Saturday, May 25, 2013


என்ன இது? எதற்கு இந்த பீடிகை என்று ஒரு சிலர் கேட்கலாம்.

நகரமயமாக்கல்,  சாலைவிரிவாக்கம்,  வளர்ச்சி,  வாகனங்கள் பெருக்கம்
யாவும் நம் முன்னேற்றத்தின் குறியீடாக கருதப்படும் நிலையில்,  வாகன வசதியற்றவர் அல்லது நடைமறந்து போகாமல் உடல் நலம் கருதி, அன்றாட வாழ்க்கை நிரலில் நடைபோட வேண்டுமெனில், அது அவ்வளவு எளிதான செயல் அன்று.


இரு சக்கர வாகனங்கள்,  நான்கு சக்கர வாகனங்கள்,  கனரக வாகனங்கள் என எண்ணிறந்த வகை பயணப்பட, அதன் ஓட்டிகள் அவற்றை செலுத்திட தடையேதும் இல்லாத பாதை வசதிகள், பாத சாரிகளுக்கு உண்டா?

பாதசாரிகள், வாகனங்கள் செல்லும் பாதைகள் ஊடே அச்சத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.போக்குவரத்து சமிக்ஞை ஏற்பாடு உள்ள இடங்களில் "வரிக்குதிரை கடத்தம்", போன்ற பகுதிகளில் கூட, கடுமையான நெரிசல், பய உணர்வுடன், வித்தை கூட்டம்போல் கடக்க வேண்டியுள்ளது.


நடைபாதையினருக்கு உடற்பயிற்சி சார்ந்த இடங்கள்,  கடற்கரை,  பூங்கா போன்றவகைள் மட்டுமே புகலிடம் அளிக்கின்றன. வளர்ச்சி, ,நடைபாதையினரை மறந்து,  பாதசாரிகளை புறக்கணித்து வருகிறது  எனில் அது மிகையன்று!

Monday, May 6, 2013


கோலோச்சிட விழையும்
குடிசையில்

தம் பிடி இறுக்கி
விசையுடன் செலுத்திடும்

சுர நிரல்

மல்லாட்டில் வீழ்ந்திடும்
உடல்கள்

மலேரியாவின் நாடிகள்
உயர்ந்திடும்

'கொசுவின் நிரல்'

 குறித்த

 இக் கவிதை ஆங்கிலத்தில்.

 படைப்பாளி நைசீரியா நாட்டின் கவிஞர். உச்சேசுக்குவா (Uchechukwu)

(மொழியாக்கம்)

உடல் மீதான வன்மம்
எங்கேயும் எப்போதும்

நொடிகளில் நேரிடும்
மனங்களின் பிறழ்ச்சி
நோயின் சாட்சி

மனதின் வன்மம் 
வதை தேடி
வரம்பு மீறி
விளைக்கும் செயல் கோடி

Wednesday, May 1, 2013


குறுவையும் போச்சு
சம்பாவும் போச்சு

கடைமடையும் காய்ந்து
போச்சு

கவலையும் துயரமும்
கை மீறி போச்சு

உழவும் தொழிலும்
உட்கார்ந்து போச்சு

வட்டியும் முதலும்
கூடிப் போச்சு

காப்பீடும் இழப்பீடும்
கானல் நீராச்சு

Sunday, April 21, 2013




 ஒத்திகை ஓகம்



ஒத்த கைகளின் ஒத்திகை

ஓகம் தரும் குத்தகை

Saturday, April 20, 2013



வெள்ளை அடி!


கறுப்பென்ன, வெள்ளையென்ன
ஏன் இந்த வேறுபாடு?

ஏக்கம் தீரும் வரை
கூறுபோடு!

கொள்ளை அடி!
கொழி!

கொழித்த பின்
வெள்ளை அடி!

