Saturday, March 31, 2018

கண்ணாமூச்சி!











துயிலெழும்போது துலங்கிய எண்ணம், கிளம்பிய சிந்தனை; திரண்ட கருத்துக்கள்; வடித்திட ஏடெடுத்தபோது; வசப்படாத மாயம் பல தருணங்களில். மனத்தின் கண்ணாமூச்சி!

சுற்றி எழும் சத்தம், சந்தடி, வந்த அடி தெரியாமல் சிந்தனை வழி மாற்றிடும் வந்த விசையில் தங்க இயலாது!

தவித்த கணம் கடந்தும் தயாரிப்பிற்குள் வராது!   பல முறை இதுபோல் நிகழும், நீளும் .
உள்ளக் கடலின் ஓயாத அலை அடிப்பில் உற்சாகம் உடைந்து!

விழிப்பு






('போயம் அண்டர்ஸ் டாட் காம்', வலை தளத்தில்,' வேகிங்' என்கின்ற தலைப்பில் காளிதாசர் கவிதை ஆங்கில வடிவத்தின் தமிழ் மொழியாக்கம்- முத்துக்கண்ணு)


மனநிறை மனிதன் கண்டிடும் கண காட்சி
அன்றி,
ஒலி இழை அவனைத் தொடும் உணர்ச்சி,
நினைவுணரா விருப்பம்
நெஞ்சில் வழிந்தோடும்;
நினவில் கொள்.
அவன் விருப்ப வடிவேற்றம்;
தொடர்பிற்கு வெளியே அதுவேயாக;
இவ்வாழ்விற்கு முன்.
தன் பதிவேற்றத்துடன்
அவனுள் காத்திருக்கும்.

Friday, March 30, 2018

"அட்டைக் கடி"








கருவிழி அடையாளம்!
கைரேகை அடையாளம்!
எத்தனை அடையாளம் பாருங்க!
எல்லாம் எமக்குத்தான் கேளுங்க!

அட்டைக் கட்டி பிறந்தேன்!
கொட்டைக் கட்டி பறந்தேன்!
அட்டைக் கடியில்
அன்றாடம்.

படிப்படியாய் குருதியிழந்து
தெருப்படியாய்,
தேகம் குலைந்து;
தேசிய அடையாளம்.

மன வீக்கம்










எங்கா வச்சா எனக்கு தெரியல
ஏங்க வச்சா எதுக்கு புரியல
தங்க வச்சா தவிப்பு தாங்கல
பொங்க வச்சா பொறுக்க முடியல
வங்கை வச்ச நெஞ்சம் நீங்கல
வாடிப்புட்டா வாழ்க்கை நெருப்புல
தேடிப்பார்த்தால் தேடல் முடியல
தேங்கிப் போனான்
மன வீக்கம் வடியல

பெயரலாம்





முடுக்கலாம் முடக்கலாம்
முடக்கி அடுக்கலாம்
கலைக்கலாம்
கலைத்து அடுக்கலாம்

மறக்கலாம் நினைக்கலாம்
நினைத்து மறக்கலாம்
குறைக்கலாம் கூட்டலாம்
மறைக்கலாம்
மறைத்து
திறக்கலாம்
திளைக்கலாம்


திளைத்து திணறலாம்
முளைக்கலாம்
முளைத்து விளைக்கலாம்
வீழலாம்
வீழ்ந்து
பெயரலாம்

இருள்









( 'தி டார்க்'- கரோல் ஆண் டப்பி,
'போயம் அண்டர் டாட் காம்', வலை தளத்தின் கவிதை,
 மொழியாக்கம்- முத்துக்கண்ணு)


இருண்மை, பூங்காவாக

எக்கிடும் பந்தென, நிலவும்

சொக்கிடும் மனம்,

அச்சம் இல்லை எவை குறித்தும்.

(அயற்கோள்வாசி தவிர்த்து....)

பண்டமாற்று




(போயம் அண்டர் டாட் காம் வலை தளத்தில் ' பார்ட்டர்', தலைப்பில், சாரா டீசுடேல் எழுதிய ஆங்கில கவிதையின் மொழியாக்கம்- முத்துக்கண்ணு)

இனிமை மேம்படுத்திடும் வாழ்க்கை,
அழகு அதிசயம் அனைத்தும்,
நீல அலைகள் வெண்மையாகும் குன்றின்மேல் படர்ந்து,
மேலெழும்பும் தீச்சுவாலை தாலாட்டும் ஊஞ்சல் ,
குழந்தைகள் முகம் தூக்கி முறுவலுடன்,
அதிசயத்தை கோப்பையாக்கி கையில் ஏந்தி

இனிமை மேம்படுத்திடும் வாழ்க்கை,
பொன் வளைவாக இசை,
மழையில் நறுமணம் தரும் 'பைன்' மரங்கள்,
உம்மை நேசிக்கும் விழிகள், அரவணைக்கும் கரங்கள்,
உம் உணர்வுகள் இக்கணமும் மகிழ்வுறும்,
புனித சிந்தனைகள் இரவின் விண்மீனாக.

இனிமை வாழ்விற்கு இரைத்திடும் செல்வம்,
பெற்றிடு செலவினம் நோக்காதே,
மணித்தியான இசைவான அமைதிக்கு
எண்ணற்ற ஆண்டு துயரத்தை ஏற்றிடு,
பெருமகிழ்ச்சி சுவாசத்திற்கு
வசப்படுத்திய அனைத்தையும்
வழங்கிடு.

,

Thursday, March 29, 2018

திண்ணை வரை விடுதலை!





