Sunday, December 28, 2008

ஆட்டுக் குட்டி

( கப்பிரியேலா மிச்டரல்- மொழி பெயர்ப்பு)

மென்மையான என் ஆட்டுக்குட்டி
உன் குகை போன்ற
பாசி மெத்தை
போர்த்தியுள்ள தோற்றம்,
என் நெஞ்சகம் ஆகும்.

வெண்மை நிற உன் மேனி
நிலவொளிக் கீற்றின்
வெண்மையை ஒக்கும்,
இன்றிரவு உம் தூளியாக நான்,
அனைத்தும் மறந்து.

உலகை மறக்கிறேன்
உம்மைச் சார்ந்து
எம் பசித் தீ தணிய
உடற்கட்டு மட்டும் பெரிதாக.

என் மகனே, உன் விருந்து,
பிற விருந்துக்கு விடை அளிக்க-
நான் அறிகிறேன்
நீ என்னைச் சார்ந்தே.

Thursday, December 25, 2008

கண்டறிந்தேன்

சிற்றூர்ப் பயணத்தில்
இக் குழவியை
ஆழ்ந்த உறக்கத்தில் கண்டறிந்தேன்
சிறுமணி கிளைகளுக்கிடையில்.....

கொடிமுந்திரி தோட்டத்தின்
ஊடே கிளைகளின் தேடலில்
அவன் கன்னம் தென்பட்டது.

ஆழ் துயிலில் அஞ்சுகிறேன்,
அவன் கொடிமுந்திரி தோட்டத்தில்
கவிந்துள்ள மூடு பனி போல்
கரைந்திடக்கூடும்...

(கப்பிரியேல் மிச்ட்ரல் கவிதை- 4
மொழிபெயர்ப்பு)

Tuesday, December 23, 2008

நற்பண்புகள்

உம்மிடம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுதில்
உலகின் தீங்கிழைப்பு முடிவுறும்:
யாவும் இனிமையே உன் ஆலயத்தில்:
சிற்றோடையும் முட்பரப்பும்.

உம்மிடம் நான் இசைத்துக் கொண்டிருக்கும் பொழுதில்,
மேலான உம் இமைகள்
அரிமாவாக நரியாக அமைந்திலங்க,
தீமையாவும் அனைவரிடம் அகலும்.


(கப்பிரியேலா மிச்ட்ரல் கவிதை- மொழி பெயர்ப்பு-3)

Sunday, December 21, 2008

'தொழில் சங்கம்'

திறக்க வேண்டுமாம்,
மீண்டும் தொழிற்சாலை,
திருவண்டார் கோவிலில்.

வேலை வேண்டுமாம்,
தொழிற்சங்க,
வேலை வேண்டுமாம்.

கழிவுகள் எரிந்தது,
கரவு என்றறிந்தும்,
உறவு சேர்த்திடும்,
கூட்டம்.

ஊர் உரிமை ஒழித்திட,
உலா வரும்,
விஞ்ஞான சமதர்மம்,
விலை பேசிடும்,
அஞ்ஞான அரசியல்
தாங்கிடும்
தொழிற்சங்க மையம்.

மண்ணும், மரமும்,
ஊரும், உயிர்களும்,
மாய்த்திட திட்டமிட்ட
தீ வைப்பு.

கொட்டிக் குவித்திட்ட
கழிவுகள் எரியூட்டி
நேர்ச்சி பழியூட்டி,
கொடுமை.

காற்றாடி வாழ்க்கை,
மக்கள்
நூலும் போச்சு,
இறக்கை கழிவுகள்
எரிப்பில்,

பறந்த வாழ்க்கை,
பறி போன நிலம்,
பாழ்பட்ட வெளி,
ஊழ் வலி அன்று,
உலுத்தர் சதி
இன்று.

கொளுத்திய சதி,
வெளுத்த சங்கம்
'தொழில் சங்கம்'
தோற்கும்!

இரவு

நீ உறங்குவதால்,என் குழந்தையே,
விழு ஞாயிறும் தகிக்கவில்லை:
பனித்துளி தவிர எவையும் மின்னவில்லை
நீ அறிந்த என் முகம் தவிர எவையும் வெளிச்சம் இல்லை.