Saturday, January 5, 2013

"சகாயம்" வெளுத்திட்ட சாயம்




 "சகாயம்"
வெளுத்திட்ட
சாயம்



ரெட்டை மலை
ஒத்த மலையாச்சு
ஒத்த மலை
சுத்தமாச்சு

வித்த மலை
மத்த மலை
மொத்த மலை
வத்தலாச்சு

கனி வளம்
தனி வளமாச்சு
துளியும் நிலமும்
தூரப் போச்சு

வலியும் கிலியும்
வாழ்க்கையாச்சு
வயலும் மேடும்
மறைந்து போச்சு

கண்மாயும் களமும்
காணாமல் போச்சு

கஞ்சிக்கு  கெஞ்சியவர்
விஞ்சிவிட்டார்
எஞ்சியவையாவும்
ஏப்பமிட்டார்

எடுபிடி அரசியல்
 கூட்டுச் சேர்த்து
எல்லையைக் கடந்து
 குடைந்து சென்றார்

ஏனென்னும் அதிகாரம்
வளைந்து கை குலுக்க
நிறைந்த பெட்டிகள்
மறைந்த உடல்கள்

மரத்த உணர்வுகள்
மனிதக் கழிவுகள்

சுரங்கம் சேர்த்தார்

பளிங்கு ஆடி
பல்லிளித்தார்

பல்லாயிரம் கோடி
நிலம் பிதுக்கி
வளம் புதுக்கினார்

வக்கற்ற அதிகார
வர்க்கம்
கை கட்டி
சேவை செய்திட



















































Sunday, September 2, 2012

இப்போ புரியுது
எமக்கு
ஏனென்று தெரியும்
உமக்கு

அப்போ புரியலை
கணக்கு
இப்போ புரியுது
பிணக்கு
என்னை உயர்த்தும்
உம்(ள்) வார்த்தை
உன்னை உயர்த்தும்
உண்மை(உள் மை) அறிந்தால்

Thursday, January 19, 2012

'தானே' ஆயிரம்

வீடற்றோர் ஆயிரம்
வீடுற்றவர் ஆயிரம்
வீதியில் நின்றவர் ஆயிரம்
விடுதியில் நின்றவர் ஆயிரம்

கூரை கவிழ்ந்தவர் ஆயிரம்
கூடத்தில் அமிழ்ந்தவர் ஆயிரம்
ஓடம் இழந்தவர் ஆயிரம்
ஓரம் அமர்ந்தவர் ஆயிரம்

அலுவல் இழந்தவர் ஆயிரம்
அலுவல் அமர்ந்தவர் ஆயிரம்
மரம் இழந்தவர் ஆயிரம்
மறைவில் நின்றவர் ஆயிரம்

கழனி அழிந்தவர் ஆயிரம்
கனவில் மிதந்தவர் ஆயிரம்

அனைவருக்கும் ஆயிரம்
யாருக்கும் ஆயிரம்
ஊருக்கும் உனக்கும்
எனக்கும்

வானம் தந்த ஆயிரம்
'தானே'
ஆயிரம்

Friday, January 13, 2012

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு: வாழ்வுரிமை நோக்கிய ஒரு படி புசுகர் ராசு, மக்கள் சிவில் உரிமைக் கழகம்( மொழியாக்கம்)

நமது நாட்டு மக்களில் பெரும்பகுதியினர், தமது வாழ்நாளில் உணவின்மை, உறையுளின்மை,மருத்துவ வசதியின்மை காரணங்களால்,கடின உடல் மற்றும் மனப்போராட்டத்தின் பிடியில் சிக்கி, முதுமை அடையாமலே இறக்கின்றனர்.

நாட்டில் வறுமையில் உழல்பவர், உயிர்வாழ்ந்திட, உழைப்பிற்கும், உணவிற்கும் ஓயாத தேடலில், தொடர் மன அழுத்தத்தில் வாழ்க்கைப் பயணம் சுருங்குகிறது. புதிய உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு இப்பிரிவு மக்களுக்கு,சில நிவாரணம் அளிக்கிறது. இதன் காரணமாக சில காலம் வாழ்க்கை ஒப்பீட்டளவில் இலகுவாக அமையும்.

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டம் வேலைக்காக அளித்திடும் பண உதவி, மற்றும் மான்ய விலையில் கிடைத்திடும் உணவுப் பண்டங்கள், பொருளாதார அடுக்கதிகாரத்தில் கடை நிலையில் நிற்கும் கணிசமான மக்கள் திரளுக்கு பெரிய நிவாரணமாகும்.


இரண்டாவதாக, ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் மக்கள் வாழ்க்கை தரம், அரசாங்க சமூக பாதுகாப்பு அனுகூலங்கள் வெட்டின் காரணமாக, வாழக்கூடியதாக இல்லை.