உறவுகளுடன் வாழ்ந்தால் பூக்கோலம்தான்! கரவுகளுடன் வாழ்ந்தால் சாக்கோலமா? உறவுகளை தொலைத்து உருப்பட முடியுமா? வளர்க்கப்பட்ட சூழல், வசம் தொலைந்த சுயம், வளைய வருமா?

 அங்கு செல்லாதே! இங்கு செல்லாதே! அடுக்கடுக்கான கட்டளைகள், சிறார் பருவத்தின் சிறகை கத்தரிக்க, தத்தி, தாவி தெருக்கதவைக் கடந்து திண்ணை வரை விடுதலை வெளிச்சம்;

காற்று புன் முறுவலுடன் வரவேற்க; கிட்டாத சிநேகிதம் எட்டிப் பார்க்க; சில கணம் சிட்டென பறந்தோடி; பொழுதுபோக்க; அழைக்கிறார் உள்ளிருந்து,' எங்கே சென்றாய்?

' வேனிற்காலம், வேர்க்குரு வாரிக்கொட்டும்; அம்மை ஆள் தேடும்!' குடும்ப எச்சரிக்கை ஒலிப்பானுக்கிடையில், விளையாட்டும் வினை சேர்க்கும்.

ஆட்டம் போட்ட அலுப்பில், பாட்டியின் அரவணைப்பில், விடுகதைகள் தாலாட்ட;  நீதிக்கதைகள்பாலூட்ட; தாழ்வாரக் காற்று தாளம் இசைக்க; வெண்ணிலா வெளிச்சம் தூக்கம் சேர்த்திடும் வெறுந்தரையில்!

நொறுக்கிடும் வெறி !

இறந்த மாட்டின் தோல் உரிப்பான்,
இறக்கு மதியாளரிடை
ஏற்று மதியாளன்;
கோ காப்பாளன்.

கோலடுத்து உரிப்பான் தோல்
உரிப்பான் ஊரறிய,
காவலும் ஒழுங்கும்;
எட்டிப்போக.

ஆவலுடன் பார்க்கும் மக்கள்,
அல்லல் போக்க துணை இல்லை!
துடித்தார் துவண்டார்;
உழைப்பின் பலன் யாதென புரிந்திடாது
புழுபோல் நெளிந்தார்;           

தசை கிழிய, ரத்தம்  கசிய,
ஏன் பிறந்தேன்? இழிசனமாய்!
என நொந்த நிலையில்;
வெந்த புண்ணின் வேதனை.

காவியின் கண்களில் கருணையை
சேர்க்கவில்லை!
கொத்து, கொத்தாய் மடித்து
 வீசிய கூட்டம் 2002ல்.

வெறியூட்டியே ஆயுதங்கள் கூட்டி,
ஆள் சேர்த்து ,
பெரும்பான்மை வெறி சேர்த்து,
நெறி பிறழ்ந்து நொறுக்கிடும்.

வாணர சேனைகள்
வலம் வரும்.
காவல் தடியேந்தி கவலையின்றி
'குசராத்தின் மாதிரி'

'இந்தியாவில் தயாரிப்போம்'
'ஒடுக்கப்படும் மக்களை ஒடுக்கிட,
ஒழித்திட ஆயுதம் தரிப்போம்'!!

Monday, March 26, 2018

கிளர்ச்சியாளர் ஓட்டத்தில்

கிளர்ச்சியாளர் ஓட்டத்தில்
            (  பிரிரோன தத்தா     
முது அறிவியல் கணிதம், இரண்டாம் ஆண்டு,
மத்திய பல்கலைக் கழகம், புதுச்சேரி.)



எல்லையற்ற அமைதி முகிலாக நெஞ்சங்களில்
அச்சமூட்டும் ஓசையின்மை உறைகிறது
களைப்புடன் படைகள் பின் வாங்கும்
வீண்மையில் தலைவர் இடித்துரைக்க.

இரைச்சலுக் கிடையில் ஓர் உயிர்
மனக் கசப்பிற்கு அப்பால் உதவியற்று
புரிதலற்று துரோகம் சுமந்து
பின் புலத்தில் தேங்கி நிற்க.

சிறுத்து மெலிவுற்று வெளிறிய பன்றி
தகைக் கயிற்றுடன்
பரிவுயிர்க்கான தேடலில்,
இவ்வேளை செக்கர் அந்தி வானம்
ஒன்றே இறுதியாக காண்பதென்பது
அறியாமல்.

நம்பிக்கை இளைஞன் எதிர்பார்ப்புடன் தளராமல்
தலைவரை பின் பற்றி முன்னோக்கி;
சச்சரவு யாவும் மறுத்து அறை கூவலுடன்
கழுத்தாழத்தில் மூழ்கி, தடம் பதிக்காது கிடக்கும்
துன்ப நெருக்கடியில்.

பெருமித பகைமை எண்ணங்கள் கருதுகோளாக
கையளவு இருத்தலில் சிலர்
கவனமற்று சூழ்நிலைமைகள் எவ்வாறு
என்ற பகற்கனவுடன்.

அரிமா நெஞ்சுர தலைவர் அணி வகுத்து முன்னேற
பிறர் பின் தங்கிடா அக்கறை கொண்டு
சோர்வுற்ற உடலுடன்
படைகள் பின்னிழுக்க
ஒழுங்குணர்வு பொடியாகி.

இரவு வளர்கிறது, குலைந்திடும் ஆர்வம்
சாக்கோளத்தை விழுங்கிட
படைகள் கடு நிலவெளியில் கால் ஏற்றி
கமுக்கமாக தம் கண்ணீர் துடைத்து.

