனம்,

அரசு எந்திரம்
எடுத்தாளும் தந்திரம்,
எகத்தாள மந்திரம்........

Wednesday, February 11, 2015

முறிந்த நட்பு
முளைத்த செடி

கிளைத்தது

நாள் தோறும்
பராமரிப்பில்

தண்ணீர் வார்க்கும்
தவிக்கும் நினைப்புகள்

காலங்களில் கரையும்
கவின்  கோலங்கள்

ஆவல் கூட்டும்
நாவல் மரங்கள்
ஆவுடையார் மரம்
அன்னாந்து பார்க்க
வைக்கும்,

அப்படியும் இப்படியும்
செல்லும் காலம்,
ஓரமாக இருந்தாலும்
ஈர்க்கும் மண(ன)ம்.

சிந்தும் பூக்கள்
சேகரிக்கும்
மக்கள்,

தேனீக்கள்
கெஞ்சும்

சிவ தலங்களின்
சீரிய விருட்சம்
காய்ந்தது ஏனோ
என பதறிய
உள்ளம்

கதறிய எம்மிடம்
சூழல் வினைஞர்
பகிர்ந்த துயரம்

"சாராயக் கடை உரிமையாளன்
மனையில் இருந்த
சங்கடம்
சடுதியில் அமிலம்
வேரில்
விட்டழித்த
வீணன்
கட்டிடம் காப்பாற்ற
சாய்த்தனன்"

Tuesday, February 3, 2015

ஆன்மீக வழியும், ஒழுக்க ஒழுகலாறு உள்ளிட்ட, நெறிமுறை அடிப்படையிலானதே ஆகும்.எம் மார்க்கமும் மனித வாழ்வை செப்பனிட,  பண்படுத்த அதற்குரிய கால,சமூக சூழலில் கால் பதித்து, ஊன்றி நின்றது.

அதற்காக பல்வேறு இடர்களை சந்தித்து, ஓங்கியது, ஓய்ந்தது, ஒருங்கிணைந்தது என அறியப்படுகிறது.சில இடப் பெயர்ச்சிக்கு ஆளாகி பிற தேச சமூகங்களில் செறிவான வரவேற்பை பெற்றது.

ஓரு புறம் ஆன்மீகம் பேசுவதும், மறுபுறம் ஒழுக்க சிதைவான பாதையில் பயணிப்பதும், பயன் அடைவதும்.இது வேறு, அது வேறு என சுய நிறைவு, தற்காப்பு பாணியில் விளக்கம் அளிப்பது, நியாயம் கற்பிப்பது எவ்வகையிலும் முறையன்று!
ஒரு நிலையில் பார்த்தால் தம் மனம் அடகு வைக்கப்படுதலுக்கு இணையாகும்.

பிறந்தது முதல் அணிவிக்கப்பட்ட முகமூடியை முற்றிலும் வசப்படுத்தி
வாழ்க்கையை ஓட்டுவது, அறிந்தே இவ்வாறு முனைந்து செல்வது ஒழுங்கு
ஆகாது.
தெரிந்த மொழி
தெரியாத பாதை!

அறிந்த மனிதன்
அறியாத மனம்!
விரிவாக்கம்

காவல் பூமி!
காலியான சாமி!
முகம்!

ஒப்பனை மனிதா!
பொழுதும்
வாய் பேசி,
வக்கனையாக,
வேடம் தரி!
மூடி
அணி!
முக்காலும்,
முழுசுமாக

Wednesday, January 28, 2015

        பாதசாரி!

பாதை உமக்கில்லை
வழியும் உமக்கில்லை
ஒதுங்கவும் ஓரமில்லை
கடக்கவும் தடம் இல்லை

எதுவும் உமக்கில்லை
உரிமை இழந்து

 நடக்கிறாய்
ஓடுகிறாய்
ஒதுங்குகிறாய்
கடக்கிறாய்
மிதக்கிறாய்


பல்வேறு வாகனங்களின்
வலத்தில்

வைராக்கியத்துடன்
கை கோர்த்து
அணி அணியாய்
அடுத்த பக்கம்............


 குறும்பு!

இழுத்து மூடி உறங்கினாலும்
கழுத்து மூடி
முகம் உள்ளிழுத்து 
முக்காடிட்டாலும்,
ரீங்காரம்
மின் விசிறி மிகை சுழற்சியும் தாண்டி,
ஓயாமல் வட்டமடிக்கும்
திருகிறக்கை போல்,
உறக்கமின்றி மிகை பணி
சேர்த்து,
முணகலுடன் எம்மை
புரட்டிப் போடும்,
இடமும் வலமுமாக......
உன்னைச் சொன்னேன்,

உண்மையைச் சொன்னாய்,

நானும்!   நீயே!

Monday, January 26, 2015

கலைந்த கனவு

சுரந்த சிந்தனை,

கரைந்த செல்வம்

கலைந்த மேகம்,

பரந்த உலகம்

விளைந்த இன்பம்,

கிளர்ந்த மருள்

உணர்ந்த பொருள்,

தொலைந்த நட்பு

விளைந்த சிறப்பு.
அப்பாவுக்கு உதவி அம்மா,
அம்மாவுக்கு உதவி அப்பா,

இருவருக்கும்....

அம்மம்மா !
அப்பப்பா !
பானைப் பிடித்தவள்
பாக்கியசாலி

பானை உடைத்தவள்
தைரியசாலி

Sunday, January 25, 2015

கேஜரிவால்

அளித்த வாய்ப்பை
நழுவவிட்டாய்!

