Saturday, August 4, 2007

பகல் கொள்ளையா!

கல்வியில் புதுசேரி வளர்ந்து விட்டது! பல தனியார் கல்விக் கூடங்கள் அரசு ஆதரவுடன் முளைத்து ஆல மரமாகி செம்மாந்து நிற்கிறது! பிற தொழில் செய்தவர் கல்விமான்களாக, செம்மல்களாக, புதிய பரிமாணம். இப்போட்டியில் பின் தங்கிவிடவில்லை அரசியல்வாதிகள். தங்களின் அதிகாரம், செல்வாக்கு, உத்திகளை சரியாக பயன்படுத்தி தொழில் போட்டியில் இறங்கினர்.


'வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்'. அண்டை மாநிலத்தவரும், அரசியல்வாதிகளின் ஆசியுடன் ஆதரவுடனும், கூட்டணி அமைத்து, களம் இறங்கினர். விளை நிலங்கள் உழைப்பவரிடம் இருந்து அந்நியமானது!


பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள் 'இருசக்கர வாகனங்கள்' போல் பெருத்துவிட்டன. சில கல்லூரிகளுக்கு தனியார் இடத்தை, விளை நிலங்களை, அரசாங்கமே கையகப்படுத்தி விவசாயிகளை வஞ்சித்தது. (எ.டு.)பிம்சு மருத்துவமனை, கணபதி செட்டிக்குளம்.


அரசாங்கம் அளித்திடும் நீர், மின்சார வசதிகள். பொது நலம் கருதி அரசாங்கம் அனுமதி வழங்குகிறது. மக்களின் பேரால், கல்விக் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. அதனை திருப்பி அளித்திடும் ஏற்பாட்டையும் அரசாங்கம் 'மாணவர்களின் நலம் கருதி 'செய்து வருகிறது. மக்கள் வரிப் பணத்தில் ஒவ்வொரு ஆண்டும், 'கல்வித் தொழிற்சாலைகள்' கலங்கி விடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு!


இதையும் மீறி, பகல் கொள்ளையாக, அனைத்து மாணவர்களிடமும் கூடுதலாக இலட்சகணக்கில் பணம் பறித்திடும் கொடுஞ்செயல், அரசு அறியாதது அல்ல! புகார்கள் வந்தாலும் விசாரணை, ஆய்வு, மக்களுக்கு பதில் சொல்ல வேண்டுமே! கடமையாற்ற வேண்டுமே! என்பதப் பற்றி சிறிதும் கவலைப்படாத ஆட்சி! மக்கள் ஆட்சி!

No comments: