Tuesday, February 27, 2007

எங்கே..!

'அழகின் சிரிப்பு' அன்று !
'அழகின் சிதைப்பு' இன்று !

கடற்கரை பரப்பு அப்போ !
கரை அரிப்பு இப்போ!

'ஒளிப் புனல்' அங்கே!
'ஒலிப் புனல்' இங்கே!

ஆலஞ்சாலைகள், மரக்கிளைகள்,
அன்று!
தார்ச்சாலைகள், பைஞ்சுதைச் சாலைகள்,
இன்று!

'விளைந்த நன்செய் நிலம்' அங்கே!
'வீழ்ந்த விளை நிலம்' எங்கே!
வீட்டிற்கு வீடு கிணறு,
மழை நீர் சேகரிப்பு.
வீட்டிற்கு வெளியே திண்ணை,
வேப்பமரம், தாழ்வாரம்,
தெரு முனையில் தண்ணி 'கான்'
எங்கே!
'நல்ல தண்ணி கிணறு'
எங்கே!
'விளை நிலம்' எங்கே!
'நல மனை'எங்கே!
'அழகின் சிரிப்பு' எங்கே!!

Monday, February 26, 2007

தேங்காய்த்திட்டு மக்கள் அரசியல்!

புதுவையின் வரலாற்றிலே வளர்ச்சி, முன்னேற்றம்,வேலை வாய்ப்பு, இழப்பீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, வேளாண்மை செய்யும் நிலங்களை உழைக்கும் மக்களிடம் இருந்து பறித்துக் கொள்ளும், ஆளும் வர்க்கத்தின் வஞ்சக சூழ்ச்சியை, மக்கள் புரிந்து கொள்ள தொடங்கி விட்டனர். துறைமுக விரிவாக்க திட்டத்தின் மோசடியை, அரியாங்குப்பம் மீன் பிடி துறைமுகம் அமைத்தபோது புரிந்து கொள்ள இயலாத மக்கள், தேங்காய்த்திட்டு பிரச்சனையில் நன்கு விளங்கிக் கொண்டனர்.

தாய் மண்ணின் உறவை, அதனுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை அடையாளத்தை, பாதிக்கப்பட்ட மக்கள் நிலையில் இருந்து, பண்பாட்டு பெருமைகளை, உணர்ச்சி பூர்வமாக வெளிப்படுத்திய போராட்ட களத்தில் உள்ள பெண்கள்தான் நாட்டின் விடியலுக்கு தேவை. ஒப்பனை இன்றி, கற்பனை இன்றி, உள்ளத்தின் கொந்தளிப்பை, இயல்பாக உரத்து ஒலித்த தமிழச்சி தான், நம் தமிழ் மண்ணின் இன்றைய தேவை!


கட்சி அரசியலை புறந்தள்ளி, ஓரணியில் திரண்டு, தங்கள் வழ்விடத்தை காக்க கறுப்புக்கொடி வீடெங்கும் ஏற்றி, விரிவாக்கத்திற்கு சாவுமணி அடித்திட்ட போராட்ட பாதையில் அடுத்த கட்டமாக, தேங்காய்த்திட்டு மக்கள், 26, பிப்ரவரி 2007, மாலையில், மரப்பாலம் அருகில், அனைத்து சமூக இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் தம் பக்கம் திருப்பிய கண்டன ஆர்ப்பாட்டம், புதுவையின் போராட்ட வரலற்றில் இணைப்பு எதிர்ப்பு போராட்டத்தின் வரிசையில் வைத்து பதிவு செய்யப்பட வேண்டிய 'மக்கள் அரசியல்' நிகழ்வாகும்.

புதுவையின் பிற பகுதி மக்கள் பிரிவினரும், தங்கள் வாழ்விடங்களை பறிக்கும், வாழ்வுரிமையை குலைக்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிராக பரந்த அளவில் திரண்டு போராட வேண்டும்.


'இப்போது இல்லை என்றால் எப்போது'? 'நம்மால் முடியவில்லை என்றால் வேறு எவரால்'?

Sunday, February 25, 2007

அணு ஆற்றல்...!

