Sunday, January 31, 2010

அடுக்களைப் பின்

"கா கா கா
கா கா கா
கா கா கா......"

கேவி அழைத்தார்
பண்ணிய பலகாரத்துடன்
புண்ணியம் தேடி

எதிர் வீட்டுக்காரர்
புதிராக
வீதியில் இறங்கி


எந்தன் வீட்டில்
காகா
அழையாத விருந்தாளி

அன்றாடம் குடும்பத்துடன்
குட்டி அணில்களுடன்
எதிர் எதிராக
வழி விட்டு கொரிக்கும்

பின் வீட்டு புறாக்களும்
தம் கூட்டைவிட்டு
எம் வீட்டில்
சுற்றி வந்து விரட்டும்

அணிலும் காகமும்
அலுத்துப் போய்

ஆகாரம் பகிர்வு
அன்றாட நிகழ்வு

அடுக்களைப் பின்

எயித்தியில் நில நடுக்கம்.

இலத்தின் அமெரிக்க தீவு நாடான எயித்தியில், நில நடுக்கம்.இரண்டு இலட்சம் உயிர்களைப் பறித்தது.பல இலட்சம் மக்களின் வாழ்க்கை ஆதாரமே சிதைந்து, சின்னா பின்னமானது.

குடிக்க நீர், உண்ண உணவு, உடுத்த உடை, வசிக்க வீடு, யாவும் இன்று அந்நியமாகியுள்ள அவலம். சில ஆண்டுகளுக்கு முன் சூறைக் காற்றில், சுழன்ற அவர்கள் வாழ்க்கை, இன்று மீண்டும், இயற்கையின் சீற்றத்தில் சீரழிந்துள்ளது.

அண்டை நாடுகளின் உதவிக் கரங்கள், விரைவாக சேர முடியாத அவலம்.இயற்கையின் அடிக்கு இரையான உயிர்கள், சிதைந்து கட்டிடங்களுக்கிடையில், அப்புறப் படுத்திட, கெளவரமாக அடக்கம் செய்திட வாய்ப்பில்லை.

அமெரிக்காவில் வசிக்கும் எயித்தியின் பெண்மணி கூறுகிறார்,"என் உறவினர் உடலாவது கிடைத்தது, ஆனால் உடல்கள் கிடைத்திடாத என் இன மக்கள் துயரம் பெரியது".

போர் என்றால் அதி விரைவாக, மின்னலை விஞ்சும் தாக்குதல் மூர்க்கம்,உடனடி அழிவுக்கு ஏங்கும் போர் வியூகம், தொழில்நுட்பம், அணி சேர்க்கை, இராணுவ நடவடிக்கை, இயற்கை பேரழின் போது தாமதம் ஆவது ஏன்? எப்படி?

அழிவாற்றலில் முனைப்போடு,பிணைப்போடு செயல்படும் அறிவாற்றல், உயிர்காக்கும் செயல்களில் சுறு, சுறுப்பு எங்கே?

உலக சமுதாயம், நாகரிக சமூகம் பதில் கூறுமா?

பாதித்த மக்கள் மறு வாழ்வு விரைந்து நடக்குமா?

Friday, January 15, 2010

அகத்தில்!

முடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உம் செயல் பாட்டு வளையத்தில்
நான் இல்லை!

அடங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
எம் செயல்பாட்டுக்குள்
வளையம் இல்லை!

ஒடுங்கி விட்டேன் என்கிறாய்!
ஆம்!
உன் ஒடுக்கு முறைக்கு பயந்து
உம் அமைப்பின் வெளியே
சுயமாக!

குன்றி விட்டாய் என்றாய்!
ஆம்!
நயத்தக்க நாகரிகம் வேண்டி
அகத்தில்!

வணிகத் திருவிழா- 2010

வணிகத் திருவிழா- 2010

புதுவையில் கோலாகலம்.உருவா70 இலட்சம் அரசாங்கம் ஒதுக்கீடு. பரிசுப் பொருள்கள் ஏராளம், புதுவை மக்கள் பரவசம்.புதுவை, சித்தன் குடி பகுதியில் அமைந்துள்ள, செயராம் திருமண நிலையத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் நுகர்வுப் பொருள்கள் கண்காட்சி.மக்கள் கூட்டம் அலைமோதும் கேளிக்கை. இந்த ஆண்டும் சாதனை சரித்திரம்! மக்களை மனச் சலவை செய்திடும் தந்திரம்! மாநில அதிகாரத்தின் எந்திரம்!

