Sunday, September 21, 2008

"இருளர்"!

வெட்டி!
நிலம் பிளந்து!
கொணர்வார்!
"இருளர்"!

நீலம்! பச்சை!
நீண்ட பட்டியல்!
இயற்கையின்
வயிற்றைப் பிளந்து!
கூலித் தொழிலாய்!
கூனிக் குருகி!

தம் மக்கள்
வாழ்வைச் சிதைத்து!
அடையாளம் அழித்து!
அடிமைத் தளை நீட்டி!
ஆயுதம் ஏந்தி!
அக்கிரமம்
செய்திடுவார்!

புதிய சனநாயக
புரட்சி என்பார்!
தோழமை அழித்து!
தோள் வலி உடைத்து!

அனைத்தும் நிகழும்
அங்கோலாவில்!
சியரோ லயோனில்!
ஆப்பிரிக்காவில்!

அன்னியர் அடிவருடி!
புண்ணியம் பல தேடி!

நளினம்!

எட்டி இருப்பவரிலும்
மோசம்!
கிட்டே இருப்பவர்!
கொட்டிக் கொடுத்தாலும்!
கோணல் மாறா!
நாணல் தோற்கும்
நளினம்!

பிடிக்காது!

உன்னை எனக்கு
பிடிக்காது!

என்னை உனக்கு
பிடிக்காது!

உன்னுள்ளிருந்தும்!
என்னுள்ளிருந்தும்!
உதித்த
தொடர்ச்சி!

பிடிக்கும்!

மோதல்!

வாழ்க்கையே சதுரங்கம்!
வெள்ளையும்!
கறுப்பும்!

முன்னணி வெள்ளையாயினும்!
வெற்றி!
எவருக்கு?

Wednesday, September 3, 2008

"தேசிய பொருளியல் ரீதியில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்"

கடந்த மாதம், 23 சூலை, 2008ல் புதுச்சேரி மாநிலத்திற்கு, "தேசிய பொருளியல் ரீதியில் பிற்படுத்தப் பட்டோர் ஆணையம்", வருகை புரிந்தது. இவ்வாணையம், இரண்டு ஆண்டுகளுக்கு முன், இந்திய அரசால் அமைக்கப்பட்டது. இதன் தலைவர், திருவாளர்.எசு.ஆர்.சின்கோ,ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஆகும். திருவாளர்கள். நரேந்திர குமார் மற்றும் மகேந்திர சிங் ஆணையத்தின் உறுப்பினர்கள். டாக்டர்.பி.என்.இராம், முதுநிலை ஆராய்ச்சியாளர் அவர்களும் உடன் வருகை தந்தார்.

தற்போது, நடைமுறையில் நிலவும், இட ஒதுக்கீடு சலுகை பெறாத, பெருளாதார ரீதியில் பிற்படுத்த நிலையில் உள்ளவர்களுக்கு, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிப்பது குறித்து, பரிந்துரை செய்திட, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ,கருத்து கேட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரிக்கும் வந்திருந்தனர்.

இவர்கள் வருகை சம்பந்தமாக, புதுவையின் பல்வேறு அமைப்புகள், சரிவர விளங்கிக் கொள்ளாமல், ஏற்கனவே உள்ள," தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்"தான் வருகின்றது என நினத்து, அதற்கேற்ப தமது கருத்துகளை தயார் செய்து, கருத்து கேட்பு கூட்டம் நடைபெறும் "திட்டத்துறை கருத்தரங்க வளாகத்திற்கு" வந்திருந்தனர்.

முன்னர் உள்ள பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சமூக. கல்வி அடிப்படையில் பின் தங்கியுள்ள வகுப்பினரை மதிப்பெண் அடிப்படையில் ஆய்ந்தறிந்து இறுதி செய்தது.சமூக ரீதியில், கல்விரீதியில் உயர்வு என்பது பொருளாதார ரீதியில் உயர்வுக்கு வழி வகுக்கும் என்பது அனைவரும் உணர்ந்தது.

பொருளாதரத்தில் மட்டும் பின் தங்கிய நிலை, சமூக நிலையில், கல்வி நிலையில் உயர்வு உள்ள மக்கள் பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் ஏற்படுத்தி தருவது, முன்பு ஏற்பாட்டில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கைய சிதைத்து விடும் என்பதில் ஐயமில்லை!

சாதிய கட்டமைப்பு உயிருடன் இருக்கும் வரை, ஏற்றத் தாழ்வுகள் சமூக ரீதியில் இருகிப்போன சூழலில், இட ஒதுக்கிடூ என்பது சாதிய ரீதியில் அளித்திட வேண்டியது கட்டாயம்!