அடுத்த வாய்ப்பை
தேடி நின்றாய்!

(புது தில்லி தேர்தல் 2015)
தெரிவதில்லை!

தொப்பை விழுவதும்
குப்பை விழுவதும்
காசுமீர துயரம் !

காசு கொடுத்து வாங்கிய துயரம்,
இயற்கைக்கு இடைஞ்சல் ஏற்றி,
ஆற்றின் போக்கை மாற்றி,
சாலை அமைத்து
வேலை முடித்தது,
வெளிப்படுகிறது
வெள்ளமாக...

மிதக்கிறது வாழ்க்கை,
மிதிபடுகிறது உடல்கள்
ஓடும் வெள்ளத்துடன்,
பிரிந்த உயிர்கள்
முறிந்த மரங்கள்,

கவிழ்ந்த இல்லங்கள்
கலைந்த மேகங்கள்,
வாழ்க்கை சேமிப்பும்
கை நழுவி போக,

வெந்த புண்ணும்
நொந்து போக,
நடை இழந்த பிணமாக,

நா வறண்டு
ஒளி அடங்கி,
உடல் சுருங்கி

நிர்வாணமே
நிவாரணமாக,

ஆதாரம் யாவும் சேதாரமாகி,
சோதரர் யாவரும்
சோகமயமாகி,

சொல்லிடாத்துயர்
சொந்தமாகி,
நிர்க்கதியாய்
நீளும்
அவர் உலகம்
வெளிச்சத்தை தேடி

(காசுமீர இழப்புகள் செய்தி கேட்டவுடன் எழுத்தில் வடித்தது, இன்று இடுகை செய்தது)
எங்கும் மழை சுற்றி சுற்றி,
நிலத்திலும் திணையிலும்,
குடைகளை நனைத்து,
நீலத்திரை நீள் பயண,
கலங்களை நிறைத்து.

(ஆர்.எல்.சிடீவன்சன் மழை குறித்த கவிதையின் மொழியாக்கம்)

Sunday, May 25, 2014

வீட்டிற்குள் வீடு!
விடியாத பொழுது!

சூரியன் குஞ்சும்
கெஞ்சிடும்
கூட்டின் கூடு!

கோணல் மேடு!
கோமாளி பாடு!

Saturday, May 25, 2013


என்ன இது? எதற்கு இந்த பீடிகை என்று ஒரு சிலர் கேட்கலாம்.

நகரமயமாக்கல்,  சாலைவிரிவாக்கம்,  வளர்ச்சி,  வாகனங்கள் பெருக்கம்
யாவும் நம் முன்னேற்றத்தின் குறியீடாக கருதப்படும் நிலையில்,  வாகன வசதியற்றவர் அல்லது நடைமறந்து போகாமல் உடல் நலம் கருதி, அன்றாட வாழ்க்கை நிரலில் நடைபோட வேண்டுமெனில், அது அவ்வளவு எளிதான செயல் அன்று.


இரு சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  கனரக வாகனங்கள் என எண்ணிறந்த வகை பயணப்பட, அதன் ஓட்டிகள் அவற்றை செலுத்திட தடையேதும் இல்லாத பாதை வசதிகள், பாத சாரிகளுக்கு உண்டா?

பாதசாரிகள், வாகனங்கள் செல்லும் பாதைகள் ஊடே அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து சமிக்ஞை ஏற்பாடு உள்ள இடங்களில் "வரிக்குதிரை கடத்தம்", போன்ற பகுதிகளில் கூட, கடுமையான நெரிசல், பய உணர்வுடன், வித்தை கூட்டம்போல் கடக்க வேண்டியுள்ளது.


நடைபாதையினருக்கு உடற்பயிற்சி சார்ந்த இடங்கள்,  கடற்கரை,  பூங்கா போன்றவகைள் மட்டுமே புகலிடம் அளிக்கின்றன. வளர்ச்சி, ,நடைபாதையினரை மறந்து,  பாதசாரிகளை புறக்கணித்து வருகிறது  எனில் அது மிகையன்று!

Monday, May 6, 2013


கோலோச்சிட விழையும்
குடிசையில்

தம் பிடி இறுக்கி
விசையுடன் செலுத்திடும்

சுர நிரல்

மல்லாட்டில் வீழ்ந்திடும்
உடல்கள்

மலேரியாவின் நாடிகள்
உயர்ந்திடும்

'கொசுவின் நிரல்'

 குறித்த

 இக் கவிதை ஆங்கிலத்தில்.

 படைப்பாளி நைசீரியா நாட்டின் கவிஞர். உச்சேசுக்குவா (Uchechukwu)

(மொழியாக்கம்)

உடல் மீதான வன்மம்
எங்கேயும் எப்போதும்

நொடிகளில் நேரிடும்
மனங்களின் பிறழ்ச்சி
நோயின் சாட்சி

மனதின் வன்மம் 
வதை தேடி
வரம்பு மீறி
விளைக்கும் செயல் கோடி

Wednesday, May 1, 2013


குறுவையும் போச்சு
சம்பாவும் போச்சு

கடைமடையும் காய்ந்து
போச்சு

கவலையும் துயரமும்
கை மீறி போச்சு

உழவும் தொழிலும்
உட்கார்ந்து போச்சு

வட்டியும் முதலும்
கூடிப் போச்சு

காப்பீடும் இழப்பீடும்
கானல் நீராச்சு

Sunday, April 21, 2013




 ஒத்திகை ஓகம்



ஒத்த கைகளின் ஒத்திகை

ஓகம் தரும் குத்தகை