உணவுப் பாதுகாப்பு சட்ட வரைவு, நிறைய குறைபாடுகள் உடையதாயினும், ஒரு குறிப்பிடத்தக்க சட்டமாகும். உணவுக்கான உரிமை வழக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் 2003ல் தொடர்ந்தததின் காரணமாக, தற்போது நலத்திட்டங்கள் நீதி மன்றம் மற்றும் நாகரிக சமூகக் குழுக்கள் கண்காணிப்பு அளவிற்கு கிளைவிட்டு வளர்ச்சி அடைந்துள்ளது .இம்மனுவில் பிற நலத்திட்டங்களான ,நகர வீடற்றோர் உரிமை பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் ஆகியவையும் அடங்கும்.

இவ்வேளையில், இந்தியாவில் உணவுப் பாதுகாப்பு ஏழை மக்களுக்கு நீட்டிப்பு செய்வது அரிதான, ஆர்வமான நிகழ்வாகும். கிரேக்கமும்,இத்தாலியும் மிகுந்த பொருளாதார நெருக்கடியிலும், பிற ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சி குறைவால் சமாளிக்க இயலாமல் திணறுகிறது.

இப்போக்கு, பின் காலனிய உலக சமூகத்தின் ஒரு கட்ட முடிவை சுட்டுகிறது. மேற்கத்திய முதலாளித்துவ வளர்ச்சி அம்சத்தை கேள்விக்குரியதாக்கிறது, மற்றும் இது குறித்து அணுக்கமான ஆய்வினை செய்யக்கூடிய ஒரு புதிய கட்டத்திற்கு நம்மை தள்ளுகிறது.

இத்தகைய வளர்ச்சிகள் குறித்து இந்தியா நன்றாக புரிந்துகொண்டு, மேற்கத்திய மாதிரி வளர்ச்சி,அடுக்கடுக்கான பொருளாதார மந்த புதைகுழிகளில்,ஈடுபடும் முன்முயற்சியை தவிர்க்க வேண்டும்.

ஆயினும், நாட்டின் ஒட்டுமொத்த நலம், எவ்வாறு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பேசப்படும் உணவுப் பாதுகாப்புத் திட்டம் அடித்தள மக்களுக்கு போய் சேர்கிறது என்பதைப் பொறுத்து அமையும்.

ஆளுமையை தீர்மானிக்கும், நிர்வாகத் துறையில் சமகால சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளாமல், பொருளாதார சலுகைகள் வழங்குவது ஒரு பெரிய சவாலாகும். இலக்கு பிரிவினருக்கு உணவு போய்ச் சேரும் என்பது குறித்து, யாரும் பந்தயம் கட்ட தயாரில்லை. இலக்கு பிரிவினரை அடையாளம் காண்பது குறித்த செயற்பாங்கு சரியான கேள்விக்குரியதாகிறது. கடந்த கால அனுபவம் காட்டுவது, இசைவளிக்கப்பட்ட மூலவளங்களை சமூக, பொருளாதார,அரசியல் சக்தி வாய்ந்த நிர்வாக எந்திரம் வசப்படுத்தியுள்ளது விளங்கும்.


மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், தேசிய,மற்றும் சர்வதேசிய நலத்திட்டத்தில் சில மாநிலங்களில் நிறுவனமயப்பட்ட ஊழல் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன.உத்தரபிரதேச மக்கள் இது தொடர்பாக நீதிமன்றம் சென்றுள்ளனர். தற்போதைய சட்டவரைவு அனைவருக்குமான உணவு உரிமையை அளிக்காத நிலையில், இது பல நடைமுறைச் சிக்கல் மற்றும் கையாடல் அச்சங்களுக்கு வழிவகுக்கும்.