சிறிய மாநிலம்! சிறப்பான மக்கள்! எதையும் ஏற்றுக் கொள்பவர்கள்! தங்கள் வாழ்க்கை பிரச்னைகளைக்கூட மறந்து,இழுத்த இழுப்புக்கு இழப்புகளை ஏற்கும் இளியர்! புதிது, புதிதாக தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி பெரு வாழ்வு வாழ வேண்டும்! வீட்டு உபயோகப் பொருட்களை அடிக்கடி மாற்ற வேண்டும்! சாதா தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து, எல்சிடிக்கு மாற வேண்டும்!கடன் பட்டாலும் கவலையில்லை! பரிசுப்பொருள் கிடைக்க வேண்டும்!

நாளைப்பொழுதுக்கு உலையில் வைக்க அரிசி இல்லை! அதன் விலையும் அருகில் இல்லை! கிலோ அரிசிஉருவா 34! அது பரவாயில்லை! கிலோ அரிசி உருவா 1, பெயர் பதிந்து கொள்ளலாம்!வீட்டில் ஒருவருக்கு வேலை இல்லை! அரசாங்க வேலையும் காலி இல்லை!3000 பதவிகளுக்கு மேல் காலி செய்திட்டோம்! சிக்கன நடவடிக்கை! சீற வேண்டாம்!

தமக்கு என்ன நேர்கிறது. தம் வாழ்க்கையின் நிலைப் பாட்டை, உறுதி செய்யும் கடமை உணர்ச்சி வேண்டியுள்ள அரசாங்கம் எவ்வாறு மக்களின் வாழ்க்கையை திசை திருப்புகிறது.

காலத்தின் சரியான போக்கை அறிந்து கொள்ள வேண்டிய மக்கள், தம் இல்லங்களில் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளின் முன்பு, நாள்தோறும் சீரழிந்த கலாச்சார சரக்குகளை, சில்லரையாக சீராக கொள்முதல் செய்து செரித்திடும் போக்கு,

தம் மீது தொடர்ந்து நப்பாசையாக திணிக்கப்படும் நுகர்வுக் கலாச்சாரத்தை எவ்வித விமர்சனமின்றி ஏற்றுக் கொள்ளும் போக்கு ஒரு தரமான , அறிவார்ந்த மக்கள் சனநாயகத்தை வளர்த்திடுமா?

Sunday, January 10, 2010

இல்லை!

இருந்த போதும்
இறந்த போதும்
துடித்த
உணர்வு
ஏங்கிய
உயிர்

நாடிய கண்கள்
நலம் குறைந்த போதும்
படுக்கையாய்
கிடந்த வேளையும்

உள்ளம்
உடுக்கையாய்
ஒலி எழுப்பி
உறவைத் தேடிய
சொந்தம்

உந்தன் தொடர்ச்சி
ஒப்புக்கும் இல்லை!
உப்புக்கும் இல்லை!

இதற்குத்தான் எழுதினாரோ!

கனவு கண்டேன்
உனைக் காண
ஆவல் கண்டேன்!

நனவு வாழ்க்கையில்
உன் ஞாபகம்
இல்லை! ஆதலால்!

கண்டேன் கனவில்
ஆபத்தில் உள்ளதாக!

கனவுகள் பெரும்பாலும்
அச்சம் அளிப்பதாக
விரைந்தேன்! விரைவாக!
கைபேசியில்!

கனவுகள் காணுங்கள்
என்றவர் இதற்குத்தான்
இன்னுரை எழுதினாரோ!

Saturday, January 2, 2010

ஏட்டில்!

கட்டிடத் தொழிலாளி
மாநிலங்களைக் கடந்து
உழைப்பை விற்கிறார்
ஒப்பந்தக் கூலியாக

ஓங்கி உயரும் வளாகம்
வணிகம்
ஒடுங்கிப் போகும் உடலும்
உழைப்பும்

குடும்பத்தைப் பிரிந்து
குழந்தைகளை மறந்து
வறுமை விரட்டிட
வயிற்றுப் பிழைப்பு நடத்திட
கட்டிட வேலை

காலை மாலை இல்லை
இரவில் பொங்கி
இடிபாடுகளில்
தங்கி

ஈட்டும் நோட்டும்
கைக்கு கிடைக்க வில்லை
வேலை இல்லை

தங்கிட இடமும் இல்லை
பாக்கி பணமும்
இலட்சம் வாரக் கணக்கில்
இல்லை

காவல்துறைக்கு புகாரும்
கடிதேகவில்லை
கழட்டி விட்டார்
விரட்டி விட்டார்

தொழிலாளர் துறை ஆணையரும்
இது எம் வரம்பில் இல்லை
மாநில எல்லையில் மனு செய்யுங்கள்
என்றார்

மனுநீதி நாட்டில்!
மனித நீதி ஏட்டில்!