Saturday, March 31, 2007

மயானக்கொள்ளை!

மயானக் கொள்ளை,
வெள்ளாளன் கோட்டை அழிப்பு.
மாகாளி வேடம் தரித்து,
ஆட்டுக் குலை வாயில் கவ்வி,
சூலத்துடன்.


பேச்சாயிகள், வேப்பிலைக் கொத்துடன்,
ஆட்டம் போட்டு,
ராசா வேடங்கள் தரித்து,
கத்தியுடன், கால் சலங்கைகள்
ஒலி எழுப்பி, கூட்டமாக,
உழைக்கும் பெரும்பான்மைச் சமூகம்,
ஊர்வலம்.


வீடு, வீடாக,
தண்ணீர் குடம் சாய்த்து,
தலை வாசல் கோலம் போட்டு,
பூசை செய்து மகிழ்ந்திடும்,
கலாச்சார நிகழ்ச்சி.


இம்முறை,
ஊர் தனியாக, குப்பம் தனியாக,
வெவ்வேறு நாளில் கொண்டாட்டம்.
அனுமந்தை கிராமத்தில்,
அந்தக் காலத்தில் கொண்டாட்டம்.
இரண்டு, மூன்று நாள்.


கிராம மக்கள் சாரி, சாரியாக,
குடும்பம் குடும்பமாக,
சோத்து மூட்டைக் கட்டி,
வந்திறங்கி, மாட்டு வண்டியை,
ஓரம் கட்டி,
இரவு நேரங்களில்,தென்னந்தோப்புகளில்,
விருந்து, கேளிக்கை.


விடிந்த பின்,
இட்லி, தோசை,
குளக்கரையில் சுட்டுத்தருவார்.
துட்டு தந்தாள்.


மறுநாள் மயானத்தில்,
உணவுப்பண்டங்கள் படைத்து,
சாமி ஊர்வலம் வர,
பழங்களும் சேர்த்து,
நாலா பக்கமும் வீசுவார்.


கொய்யாப்பழம், மாம்பழம், கொழுக்கட்டை,
கடலை,
நானாவித பண்டங்களும்.
பந்து பிடிப்பது போல்,
பக்குவமாக பிடித்துச் சேர்ப்பார்,
பைகளுக்குள்.


சிலர் பேய் பிடித்து,
ஆட்டம் போடுவார்.
"என்ன இது"?
என்று கேட்டால்,
அப்படித்தான்.
"நீ சின்னப்பிள்ளை உனக்குத் தெரியாது"
என்று பதில் இருப்பார்,
பக்குவமாக.


தலைமுடியைப் பிடித்து,
இழுத்துச் சென்று,
மரத்தில் அறைவார்,
குறியீடாக.
பேய் ஓட்டுபவர்.


விழா இடையில் வியாபாரம்,
சுறு, சுறுப்பாக.
விளையாட்டு, வேடிக்கை.
சட்டி, பானைகள்,
சமையல் பாத்திரங்கள்,
கண்ணாடி வளையல்கள்,
பொம்மைகள்,போட்டோ நிலையங்கள்.


பஞ்சு மிட்டாய், கடல் பாசி,
கமர் கட்டு, தேங்காய் மிட்டாய்,
ஐஸ் மிட்டாய்,
கழைக்கூத்து.

Friday, March 30, 2007

உச்சநீதி!!

பெண் குழந்தை,
வலக்கை விரல்கள்,
துண்டிப்பு.
பீகாரில்,
வன்கொடுமை.


"இந்து மத",
தாக்குதல்.
"இழிசனர்",
இலக்கில்.
இடைவிடாது,
அரங்கேற்றம்.


கீரைகள்.
கீழ்ச்சாதி பறிக்கலாமா?
"உயர் சாதி"
உச்சநீதி!!

.....கைபேசியடா

கடற்கரையில் நடக்கிறார் காலாற,
கவலைகள் சுமந்து.
காதில் பேசி,
'கல கல'வென்று ரீங்காரம்.
அடுத்தவருக்கும் ஒலிபரப்பு,
செய்தி வாசிப்பு.


எவர் கையிலும், மெய்யிலும்,
கை பேசி.
கழிவறையிலும்,
கட்டில் அறையிலும்,
உண்ணும் போதும்,
ஓயும் போதும்,
ஓயாமல் பேச்சு.