அரசாங்கத்தின் வாதம் அனைவருக்கும் உணவு அளிக்க வளங்கள் இல்லை என்பது அடிப்படையற்றது. இது அரசியல் உறுதிப்பாடின்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், கார்பரேட் நிறுவனங்களுக்கு சேவை செய்வது,சராசரி மக்களை மறப்பது ஆகும் இந்தியப் பொருளாதாரம் சராசரியாக 7.5 சதவீதம் ஆண்டொன்றுக்கு வளர்ச்சி அடைந்து வருகிறது என்றால், நிதிப் பற்றாகுறை இல்லை என்பதே பொருளாகும். பெரிய தொழிற்சாலைகளுக்கு சென்ற நிதியாண்டில் மட்டும் அரசாங்கம் வரிச் சலுகைகள் மற்றும் ஊக்க உதவிகள் உரு.4.6 இலட்சம் கோடி அளவிற்கு சலுகை வழங்கியுள்ளது, இதே சமயத்தில் மொத்த உணவுக்கான மான்யம், ஆண்டிற்கு உரு 2 இலட்சம் கோடி மட்டுமேயாகும்.


மிக முக்கியமாக, வசதி படைத்தவர்களுக்கான மான்யம் என்பது, 2009- 10 ல் 4.37 இலட்சம் கோடியிலிருந்து, 4.60 இலட்சம் கோடியாக, 2010- 11 ல் உயுர்ந்துள்ளது, இதே காலக் கட்டத்தில் ஏழை மக்களுக்கான மான்யம், 1.54 இலட்சம் கோடியிலிருந்து, 1.44 இலட்சம் கோடியாக 2011- 12 ல் குறைந்துள்ளது. இதுமட்டுமில்லாமல், 10 பெரிய கார்ப்பரெட் மற்றும் தனி நபர் தவணை தவறியவர்களின், வருமான வரி பாக்கி கணக்கைச் சேர்த்தால், 104 இலட்சம் கோடி கணக்கில் வருகிறது.

ஆக, நிதிப் பற்றாக் குறை என்கின்ற வாதம் அடிப்படையற்றது.

Friday, January 6, 2012

பொழுது!

நாளைய பொழுது
நமக்கு என்பாய்!

இன்றைய பொழுதே
இல்லாத போது!

சிந்திப்போம்! செயல்படுவோம்!

ஒரு தனி மனிதன், அடுத்தவருடன் பேசுவது, பழகுவது, ஒருவருக்கொருவர் இணக்கமாக இருப்பது ஏன் பிடித்தமில்லாது போகிறது. நம்மையே நாம் சரியாக உணர்ந்து கொள்ளாது, விளங்கி கொள்ளாதபோது, அடுத்தவரின் அசைவுகள், இசைவாக இல்லை, நசையாக இல்லை என அல்லல்படுவது, ஆர்ப்பரிப்பது
ஏன்?

சக மனிதன் குறைகளை அளவீடு செய்ய முயல்வது, நிறைபோடுவது எவ்வளவில் பண்பான அணுகு முறையாகும். குறைகள், பலகீனங்கள், பக்குவின்மை கூறுகள் சராசரி மனிதன் யாரிடமும் காணக்கூடிய, பொதிந்துள்ள, இயல்பான குணங்களாகும்.

காலப்போக்கில், பட்டறிவு வாய்ப்பில் சீர்செய்து கொள்ள வாழ்க்கை அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்துள்ளது. அதனை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி, சுய திருத்தம் செய்து, வாழ்கைப் பயணத்தை நடத்திச் செல்ல வேண்டும்.

முற்சி, முனைப்பு, நேர்மறை வாழ்க்கை பாடங்கள் , மோதல் தவிர்த்த மனிதாபிமான பழக்கங்கள் தான் தற்போதைய காலத்தின் கட்டாயம்.

சிந்திப்போம்! செயல்படுவோம்!