அறிவதில்லை எவரும் யாது நிகழுமென்று
ஐயத்துடன் தள்ளாடி
உறுதி பிணைந்து தலைமையேற்று
பறைசாற்றிடும் புதிய விடியல் நோக்கி.

(மொழியாக்கம்- முத்துக்கண்ணு.)

சாட்டை சுழற்றுவார்!

ஆக்ரமிப்பு அரசியல்!
அரசியல் ஆக்ரமிப்பு!

எவரும் விலக்கில்லை,
அவரும் இவரும் .
அத்து மீறினார்!

அழகாய் ஊடகங்களில்
வலை தளங்களில்
வலம் வருகிறார்,
சுய நலம் சேர்க்கிறார்.

சாற்றிடும் குற்றம்
தம் அகத்தே மாற்றிட,
முனைந்திடார்.

போக்கிடம் சார்ந்தே
பொதுமை பேசுவார்.

நோக்கிடம் இதுவரை
அறிந்தோர்.

சாக்கிடம் அகன்று ,
சாட்டை சுழற்றுவார்!

Sunday, March 25, 2018

இறப்பு.......




ஆன்மா கலந்து விடுகிறது ஆண்டவனிடம்,
சமயக்குரு.
கட்டவிழ்கிறது அழியாக் கூறுகளாக,
மெய்யறிவாளர்.

முடிகிறது பிறப்பு ஆயினும் பொலிவுறுகிறது மறுபிறப்பாக,
புதிர் அறிவர்.
கற்பனை உலகிற்கான தியாகம், ஈகம்,
பொதுவுடமையாளன்.

நிலவறையில் நெடுந்துயில்,பகுத்தறிவாளன்.

எம் வருகை எமக்கே தெரியாது, இறப்பின்
குழப்பம்.

காட்சிப் படிமத்தில் மடிந்தது பன்முறை,
மெய்மையில் அன்று.

கவலை ஏன் சாவை எண்ணி?, நிகழ் கணத்தில்
நீ வாழும்போது, வினவுகிறது வாழ்க்கை


(ராஜேஷ் ஆய்வு மாணவர், பயன்முறை உளவியல் துறை, புதுச்சேரி பல்கலைக் கழகம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டதை, தமிழில் தருகிறேன்)


'மியாவ்,'மியாவ்,'

முன்னாளில் முழங்கிய நான்,
முணகினேன்! மூச்சிரைத்தேன்!
முடிக்கவில்லை!

குறிப்புகள் எண்ணத்தில் ஏராளம்
வெளிப்படுத்த மனதில் தாராளம்,
இயலவில்லை!
தமிழ்ச் சங்கத்தில்.

ஒலி பெருக்கியும் ஆவலுடன்,
சபை குறிப்புகள் கேட்டிட
தீட்டிய செவிகள்,
நிறையவில்லை!
உரை நிறைவில்லை!

தழு தழுத்த நா
தண்ணீர் கேட்க,
இரைப்பு ஒய்வு கேட்க,
நண்பர்கள் போதும் என்று கூற,

ஆர்ப்பரித்து முழங்கிடும் நான்,
மிசை போல்,
'மியாவ்,'மியாவ்,' முணகினேன்"

இல்லத்தரசியிடம் அனுபவம்
நகைச்சுவையாக,
வெளியிட்டேன்;
வெம்பிடாமல்;
வெட்கப்படாமல்!

Saturday, March 24, 2018

மறந்தேன் அல்ல!





விட்டுச் சென்றேன் விலகிச் சென்றேன் அல்ல
பழகிச் சென்றேன் பழித்துச் சென்றேன் அல்ல
தொட்டுச் சென்றேன் தொடர்ந்து சென்றேன் அல்ல
முட்டிச் சென்றேன் மோதிச் சென்றேன் அல்ல

எட்டிச் சென்றேன் எக்கிச் சென்றேன் அல்ல
கட்டிச் சென்றேன் கவர்ந்துச் சென்றேன் அல்ல
ஒட்டிச் சென்றேன் வெட்டிச் சென்றேன் அல்ல
பழகிச் சென்றேன் பழித்துச் சென்றேன் அல்ல

உலவிச் சென்றேன் குலவிச் சென்றேன் அல்ல
கூடிச் சென்றேன் குழப்பம் விளைத்தேன் அல்ல
தேடிச் சென்றேன் தொலைத்துச் சென்றேன் அல்ல
மூடிச்சென்றேன் முழுமை அறிந்தேன் அல்ல

பாடிச் சென்றேன் பழமை மறந்தேன் அல்ல
பூட்டிச் சென்றேன் புதுமை மறந்தேன் அல்ல

பின்னணி என்ன?

புதுச்சேரியில் கம்பி வட சேவை (கேபிள் தொலைக்காட்சி) வழங்கும் நிறுவனங்கள் சந்தாவாக உருவா.100 வீதம் வாடிகையாளர் வசம் வசூலித்து வருவதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் செய்தி பத்திரிக்கையில் வெளியிடப் பட்டிருந்தது.மேலும், கம்பி வட சேவை அமைப்புகள் சந்தா தொகையை-கட்டணத்தை- உயர்த்த அனுமதி கேட்டிருந்ததாக அதற்கு அரசாங்கம் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.

இதில், ஒரு உண்மை யாதெனில், ஒவ்வொரு வாடிக்கையாளர் வசமும் சந்தா தொகையாக, மாதம் ஒன்றுக்கு உருவா.200 வீதம் வசூல் செய்யும் போது, உருவா.100 வசூல் செய்வதாக தவறான தகவல் அளிக்கப்பட்டது.அது மட்டுமின்றி, இணைப்புகளின் எண்ணிக்கையும் குறைத்து காண்பிக்கப்படுகிறது.