பொருளாதார ரீதியில் தாழ் நிலையில் உள்ளவர்கள் என்பது கூட, சமூகத்தின் அடித்தளத்தில் உள்ளவர்களுக்குத்தான் அதிகம் பொருந்தும். அவர்கள்தான் இட ஒதுக்கீடு வரம்பிற்குள் ஏற்கனவே உள்ளனர்.

உயர் சாதியினருக்கு முன்பே உள்ள 'சமூக மதிப்பு', 'உயர் நிலை'-ஒதுக்கீடு-, குறிப்பாக கோவில் கருவறைக்குள் வழிபாடு செய்வது போன்ற முந்துரிமை, அனைத்து சமூகத்திற்கும் பொருந்துமா?

இந்தியக் குடிமகன் என்ற நிலையில் அனைவருக்கும் சமமான சமூக மதிப்பு, வாய்ப்பு கிடைக்காத நிலையில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு தொடர வேண்டும் என்பதே கோரிக்கை.

அதிலே கூட ,பொருளாதார அளவுகோல் வைக்கப் பட வேண்டும் என நீதி மன்றங்கள் தொடர்ந்து வலியுறுத்தும் நிலையில், இது போன்ற புது இட ஒதுக்கீடு முயற்சிகள் தேவையில்லை!

இப் பிரிவினர்க்கு, அரசாங்கங்கள் சலுகைகள், பல நலத்திட்டங்கள் அளிப்பதில் யாருக்கும் கருத்து முரண் இல்லை. எனினும் தனியாக இட ஒதுக்கீடு ஏற்பாடு ஏற்புடையது இல்லை!

Thursday, July 31, 2008

"சகிப்புத் தன்மை"

உண்ணா நிலை!
ஊரெங்கும்!
வெள்ளிக்கிழமை விரதம்
போல்!

உழைக்கும் மீனவர்!
தொடரும் துயரம்!
துண்டில் மீன் போல்!
துமிக்கியின் பிடியில்!

இலங்கைக் கடற்படை!
இடைவிடாது!
இழைக்கும் இன்னல்!
சொல்லி மாளாது!

என்றும் ஏந்தும்
கை!
இன்றும்
ஏந்தும்!
ஏதிலி போல்!

சுரந்த சோகம்!
பறந்து சென்றது!
பந்தலின் கீழ்!

காந்திய வழி!

"ஆசிய சோதி"

வேட்டை! நல்ல வேட்டை!
நாட்டில்! நம் காட்டில்!
நல்ல மழை!

பேரம்! நல்ல பேரம்!
நேரம்! நல்ல நேரம்!
"குதிரை பேரம்"

அரேபியாவை விஞ்சும்!
வேகம்!
எம்மிடம்! தாழ்வாரத்தை
தாண்டி!

உள் அரங்கில்!
ஓயாத வேட்டை!
சாயாது பொழுது!

ஆற்றல்! அணு தேவை!
எமக்கு! அட நமக்கு!

யார் சொல்வது!
ஏழை நாம் என்று!

கோடியில் புரளும்!
மக்கள் நாயகம்!
இரண்டாவது நாயகம்!

அழியா சேதி!

பார்வை வேண்டும்!

"கல்விக்கு கண்" தந்தாய்!
வயதாகி விட்டது!
அறுவை செய்!
"ஆடி" தா!

Wednesday, July 16, 2008

"தேவை உண்மை அறியும் ஆணையம்" (மொழி பெயர்ப்பு) தொடர்ச்சி....

100க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் ஆப்கானிசுத்தான், ஈராக் மற்றும் கெளந்த்தானமோ(கியூபாவிற்கு அருகில் உள்ள சிறை கொட்டடி) போன்ற பகுதிகளில்,அமெரிக்க காவலில் கொல்லப்பட்டனர் என்பது ந‌மது நாட்டின் புகழுக்கு,களங்கம் சேர்க்கக் கூடிய நிகழ்வுகள் ஆகும்.