Sunday, December 4, 2011

அன்றாடம்

எங்கள் வீட்டில் காகம்
அழைக்கத் தேவையில்லை
காலையில்

சேவலுக்குப் பதிலாக
சேவகம்

சமையலறைக்குள் உரிமையுடன்
சமயங்களில்

அப்புறம் என்றில்லாமல்
அப்பளம், வத்தல்

கட்டணம் இல்லாமல்
சுட்டவுடன்

ஒப்பனை ஒழுங்கு பார்க்க
ஓடாமல்
முகம் பார்த்து

ஆடிமுன் ஆடி, ஆடி
அலகால் கொத்தி, கொத்தி

அழகு பார்க்கும்
குருவியும்

அண்டை வீட்டில் வளர்க்கும்
புறாவும்

காகத்தைப் பார்த்து
தாகம் தேக்கி

புழுக்களைத் தேடி
பதைக்கும்

அண்டி வாழும் அணிலும்
இவர்களின் போட்டியில்

இறங்கும், ஏறும்
கொரிக்கும்,குதிக்கும்

இன்னலை எண்ணி
விரையும், மறையும்

இவர்களைத் தாண்டி
பதுங்கும்,பிதுங்கும்
விழிகளுடன்

இருளின்,இருளாக
பூசை
ஆசையுடன்

இரவு நேரங்களில்
உறக்கத்தை உதறி
உற்சாகமாக

மெல்ல அடி எடுத்து
ஒலிக்கும் வலி நேராமல்

சமயற் கட்டில் சஞ்சரிக்கும்

கறுப்பு பூனை என்றாலே
வெறுப்பு,பயத்துடன்

குழந்தைகள் அவர்களுடன்
குக்கலும் சேர்ந்து

விரட்டும்
மொட்டைமாடி வரை

இல்லக் காட்சி
அன்றாடம்!

Thursday, December 1, 2011

ஏன் என்று கேட்க
குரல் வேண்டும்

எவரிடமும் எரிச்சல்
ஏன் வேண்டும்

சரியென உமக்கு
பட்டது

சரியில்லை பிறர்
தொட்டது

குறைவென உமக்கு
சுட்டது

குறைவில்லை அவருக்கு
கெட்டது

ஒழுங்கென உமக்கு
சென்றது

ஒழுங்கில்லை அவருக்கு
வென்றது

இறப்பாமோ!

வாங்குவது
உயிரென்றால்

விற்பது
இறப்பாமோ!

மூச்சு

உள் மூச்சு
உன் மூச்சு

என் மூச்சு
பெரு மூச்சு

Wednesday, July 27, 2011

தாய்மை

தாய்மை அடைவது ஓர் அரிய வரம். அனவருக்கும் வாய்ப்பது கடினம். இயற்கையின் தீர்மானம் எப்படி என்பதை எவரும் தீர்க்கமாக அறிந்திலர். அறிவியல் வளர்ச்சி, முன்னேற்றம் அதிகம் உள்ள இக் கால சூழ்நிலையிலும், தாய்மை அடைவதில் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்து, தீர்வு காண்பதில் மருத்துவம் திக்கு முக்காட வேண்டி உள்ளது.

மகப்பேறு மருத்துவத்திற்கு வரும் பெண்களுக்கு, நிறைய நலவழி தகவல்கள், அங்கன்வாடி வழியாகவும், தாய்சேய் நலத்துறை வாயிலாகவும் அளிக் கப்பட்டாலும், அனைவரும் இவ்வழி காட்டுதலின்படி நடக்கிறார்களா!
அது கேள்விக்குறிதான்.

தனியாக மருத்துவரிடம் மாதந்தோறும் ஆலோசனைகளுக்கு செல்லும் பேறுகால மகளிரும், அவரின் கணவன்மார்களும், மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறார்களா என்றால், அதுவும் கூட அவ்வளவாக நிறைவளிக்கும் சேதியாக இல்லை!

ஊடகத்தின் செல்வாக்கு அதிகமான சூழலில் கூட, பல்வேறு அரிய மருத்துவ கருத்துகள், ஆலோசனை இலவயமாக அளிக்கப்பட்டாலும் , காற்றில் கரையும் கானமாக,, கவனத்தில் கொள்ளாத, கடைபிடித்து ஒழுகாத போக்கு, மிகுதியாக உள்ளது.

தாய்மை அடையும் படித்த மகளிரும் கூட, உணவுப் பழக்கம்,பயிற்சி, மருந்து எடுத்துக் கொள்ளுதல், மனநிலை ஆரோக்கியம் கொள்ளுதல் ஆகிய பண்புகளை பிசகாமல், தொடர்ந்து மேற்கொள்ளும் அக்கறை செறிவாக இல்லை.

ஒரு நாள் வாசித்தால் போதும், அடுத்த நாள் அல்லது மறுமுறை பார்த்துக் கொள்ளலாம். தேர்வுக்கு முன் படித்துக் கொள்ளலாம் என தள்ளிப்போடும் போக்கு, அக்கறையற்ற அணுகு முறை ஒரு பெரிய பாதிப்பு ஏற்படும் போதுதான் மீள்பார்வை வளையத்திற்குள் வருகிறது.