பெரும்பாலும், கம்பிவட சேவை நிறுவனங்கள் அரசியல்வாதிகளால் அல்லது அரசியல் அதிகாரத்திற்கு மிகுந்த நெருக்கம் உள்ளவர்களால் நடத்தப்படுவதால் இதுபோன்ற, முறைகேடுகள் துணிவாக நடைபெறுகின்றன.

நகராட்சிகளும், கொம்யூன் பஞ்சாயத்துகளும் 10% விழுக்காடு, "கேளிக்கை வரி", அவரவர் அளிக்கும் கேபிள் இணைப்புக் கணக்கை சரியானதாக எடுத்துக் கொண்டு, சோதனை ஏதும் செய்திடாமல்,மிகக் குறைவாகவே வசூல் செய்கின்றன.

திரைப்படங்களைப் பொறுத்தவரையில், டிக்கெட் முத்திரை இடுவது, சோதனை செய்து, சரியான எண்ணிக்கையை, காட்சிகளின் அடிப்படையில் இறுதி செய்து," கேளிக்கை வரி" வசூல் செய்திடும் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்கள், கம்பி வட சேவையில் அரசாங்கத்திற்கு வெகு காலமாக வரி இழப்பை பல இலட்சங்களில் அல்லது கோடிக்கணக்கில் ஏற்படுத்தியுள்ளன.

 மேலும், சினிமா திரையரங்குகளை வரி பாக்கிக்காக சீல் வைத்திடும் அதிகாரம், கேபிள் தொலைக்காடசி ஒலிபரப்பு நிறுவனங்களிடம் தயக்கம் காட்டுவதின் பின்னணி என்ன?

Thursday, March 22, 2018

அன்றும்! இன்றும்!






கொஞ்சினேன் அன்று
-குழந்தைப் பருவம்

கெஞ்சினேன் இன்று
-குமரப் பருவம்

விஞ்சினாய் அன்று
-விளையாட்டாய்

விளாசினாய் இன்று
-வினையாட்டாய்

தாங்கினேன் அன்று
-தைரியமாய்

ஏங்கினேன் இன்று
-இயலாமையாய்

மெட்டப்பா!

(திரை பாதிப்பா? திடீர் பாதிப்பா? பாடல், தேடல்.எனக்குள் வினவினேன், இவ்வாறு. கேட்டுப் பாருங்கள்)

என்னப்பா? என்னைப் பாரப்பா!
எந்த ஊரப்பா? என்ன பேரப்பா?
சின்னப்பா,
சிறந்த பேரப்பா!

உன்னப்பா உயர்ந்த ஆளப்பா!
தின்னப்பா,
திகட்டும் இனிப்பு பா!
பண்ணப்பா,
பழகிப் பாரப்பா!

குந்தப்பா கூடி நில்லப்பா!
கந்தப்பா,
கருணை பொழியப்பா!
சந்தப்பா,
சங்கடம் தீர்க்கும் பா!

உண்மைப் பா
உடனே உணரப்பா!
வந்த பா,
வராத மெட்டப்பா!

பழுத்த வேலைக்காரன்!

(நாளுக்கு நாள் வரிச் சுமையேற்றும் அரசாங்கம் குறித்து நண்பர் ஒருவர் இப்படி கூறினார்)


வரி வரியாய்ப் போடறான்,
வாய் கிழியப் பேசறான்.

வளங்கள் யாவும் தீர்க்கறான்,
வடிகட்டி கசடு அளிக்கிறான்.

மடைமாற்ற அரசியல் வைக்கிறான்,
மாட்டிக்கிட்டு நம்ம ஆளு
தவிக்கிறான்;
மரியாதை அடகு வைக்கிறான்.

மனங்களில் மதத்தை ஏற்றுகிறான்.
ஒளிப்பிழம்பை ஒதுக்கி
 உணர்ச்சி வெறி சேர்க்கிறான்;
ஓயாது வீண் வேலை பார்க்கிறான்.

ஒய்யார பிரித்தானிய கலை தூக்கறான்.

பேச்சுக்கு வரி விதித்து
மூச்சுக்கும் வரி விதிப்பான்,
முடிச்சுக்கும்.

வேரறுக்கும் பெரு வணிகம்
 நொடியில்,
வேண்டுதல் வேள்வியில்
மொட்டை அடிக்கும்.

பலி பீடத்தில் மக்கள்,
பறிபோகும் பாகங்கள்
நுட்பமாய்.

பன்னாட்டு முதலாளியம்!
பழுத்த வேலைக்காரன்!!

Wednesday, March 21, 2018

வரி!








வரிக்குள் வரி
வகை வகையாய்ப் பறி!

வறண்டிடும் நெறி
வாழ்க்கையின் கதி!

பறிக்கும் முறை
விரிக்கும் வலை!

உருண்டெழும் கலை
வெகுண்டெழா நிலை!

வேதனையில் சிலை!

சனநாயகம் அழிகிறதா?

நண்பர்களே!

பிப்ரவரி 17, 2018ல் 'டைம்ஸ் ஆப் இந்தியா' நாளிதழில் ஒரு கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதன் சுருக்கம், பின்வருமாறு.

சனநாயகம் அழிகிறதா?
அமெரிக்காவில் உள்ள மற்றும் உலகளவில் அறியப்பட்ட, அறிவுசார் சமூகம் மற்றும் அறிஞர்கள், அண்மைக் காலமாக சனநாயகம் அழுகிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை எழுதியும், பேசியும் வருகின்றனர்.அவர்களில் சிலர் மத்திய நிலை தாராளவாதிகள், பிறர் மித போக்குள்ள பழமைவாதிகள் ஆகும்.