நம்மால் வதைக்கு ஆளானவர்கள்,பெரும்பாலும் யாதும் அறியா அப்பாவிகள்.தார்மீக நெறி இழந்த,திறமையற்ற நிர்வாகத்திற்கு இச் செயல்கள் அழுத்தமான‌ சான்றாகும் என்பதே உண்மையாகும். 'மெக்கிலாட்சி' செய்தி இதழ் நிறுவன குழுமம் வெளியிட்டுள்ள, வதை மற்றும் இதர மீறல்கள் குறித்த,மிக மோசமான தொடர்களில், தாமசு ஒயிட் எனும் முன்னாள் இராணுவத்துறை செயலர் கூறியுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்திகளில், கெளந்த்தானமோ சிறை தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே,அதில் அடைக்கப்பட்ட சிறைவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினர், குற்ற நடவடிக்கைக்கு ஏதும் தொடர்பு இல்லாத‌வர்கள் ஆகும், என்பதாகும்.

மேலும், முகம்மது அக்தியார் என்கின்ற சிறைவாசி, அமெரிக்காவிற்கு சார்பானவர் என்பது அனைவருக்கும் தெரியும்.எனினும், அமெரிக்க இராணுவத்தினர் அவரை மிகவும் அடித்து துன்புறுத்தியுள்ளனர்,என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய மீறல்கள்,செப்டம்பர்,11க்கு பிறகு,பல ஆண்டுகளாக தொடர்ந்தன.காரணம், பெரும்பான்மையான நமது தேசிய நிறுவனங்கள் தங்களது கட‌மையை சரிவர ஆற்றவில்லை என்பதே பகுதி உண்மையாகும்.

சனநாயகக் கட்சி நாட்களை கடத்தியது, விசுவாசமான எதிர்க் கட்சியாக த‌மது கடமையை ஆற்றவில்லை. ஊடகத்துறையில் உள்ள நாங்களும் கட்டுப்பட்ட நாயாகத்தான் இருந்தோம், மாறாக காவல் நாயாக செயல்படவில்லை.நாட்டை, இது போன்ற சூழலில் கைவிட்டு விட்டோம் என்பதே உண்மையாகும்.

இருப்பினும்,சிறைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக சிவில் உரிமைக் குழுக்களும், வழக்குரைஞர்களும் தலைமைப் பொறுப்பேற்று செயல்பட்டனர்.ஆயினும் சில நீதிபதிகள் நிலைமைகளை அமைதியாக சலனமின்றி கவனித்து வந்தனர். நிர்வாகத்தின் உள்ளே சில பழமைவாதிகள் வெளிப்படையாகப் பேசினர்.

டைம்சு இதழ் எரிக் லிசட்பிலா,"புஷ்ஷின் சட்டங்கள்" எனும் தனது அருமையான நூலில்,"வெளிநாட்டினர் மற்றும் குடியுரிமைச் சேவை ஆணையர்",சேம்சு சிக்லர், அரேபிய‍‍‍‍ அமெரிக்க அண்டை அயலவரை, வீடு வீடாக சென்று சோதனையிட வேண்டும் எனும் திட்டத்திலிருந்து பின் வாங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.இப் புத்தகத்தில், ஒரு கட்டத்தில்,"நம்மிடத்தில் நமக்கென்று அளிக்கப்பட்ட ஒரு அரசியலமைப்புச் சட்டம் உள்ளது" என்பதைச் சுட்டி, வீடு வீடான சோதனை முறை சட்ட விரோதம் என்று குறிப்பால் உணர்த்தினார்.

நான் மிகவும் போற்றக்கூடிய நிலையில், இராணுவ வழக்குரைஞர்கள் உள்ளனர்.தங்கள் பதவிக்கு ஆபத்து என்கின்ற போதிலும், பெண்டகன் இராணுவத் தலைமையை மறுத்து செயல்பட்டனர்.இதன் காரணமாக, குடிப் பழக்கம் உள்ள தங்கள் நண்பர்களையும் பகைத்துக் கொண்டனர்.பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இசுலாமியர்களுக்காக, இவர்களுக்கு எதிராக சான்றுகள் பெரும்பாலும் தெளிவில்லாமல் உள்ள சூழ்நிலையில், இவர்களுக்காக பரிந்து பேசியவர்கள்.

இதுபோன்ற பிரச்சனைகளில் புலனாய்வு செய்திடும் உண்மை அறியும் ஆணையம் என்பது, பாரபட்சமற்ற,மதிப்பு மிக்க இராணுவ மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட உயர் பதவிகளில் உள்ள, இராணுவப் படைப்பிரிவுத் தலைவர்கள்,உயர் நிலையில் உள்ள புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆகியோரைக் கொண்டதாக அமைந்திட வேண்டும். இதுபோன்ற பின்னணி உடையவர்களின் கண்டறிதல் அறிக்கை,அரசியலில் அரங்கில் மிகுந்த நம்பகத் தன்மையை நமக்கு ஏற்படுத்தும்.