அணுசக்தி துறையில், அமெரிக்க நாட்டுடன் ஆன ஒத்துழைப்பு, அரசியல் தளத்தில், அரசியல் உத்தியாக, அரச தந்திரமாக, ஆளும் வர்க்கத்தால் பேசப்படுகிறது. பரவலாக, இது ஒரு பெரிய வெற்றி எனவே பேசப்படுகிறது.

ஆக்கப் பணிகளுக்கான அணு ஆற்றல் ஓப்பந்தம் என முதன்மைப் படுத்தப்படுகிறது. அணு மின் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைவது குறிக்கோள் என வலியுறுத்தி கூறப்படுகிறது.

தற்போது, நம் நாட்டு மின்சார உற்பத்தியில், அணு மின்சார உற்பத்தி என்பது, 3% விழுக்காடு அளவிற்கும் குறைவானதே. அதுவும், அணு மின் உற்பத்திக்காக, அணு உலைகளை செயல்படுத்த பயன்படும் பொதுத்தொகுப்பு மின்சார பயன்பாடு சேர்த்து பார்த்தால், அணு மின் பங்களிப்பு மிக சொற்பம் ஆகும்.

அமெரிக்கா, சப்பான், செர்மனி, உருசியா, இங்கிலாந்து போன்ற
நாடுகள் அணு உலைகளின் பாதுகாப்பற்ற தன்மை, அதனால் ஏற்படும் நீண்ட கால சூழல் சீர்கேடு ஆகியவைகளை கருத்தில் கொண்டும், கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ள விபத்து அதனை எதிர் கொள்ள முடியாத நெருக்கடி ஆகியவைகளின் அடிப்படையில், ஒன்றன் பின் ஒன்றாக, அணு உலைகளை மூடி வருகிறது. இது நாம் அனைவரும் அறிந்த செய்தியாகும்.

நிலமை இவ்வாறிருக்க, இந்தியா போன்ற வளரும் நாடுகள், தானும் பட்டறிந்து கொள்ள வேண்டும் எனும் துணிச்சல் வாத நடவடிக்கைகளில், மேலை நாடுகளில் செல்லுபடியாகாத, புறந்தள்ளப்பட்ட ஆற்றலை, மக்கள் தொகை நெருக்கம் அதிகம் உள்ள, ஏழ்மைக் கோலத்தில் வாழும், வாடும், இந்தியாவில் சோதனை செய்து பார்க்க நினைப்பது, அறிவுடமை ஆகாது!

அனல் மின்சாரம், புனல் மின்சாரம், காற்றாலை மின்சாரம்,
கழிவுகளிலிருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து, என, சமூக நோக்கிலிருந்து, சமூக அளவில், நுண்ணியல் திட்டங்களாக பரவலாக்கப்பட்ட சிறிய அளவில் ஆன திட்டங்கள், பகுதி தேவைகளின் அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

Saturday, February 24, 2007

குழந்தைகள் மீதான வன்மங்கள்...

குழந்தைகள் மீதான வன்முறை பல வடிவங்களில், குடும்பத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நாள்தோறும் நிகழ்த்தப்படுகின்றன.அன்றாடம் ஊடகங்களில், குறிப்பாக பெண்குழந்தைகள் மீது நடத்தப்படும் அத்துமீறல்கள் பற்றிய செய்திகள், நம் சமூகம் எவ்வாறு குழந்தைகளை பார்க்கிறது, அணுகுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

புதுச்சேரியில் சில ஆண்டுக்கு முன், ஓர்லையன்பேட்டை தனியார் பள்ளியில் படிக்கும் 5 வயது பெண் குழந்தையை, வெளியே இருந்து வந்து தூக்கிச் சென்று பாலியல் கொடுமை நடத்திய இளைஞன் யார்? எவ்வாறு இது நிகழ்ந்தது?

வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டிய காவல் துறை, 'எனக்கு அதிகாரம் இல்லை? உனக்கும் அதிகாரம் இல்லை?' என அக்கறையற்று வழுக்கிக் கொள்ளும் போக்கு முறையானதா? ஏற்புடையாதா? சகித்துக் கொள்ளக்கூடியதா?