ஓர் நொடியும் வீணாகாமல்,
ஒன்றிரண்டு கருவிகள்,
உள் பையில்,
வெவ்வேறு வடிவங்களில்.
பேச்சாளர்கள் நாம்!


கருவுற்றிருக்கும் தாயானாலும்,
கையில் பேசி,
உள்ளிருக்கும் குழவிக்கும்,
ஒலியுணர்வு அளிக்கிறாள்!


"ஒலியல்" இல்லை, ஆயினும்,
ஓராயிரம் செய்திகள்,
பரிவர்த்தனை,
தகவல் தொடர்பு,
"எங்கெங்கு காணிணும்" கைபேசியடா!

Thursday, March 29, 2007

மலர்கள்..

தூவிய மலர்கள் வாடவில்லை!
கூவிய வாய்கள் ஓயவில்லை!
"குய்யோ", "முறையோ",
"அய்யோ","அப்பா",
"அம்மா",

வாடிய உடலை வாழ்த்தி,
வாசனை செய்து,
வீழ்ந்து கொண்டிருக்கும்.
வீதிகளில் எல்லாம்!
எறும்பு சாரியை,
எண்ண வைக்கும்!

Wednesday, March 28, 2007

மக்கள் எச்சரிக்கை!

விடுதலைக்குப் பின்,
புதுவை கண்டதில்லை,
இப்படியொரு மக்கள் எழுச்சி,
கட்சி அரசியலும்,
சங்க அரசியலும்,
பின் தொடர,
முன்னோடி போராட்டம்!


மீன்பிடித் துறைமுகத்தில்,
ஏமாற்றப்பட்ட மக்கள்,
விழித்துக் கொண்டனர்.
ஆழ்கடல் துறைமுக,
விரிவாக்கத்தில்!


40 ஏக்கர் போனது.
400 ஏக்கரும் போக,
அரசு "புரிதல் உணர்வு",
திரை மறைவில்.
இருட்டறை நாடகம்,
வெளிச்சம்!


அந்நியரும், ஆண்டவரும்,
தோற்பர் சுதேசிகளிடம்.
விடுதலை வேள்விக்குச்
சொந்தக்காரர்,
விட்டில் பூச்சி மக்கள்,
என்ற நக்கல்,
இன்று சிக்கல் ஆனாது!


பெண்ணும், ஆணும்,
சாலை அடைத்து,
கூட்டமாக, ஊட்டமாக,
உயர்த்திக் குரல் எழுப்பி,
பதாகை சுமந்து,
பழைய பேருந்து நிலையத்தில்,
ஊர்வலம்!


ஐய்யாயிரம் பேர்,
அணி அணியாய்,
இயக்கங்களுடன்,
முழக்கங்கள் இணைத்து,
கோரிக்கை அட்டைகளுடன்,
ஆர்ப்பரித்து, பரணி பாடினர்!


நீரைக் காப்போம்!
மண்ணைக் காப்போம்!
மக்களைக் காப்போம்!
புதுவையைக் காப்போம்!


உணவுப் பங்கீட்டு,
அட்டை நகல்கள்,
சட்டை செய்யாமல்,
எரியூட்டினர், போலி அரசு,
கவுரவத்தையும் சேர்த்து.
சரித்திரம் படைத்தனர்.


போராட்டங்களின் வரிசையில்,
இணைத்துக் கொண்டனர்,
எதிர்ப்புணர்வை, வெறுப்புணர்வை,
அலட்சியம் செய்தால்,
இனிமேல்,
இல்லது போகும்,
அதிகாரம், ஆட்சி,
எச்சரிக்கை செய்தார்!!

ஜவகர் மஞ்சி-பீகாரி

கல்யாணக்கடன்,
"நாலு பத்து கிலோ அரிசி"
"மூணு ஒன்பது ஆண்டுகள் உழைப்பு"
கடன் தீரவில்லை!
கொத்தடிமையும் தீரவில்லை!

இன்னும் வேணுமாம்,ஐய்யாயிரம்!
விடுதலைக்கு!
வட்டி,
மாதம் 60 விழுக்காடு,
மட்டுமே!

உபதேசம்..

எல்லாம் சொல்வேன்,
உனக்கு!
எனக்கு...?

அச்சம் தவிர்..!