நான் அறிந்த இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மற்றெந்தப் பிரிவினரைப் போலவும்,நமது மீறல்கள் குறித்து அதிர்ச்சி அடைந்தவர்களாக உள்ளனர்.

Wednesday, July 9, 2008

அமெரிக்காவின் தேவை: உண்மை அறியும் ஆணையம்!

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர்,
அமெரிக்காவும் போர் குற்றங்கள் புரிந்துள்ள நாடுகளில் ஒன்றுதான் என்று குற்றம் சுமத்திய போதுதான் நமக்கு ந‌ன்கு தெரிய வந்தது, நமது நாட்டிற்கு தேவை, நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது ஒரு புதிய வழி என்பது.

"தற்போதைய அமெரிக்க நிர்வாகம், போர்க் குற்றங்கள் ஏதும் புரியவில்லை எனும் சந்தேகம் நமக்கு எழவேண்டிய அவசியமே இல்லை"

அமெரிக்க மீறல்கள் குறித்து ஈராக்கில் விசாரணை நடத்திய அமெரிக்க இராணுவத்தின் உயர் அதிகாரி, அந்தோணீயோ தகூபா, மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் எனும் அமைப்பின் செய்தி அறிக்கையில், அமெரிக்க இராணுவம் நிகழ்த்திய வதை குறித்து,
"வதை செய்யுங்கள் என உத்தரவிட்டவர்கள் மீது, எவ்விதமான நடவடிக்கை எடுத்திட முடியும் என்பதே தற்போது எழும் கேள்வியாகும்"

பொறுப்பேற்பு உணர்ச்சியின் முதல் கட்டம் வழக்குகள் தொடுப்பது என்பதல்ல.ஆன்ம தேடல் வழி, ஒரு தேசிய தூய்மைப்படுத்துதல் பணிக்குத் தலைமை ஏற்றிடும் வாய்ப்பு உள்ள, ஒரு தேசிய உண்மை அறியும் ஆணையம் அமைத்திடுதல் நமக்கு இன்றியமையாத தேவையாகும்.

இதுதான் தென்னாப்பிரிக்க அரசாங்கம் நிறவெறிக் கொள்கைக்குப் பின் உண்மை அறிதல் மற்றும் இணக்க உணர்வு ஆணையம் அமைத்து செயல்பட்ட விதம் ஆகும்.

ஐக்கிய அமெரிக்க நாடும் இனவெறித் தொடர்பாக கெர்னர் ஆணையம் அமைத்து செயல்பட்டது. 1980ல் அமைக்கப்பட்ட ஆணையமும், இரண்டாம் உலகப்போரில் சிறை வைக்கப்பட்ட சப்பானிய அமெரிக்கர்கள் குறித்து ஆராய்ந்தது.

தற்போது, செப்டம்பர் 11 நிகழ்விற்கு பிறகு, நிகழ்ந்தேறிய மீறல்கள் குறித்து புலனாய்வு செய்திட, இதேபோன்ற ஒரு உண்மை அறியும் ஆணையம் அமைத்திட வேண்டிய தேவை உள்ளது.

நம‌க்கு முன்பே தெரியும் ஐக்கிய அமெரிக்க நாடு,நெல்சன் மண்டேலாவை கண்காணிக்கப் படுபவர்கள் பட்டியலில் வைத்திருந்தது. சீன‌ இராணுவ‌ம், கொரியப் போரில் அமெரிக்க‌ கைதிகள் மன உறுதியை குலைப்பதற்கு, பயன்படுத்திய புலனாய்வு உத்திகளை பதிவேடுகள் வழி அறிந்து, அமெரிக்க இராணுவமும் பயன்படுத்தி்யது என்றும் அறிய வருகிறது.

எனினும், இப்படிப்பட்ட வதை உத்திகள் மூலம் பொய்யான வாக்குமூலங்கள்தான் பெற முடிந்தது ,என நாம் அறிந்த செய்தியாகும்.

Sunday, July 6, 2008

எரித்துக் கொள்!

அணு ஒப்பந்தம்
அவசியம் எமக்கு!
'சம்சாரம் போல்'

விலைவாசி உயர்வு!
அனைவருக்கும் பொது!
பொறுத்துக்கொள்!
தோழா!