தற்பொது நிலவிடும் அரசியல் சூழ்நிலையில் வெளிப்படையான பாசிச சர்வாதிகாரிகளைக் காட்டிலும் அச்சுறுத்தல், பிரபலமான அதிகாரத்துவம் படைத்தவர்கள் மூலம் வஞ்சகமாக,உள்ளிருந்தே, நாடாளுமன்ற தேர்தல் சனநாயக அலகிற்குள் சனநாயகத்தை உறிஞ்சி வருகின்றனர் என்று அவர்கள் அனைவரும் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவர்களில் ஒருவர், 'டேவிட் புரூம்', அமெரிக்காவின் சனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து சென்ற வாரத்தில், புரூக்கிங்சு நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தமது கவலையை பகிர்ந்து கொண்டார்.

.சமீபத்தில் வெளியிட்ட தமது புத்தகத்தில்--'டிரெம்போ கிரேசி: தி கரப்ஷன் ஆப் தி ரெப்பப்ளிக்'கில், அமைப்புகள் அல்லது அரசியலமைப்பு சட்ட விதிகள் ஊடுருவி வரும் அதிகாரத்துவத்திற்கு எதிராக நிற்க, போதிய வல்லமை அற்றதாக உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

." அரசியலமைப்பு சனநாயகம், முதலில் விளையாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு முற்றாக ஈடுபாடு உடையதாக அமைக்கப்பட்டுள்ளது". தற்போதைய அதிகாரத்துவ தலைவர்கள் மற்றும்  அவரை இயல்விப்போர், தமது சுய விதிமுறைகளுக்கு ஏற்பவே செயல்படுகின்றனர்.

 அதுபோல், ஆர்வார்டு பல்கலைக் கழகத்தின் இரண்டு பேராசிரியர்கள், ஸ்டீவன் லெவிட்ஸ்கி மற்றும் டேனியல் சிப்லாட் தமது புத்தகத்தில்--அவ் டெமாக்ரெசிஸ் டைய்: வாட் இஸ்ட்ரி டெல்ஸ் யு.எஸ். எபவ்ட் அவுர் புயூச்சர்- அமைப்புகள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னதிகார ஆட்சியாளர்களை ஆள, செல்வாக்கு செலுத்திட போதுமானவை அல்ல.

அவர்கள் வசம் ஊடகம் மற்றும் தனியார் துறை கட்டுப்பாட்டில் உள்ளது, அவர்கள் அரசியல் விளையாட்டு விதிகளை மாற்றி எழுதி அரசியல் எதிரிகளுக்கு எதிராக திருப்பி வருகின்றனர்.

" தன்னதிகாரத்திற்கான தேர்தல் பாதையின் முரண்பாடான துயரம் யாதெனில், சனநாயகக் கொலையாளிகள் சனநாயகத்தில் உள்ள அதே அமைப்புகளை பயன் படுத்துவதேயாகும்--படிப்படியாக, நுணுக்கமாக ,மேலும் சட்ட ரீதியாக- பயன் படுத்தி அதை அழிப்பதேயாகும்"

தன்னதிகாரம் மிக்கவர்கள் எங்கிருந்தோ வருபவர் இல்லை. ஏற்கனவே நிலவிடும், இயல்விக்கும் நிலைமையை சரியாக பயன்படுத்திக் கொண்டு, மிக தந்திரமாக, விரிவுபடுத்தி, தேசியவாதம் மற்றும் மத உணர்வுகளை ஈர்க்கும் தவறான முன்னெடுப்புகளை , ஏற்கனெவே பாதிப்பிற்கு உள்ளாகும்  அடித்தட்டு மக்கள் மத்தியில் செய்கின்றனர்.

அமெரிக்காவில், அவ்வாறான நிலைமை உள்ள அரசியல் தளங்கள்: தேர்தல் முகாமிற்கான நிதி அளிப்பு ஏற்பாடு மற்றும் ஊடகத்தின் வளைப்பு ஆகும்.

இச்செய்திகள், நமது நாட்டு சனநாயகப் போக்கையும் தொட்டு, தோலுரித்துக் காட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

வன விலங்குகள் ஆணையம்!

வனவிலங்குகளுக்கு எதிரான வன்மங்கள் தொடர்கதையாகிறது! மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாநிலப் பகுதிகளில். தொடர்ந்து பெட்டிச் செய்தியாக, பேசும் செய்தியாக ஊடகங்களில் சில நாட்கள்.வனத்துறை அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை; வனத்துறை அமைச்சர் நேர்காணல், அத்துடன் அடங்கிப் போகும்.

வனப்பகுதிகளில் உள்ள தோட்டப் பயிர்கள் நாசம்; குடியிருப்புகள் சேதம்; ஓரிருவர் சாவு ஆகியவற்றுடன், மனித உடமை அழிப்பு, உயிரிழப்பு செய்திகளின் அழுத்தம் அதிகமாக, வனவிலங்குகளின் இழப்பு; வாழ்விட அழிப்பு; உணவுப் பற்றாக்குறை; காட்டுப்பகுதிகளில் நிலவும் வறட்சி ஆகிய பிரச்னைகளில் தீர்விற்கு இதுவரை ஆக்கபூர்வ செயல் நடவடிக்கை அரசிடம் இல்லை!

பல தளங்களில், துறைகளில்; மேம்போக்காக செயல்படும் அரசு நிர்வாகம்; ஆட்சி அதிகாரம் இப் பிரச்னையிலும் நீண்ட நெடிய, நிலைப்பான தீர்வுகாண முனைப்பும், முன்னோடித் திட்டமும் இல்லை!