நீ உறங்குவதால்,என் குழந்தையே,
நெடுஞ்சாலையில் எவையும் தென்படவில்லை,
ஆற்றை தவிர எவையும் ஏக்கம் தீர்க்கவில்லை,
எவையும் இல்லை என்னைத் தவிர.

சமவெளியாவும் பனி மூடியுள்ளது,
வான் நீல மூச்சு சலனமற்று.
உலக இயக்கம் ஒரு கைக்குள் அடங்கி
அமைதி அதன் விழைவை ஆள்கிறது.

என் இசை, குழந்தையை மட்டும்
உறங்க வைக்கவில்லை,
உலகம் முழுவதும்
தூளியின் தாலாட்டில்,
உறக்கத்தில்
ஆழ்ந்து விடுகிறது.

கப்பிரியேலா மிச்ட்ரல்- மொழி பெயர்ப்பு- 2

Friday, December 19, 2008

உன் வசம் நான்

கப்பிரியேலா மிச்ட்ரல்-நோபல் பரிசு பெற்ற இலத்தின் அமெரிக்க கவிஞர்

கண்ணுறங்கு என் குழவியே,
புன்னகையுடன்,
இமைகளை மூடு,
இரவின் தாரகை
தாலாட்டில்.

விழித்தெழு பகல்
பொழுதை உள்வாங்கு,
மகிழ்வுடன் வாழு,
நலம் அனைத்தும்
எம் வழி நீ கொண்டதால்.

கண்ணுறங்கு என் குழவியே,
புன்னைகையுடன்,
இமைகளை மூடு,
நிலமகள் பாச
தூளி அசைப்பில்.

ஒளி வீசும் செந்நிற ரோசாவை
கண்ணுறு,
என்னிடம் அடைவதைப்போல்,
உலகிடம் உம் எல்லையை
விரிவுபடுத்துவாய்.

கண்ணுறங்கு, என் குழவியே,
புன்னகையுடன்,
இமைகளை மூடு,
இறை நிழல் உம்மை தாலாட்ட.

மறந்தாச்சு!

பண்டிகை வரும்
போகும்,
பொந்திகை,பூரிப்பு
நெஞ்சில் தேக்கி!

மழை வரும்,போகும்,
வெள்ளம் வேதனை,
அழிவு வீதியெங்கும்
நிறுத்தி!

ஆண்டுதோறும் அவலம்!
மாண்டவர்,
இழந்தவர்,
நிவாரணம் கோரி!

அங்குல வயிறும்
நிரம்பாத,
அளிப்புகள் சலிப்புடன்!
வேதனை!

நிவாரணக் குழு
வரும், போகும்,
வாடிக்கையாக!
வேடிக்கை செய்திகள்
உலா வரும்,

தாள்களில்!
காட்சிகளில்!
போட்டிகள்!
பேட்டிகள்!

அடுத்த பிரச்சினை வந்தாச்சு!
ஆறுதல் அளிக்க தேர்தல்!
அனத்தும் சரி்!
ஆட்சி மாறினால்!

ஆண்டுகள் அறுபதும் கடந்தாச்சு!
அனைத்தும் இப்ப,
மறந்தாச்சு!

Friday, December 5, 2008

நாளாகுமா?

மனிதத்தின் வீழ்ச்சி நாள்!
மண்ணின் எழுச்சி நாளாகுமா?
சார்பின்மையை சவக்குழிக்குள்
தள்ளிய நாள்!
சாதனை என்றாகுமா?

இடிப்பு நாள்!
இந்தியாவின்
இழிவு நாள் அன்றோ!
இதயத் துடிப்பு நாள்
ஆகுமோ?

அந்நியன் சின்னம்!
அத்துடன் நிற்குமா?
அழிக்கும் ஆர்வம்!
அடங்கவில்லையா?

தொடர்கதை அதுவானால்!
தொல் பொருளும் மிஞ்சுமா?
தொன்மைதான் எஞ்சுமா?

Tuesday, December 2, 2008

வெளிச்சம்!

கிழக்கில் வந்தால்தானா?
மேற்கில் வந்தால்!
வேண்டாம் என்பேனா?

நாம்!

ஓய்ந்த சூறை!
புலர்ந்த பொழுது!
உலர்ந்த மக்கள்!

ஓரங்களில்!
ஈரங்களில்!
சகதிகளில்!

சலனமின்றி
சவாரியில்!