அச்சம் தவிர்!
ஆண்டுகள் பல வாழ்ந்து என்ன பயன்,அச்சத்துடன்."அஞ்சுவது அஞ்சாமை பேதமை". அஞ்சுவது என்பது யாது?என்ன அதற்கு வரையறை.வள்ளுவர் காலத்து "அஞ்சுவது", மன்னனைக் கண்டு,மன்னனின் சட்டங்களைக் கண்டு. தற்போது,ஆட்சியின், திரைமறைவு அநியாயங்கள், அதிகாரங்கள். 'தடா','என்.ஸ்.ஏ','எஸ்மா','குண்டர் சட்டம்' போன்ற பல புதிய சட்ட வரிசைகள். வளர்ச்சி, முன்னேற்றம் எனும் பெயரில் நிகழ்த்தப்படும் "வளர்ச்சி பயங்கரவாதம்", ஆகிய பல பரிமாண நிரல்களைக் கண்டு.


காலம் உருண்டோடியிருப்பினும், இன்றும் அச்சம் என்பது, நிலவும் சமூகத்தின், விதிக்கப்பட்டுள்ள ஒழுங்குகளை மதித்து நடப்பது என்பதாகத்தான் உள்ளது. "அச்சமில்லை,அச்சமில்லை", பாரதி தமக்குத் தாமே தற்கருத்தேற்றம் செய்து கொண்டார். அவருக்கும் தெரிந்திருந்தது, ஆங்கிலேய அடக்கு முறை வடிவங்களைப் பற்றி.


அவற்றை எதிர்கொள்ளும் அஞ்சாமையை ஒரு இயக்கமாக,தேசிய கீதமாக,தெம்பு அளிக்கும் உணர்வாக, அனைவருக்கும் அவரால் தர முடிந்தது. அதுபோன்று, 'ஒலியல்'(டானிக்) அளிக்கும் கவிஞர், இயக்க முயற்சியுடன் இணைந்து செயல்படுவர், 'வெல்ல முடியாத எண்ணிக்கையில்' இன்று தேவை!

Tuesday, March 27, 2007

ஏது பழுது?

எழுத்து,சொல்,எண்ணம்..
எழுது,சொல்..
உன் எண்ணம்..
மனதில் உழுது,
ஏட்டில் எழுது.
ஏது,
அதில் பழுது?

உணர்ச்சிப் பிழம்புகள்!

கோபத்தில், குடும்பச்சண்டையில் பேசும் வார்த்தைகள், மனித உடல் உறுப்புகள், தலையிலிருந்து கால் வரை, சரளமாக வெளியேறும். சமயத்தில் கணவன், மனைவியின் அந்தரங்க செய்திகள், அனாவசியமாக கையாளப்படும். கோபம், பொறுமல், கொந்தளிப்புகள், பயணப்பட தயாராயிருக்கும் புகைவண்டி இரைச்சல் போல், புகைபோக்கி சாயலில்.


விளக்குமாறு, கரண்டி போன்ற சமையல் உபகரணங்கள் தாக்கும் கருவிகளாக, தாங்கி பிடிக்கப்பெறும். ஆட்டம் முடியப்போகும் திரைப்படம் போல, அறுத்துக்கட்டும். ஆணித்தரமான, கறாரான, வெட்டு ஒன்று, துண்டு இரண்டு பேச்சு.


உணர்ச்சிப் பிழம்புகள் இவர்கள்தான்! மறுபடியும் சாதி, சனத்தை அண்டாதவர்கள்! என் அப்பன், ஆத்தா தலைமுறையினர்! என் முறையில் தலை எழுத்து சற்று மாறி உள்ளது. எதிர்காலத்தில் நிரம்பவே மாறும் வாய்ப்பு உள்ளது!


'அவர்கள் வெளியே இருக்காங்க!,'உஸ்', எச்சரிக்கை இருக்கு. ஆம், ஆயாவின், ஆவேசம் அமர்க்களம் பல ஆண்டுகளாக பார்த்து வருகிறவன்தானே. புரியாதா அவனுக்கு? மனிதர்களை புரிந்து கொள்ள தெரியாதா?

புதுவையிலும்...

உள்ளூர் பெருமை அறியாமல்,
ஊட்டியின் பெருமை பேசுகிறோம்!
மார்கழியின் மகிமை புரியாமல்,
ஊர்களின் உன்னதம் பேசுகிறோம்!


