Monday, May 31, 2010
கருவாட்டு மனிதன்
வேகும் மனிதர்
சாயாத பொழுதில்
சாலையில் விளிம்பில்
சாரியாக
தம் பசி போக்க
நுங்கு விற்கிறார்
வெள்ளரியும் சேர்த்து
தம் பிழைப்பு கூடையுடன்
விரையும் மனிதரை
கூவி அழைத்து
வேகாத பொழுதில்
எரியும் தணலில்
தம் உடலும் சேர்த்து
எரிய
கரிய மேனியும்
மேலும் கருத்திட
வியர்வை வழிந்தோட
குடை பிடித்து விற்கலாமே!
நிழலில் சென்று விற்கலாமே!
"பச்சு காரனே ஏத்த மாட்டறான்,
பொழப்புக்கு என்ன செய்ய"
Tuesday, May 25, 2010
சவாரி
கடந்து
நான் பார்த்தேன்
தொடர்ந்து
நான் பார்த்ததை
அவன் பார்க்கவில்லை
அவள் பார்த்ததை
நான் பார்த்தேன்
அவனும் நானும்
பார்த்ததை
அவள் பார்த்தாள்
பரபரப்பு போக்கில்
சுற்றிலும் சுழலும்
விழிகள்
வாகனத்தில்
வலம்
உணர்ச்சி விசையில்
உந்துதல் முயற்சியில்
ஊர்வலம்
ஒருவரை ஒருவர்
முந்தி
உடன் இருப்பவர்
குந்தி
எறும்பும் ஏலனம் செய்யும்
சாரி
குறும்பு சவாரி
Monday, May 24, 2010
வழியில்லையா?
எங்களுக்கு
பேச்சிலே அதன் மூச்சிலே
வாழ்கிறோம்
பேதமை பெற்றியாக
போதனை ஏதுமின்றி
கல்விச் சாலைகள்
எம் புல காட்சியாக
காதில் விழுகிற சேதி
புரியவில்லை
எமக்கு சீர் திருத்தமாம்
ஊர் திருத்தும் மாந்தர்
உளறல்
புதுமையாம்
கணினி உலகுக்கு
கை கொடுக்குமாம்
படித்தவரே பதைக்கிறார்
"உள்ளதும் போகும்
நொள்ள கண்ணா"
என்கிறார்
உருப்படியாய்
எம் மக்கள் இருக்கும்
மொழி
கற்றிட
அதன் வழி நின்றிட
வழியில்லையா?
Sunday, May 16, 2010
வெறி!
எங்கும் எதிலும்!
புலப்படும்!
இறந்தவர்,இழந்தவர்
புலம்பலில்!
மருந்தில் தொடங்கி
விருந்தில் முடியும்
நீண்ட பயணம்!
சில காலம்
பெட்டிச் செய்தியாக!
பரபரக்கும்!
பட்டியல் மருந்துகள்
பட்டை பட்டையாக
சலை ஓரங்களில்!
குவியல் குவியலாக!
குப்பையுடன்,குப்பையாக
தொப்பைகளை நிரப்பிய
வெ(ற்)றியில்!
நவீன குடு,குடுப்பக்காரன்!
வேண்டும்"
குடு, குடு, குடு,.................
உமது வாக்கு பலிக்க வேண்டும்
குடு.குடு.குடு.....................
வரும் தேர்தலிலும் செயிக்க வேண்டும்
குடு,குடு,குடு...........................
மாற்றங்கள்!
என்னுள் விளைந்த
தடுமாற்றங்கள்!
கைப் பொருள் கரைந்த
காரணங்கள்!
கவனமற்ற காரியங்கள்!
Thursday, May 6, 2010
கோபால்ட் 60
காயலா வரலாம்
கதி மோட்சம் பெறலாம்
விதி ஏற்கும்
வீதி மாந்தர்
'குசில் கடை'
'மாயாபுரி மகிமை'
Saturday, April 24, 2010
சிறார்:?