மனத்தை பிழிந்து கொள்வது, கண்களை கசக்கி கொள்வது கலக்கம் அடைவது, எதற்கெடுத்தாலும் பதற்றம் அடைவது, உணர்ச்சிவயப் படுவது, உரத்தக் குரல் எழுப்புவது போன்ற எதிர்மறை போக்குகள் பற்றிய பாதிப்புகளை புரிந்து கொள்ளவேண்டும்.

தாமாக அறிந்து கொள்ளவில்லை எனினும்,பிறர் வழி அறிந்து கொள்வது, அடுத்தவர் சொல்லும் ஆதரவு எண்ணங்களை நிதானமாக எடுத்து உணர்வது மிகவும் அவசியமாகும்.

கணநேரம் தானே, என்ன நிகழப் போகிறது என்ற அலட்சிய மனப்பான்மை, தொடர்கதையாகும்போது, தொல்லைகள் எல்லைகளை தாண்டி விடுகிறது. சிக்கலும் ஆழமாகி,சிந்தனை சிதறுகிறது. விளவு மோசமாகிறது.

ஆனந்தம் காணவேண்டிய சூழல், மகிழ்சியுடன் அளவளாவும் நிலைமை, துயரம் மிகுந்ததாகிறது . இதயம் கணக்கிறது. இமைகள் சுமைகள் ஆக, உள்ளழுத்தம் அருவியாக, ஓவென்ற இரைச்சலுடன், சூறாவளி நாடகம் அரங்கேறுகிறது. .

Monday, July 25, 2011

சமாதானம் ஏற்குமா?

சொந்த நாட்டில்
சிறப்பு இல்லை
சென்ற நாட்டின் சிறப்பும்
செறிவுடன் இல்லை

எல்லை கடந்தும் தொல்லை
கருத்தும் சுதந்திரமும்
கடுகாய்ப் போன பிள்ளை

ஓவிய உலாவும்
ஓங்கி விளங்கிட தொல்லை
ஓடவைத்தார் உம்மை
வெறுங்காலுடன்
வெண் தாடியுடன்
வெம்மிய மனுதுடன்
வெளிறிய பார்வையுடன்

சிறந்த படைப்பாளன்
திறந்த ஓவியம்
ஆடை அணியாமல்
அம்மணம் தாங்காமல்
ஆண்டவனின் வாரிசுகள்

புண்பட்டனராம்
புனை உணர்வுடன்
புகைத்துக் கிளம்பினர்
பொசுக்கினர்
உம் உணர்வுகளை

கலை உனர்ச்சியினை
கொலை உணர்ச்சியின்
காலடியில் பதித்து
மிதித்து துவைத்து
நீதி மன்றம் வரை சென்று

வீதிக்கும் வெளியே நிறுத்தினர்
இந்தியக் குடிமகனின்
உன்னத மதி நுட்பம்
கலைத்தாயின் கருவூலம்

அடுத்த நாட்டுக்கும்
அடையாளம் காட்டிய தூரிகை
வண்ணம்
தூய பரிமாணம்
காயம் சுமந்தது

காவியின் நாட்டம்
காட்டம்
சிறுபான்மை வேறு

சேர்ந்திரைக்க கூடிடும்
சேறு மனப்பான்மை மாற்றிட
மையத்தில் இல்லை
விளிம்பில் நிற்கும் வீணர்

இறந்த பின்
ஊதும் புகழாரம்
இந்தியக் குடிமகனாம்
நீதிமன்ற உத்தரவு நீங்கவில்லை

தாண்டி இங்கிதம் சேர்க்கும்
இந்திய அரசியல்
இங்கிலாந்து சென்று
மாண்ட உசேனிடம்
மன்னிப்பு கோறுகிறது

சமாதி
மேதகு மனிதரின்
சமாதானம் ஏற்குமா?
இறந்தவருக் காவது
கருத்து சுதந்திரம் கிடைக்குமா?

அடிப்படை உரிமை நிற்குமா?