 மனிதர் வாழ்ந்தால் போதும், அவர் வாக்காளர், அடுத்தடுத்த தேர்தலில் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற உணர்வு, முந்துரிமை, விலங்குகள் தானே அவை! என்கின்ற அலட்சியம், அவை என்ன செய்துவிடப் போகிறது? என்னும் அலட்சிய மனப்பான்மை, போக்கு மேலோங்கி விளங்குகிறது.

சூழல் காப்பாளர்களும், சிறுபான்மை அளவில் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தாலும், அதன் வீச்சிற்கு ஆதரவு அளித்திடும் ஊடகங்கள் , மிகச் சிலவே! மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும், இத்தகைய கொடுமை அவர்களது அமைப்பு விதிகளுக்கு, செயற்பாட்டு வரையறைகளுக்குள் வரவில்லை என ஒதுங்கி வருகிறார்கள் அல்லது பதுங்கி வருகிறார்கள்!

மனித உரிமைக்கு பல ஆணையங்கள் உள்ளது போல், வன விலங்குகள் வாழ்வுரிமைக்கு ஆணையம் ஒன்று அரசாங்கம் அமைத்திட வேண்டும்.

வன உரிமைச் சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றை முறையாக நிர்வகித்து, பாதுகாத்திட செயல்திட்ட ஏற்பாடுகள்,

மாவட்ட ஆட்சியர் , மக்கள் பிரதிநிதிகள், வனத்துறையினர் ஒருங்கிணைந்து, சூழல் பாதுகாப்பின்  ஒரு முக்கிய அம்சமாக வனவிலங்குகள் வாழ்விடப் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் என்பதே,

 மனித நேயம் உள்ள சூழல் காப்பாளர்களின் ஒருமித்த கோரிகைக் குரல் ஆகும். அரசு செவி சாய்க்குமா?

Tuesday, March 20, 2018

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு!

கேளிக்கை வரி- இரட்டை வரி விதிப்பு- எதிர்த்து திரையரங்கினர் போராட்டம்!

புதுச்சேரி மாநிலத்தில் ஒரு காலத்தில், சிறியதும் பெரியதுமாக, 30க்கும் மேற்பட்ட திரையரங்கங்கள் இருந்தன.ஒரு காலத்தில் 'கெப்லே தியேட்டர்'; 'தகர கொட்டா'; 'டென்ட்டு கொட்டா' என்று எமது தந்தை கூற கேள்விப் பட்டிருக்கிறேன்.

 நான் அறிந்தது 'கந்தன் கொட்டா'; 'நியூடோன் டாக்கீஸ்'; 'கண்ணம்மை டாக்கீஸ்'; 'சிவகாமி டாக்கீஸ்'; 'வீனஸ் தியேட்டர்'; 'ராஜா டாக்கீஸ்' போன்றவைகள்.இராமன் திரையரங்கம்; 'ஜெயராம் திரையரங்கம்'; 'ஜீவா ருக்மணி' பிற்காலத்திய சேர்க்கைகள்.

 1980களில்,'ஆனந்தா மற்றும் லிட்டில் ஆனந்தா'- இரட்டை திரையரங்குகள் பலராலும் பேசப்பட்டு, சில ஆண்டுகள் கழித்து சினிமாத்தொழில் நலிவுற்றதால், தாக்குப் பிடிக்க இயலாமல் பல திரையரங்கங்கள் மூடுவிழா கண்டன, தொழில் மாற்றம் பெற்று, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக நிறுவனங்கள் போன்ற இலாபகரத் தொழிலுக்கு உருமாற்றம் பெற்றன.

இவ்வகையில் 20 திரையரங்குகள் மூடப்பட்டன. நிலைமையை உணர்ந்த அப்போதைய அரசாங்கம், தமிழ்த் தலைப்பிட்ட தமிழ்த் திரைப்படங்கள் மற்றும் தெலுங்கு தலைப்பிட்ட தெலுங்குத் திரைப்படங்களுக்கு மட்டும் 'கேளிக்கை வரி' விலக்கு தொடர்ந்து அளித்தது.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து சட்டத்தின் கீழ் 25% விழுக்காடு கேளிக்கை வரியாக சினிமாத் தொழிலுக்கு நிர்ணயம் செய்து வசூல் செய்து வந்தது.இதில் 10% விழுக்காடு 'திரையரங்க பராமரிப்பு' செலவிற்கு போக, மீதம் திரையரங்கங்கள் செலுத்தி, நாள் ஒன்றுக்கு பல இலட்சங்கள் புதுவை அரசுக்கு வருவாயாக அளித்து வந்தன.

இந்நிலையில், 1.07.2017 முதல், மத்திய அரசு விதித்த 'சரக்குகள் மற்றும் சேவை வரிச் சட்டம், 2017, புதுவை அரசாங்கம் சட்டப்பேரவையில் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டது. அதன்படி, 100 உருவாய்க்கு குறைவான 'டிக்கெட் கட்டணத்திற்கு' 18% விழுக்காடு' கேளிக்கை வரியாகவும்; 100 உருவாய்க்கு மேல் உள்ள கட்டணத்திற்கு 28% விழுக்காடும்  கேளிக்கை வரியாக; விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, திரையரங்குகள், மாநில அரசு விதிக்கும் 25% விழுக்காடு, மத்திய அரசு விதிக்கும் 28% விழுக்காடு, ஆக மொத்தம் 53% விழுக்காடு' கேளிக்கை வரியாக", ரசிகர்கள் தலையில் சுமத்தி, வசூல் செய்து வருகின்றது.