அடுத்தமுறை,
ஆட்சிப் பொறுப்பு தா!
மின்சாரம் தருவேன்!
அடுப்பு எரித்துக் கொள்!
அடி வயிற்றையும்!
தடையில்லாமல்!

Saturday, June 28, 2008

நாட்டுக்குத் தேவை!

வெகு நாட்களாக மூடிக் கிடந்த,'சீவா ருக்மணி திரையரங்கம்' புதுச்சேரி வழுதாவூர் சாலையில்,பழைய 'செயராம்' திரையரங்கத்திற்கு எதிரில்,தற்போது'அட்லேப்'எனும் பெயரில், ரிலையன்சு நிறுவனம் வாங்கி, புதிப்பித்து, 'தசவதாரம்' திரைப்படம் வெளியிடப் பட்டுள்ளது.

இந்த திரையரங்கம் அமைக்க,1977ல், அரசாங்கத்திடம் தடையில்லா சான்று கோரியபோது,அப்போது காவல்துறை கண்காணிப்பாளர் ஆக, புதுதில்லியிலிருந்து புதுவைக்கு மாற்றலில் வந்திருந்த, திரு.காந்த்,இ.கா.ப.அவர்கள்,பெருகிவரும் புதுவையின் போக்குவரத்தை காரணம் சுட்டி,எதிரெதிரெ இரண்டு திரையரங்கள் அமைத்திட அனுமதி அளிக்க முடியாது என உறுதியான முடிவினை அறிவித்தார்.

எனினும், அரசியல் அழுத்தத்தின் காரணமாக,இரண்டு திரையரங்குகளுக்கும் சொந்தக்காரர்கள்,உயர்சாதி பேராயக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக, மக்கள் நலனுக்கு எதிராக, இவ்விரண்டு திரையரங்குகளும் அமைக்கப்பட்டன.

அதில் ஒன்று, உணவகமாகவும், விடுதியாகவும், சுற்றுலா மேம்பாட்டு அரசு மான்யங்களை விழுங்கி, கடன் தொகைகளை சாப்பிட்டு செம்மாந்து நிற்கிறது, தோப்பு துரவுகள் இருந்த இடத்தில்.

புதுச்சேரியின் போக்குவரத்து சிக்கலை, பிரெஞ்சு ஆட்சி வரலாற்றில் இருந்து, அறிவியல் பூர்வமாக பரிசீலனை செய்த முதல் காவல்துறை அதிகாரி‍, திரு. காந்த் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.

தாகூர் கலைக்கல்லூரி் பொருளாதாரப் பேரவையின்,ஆண்டு விழாவில்,அவர் பேசியபோது,புதுச்சேரியின் நகரம் திட்டமிட்டு் அமைக்கப்பட்டது.'புல்வார் சாலைகள்',சாலையின் இரு மருங்குகளிலும் மரங்கள் நடப்பட்டு, ஒரு கோழி முட்டை வடிவில், அன்றிருந்த கட்டைவண்டி,இழுவை ரிக்சா, மிதிவண்டி, குறைந்த எண்ணிக்கையிலான மோட்டார் வாகனங்கள் செல்வதற்கு ஏற்றதாக உருவாக்கப்பட்ட போக்குவரத்து நகரம் ஆகும் என்றார்.

1980களில் அவர், மாறிவரும் போக்குவரத்து தேவைகளை கணக்கில் கொண்டு, கருத்தில் இருத்தி, புதுவையின் எதிர்கால போக்குவரத்து பிரச்சனையை, ஆட்சியாளர்கள் அறிவு பூர்வமாக திட்டமிட்டு, கையாள வேண்டும் என்றார்.

ஆனால்,தற்போது மீண்டும் 'அட்லேப்' பெயரில், திரையரங்கம் மிகுந்த போக்குவரத்து நெருக்கடியை, மக்கள் மீது திணித்துள்ள‌து. நிறைய சலை விபத்துக்கள் நடக்கும் மாநிலங்கள் பட்டியலில்,தேசிய புள்ளி விவரங்கள், புதுச்சேரிக்கு முக்கிய இடத்தை அளித்துள்ளது.

புதுவையின் நகர வளர்ச்சி குறித்து, போக்கு வரத்து நெருக்கடி உள்ளடக்கி, நீண்டகால அடிப்படையில் திட்டமிடுதல் என்பது ஏட்டளவில் மட்டும் உள்ளது.கண்ட இடங்களில் தொழிற்சாலைகள் அமைப்பது; குடியிருப்பு பகுதிகளில் அனுமதிப்பது;நீர் போக்குவரத்து பாதைகளை மறித்து கட்டிடங்கள்; பொழுதுபோக்கு அம்சங்களை அமைப்பது; குளங்களை தூர்ப்பது; ஏரிகளில் அத்து மீறுவது ஆகிய போக்குகள் மிக விரைவாக கட்டுமீறி, புதுவையைச் சுற்றிலும் தன்னல ஆர்வத்தில், பொது நலன்களுக்கு விரோதமாக, தங்கு் தடையின்றி நடைபெறுகிறது.