சில்லென்று காற்று,
பனி மூட்டம்,
கதிரவன் தாமதம்,
டில்லியில் மட்டும் இல்லை!
புதுவையிலும் உண்டு.


அனுபவிக்க மனமிருந்தால்,
அமைதி இருந்தால்,
ஆயிரம் உண்டு,
இங்கேயும்,
அழகின் சிரிப்பு.

அரங்கேறிய அந்த நாள்!!

உழுவார் உலகத்தார்க்கு ஆணி!
கழன்று,கடை நிலையில் உள்ளார்,
தமிழகத்தில்!


பருவ மழை பொய்த்தால்!
பழி போடுகிறார்,
இயற்கையின் மீது!


பருவமழை பெய்யும் போது,
சேமித்து வைக்க,தேக்கி வைக்க,
தடுத்தது யார்!
அணைகளையும் தாண்டி,
அணை போடுவது யார்!


சர்க்கரைப் பொங்கலுடன்,
மதிய உணவு!
கண்ணிய மிக்க,
நடவடிக்கைதானா?


புண்ணுக்கு பூச்சு,
தீர்வாகுமா?
புண்ணியர்களே!
சுயமரியாதை
வழித் தோன்றல்களே!


ஆண்டபோதும்,
ஆள்கின்ற போதும்,
கவர்ச்சி அறிவிப்புகள்!
யாசகம் பெறுபவர்களாக,
தமிழர்கள்,
மாநிலம் எங்கும்.


தன்மான எழுச்சி பெற்று,
தமிழர் எழுந்தால்,
வேலையேதும் இல்லை,
உங்களுக்கு.

Monday, March 26, 2007

புதுவை மக்கள் எழுச்சி- பகுதி..2

இன்று(27.03.07),தேங்காய்த்திட்டு நில கையக எதிர்ப்புக் குழு, மீனவர் அமைப்புக்கள், பெரியார் திராவிடர் கழகம், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, மீனவ விடுதலை வேங்கைகள், மக்கள் சிவில் உரிமைக் கழகம், செம்படுகை நன்னீரகம், பூவுலகின் நண்பர்கள், பிற சமூக அமைப்புகள், புதுச்சேரியை ஒட்டு மொத்தமாக பாதிக்கும், ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதை எதிர்த்த போராட்டத்தின், அடுத்த கட்டமாக, புதுவை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சட்டமன்றம் நோக்கி, ஊர்வலமாக சென்று தங்களின் உணவுப் பங்கீட்டு அட்டை நகலை அரசாங்கத்திற்கு திருப்பி அளிக்கின்றனர்.

பந்தயக் குதிரைகள்!

நாம் குதிரைகளே!
பந்தயக் குதிரைகள்.
நம் மீதும் எண்கள்,
ஜாக்கிகள்,முதலாளிகள்.
பேசும் குதிரைகள்.


வளவளவென்று,
தொண தொணவென்று.
பந்தய நேரம் அதிகம்.
மிக விசாலமான ஆடுகளம்.



பந்தய முடிவின் பலன்,
குதிரைகள் அனுபவிக்கின்றனவா?
ஆட்டத்திற்கு ஆட்டம்,
தள்ளுபடி செய்யப்படும்,
குதிரைகளும் உண்டு.
சொத்தை என்று சொள்ளையென்று.


நாமும்,
கழித்துக் கட்டப்படுகிறோம்.
நீதி மன்றங்கள் எங்கே?
தடை ஆணைகள் எங்கே?
நினைவுச் சின்னங்கள் எங்கே?

மறைந்து போகும் கைவினஞர்.

குயவர்பாளையம், கொசக்கடை, ஆகிய பெயர்கள் கைவினைஞரான குலாளர் சமூகத்தை, நம் நினைவிற்கு கொண்டு வருகிறது.கோட்டக்குப்பத்தில் கூட, குயவர்கள் தொழில் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.புதுவை அரும்பார்த்தபுரத்தில் கூட, மண் கலயங்கள் செய்வதைப் பார்த்திருக்கிறேன்.கொசக்கடைத் தெருவில், மத்திய சிறைச்சாலைக்கு பின் பக்கத்தில், பானைகள், சட்டிகள் விற்கும் சந்தை இப்போதும் உண்டு.