தினந்தோறும்
செவிகளைத் தந்து
சேதிகள் பெறுவார்!
மன்னிப்பு அளித்திடும் மனு
பரிந்துரை செய்வார்!
தம்மிடம் புகலிடம்
தேடிய
ஆண்டவனின் குழந்தைகள்
உள்ளத்தைக் காட்டியபோது
அவர் உடலையும்
பார்த்தவர்!
கால் நூற்றாண்டு கடமையுடன்
நெறி நின்று
வெறி வென்றவர்!
'வாடிகன்' புகார் பெட்டியும்
திறக்கவில்லை!
பெண் துறவியரை
கண்காணிக்கும் எந்திரம்!
கடல் கடந்து
செர்மனிக்குள் செல்லவில்லை!
குழந்தைகள் மீதான வன்மத்தில்!
பெண்கள்:
விலா எலும்பின் பிறப்பு
சிறார்:?
Monday, April 19, 2010
'இவ் வெள்ளி'யாவது!
விடிவெள்ளி யாகுமா!
பாதிரியின் பாவம்
செர்மனியில்,
அமெரிக்காவில்,
சிறார் மீது பால் வன்மம்
கால் நூற்றாண்டு,
கரை தீருமா!
'வாடிகனும்',
வாடிக்கையாக
வேடிக்கை காட்டும்!
கன்னித் துறவியர்
வாழ்க்கை ஓட்டை
காண,
கண்காணிப்பு,
மட்டும்
தீவிரம்
Monday, March 29, 2010
பி.டி. கத்தரி!
எங்கேயோ செய்கிறார் பாரமாக
பாமரர் அறிந்திலார்
பாழும் கத்தரியின்
வாழ்நாள் குறை!
வேளாண்மை மக்களுக்கு
விவரம் சேர்க்க
விரிவான, செறிவான இயக்கம்
தேவை!
பேருக்கு செய்வது!
பெருமைக்கு சேர்வது!
செய்திக்கு முனைவது!
செறிவானதன்றோ!
வருமானம் ஆகும்
உன் பாடு!
செரிமானம் ஆகாத
செயல்பாடு!
சலிப்பு
ஓயாது இரைந்திடும் ஒலிப்பான்கள்
உண்டாக்கும் சலிப்புகள்
சப்தத்தின் உள் கரைந்திடும்
குழந்தைகள் விளையாட்டு ஒலிகள்
இரைச்சல்,கரைச்சல்,கும்மாளம்.குதூகலம்
யாவும்,
சலிப்புகளுக்கு
காகங்களும் விலக்கல்ல-
எஞ்சிய மரங்களில்
துஞ்சிய உயிர்கள்-
வாடகைக் காரனின் குடியிருப்பு போல்
எப்போது காலியாகுமோ
பதட்டத்தில்
காலங்கள் கழியும்
நிம்மதியின்றி
Friday, March 19, 2010
முறிக்கும்!
இங்கே!
பரிகாசங்கள்
உணர்த்திய முடிவும்
உணர்ச்சியின் வடிவாய்
இங்கே!
வில்லின் மேன்மை
விழாக் கோலம்
ஆண்டும்!
சொல்லின் கேண்மை
சோதனையாய்
சோம்பல் முறிக்கும்!
Tuesday, February 2, 2010
இஞ்ஞான்றும்!!
யாவும் வளர்ச்சி!
வங்கியின் முதல்
வட்டியுடன்!
தங்கி வளர்ந்திடும்!
தமிழரைப் பிரித்திடும்!
தன்னுணர்வைக் கெடுத்திடும்!
தற்சார்பை ஒழித்திடும்!
மாசிலா உலகம் மலர்க எஞ்ஞான்றும்!!
காசிலா உலகம் கழலும் இஞ்ஞான்றும்!!
ரத்த வங்கியார்?
புது ரத்தம் பாய்ச்ச!
திராவிட சோகை போக்க!