இத்தகைய மீறல்களை ஒழுங்கு படுத்த‌ வேண்டிய, நீண்ட‌ நெடிய செயல் பொறுப்பு மிக்க,கடமை உள்ள அரசாங்கமே, இப்போது நாட்டுக்குத் தேவை!

வீட்டணி இல்லை!

நீ செய்தால் விமர்சனம்!
நான் செய்தால்?
நீ பேசினால் ஆக்கம்!
நான் பேசினால்?

ஆதரவு என்பதால்!
அனைத்திற்கும்,
ஆமாம்!ஆமாம்!
சாமி ,
என்றாகுமா?

கூட்டணி தானே,
அன்றி!
வீட்டணி இல்லை!

கூட்டணி
ஏக தலைவன்,
பூட்டணி கொள்!
ஏற்குமா?

தளையில்!

உடற்கட்டு குலைந்த‌
மடற்கட்டு தமிழா!
எழுதியே,
நாளும் சாதிக்கிறாய்!

எழுத்தறிந்தவன் சோர்ந்தான்!
அறியாதவன்,
உம் மகுடிப் பேச்சில்!
மணிக்கணக்கில்,
மனம் இழந்து!

மாயையில்
மாமாங்கமாய்!
அடிவருடியாய்!
அடிமைத் தளையில்!

Friday, June 27, 2008

அவித்தார்!

கல்விக் கண் அளிப்பவர்!
அவித்தார்!
குலவிளக்கின்
ஒளியை!
குவளை வீசி!

ஆசு உரியர்!

ஆநிறை மேய்ப்பன்!
கட்டுப்பாடு இழந்து!
கடப்பாடு மறந்து!

Thursday, June 19, 2008

மனசாட்சி!

உலகிற்கு அகிம்சை!
உள்ளூரில்!
உன் ஆட்சிப் பரப்பில்!
ஓர் இனம்!
உன் காலடியில்!

பல பத்தாண்டுகள்!
உரிமைகள் இழந்து!
உடமைகள் தொலைந்து!

அடி உதை உண்டு!
உயிர் வதை கண்டு!
உறங்கிடும் மனசாட்சி!
உலகத்தின் அரசாட்சி!

சுற்றுலா !

முன்னேற்பாடு செய்யா
முடங்கிய நிர்வாகம்!
முடக்கத்தானையும்
தோற்கடிக்கும்!

தூர்வாரும் பணி
தொலைவில் வைத்து!
கற்கள் கொட்டும்!
காசுகள் புரளும்
'கவின் மிகு கடல்'

ஈச்ச மரம் இளிக்கும்!
குடை விரிக்கும்!
பகலில்!

நீர் ஊற்று!
கடலின் உள்!
இலட்சங்கள்!
ஏப்பம்!

அழகு!

நெற்குவியல் புதுவை!
சொற் குவியல்
பாவலர்!

அழகின் சிரிப்பு!
அணில் ஆட்டம்!
தீர்த்த யாத்திரை!
குயில்கள் கோட்டம்!
கடற்பரப்பு !

கடல் உண்டு!
பரப்பு!
கற்குவியல்!
சிரிப்பாய்! சிரிக்கும்!


பாரதியை, தாசனை,
பரம்பரையை
நாம்
மறந்திலோம்!

ஆண்டுக்கு ஒரு முறை!
ஆராதனை!
ஆதனுக்கு
ஆறுதல்!
மற்றவர்க்கு
தேறுதல்!

Saturday, May 31, 2008

சந்தர்ப்ப வாதம்!

சூழ்ந்திடும்
மரியாதை
இழந்து!
இளித்து!
ஏற்றம்!


எத்தரப்பும்!
எச்சூழலிலும்
நிலவும் !
'சுப்ரபாதம்'

எமக்கு !

வருமானம்!

மொழி மானம்!
இன மானம்!

அடுத்து!
இவையாவும்!

Friday, May 30, 2008

கொள்ளை!