ஒரு குடும்பம் பொழுதுபோக்கு செலவாக, கூடுதலாக 28% விழுக்காடு கொட்டி அழவேண்டியிருக்கிறது. சம்பள உயர்வு; கூலி உயர்வு இத்தனை சதவீத உயர்வு காணாத நிலையில், மறைமுக வரி, இதுவரை இல்லாத அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. உலக வங்கியே அதன் அறிக்கையில், அதிகமாக மறைமுக வரி  வசூல் செய்யும் நாடு என்று சுட்டிக் காட்டி உள்ளது.

'ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி விதிப்புக் கொள்கை' முழக்கம் என்னவாச்சு? சினிமாத் தொழிலுக்கே, "இரட்டை வரி விதிப்பு" இப்படியாக இருக்கும் போது மற்ற தொழில்கள் குறித்து சொல்ல வேண்டியது அவசியமில்லை. மக்களை வரி விதிப்பில் உறிஞ்சிடும் வஞ்சகம் மிகக் கொடுமையானது!

 இந்த இரட்டை வரி விதிப்பை எதிர்த்து, ஒரே தருணத்தில், " கேளிக்கை வரியாக", மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் செலுத்த இயலாது, ஒரு வரி மட்டுமே செலுத்துவோம் என்கின்ற போராட்டம், ஒரு வகையில், நுகர்வோர் உரிமைக்கான போராட்டமாகவும், நாம் காண வேண்டியுள்ளது.

 பல நுகர்வோர் அமைப்புகள் இது குறித்து, அதிக அக்கறை எடுக்காமல், எம்மால் தெளிவு படுத்திய பிறகும், நுகர்வோர் விழா கொண்டாட்டங்களிலேயே மூழ்கி உள்ளது.

16, மார்ச், 2018 முதல், தமது நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வரும் திரையரங்கள் குறித்து அரசாங்கங்கள் கண்டு கொள்ளவில்லை!

துணைநிலை ஆளுநர் , முதலமைச்சர்,  உள்ளாட்சித் துறை அமைச்சர், துறை செயலர் ஆகியோரைச் சந்தித்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தியும் உரிய சாதகமான உத்தரவு  கிடைக்கவில்லை!

அனைவரும்  விழிப்புணர்வு பெற்று, அணிதிரண்டு வெகு மக்களின் வாழ்வாதரத்தை பலமுனைகளிலும் நுட்பமாக அழித்திடும் சூழ்ச்சியை வெல்ல, போராட வேண்டும்!

Monday, March 19, 2018

நிரந்தரம் இல்லை!

பெற்றது பெருமை சேர்க்கவில்லை!
உற்றது உரிமை சேர்க்கவில்லை!
விற்றது பொருள் குவிக்கவில்லை!
கெட்டது சேர்ந்திருக்க முடியவில்லை!

விட்டது வீடு சேரவில்லை!
தொட்டது துலங்கவில்லை!
தோல்வியும் துயரம் என்பதில்லை!

வேள்வியில் வெற்றி கிடைப்பதில்லை!
கேள்விக்கு விடை தெரிவதில்லை!
பல்லவியுடன் பாடல் முடிவதில்லை!

பிடிவாதம் சாதிப்பதில்லை!
பிணக்குகள் நிரந்தரம் இல்லை!

கணக்கு வாழ்க்கையில்லை!
கானல் நீர்
தாகம் தீர்ப்பதில்லை!

காலங்கள் நின்று போவதில்லை!
கோலங்கள் மகிழ்ச்சி அளிப்பதில்லை!
குவலயம் நின்று போவதில்லை!

வாகன ஓட்டி

எட்டிச் செல்ல
முட்டிச் செல்கிறான்.

தூசியென, முன்நில்
முதியவரை,
வீசிக் கடக்கிறான்.

முணு முணுப்புடன்
முகம் இறுக்கி,
முறுக்கி வெல்கிறான்.

சாலையில் சவாரி
சாகச களமாடி,

'பொசுக் பொசுக்' கென்ற
பாய்ச்சலில்,
பந்தைய  விசையேற்றி;         

சரக்கென்று
பாயும் கத்தி போல;

நிலை தடுமாற்றி
நிர்க்கதியாக்கினான்.

பெண்களைப் பேணுவோம்!

(புதுச்சேரி சிந்தனையாளர் பேரவை கவியரங்கம், 18.03.2018, ஞாயிறு,, மாலை ஜோதி கண் மருத்துவமனையில் நடைபெற்றது.அப்போது வாசித்த கவிதை)

பெண்களைப் பேணுவோம்!

உன்னுள் பாதி அவளில்லை!
உயிரில் பாதி அவளாகும்.
கண்களில் பாதி அவளில்லை!
கண்ணின் பாவையே அவளாகும்.
உள்ளதென்பது நீயாயின்,
உண்மையென்பது அவளாகும்.

கருவான போதும் போராட்டம்!
கழிந்த பிறகும் போராட்டம்!
போராட்டமே வாழ்க்கையாக- அவள்
ஓர் 'இடது சாரி'

எங்கிருந்து எழுவது?


சுயத்தில் விடுதலைப் பெற வேண்டும்;
சூழ்ச்சி தாண்டி எழ வேண்டும்;
கவிந்திடும் சூழல் புரிதல் வேண்டும்;
கவின்மிகு தலைமை ஏற்க வேண்டும்;
பெண்கள் பெருமைப் புலம் வேண்டும்;
பெருவெளிப் பயண நிலை வேண்டும்.