தேசிய மதன் மித்ரா!
முகாமிட்டு
சலாமிட்டு!
சர்க்கரை கலந்து
அக்கரையாக!
சிட்டுக் குருவி
லேகியமும்!
சீசாக்கலில்
தயார்!
சீர் திருத்தம் நோக்கம்!
கோலியாக தருவார்
கேலியாக எண்ணாதே!
தமிழன் பலகீனம் போக்க!
ஆயூர் வேதமும்
ஆயுள் நீடிக்க!
உயர்ந்த நிலைக்கு
உம்மை ஏற்றி
இருக்க!
வருகிறார்!
இளமை ஊஞ்சலில்!!
Sunday, January 31, 2010
அடுக்களைப் பின்
கா கா கா
கா கா கா......"
கேவி அழைத்தார்
பண்ணிய பலகாரத்துடன்
புண்ணியம் தேடி
எதிர் வீட்டுக்காரர்
புதிராக
வீதியில் இறங்கி
எந்தன் வீட்டில்
காகா
அழையாத விருந்தாளி
அன்றாடம் குடும்பத்துடன்
குட்டி அணில்களுடன்
எதிர் எதிராக
வழி விட்டு கொரிக்கும்
பின் வீட்டு புறாக்களும்
தம் கூட்டைவிட்டு
எம் வீட்டில்
சுற்றி வந்து விரட்டும்
அணிலும் காகமும்
அலுத்துப் போய்
ஆகாரம் பகிர்வு
அன்றாட நிகழ்வு
அடுக்களைப் பின்
எயித்தியில் நில நடுக்கம்.
குடிக்க நீர், உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு, யாவும் இன்று அந்நியமாகியுள்ள அவலம். சில ஆண்டுகளுக்கு முன் சூறைக் காற்றில், சுழன்ற அவர்கள் வாழ்க்கை, இன்று மீண்டும், இயற்கையின் சீற்றத்தில் சீரழிந்துள்ளது.
அண்டை நாடுகளின் உதவிக் கரங்கள், விரைவாக சேர முடியாத அவலம்.இயற்கையின் அடிக்கு இரையான உயிர்கள், சிதைந்து கட்டிடங்களுக்கிடையில், அப்புறப் படுத்திட, கெளவரமாக அடக்கம் செய்திட வாய்ப்பில்லை.
அமெரிக்காவில் வசிக்கும் எயித்தியின் பெண்மணி கூறுகிறார்,"என் உறவினர் உடலாவது கிடைத்தது, ஆனால் உடல்கள் கிடைத்திடாத என் இன மக்கள் துயரம் பெரியது".
போர் என்றால் அதி விரைவாக, மின்னலை விஞ்சும் தாக்குதல் மூர்க்கம்,உடனடி அழிவுக்கு ஏங்கும் போர் வியூகம், தொழில்நுட்பம், அணி சேர்க்கை, இராணுவ நடவடிக்கை, இயற்கை பேரழின் போது தாமதம் ஆவது ஏன்? எப்படி?
அழிவாற்றலில் முனைப்போடு,பிணைப்போடு செயல்படும் அறிவாற்றல், உயிர்காக்கும் செயல்களில் சுறு, சுறுப்பு எங்கே?
உலக சமுதாயம், நாகரிக சமூகம் பதில் கூறுமா?
பாதித்த மக்கள் மறு வாழ்வு விரைந்து நடக்குமா?
Friday, January 15, 2010
அகத்தில்!
ஆம்!
உம் செயல் பாட்டு வளையத்தில்
நான் இல்லை!
அடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
எம் செயல்பாட்டுக்குள்
வளையம் இல்லை!
ஒடுங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உன் ஒடுக்கு முறைக்கு பயந்து
உம் அமைப்பின் வெளியே
சுயமாக!
குன்றி விட்டாய் என்றாய்!
ஆம்!
நயத்தக்க நாகரிகம் வேண்டி
அகத்தில்!