ஆற்று மணல் கொள்ளை!
சேற்று மணல் கொள்ளை!
செம்புலம் செதுக்கி!
நம் புலமா!
ஐயுறவு கொள்ளும்
நிலை!

ஆழம் அகலம்
ஆற்றின் பரப்பை
ஒக்கும்!

இயற்கை மீது
ஆதிக்கம்!
இடைவிடாது
கொள்ளை!

தடை இன்றி
வியாபாரம்!
தண்ணீர் மட்டம்
கீழிறங்கும்!

ஆட்சியர்
எவரும் அலட்சியம்!
காட்சியர் கோலம்!
காலம் போக்கும்!

'பஞ்ச சீலம் '

திபெத்தில் மீறல்!
மீண்டும்!
மாய்த்தனர்!

புத்த பிக்குகள்!
சுய ஆட்சி கோரி
இழந்தனர்!
இன்னுயிரை!

மண்ணுயிர்
மகிமை!
உலக அரங்கில்!

இங்கிருப்போர்
'இச்',' இச்'
அனுதாபம்!
அக்கறை!

குரல் வளை
நெரிக்கும் கொள்கை!
இன வெறி!
காலடியில்!
கவலை இல்லை!

தலைக்கு மேல்!
முரிப்பு தெரிகிறது!

Thursday, May 29, 2008

நீ ஏன்?

தொழுகிறாய்! அழுகிறாய்!
தொலைந்தான் என்றாய்!
எடுத்துக் கொண்டான்
அப்போது!
பறித்துக்கொண்டான்
அப்போது!
செரித்துக் கொண்டாய்!

போட்டான் அவிழ்த்தான்!
மீண்டும் அழைப்பு!
அந்திமக் காலத்தில்!
அங்கீகாரம் கோரி!
அகங்காரம் அகன்ற
நிலை!

ஏற்றுக் கொண்டாய்!
கழற்றியதை
இறக்கினார்!
நள்ளிரவில்!
இரங்குகின்றார்!
ஏக்கத்துடன்!

தேம்புகிறாய்! புலம்புகிறாய்!
புதிதாக இழந்ததைப் போல்!

அவளே அழவில்லை!
நீ ஏன்?

அவளே கலங்கவில்லை!
நீ ஏன்?

அவளே விழையவில்லை!
நீ ஏன்?

அவளே விழித்திருக்கவில்லை!
நீ ஏன்?

அவளே உறங்கி விட்டாள்!
நீ ஏன்?

அவளே இயல்பாய்!
நீ ஏன்?

Tuesday, May 27, 2008

பரிதாபம் பழங்குடி!

போராடும் குச்சார்
உரிமை கோரி!
மீண்டும் உயிர் கொடுக்கிறார்!
துப்பாக்கி குண்டுகளுக்கு
இரையாகி!
துணிவை மட்டும் முன் நிறுத்தி!

காவி அரசியல்
களம் இறங்கி!
படை பலத்துடன்
பழங்குடி இன உரிமை மறுத்து!
பலி கொள்கிறது!
பதவி சுகத்திற்காக!

வாக்குறுதியைக் காப்பாற்றாத
வாக்கு வங்கி அரசியலில்!
அடுத்த கட்ட அரசியலுக்கு
அணி வகுத்து!
தில்லியில் ஆலோசனை!
இராணுவத்தை வரவழைக்க!
சுற்றி வளைக்க!

சொன்னதைச் செய்யாதவர்!
குட்டை அரசியலில்
ஊறும் மட்டை அரசியல்!

குச்சார் இன மக்களுக்கு
மீண்டும் மொட்டை!
அடுத்த தேர்தலைக்
காட்டி!

ஒதுக்கீடு ஒதுக்கி வைப்பு!
பதுங்கி கூட்டம்!
பற்றி எரியும் பிரச்சனை!
பரிதாபம் பழங்குடி!
இராசசுத்தானில்!

Saturday, May 24, 2008

"அமைதிப் பூங்கா"

எவர் இல்லை
என்பது!
நாளுக்கு ரெண்டு
கொலை!

நடுத்தெருவில்!
கடைத்தெருவில்!
அச்சம்!

போவோர் வருவோர்
யாரும் இல்லை!
போக்கு வரத்தும்!
காவல் துறையும்!

அதிகாரம் யாரிடம்?

கற்பழித்தான் !
கொலை செய்தான்!
காவல்துறை!
நீதி மன்றம்!
வழக்கு!
விசாரணை!
வாதம் !
எதிர்வாதம்!
தீர்ப்பு
ஆயுள் தண்டனை!
சிறை !
நீதி வென்றது!
சிறைக்குள்!
கழுத்தறுப்பு!
கருவறுப்பு!
நீதி மன்றத்தையும்
தாண்டி!