Monday, July 18, 2011

மையம் விலக்கி

பழையன கழிதல்
போகியில் பார்க்கலாம்
புதியன புகுத்தி
அடுத்த போகியில்

புகையில் போக்கி
கழித்தும் சேர்த்தும்
போக்கியும் புதுக்கியும்

சுழற்சியின் அயர்ச்சியில்
சுழன்றிடும் வாழ்க்கை
சுற்றுப் புறத்தில்
சுழலும்

மையம் விலக்கி
ஐயம் சேர்த்து

மூடகம்

சென்ற ஆட்சியில், இலவச வண்ண தொலைக் காட்சி பெட்டிகள் வழங்குவதற்காக இருப்பு வைத்திடபள்ளிக் கூடம் பயன்படுத்தப்பட்டது. இது குறித்து, நண்பர் ஒருவர், இப்படி சொன்னார். கேளுங்கள்.

தொலைக் காட்சிக்கு உள்ளது
இடம்
தொலைவில் உள்ளது
பள்ளிக் கூடம்

மற்றொரு நண்பர்,

ஊடக பெட்டிகள் உள்ளே
மூடகம் விரட்டும் வகுப்பறை
வெளியே

மேலும் ஒருவர்,

பெட்டிகளுக்கு இடம்
சுட்டிகளுக்கு இல்லை

Sunday, July 17, 2011

17,ஏப்ரல்,2011 இராசசுத்தான் மாநிலத்தில், தவுசா மாவட்டத்தில்,
மூன்று தனியார் மருத்துவமனையில், சென்ற ஆண்டில் மட்டும்(மார்ச்- செப்டம்பர்,2010), 385 பெண் நோயாளிகள் மருத்துவத்திற்காக சேர்ந்ததில்,
226 மகளிர் கருப்பைகள், அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

உருவா 12000 முதல் 14000 வரை இதன் மூலம் அறுவை சிகிச்சை கட்டணமாக வசூலிக்கப் பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், "அகில பாரதிய கிரகக் பஞ்சாயத்து", என்ற தொண்டு நிறுவனம் சேகரித்த செய்தியாகும்.

இச் செய்தியை வாசித்தவுடன் தோன்றிய உணர்வுகள், ஒரு கவிதையாக,

கருவறையும் கூட
கழித்துக் கட்டப்படும்
சில்லறைக்காக.....

சிகிச்சையில்

மனிதம் மறந்த
மருத்துவம்!
நான் முந்த
அவன் முந்த
இவர் முந்த
அவர் முந்த
அவரவர் முந்த

உந்த விசை முடுக்கம்
ஊர்திகள் ஒலி எழுப்பும்
உணர்வுகள்
வலி ஏற்கும்

ஊருக்குள் கார் பறக்கும்
பயணிகள் பாதை
பந்தயமாகும்

பந்தயவாதிகள் பரபரப்பு
சனநாயக
தோல் உரிப்பு
விழாக் காலம்
விடிவு காலமா?

விடியல் சேர்க்குமா?

அவியல் அணிகள்
ஆட்சி சேர்க்குமா?

குவியல் பணம்
குண்டி நனைக்குமா?

கும்மிருட்டு வாழ்க்கை
வெளிச்சம் காணுமா?

"கல்விக் கண் கொடுத்த காமராசர்"

"கல்விக் கண் கொடுத்த காமராசர்"

ஐயா!
கொடுத்த கண் படுத்துக் கொண்டது,
பஞ்சடைந்து விட்டது
பழுதடைந்து விட்டது.

'ஆடி' கொடு
ஆடியில்!
அணிந்து கொள்ள!

ஒளி மங்கிய கல்வி
கோருகிறது உம்மிடம்
பார்வை!

சோடா புட்டியானாலும்
பராவாயில்லை!
சோதனை தீர!

உம் பிறந்த நாளில்
பெருமை கூற!

கல்விக் கண்ணா?

குருடாயிருந்த கல்வி
குவலை விழி
குவலயம் நோக்கி!
பெற்றது உம்மால்!

நெருடான எண்ணம்
நேரிய வழி சென்றது!

உடல் பசி தீர உணவு!
உடுக்க சீருடை!
புத்தகம் இலவசம்!

இன்றும் தொடர்கிறது
இத்யாதி!

இருப்பினும்
இரு விழிகளில் பிறை நோய்!
அறுவை சிகிச்சை அவசியம்!