வணிகத் திருவிழா- 2010
புதுவையில் கோலாகலம்.உருவா70 இலட்சம் அரசாங்கம் ஒதுக்கீடு. பரிசுப் பொருள்கள் ஏராளம், புதுவை மக்கள் பரவசம்.புதுவை, சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ள, செயராம் திருமண நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுகர்வுப் பொருள்கள் கண்காட்சி.மக்கள் கூட்டம் அலைமோதும் கேளிக்கை. இந்த ஆண்டும் சாதனை சரித்திரம்! மக்களை மனச் சலவை செய்திடும் தந்திரம்! மாநில அதிகாரத்தின் எந்திரம்!
சிறிய மாநிலம்! சிறப்பான மக்கள்! எதையும் ஏற்றுக் கொள்பவர்கள்! தங்கள் வாழ்க்கை பிரச்னைகளைக்கூட மறந்து,இழுத்த இழுப்புக்கு இழப்புகளை ஏற்கும் இளியர்! புதிது, புதிதாக தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி பெரு வாழ்வு வாழ வேண்டும்! வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்! சாதா தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து, எல்சிடிக்கு மாற வேண்டும்!கடன் பட்டாலும் கவலையில்லை! பரிசுப்பொருள் கிடைக்க வேண்டும்!
நாளைப்பொழுதுக்கு உலையில் வைக்க அரிசி இல்லை! அதன் விலையும் அருகில் இல்லை! கிலோ அரிசிஉருவா 34! அது பரவாயில்லை! கிலோ அரிசி உருவா 1, பெயர் பதிந்து கொள்ளலாம்!வீட்டில் ஒருவருக்கு வேலை இல்லை! அரசாங்க வேலையும் காலி இல்லை!3000 பதவிகளுக்கு மேல் காலி செய்திட்டோம்! சிக்கன நடவடிக்கை! சீற வேண்டாம்!
தமக்கு என்ன நேர்கிறது. தம் வாழ்க்கையின் நிலைப் பாட்டை, உறுதி செய்யும் கடமை உணர்ச்சி வேண்டியுள்ள அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை திசை திருப்புகிறது.
காலத்தின் சரியான போக்கை அறிந்து கொள்ள வேண்டிய மக்கள், தம் இல்லங்களில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் முன்பு, நாள்தோறும் சீரழிந்த கலாச்சார சரக்குகளை, சில்லரையாக சீராக கொள்முதல் செய்து செரித்திடும் போக்கு,
தம் மீது தொடர்ந்து நப்பாசையாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தை எவ்வித விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளும் போக்கு ஒரு தரமான , அறிவார்ந்த மக்கள் சனநாயகத்தை வளர்த்திடுமா?
Sunday, January 10, 2010
இல்லை!
இறந்த போதும்
துடித்த
உணர்வு
ஏங்கிய
உயிர்
நாடிய கண்கள்
நலம் குறைந்த போதும்
படுக்கையாய்
கிடந்த வேளையும்
உள்ளம்
உடுக்கையாய்
ஒலி எழுப்பி
உறவைத் தேடிய
சொந்தம்
உந்தன் தொடர்ச்சி
ஒப்புக்கும் இல்லை!
உப்புக்கும் இல்லை!
இதற்குத்தான் எழுதினாரோ!
உனைக் காண
ஆவல் கண்டேன்!
நனவு வாழ்க்கையில்
உன் ஞாபகம்
இல்லை! ஆதலால்!
கண்டேன் கனவில்
ஆபத்தில் உள்ளதாக!
கனவுகள் பெரும்பாலும்
அச்சம் அளிப்பதாக
விரைந்தேன்! விரைவாக!
கைபேசியில்!
கனவுகள் காணுங்கள்
என்றவர் இதற்குத்தான்
இன்னுரை எழுதினாரோ!
Saturday, January 2, 2010
ஏட்டில்!