சீர் அழித்து வருகின்றனர்.....

ஏரிகளில் தண்ணீர் குடி நீர் பயன்பாட்டுக்கு". உலக நீர் நாளில் உரை. செய்தித் தாள்களில் வண்ணப் படத்துடன் செய்தி, சென்ற ஆண்டு மார்ச் 21ல்.

"ஊசுட்டேரியில் மீன் பிடிக்க ஏலம், கோர்க்காடு ஏரியில் மீன் பிடிக்க ஏலம்", "கிருமாம்பாக்கம் ஏரியில் இறால் வளர்ப்பு, தனியார் முயற்சி". இதுவும் செய்தி. ஊடகங்களில் வலம்.

புதுச்சேரி இயற்கை சூழல், மழை நீரை மட்டுமே நம்பி வாழக்கூடிய அடிப்படை, வடகிழக்கு பருவமழை; தென் மேற்கு பருவமழை; இவை இரண்டுமே நீர் ஆதாரம். தமிழ் நாட்டில் ஓடும் பெண்ணை ஆறு, செஞ்சி ஆறு ஆகியவை நீர் பிடிப்பு பகுதிகளாக, புதுவையில் அமைந்துள்ள ஏரிகளுக்கு, காலங் காலமாக ஊட்டம் அளித்து வருகிறது.

பருவ மழை என்பது நிச்சயமற்றத் தன்மை உடையது. மேல் தண்ணீரைத் தரும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், மக்களுக்கு வேளாண்மைக்கும், குடி நீருக்கும் வாழ்வளித்து வருகிறது.

எனினும் அரசாங்கம், 1968- 69ல் வறட்சி ஏற்பட்டு, புதுவை மக்கள் அல்லல் பட்டதை மறந்து விட்டதாக தெரிகிறது, 1972ல் மத்திய நிலத்தடி நீர் வாரியம் புதுவையில் பெருகி வரும் நீர் தேவையைக் கருத்தில் கொண்டு ஆழ் குழாய் கிணறுகளை அமைத்தது.

அதிக அளவில் நீர் தேவை பெருகியதற்கு ஏற்ப, நீர் மேலாண்மைத் திட்டங்கள் இதய பூர்வ முயற்சியாக, நடவடிக்கையாக, புதுவை அரசு மேற் கொள்ள வில்லை. மாறாக, நீர் அதிக அளவில் உறிஞ்சும், நீர்த் தேவை அதிகம் உள்ள தொழிற்சாலகள், எடுத்துக்காட்டாக, காகித தொழிற்சாலைகள்; அல்கலித் தொழிற்சாலைகள்; குளேரைட் தொழிற்சாலைகள்; வேதியற் தொழிற்சாலைகள் ஆகியவைகள் நல்ல விளை நிலங்களுக்கு அருகில்; ஆற்றங்கரைகளில்; செம்மண் நீர் பிடுப்பு பகுதிகளில்; கடற்கரைக்கு அருகில் அமைத்து ,அதன் கழிவுகளை அரவமின்றி கடலிலும் , ஆற்றிலும், நிலத்தடி நீரிலும், தொடர்ச்சியாக விட்டு, புதுவையின் நீர் ஆதாரத்தை பெரிதும் சீர் அழித்து வருகின்றனர்.

Saturday, May 17, 2008

தேடி!

வெப்பமிகு சூழல்!
வேக வைக்கும்
அறை!

வெறுப்புக்கு வேள்வி!
வேறேதும்
எழவில்லை!
கேள்வி
ஒன்றைத் தவிர!

உன்னை மட்டும்
உணர்ந்தேன்!
ஒன்றிற்காக!

ஓயாத இரைச்சல்!
மன வெளியில்!

ஓராயிரம் இரவுகள்!
பகல் பொழுதைத் தாண்டி!
சாயாத பொழுது

சாங்கியம் தேடி!

இருத்தலியல்!

அடைமொழி அரசியல்!
வெறுப்பு!

நடைமொழி
அதன் வழி!

நான்!
என்ன செய்ய!

'இரு வேறு'
உலகம்!

திருத்தம்!

முத்துக் குளித்தேன்!
எடுத்தேன்!
பித்துக்குளி ஆனதேன்!
பின் பாதி!
உணர்ந்தேன்!
பிழை திருத்தம்!
பெரும்பாடானதே!