இப் பிறந்த நாளில்
பரிசோதனை தேவை
உடனடியாக விழிகளைக் காத்திட!
பார்வையை சேர்த்திட!

Saturday, July 16, 2011

கோபம் குறைத்திடு
வேகம் தவிர்த்திடு

தாகம் போக்கிடு
தவிப்பு நீக்கிடு

உள்ள நிலை உணர்ந்திடு
உலகியல் புரிந்திடு

உன்னைப் பற்றி
உலவும் சேதி

உதறி நின்றிடு
உண்மை புரிந்திடு

காலம் வென்றிட
கவனமுடன் நடந்திடு

கரைந்திடும் புற்றென
இரைந்திடும் மனிதர்

இளிமுகம் தெளிந்திடு

குறைந்திடும் வளம்
காத்திடு
குணத்தில் சென்றிடு

கோணல் நிமிர்த்திடு
குவலயம் கண்டிடு

இலவம்!

பூத்தேன்,
பூத்து காய்த்தேன்,
காய்த்து குலுங்கினேன்
மகிழ்ச்சியாக.

என் உடலெல்லாம்உற்சாகம்!
முதிர்ந்தேன்!
அறுவடைக்கு தயாராக
ஆள் இல்லை!

வெம்பினேன்,
வெடித்தேன்!
வெறுப்புடன்! பொறுப்புடன்!

வெள்ளுடை தரித்தேன்!
வெளிக் கிளம்பினேன்!
வானத்தின்
வெண் பனியாக!

ஊரெங்கும்பறந்தேன்!
சிறுவர் விளையாட்டு
குமிழியாக!

செய்யிழை வேண்டுபவர்
மெய்யிழை மறந்ததால்!

Friday, July 15, 2011

உறங்கிய பொழுது
யாவும்
இறங்கிய பொழுது
ஒத்திகையில்
பல காலம்
ஒத்தாசை இன்றி
பத்தாசையுடன்

மொத்தாசையும்
சித்தமாக சென்றிடும்
காலம்செருவுடன்

நேரடிக்கு நேரடியாக
பருவும் சேர்த்து
பண்ணிடை இசையாக

பல்லாண்டு
பருவம் கழிந்து
உருவம் ஒடுங்கி
உள்ளம் நடுங்கி

ஊர் பயணம்

Thursday, July 14, 2011

"அண்ணா நிலை"

ஊழல் ஒழிக்க ஊர்வலம்
உண்ணா நிலை
"அண்ணா நிலை"

அதிசயம்
அரசாங்க அழைப்பு
ஆலோசனைக் குழு
அமைப்பு

சட்டவரைவு
திட்டம் விரைவு
சாதனைப் பட்டியல் நீளும்
வேதனைப் பட்டியல்
விலைவாசியைப்போல்

அன்றாடப் பிரச்சனை
அவசியம் என்றாகி
பழகிய மக்களுக்கு
பஞ்சு மிட்டாய் வண்ணத்தில்
வகையாக அளித்திடும் திட்டம்

ஊழல், கறுப்புப் பணம்,
வெள்ளைப் பணமே!
வெறும் வாய் மெல்லும்.

மக்கள் கருத்த மேனியாய்
சுட்டெரிக்கும் கோடையாய்
சுருண்டு வாழும்
வெளி அக்கினியில்
வேக்காட்டில்
சாக்காடு

அன்றாடம்சரிந்த வாழ்க்கையில்
சப்பைக் கட்டும்
நிவாரண அரசியல்
நீளும் பட்டியல்

நிர்வாணம் மட்டுமே
உரிமையாக, கடமையாக,
ஊழல், ஊதல்,
கறுப்பு,செருப்பு

யதார்த்தம் விலக்கி
எக்கிடும் காட்சிகள்
கட்சிகள்

பதார்த்த விலை குறைத்திட
பக்குவம் இல்லை
ஏறும் விலை வாசி
எங்கும் நிலவும் யோசி

வாதத் திறமை
வழக்கறிஞர் வாழ்வியல்
அரசியல் அரங்கில் ஆனந்தம்
அன்றாடம்

வாதத் திறமை
வாய் பிளந்து மெச்சிடும்
'மெய்ஞான ஊட்டம்'

அடுக்கு மாடி

சாடியில் முளைத்த
செடி