அரசு அதிகாரத்தின் முதுகெலும்பான காவல் துறை, குழந்தைகள் உரிமையில் கடமை தவறும் போக்கு சரியானதா? பெரிய குற்றப்பின்னணி உடையவர்கள் காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் ஏன் கொண்டு வரப்படுவதில்லை?
பணபலம், அரசியல் செல்வாக்கு, அரசு அதிகார அமைப்பை விலைக்கு வாங்கக்கூடிய அளவில் செயல்படுவது சாராசரி மனிதன் வரை புரிந்து கொண்டுள்ள உண்மையாகும்.

நமக்கென்ன வம்பு, எனக்கு பாதிப்பில்லை, என ஒதுங்கிக் கொள்ளும் மனப்பான்மை சரியானதா? நாம் வாழும் சமூகத்தில் நம் கண் முன்னே நிகழ்த்தப்படும் வன்முறையை எதிர்த்து ஒன்றுபட்டு, ஓங்கி குரல் எழுப்பி, மனித உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.

தமிழர்களே சோம்பேறிகள்! சுயமரியாதை அற்றவர்கள்! திரைப்படக் கலைஞர்கள் பின்னாள் திரண்டு நேரத்தை வீணடிப்பவர்கள்! வாழ்க்கையை இழப்பவர்கள்! எனும் விமர்சனங்களுக்கு நம்முடைய பதில் என்ன?

பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்,என அனைவரும் திரண்டு புதுவை அரசை நெருக்கியிருக்க வேண்டும். இதற்கு முன், ரெட்டியார்- பாளையத்தில், ஜெ.ஜெ.நகரில், 7 வயது நிரம்பிய சிறுமிக்கு நிகழ்ந்த வன்முறை; கோட்டக்குப்பத்தில் ஒரு குழந்தை மீது நடந்தேறிய வன்முறைக் கொடுமைகள் நமது நினைவுக்கு மீண்டும் வருகிறது.

பெண் குழந்தைகள் மீதான தொடர்ச்சியான வன்முறைகளை இரக்கம் காட்டும் செய்தியாக மட்டுமே சமூகம் பார்க்கிறது. பல கொடுமைகள் வெளியில் வராமலேயே மூடி மறைக்கப்படுகிறது.

'சட்டத்தின் ஆட்சி' வெறும் முழக்கமாகவே உள்ளது!

'சீருடையில் உள்ள மக்கள் நண்பனே காவல் துறை'
என்பதும் வெற்று முழக்கமே!

புதுச்சேரி அரசின் மக்கள் விரோத திட்டங்கள்..!

 • தேங்காய்த்திட்டு மக்களை ஊரைவிட்டே காலியாக்கும் ஆழ்கடல் துறைமுக திட்டத்தை கைவிடு!

 • துணை நகரம் பெயரில், 700 ஏக்கர் விளைநிலத்தை கையகப்படுத்தும் திட்டத்தை நிறுத்து!

 • சுண்ணாம்பாற்று கரையில், அலுத்தவேலியில், 5 நட்சத்திர ஓட்டல் கட்ட, பொழுதுபோக்கு பூங்கா அமைக்க, 100ஏக்கர் பசுமையான நிலம் அழிக்கப்பட்டு பாலைவனம் போல் காட்சி அளிக்கும் நிலைமையை உடனே நிறுத்து!

 • வீராம்பட்டிணம் கடற்கரையில், கடலோரக் காவல் படைத் தலைமையகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 25ஏக்கர் நிலம் கையகப்படுத்தி. மீனவ மக்களின் வாழ்விடத்தைப் பறிக்கும் காவல் படை விரிவாக்கத்தை, உடனே நிறுத்து!


  மேற்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி, 19.02.2007 அன்று பெரியார் சிலை அருகில், சமூக இயக்கங்கள், செயல் பாட்டாளர்கள் பங்கு கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய மக்கள் விரோத அரசு கொள்கை தாக்கத்தின் காரணமாக, புதுவையின் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பெரும்பான்மைச் சமூக மக்கள் பிரிவினரான, வன்னியர்கள், மீனவர்கள், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து அந்நியமாக்கப்படுகின்றனர்.

  இவர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் திட்டங்கள், எவரின் வளர்ச்சி! முன்னேற்றத்திற்கு!

  அரசே, தரகராக, பன்னாட்டு முதாலாளிகளுக்கு முகவராக செயல்படும் போக்குகளை எதிர்த்து மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்!

