ஒரு சுண்டு விரல் முனை நசுங்கி, வளைவாக இருப்பது , அவள் கவனத்தை, வெகு காலம் கழித்து இப்போது தான் ஈர்த்தது.
பள்ளி செல்லும் பருவம், தனியார் பள்ளியில் ஆங்கில பயிற்று மொழியில், அப்பாவின் ஆசைக்கு இணங்க, சேர்ந்து பயின்று வந்த சமயம் .கிளிப் பிள்ளை போல் ஆங்கில மொழி பாடல்கள், தத்து பித்து என்று, வயது ஒத்த பிள்ளைகளுடன் பாடி, ஆடி திரிந்த பொழுது.
கோடை விடுமுறை சற்று ஏ றக்குறைய இரண்டு மாதம். சலிக்க வெய்யிலில் விளையாடுவது.பம்பரம், கோலிக்குண்டு, கிட்டிப் புல், கபடி, கண்டேன்,கண்ணாமூச்சி, தாழ்வான பூவரச மரங்களில் ஏறுவது, அதன் இலைகளில் பீ ப்பி ச செய்து ஊதுவது, குச்சியில் வில், அம்பு செய்து மர த்தி ல் எய்து விளையாடுவது ,இப்படி எண்ணற்ற ஆட்டங்கள்.
இவைகளுக்கு மத்தியில், நண்பர்கள் வீட்டில் பல்லாங்குழி, தாய கட்டை விளையாட்டு. பெரியவர்கள் ஆட வேடிக்கை பார்ப்பது, சந்தர்ப்பங்களில் ஆள் இல்லாத நிலையில், உதிரியாக ,அணியில் இடம் பெறும் வாய்ப்பும் உண்டு.
சில நேர்வுகளில் அவரவர் பள்ளியில் கற்ற பாடல்களை பாடி, ஆடுவதும் உண்டு. இந்த வாய்ப்பு எனக்கும் நாய்க்கர் வீட்டு பிள்ளைகளுடன் பாட வாய்த்தது.
மர சாய்வு நாற்காலியில் சாய்ந்து, தன்னை மறந்து , குரல் எடுத்து பாடுவது அலாதியானது. நாய்க்க ர் இல்லாத போது அதில் அமர்வதே தனி அந்தஸ்து தான்.
ஒரு மே மாத பிற்பகலில் எங்கள் கச்சேரி அரங்கேற சில மணி நேரத்தில் ஓய்ந்து முடிவுக்கு வந்தது.
அது சமயம், நான் எழுந்திருக்க, வலது கையை கத்தரி போன்ற சாய்வு நாற்காலியில் இருந்து எடுப்பதற்குள் ,அவசர அவசரமாக ,முத்து,. சுறு,சுறுப்புடன், சுணடு விரலுடன் சேர்த்து அமர்ந்திருந்த சாய்வு நாற்காலியை மடக்கி விட்டான்.
என்ன சோதனை இது. உடல் எழுந்து விட, வலது கை தொங்கிய நிலையில் மேலே எடுக்க முடியாமல், மாட்டிக் கொண்டது. கிடுக்கியில் மாட்டிய பாக்கு போன்று நசுங்கிய விரல் தசை பிய்ந்து, இரத்தம் பீச்சிட, வலியால் துடித்த அலறல் சத்தம் உடன் இருந்தவர்கள் பயத்தில் பட படக்க, தெருக் கதவைத் தாண்டியது என் ஓட்டம். அரைக்கால் சட்டையும் ஆங்காங்கே நனைந்தது.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் என் வீட்டிற்கும் என் ஓலம் கேட்டது. மதிய உறக்கத்தில் இருந்த என் தந்தை என்னை நோக்கி ஓடி வந்து வசவுடன் முதுகில் இரண்டு சாத்து சாத்தி, ரிக் ஷா வாண்டியில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
உயர்ந்த சீலிங் உள்ள, பெரிய மண்டை கொண்ட மின் விசிறி காற்றை வாரித் தள்ள, உயரமான மேசை மீது மல்லாந்து படுக்க வைத்தனர்.ஆபரேசன் செய்வார்கள் என பயத்தில் என் அழுகை மேலிட. கட்டு மட்டும் போட்டு தைக்காமல் வைத்தியம் செய்து அனுப்பினர்.
அன்றிரவு முழுவதும் வலி. தூங்க முடிாமல் துடித்துக் கொண்டிருந்த என்னை, பாட்டி, வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்தில் அவர் மடி மீது சாய்த்து,கதை சொல்லி, பாட்டுப் பாடி மெல்ல தூங்க வைத்தார். ஆற டிக்கு துடிக்க உயரம், மாநிறம். உலக்கை பிடித்த கை, கூழ் துழாவிய, நெல் அவித்து ஊட்டம் தரும் தோற்றம்.
பம்பை, உடுக்கை சத்தம் கேட்டால் மருள் வந்து குல தெய்வம் -மதுரை வீரன் - குறி சொல்லும். மலையேற கற்பூரம் ஏற்றி அவர் கையில் அம்மா கொடுக்க, அதற்கு முன்பாக சொல் என்று வாக்கு கேட்டு, சாந்தி அடைவார்.
சில நிமிடங்கள் கழித்து, முகத்தில் தண்ணீர் தெளிக்க, தூ க்க கலக்கத்தில் இருந்து எழுவார் போல் விழிப்பார்.
ஆறு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அனுபவித்த வாழ்க்கை கதை, மனதின் பெட்டகத்தில் இருந்து நிகழ் காலச் சக்கர ஆரத்தில், இணை யாள் சுண்டு விரலைப் பார்த்து வினவிய போது தற்போது பதிவேற்றம் காண்கிறது.