அலுமினியம் 60களில் ஊடுருவல் செய்தது. அடுத்து, எவர்சில்வர்,(நிலைவெள்ளி) அதற்கடுத்து, பிளாசுடிக்(ஞெகிழி). இவைகள் விடை கொடுத்து அனுப்பின, விரைவாக மண்பாண்டங்களை. புதிய பாணி வாழ்க்கை முறைகள் உலை வைத்தன, பூர்விக மண்ணின் அம்சங்களை. ஒரு காலத்தில் அனைத்து பிரிவு மக்களின் சமையல் பாத்திர தேவைகளை பூர்த்திசெய்த, மிக அடிப்படையான தொழில் பிரிவு மக்களான குயவர்கள்,மண் உடையார் என்றும் அழைக்கப்பட்டனர்.

இம்மக்கள், மதம், கலாச்சாரத் துறைகளில், குறிப்பாக பொம்மைகள், குதிரைகள், வீரர்கள், சாமி உருவங்கள், கோவில் கோபுரங்களில் வைக்கும் கலசங்கள், கும்பங்கள், கரகாட்டத்திற்கு கலயங்கள் என்பன போன்ற பிற படைப்புகளிலும், பண்பாட்டு முத்திரையை, தனிப் பதிவுகளை ஏற்படித்தினர். தற்போது, இவர்கள் முகவரி இல்லாத கடிதங்கள், செல்லுபடியாகத நாணயங்கள்.

Sunday, March 25, 2007

உலகளாவியம்!

ஊட்ட முள்ளவர்களுக்கே!
முந்தி அடித்து,
முதலில் வருபவர்களுக்கே!
அட்டவதானிகளுக்கே!
இரண்டு, மூன்று, ஆறுதல் பரிசு,
எல்லாம் செல்லாத காசுகள்,
சொல்லாத வாக்குறுதிகள்!


பல கலை பட்டங்கள்,
பட்டயங்கள், ஆராய்ச்சிப் பட்டம்,
அனுபவச் சான்று,
பன்மொழித் தேர்ச்சி,


தட்டி தட்டிப் பார்த்து,
"கொட்டிக் கொடுக்க"
உன்னைக் கட்டி,
அழைத்துச் செல்லும்,
வேலை வாய்ப்பு!


தனியார் நிறுவனங்கள்!
சந்தையில் பல்லைப் பார்த்து,
மந்தையில் மடியைப் பார்த்து,
மாடு பிடிப்பது போல்!
ஆள் பிடிக்கும் வேலை!
ஆராவரத்தோடு!


முகவர்களின் கூடாரங்களில்!
முனைவர்களின் ஆசியுடன்!
பொன் விழா சுதந்திரத்தின்,
பொலிவான தோற்றம்!
போற்றுங்கள்! எல்லாம்,
ஜன கன மன!!

"சுனாமி"

சூறாவளிகள் சுழன்றடித்த போதும்,
சுக்கு நூறாக, சிதைத்த போதும்,
சிதையாத, எம் வாழ்க்கை,
சிதைந்தது, "சுனாமியில்",
நொடியில்.
நம்பிக்கையும் சேர்த்து.

பொல்லாதவர்!

நிவாரணங்களிலும்,
அரசியல்.
போட்டி போட்டு,
வெளிச்சம்.
பொல்லாதவர்கள்.

சிலர்...

உதிர்ப்பது யாவும்,
உளறல் என்றறிந்தும்,
உரத்தொலிப்பது ஏன்?
அரத்தம் தலைக்கேற,
ஆர்ப்பாட்டம் ஏன்?
பண்பிலா சொற்கள்,
அன்பிலா மனதில்,
ஆர்த்தெழுவது ஏன்?

கண்ணார்!

கொளுத்துகிறார் கற்பூரம்.
வெளியே, தார்ச்சாலையில்.
கண்ணார் கழிப்பதற்கு.
வாரந்தோறும் வரிசையாய்.
போட்டிப்போட்டு.


வெளிச்சம் என்னவென்று,
வெளியே வந்து பார்ப்பவர்,
துப்பிவிட்டு, தப்பிவிடுவார்.
தம் வீட்டுக்கதவை தாளிட்டு,
வந்த வேகத்தில்.


'இவன் இப்படித்தான்',
'நம் வீட்டுக்கு நேராக',
'செவ்வாய்க் கிழமைகளில்',
'அவள் ஞாயிற்றுக்கிழமைகளில்',
ஓயாது, இவர்கள் ஓலம்.
ஒவ்வொரு நாளும்.