Sunday, March 18, 2018

காடழியின் நாடழியும்!

(இலக்கியச் சோலை இலக்கிய மன்ற கவியரங்கம், 17.03.2018ல் 'செகா' கலைக் கூடத்தில் நடைபெற்றது. அப்போது அளித்த கவிதை.)

காடழியின் நாடழியும்!

காடை அழித்தான்! கழனி அளித்தான்!
மேட்டை அழித்தான்! தோட்டம் அமைத்தான்!
நோட்டம் பார்த்தான்! அணைகள் எழுப்பினான்!
அழிவின் தொடர் அயராது நீட்டினான்!

பசி அடங்கா பெருவணிகக் காலடியில்;
கான் நலன்கள்,கனிம வளங்கள், உயிரினங்கள்.
தோண்டியதைத் தாண்டியும் துடைத்தெடுத்தான்,
துரித உணவு அங்காடி போல்;
துயரம் சேர்த்தான்.

மலைமக்கள் ஆதாரம் அழித்தான்,
அவரின் அடையாளம் சிதைத்தான்;
நவீன 'தலிபான்' ஆக.

நீண்டிடும், 'தேரி', 'நர்மதை', வரிசை
நித்திலத்தில் இறக்கி, அதிர்ந்திடும்;
சூழல் பன்மயக் கேடுகள்.
சூழ்ந்திடும் அழிவின் கோடுகள்!

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது" "கெளரி லங்கேஷ்"

"துப்பாக்கியால் சிதைத்திட முடியாது"
"கெளரி லங்கேஷ்"

கறுப்புக் கருத்தின் வெறுப்புத் தீயில் வீழ்ந்தாய்!
துமிக்கியே அஞ்சும் துணிவுக் கருத்தின் துடிப்பு நீ!
நடிப்பு ஊடகரிடை எதிர் துடுப்பு போட்டாய்!
எது வரினும் ஏற்பேன் என்றாய்!

நக்கியே வாழும் மனிதரிடை, எக்கியே நடை பயின்றாய்!
ஏக்குழுத்து மிடுக்காய்!
நாவின் வலிமை நாள்தோறும் பறைசாற்றி,
நாச வெறியரின் நா வன்மை உடைத்தாய்!

கருத்துரிமை,சகிப்பு, சரிநிகர் உணர்வூட்டி,
சந்ததி ஒருங்கிணைத்தாய்!
தந்தை வழியில் சமரசம் துறந்து,
சனாதன சங்கிலி அறுத்தாய்!

அச்சுறுத்தல், அலறல், எச்சரிக்கை
அலட்சியம் செய்தாய்!
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி அணியில்
இலட்சியப் பயணம் கூட்டினாய்!

ஒற்றைப் பரிமாண அரசியல் இருப்பை,
ஓங்கி நொறுக்கினாய்!
கருத்தாயுதம் தரித்தாய்!

தோட்டாக்கள் தோற்கும்,
இழிவின் இருள் கிழித்த உம் சிந்தனைகள்!
ஊர் எட்டும் உலகு எட்டும்!
ஓயாது உம் பயணம்!

("புதிய உறவு", சிற்றிதழ், புதுச்சேரியில் நடத்திய கவிதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கவிதை, தற்போது பதிவேற்றம் காண்கிறது)

Friday, March 16, 2018

புதுச்சேரியில் போராட்டம்!

தமிழகம்-புதுச்சேரியில் விதைக்க முற்படும் வெறுப்பு அரசியலை தடுத்து நிறுத்த, புதுச்சேரியில் போராட்டம்!.

லெனின், பகத்சிங், அம்பேத்கர், பெரியார் சிலைகள் அல்ல மக்கள் சிந்தாந்தங்கள் என்பதை வலியுறுத்தி, அகில இந்திய மக்கள் மேடை, ஜீவா திடல், சாரம், புதுவையில், 15, மார்ச், 2018, மாலையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது.

அதில், பாரதிய சனதா- ஆர். எஸ்.எஸ். கூட்டணி, மக்கள் ஒற்றுமையைக் குலைக்கும், சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளும் தாக்குதல் மற்றும், தலித் மக்கள் விரோதப் போக்கினைக் கண்டித்தது.

பாசிச தலை எடுப்பை எதிர்த்து; சனநாயக சக்திகள் ஒன்று திரண்டு; சகிப்புத்தன்மை உடைய; மக்கள் சனநாயக;  மதச்சார்பற்ற; சமதர்ம இந்தியாவைப் படைக்கும் அவசியத் தேவை குறித்தும்  நிகழ்ச்சியில் பேசப்பட்டது..

Thursday, March 15, 2018

புறக்கணிப்பு

இன்று, உலக நுகர்வோர் நாள்(15.03.2018). புதுச்சேரி அரசு மாநில நுகர்வோர் பாதுகாப்புக் குழுவை அமைத்திடாமல், 15 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிப்பு செய்து, நுகர்வோர் நலனில் அக்கறையற்று வாளாவிருக்கிறது.


இச்செயலை கண்டிக்கும் வகையில், புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், புதுச்சேரி, தலைமை அஞ்சலகம் முன்பாக, உலக நுகர்வோர் நாள் புறக்கணிப்பு கண்டன ஆர்ப்பாட்டம், காலை 10 மணி அளவில் நடைபெற்றது.

நிகழ்வில், பல்வேறு பொதுநல அமைப்புத் தலைவர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புத் தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர்.

Wednesday, March 14, 2018

பனை

மயிர் சாட்சி மனிதரிடை
உயிர் சாட்சி!
உருக்குலைந்த மாட்சி
ஊருக்குள் காட்சி!