மாநிலங்களைக் கடந்து
உழைப்பை விற்கிறார்
ஒப்பந்தக் கூலியாக
ஓங்கி உயரும் வளாகம்
வணிகம்
ஒடுங்கிப் போகும் உடலும்
உழைப்பும்
குடும்பத்தைப் பிரிந்து
குழந்தைகளை மறந்து
வறுமை விரட்டிட
வயிற்றுப் பிழைப்பு நடத்திட
கட்டிட வேலை
காலை மாலை இல்லை
இரவில் பொங்கி
இடிபாடுகளில்
தங்கி
ஈட்டும் நோட்டும்
கைக்கு கிடைக்க வில்லை
வேலை இல்லை
தங்கிட இடமும் இல்லை
பாக்கி பணமும்
இலட்சம் வாரக் கணக்கில்
இல்லை
காவல்துறைக்கு புகாரும்
கடிதேகவில்லை
கழட்டி விட்டார்
விரட்டி விட்டார்
தொழிலாளர் துறை ஆணையரும்
இது எம் வரம்பில் இல்லை
மாநில எல்லையில் மனு செய்யுங்கள்
என்றார்
மனுநீதி நாட்டில்!
மனித நீதி ஏட்டில்!
Wednesday, October 14, 2009
சுர பேதம்!
உள் நாட்டுப் பிரச்னை
சனநாயக வாதம்,
உலகளாவிய பிரச்னை,
பயங்கர வாதம்
ஆயுதம் தரிப்பது பயங்கரம்!
காகிதம் தரிப்பது,
தடை ஏன்?
காகிதம் தரிப்பது
தடை எனின்
கருத்துக்கூறுவது
தடை ஏன்?
கருத்துக் கூறுவது
தடை எனின்
மறுத்துக் கூறுவது
தடை ஏன்?
அவர் சோதன
உலக அமைதி!
இவர் சோதனை
உலக அச்சம்!
அவர் வாதம் சுப்ரபாதம்!
இவர் வாதம்
சுர பேதம்!
விடியல் தேடி
சேர்ந்த குருவி
சோர்ந்து போச்சு
கத்தி பார்த்து, கொத்தி பார்த்து
தன் உருவம் தெரியாம
மறைத்த துணி விலக்கி
சிர்ப், சிர்ப், சிர்ப், சிர்ப்.......
கண்ணாடி முகம் பார்க்க
காலை
முன்னாடி உட்கார்ந்து
தூக்கி வைத்த முகத்துடன்
தூங்கிக் கிடக்குது,
ஏங்கிக் கிடக்குது
வெளியத்தான்
விளையாட முடியல
உள்ளேயும் வூட்டுக்காரன்
உள்ளிருந்து பார்க்க கண்ணாடி
வெளியிருந்து வசதி எங்களுக்கு
எம்மைப் பார்த்து
கத்தி, கொத்தி,
சுத்தி திரிந்தோம்
கண்ணாடி மேல் துணி போட்டு
எம் உருவம்
காணாம ஏற்பாடு
உடைவுக்கு அஞ்சி
உடமையாளன்
கடமை செய்தான்
பலகணி சாத்தி பதமாக
பார்த்து பார்த்து சென்றான்
வேர்த்து வேர்த்து நின்றோம்
விடியல் தேடி
Friday, October 9, 2009
தோற்பான்
'நிலவில் தண்ணீர்'
பூவுலகில் கண்ணீர்
நீளும் பேராசை
நிலவைத் தாண்டும்
செவ்வாயும் செலவாக
'நாசா'வலையில்
'மூசா'வும் தோற்பான்
Wednesday, September 30, 2009
மாட்டாங்க!!
குண்டி கழுவ தண்ணி இல்ல!
குடும்பத்துடன் வாழ நாதி இல்ல!
பசி அடங்கி நாளாச்சு!
பாழும் உறக்கமும் போயாச்சு!