பேசிடும் மனம்...

பார்வை பேசிடும்.
மொழிப் பிரச்னை இல்லை.
புரிகிறது உள்ளம்.
விரிகிறது,
கால வெளிகளைக் கடந்து.
கண் சிமிட்டும்,
ஒளிப்படமாய் ஒளிருகிறது.
ஓடுகிறது, மனத்திரையில்.
பல பரிமாணத்தில்,
பண்ணிடையாய் பசையுடன்.

"விழிப்பு"

கொசுவத்தி சுருள்,
ஏகாதசி விழிப்பு,
"வைகுந்தம்"
எவருக்கு?

Saturday, March 24, 2007

...வாழ்க!!

கார் அரிசி போச்சி!
"கார்" தொழிற்சாலை வந்திடுச்சி!
உழவிற்கு...?
உண்பதற்கு...?
"உலகமயம்" வாழ்க!!

அழிவு...

பிரம்மபுத்திரா,
மோசுகோவா,
இணைந்தால்!
பேராறு! பேரானந்தம்!
ஊருக்கு, உலகுக்கு அன்று.


98ல்,"பிரம்ம,மோசு",
இணைவு ஒப்பந்தம்.
ஏவுகணை உருவாக்கம்.
ஆனந்தம்,ஆர்வம் யாருக்கு?
போருக்கு! அழிவுக்கு!
ஊருக்கு? உலகுக்கு?

மானிடம் வெல்!

அடுத்தவன் செயிப்பதில் ஆர்வம்!
ஆராவரம்!
நீ செயிப்பது எப்போ?
நினைவில் கொள் தோழா!
அடுத்தவனுக்கு கை தட்டி,
ஆள் உயர மாலை சாத்தி!
ஆயுளை முடித்துக் கொள்ளாதே!
உன்னை உயர்த்திக்கொள்!
உயரத்தில் நிறுத்திக்கொள்!
உழைப்பில்,
சுயமாக, மரியாதை கொள்!
மக்களின் நிலை சொல்!
மானிடம் வெல்!

Friday, March 23, 2007

....காட்சிகள்!

வெளிச்சத்திற்கு வந்த பின்,
வேலை எல்லாம் முடிந்த பின்,
ஊடகத்தின் பிடியில்,
'உச்சு' கொட்டும்,
உயர்ந்த காட்சிகள்.


உருப்படியாய் நீதி,
தெருப்படியில் கிடப்பவர்க்கு,
தேறவில்லை!
தேற்றம் இல்லை!

கோழி...?

குப்பையைக் கிளறும் கோழி.
குப்பை இருக்கிறது.
கோழி...?

...இல்லை!

பஞ்சடைந்த கண்கள்,
பழுதடைந்த நெஞ்சம்,
நாம் அவர்கள் இல்லை!
நாம் நாமாகவும் இல்லை!

"நம்மவர்"

அரசியல் வசதி,
அடியாள் வசதி,
அத்தனையும், அன்று.


ஆன்மீகவாதி,
அறக்கட்டளை,
கல்லூரிகள்,
கவின்மிகு மனைகள்,
மருத்துவக் கல்லூரி, இன்று.


அரசியல் ஆசிர்வாதம்,
ஆதாயம்,
அனைவர் முன்னேற்றம்.


நல வழியில் நாடு உயரும்,
நம் பிள்ளைகள் படிப்பர்,
நானாவித நன்மையும்,
நலம் பயக்கும், நம்மவர்.


கால்வாய்,
பாசனம், நட்டமடையாது!
காற்றுக்கு பஞ்சமில்லை!
மின் விசிறி தேவையில்லை!
ஏரிக் காற்று,
"ஏசி"க்கும் தேவையில்லை!


குடிக்கத் தண்ணீர்,
அதற்கும் பஞ்சமில்லை!
இறங்கினால் ஏரி!
"விசாரணையில் மக்கள்"
"வேண்டியவர்"
நக்கல்!!

தானம்!

எவருடைய இரத்தமோ?
குருதி அணுக்கள் திரட்சி,
தெம்பளிக்க
இறங்குகிறது.
துளித் துளியாக,
நாடியில்,
ஏற்றம் காண,
பெறுபவர் வாழ்வில்,
மாற்றம் பேண.