பொறந்த தாச்சும் பொழச்சிடாதா
பொங்கி திண்ண வாய்ச்சுடாதா
ஒரு வா அரிசி உள்ள தள்ள முடியல
கலர் டி.வி. குடிசையில
காட்சி பார்க்க முடியல
கரண்டுக்கு எங்கே போவேன்
மண்ணென்னய் அடுப்பு எரிக்க
மனசிருக்கு
சோத்துக்கடை பொட்டலம்
காத்து கிடக்கு பிள்ளைக
சோளி ஏதும் போனா
காலி இல்ல வயித்துல
குப்பை பொறுக்க கோணி பை
மழைக் காலம் வரும் முன்
வேல பாக்க போகனும்
கூவமும் சரியானா
எங்க வாழ்வு எங்கு போகும்
சருவுதான் அப்பவும்
வுட்டு வக்க மாட்டாங்க
காத்திடு
சிகப்புத் துண்டு தோழா!
அலுப்பு கண்ட தோழா!
சலிப்பு கொண்ட வாழ்க்கை
சரிதானா தோழா!
இளிப்பு கொண்ட அரசியல்
கணிப்பு மாற்று தோழா!
கடமையாற்று தோழா!
காலம் நமது தோழா!
கடினம் ஆயினும் தோழா!
கடிதே ஏகிடு தோழா!
காலம் வெல்லும்
கலகம் கருத்தினுள் கொண்டு
கலக்கம் போக்கிடு தோழா!
மாற்றம் என்பது தோழா!
மாறாத விதி என்பது
மீறாத வழி நில் தோழா!
சாயாத கோல்
சருக்காத பாதை
நேரான செயல்
நினைவில் நிறுத்து தோழா!
நேசம் போற்றி தோழா!
மக்கள் தேசம் காத்திடு
தோழா!
Monday, September 28, 2009
மரபு
இசுபானிய கவிதை -அல்போன்சினா இசுடோர்னி
(மொழி பெயர்ப்பு)
என்னிடம் கூறினாய்:" என் தந்தை அழவில்லை,
என் தாத்தாவும்"
"எம் இனத்தவன் எவனும் இதுவரை அழவில்லை"
"அவர் எ..கின் உறுதி உடையவர்"
நீ கூறியது கேட்டேன் யான்
நடுங்கும் எம் வாயில் உணர்ந்தேன்
நும் கசப்பான கண்ணீர்த் திவளை
நஞ்சின் வீழ்ச்சியை
எம் உதடுகள் இது நாள் வரை சுவைத்திடாத
மிக மோசமான அமிழ்தம்
சிறிய கோப்பையினுள் இருந்து
நலிவுடன் பிறப்பெடுத்தாள்
துயரங்கள் துய்த்திட
முடிவற்ற காலங்களின் வலி
உய்த்துணர்ந்தேன்
அட,
மகிழ்வற்ற என் ஆன்மா
அதன் நிறையை தாங்க இயலவில்லை
சதுரங்களும் கோணங்களும்
அல்போன்சினா இசுடோர்னி -இசுபானிய கவிஞர்
(மொழி பெயர்ப்பு)
வீடுகள் வரி வரியாய்,
ஒரு கோட்டில் அங்கே,
சதுரங்கள், சதுரங்கள், சதுரங்கள்,
மக்களும் இப்போது சதுர ஆன்மாக்களுடன்,
கருத்துக்கள் அடுக்காய்,அறிவிக்கிறேன்,
அவர் தோள்களில் கோணங்கள் சுமையாய்,
நேற்று தற்செயலாய் கண்ணீர் சிந்தினேன்
அட, கடவுளே, அதுவும் சதுரமாய்!
Saturday, September 26, 2009
கூவம்
நாறும் ஆறு தேறுமா!
நானிலப் புகழ் கூறுமா!
கங்கை நதி ஆகுமா!
கதி மோட்சம் சேர்க்குமா!
திரும்பும் வரலாறு!
திட்டத்தில்!