  அணி திரள்வோம்! ஆர்ப்பரிப்போம்!! அம்பலப்படுத்துவோம்!!

Friday, February 23, 2007

தீரவில்லை..!

நீதிமன்ற ஆணைக்கும்
பொசுப்பில்லை!
நிர்வாக அதிகாரத்தில்!

நெடிய போராட்டம்,
விடியலைத்தேடி!

வீதிக்கு வந்தும்
விடியவில்லை!

தீவட்டி ஏந்தியும்
வெளிச்சம் இல்லை!
'வெள்ளைக்கார உள்ளத்தில்'!

'வெள்ளையன்' வெளியேறவில்லை!
வேதனை தீரவில்லை!

சாதனை கூறுபவருக்கும்
சத்தியம் தெரியவில்லை!

Thursday, February 22, 2007

ஒற்றை செருப்பு !

சாலையில்
அனாதையாக!
சம்பவங்களின்,
கேள்விக்குறியாக!

காலியான 'கடம்பை'

கந்தா! கடம்பா!
கார்த்திகேயா !

கடம்பை மரம்
போச்சே கார்த்திகேயா!

பாகூர்ஏரியில்போச்சே
கார்த்திகேயா!

பரமன் உலகுக்கு
சேதி வந்ததா?

கார்த்திகேயா
!

Wednesday, February 21, 2007

கலிங்கா...!

உன்னை வெறுத்து
'அசோகன்'
தன் பாதை மாறினான்.
'தம்மம்'
வெளிச்சம் காட்டியது.

அவன் 'சக்கரம்'
அரியணை ஏறியது.
விடுதலை வேள்விக்குப்பின்,
'தம்மம்' பறைசாற்றிட,

'வளர்ச்சியை எதிர்த்த
பழங்குடியினர்!'
போரை வெறுத்த பூமியில்,
வேரோடு சாய்ந்தனர்,
துப்பாக்கி குண்டுகளுக்கு.

'அ(ரசு)தர்மம்
அசோகரின் பூமியில்!'

Sunday, February 18, 2007

ஓர் அனுபவம்..

நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் செயல்படும் தொழிற்சங்கங்கள், பெரும்பாலும் அவர்களது குறுகிய நலன்களுக்காகவே பாடுபடுகின்றன.குறிப்பாக, இடதுசாரி முத்திரையுடன் செயல்படும் தொழிற்சங்கங்கள் செயல்பாடும்,பல்வேறு கட்சி அரசியல் உணர்வு உள்ளவர்களை தலைமைப்பொறுப்பில்இருத்தி,வர்க்க உணர்வு முழக்கங்களை எழுப்பி நடை போடுவது தன் முரண்பாடாகவும் கேலியாகவும் உள்ளது.ஊழல் குற்றச்சாட்டுக்கள்,அவதூறு பிரச்சாரங்கள் ஆகியவற்றை அணிகள் முன் வைத்து திரட்டும் போலியான அணுகுமுறைகள், நிறுவனத்தை கேலிக்குள்ளாக்குகிறது. கையாடல் செய்வது, கையூட்டுபெறுவது போன்ற முறைகேடுகளில் தேர்ந்தவர்களாக உள்ள 'தோழர்கள்' நிர்வாகத்தின் மீதும், அடுத்த தொழிற்சங்கத்தின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசுவது எவ்விதத்தில் சரியானது என்றால் பதில் இல்லை..

'எதுவுமே ஒழுங்கில்லை ஒழுங்கைப்பற்றி பேசுகிறீர்கள்'என்று தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் பேசுவது வேடிக்கையாக உள்ளது. இக்கூற்று, இவர்களுக்கும் பொருந்துவது அறியாதது போல், அடாவடியாக ஆர்ப்பரிப்பது, 'பணி நேரத்தில் பாரி விளையாடுவது' பணி கலாச்சாரமாக கொள்ள இயலுமா?
தலைமையிடம் இவர்கள் கற்றுக்கொண்டது என்ன?.

குறிப்பாக,சாதிய உணர்வுகளை சாடுகின்ற இவர்கள், ஒரு வட்டத்துக்குள் இருந்து கொண்டு, 'நெல்லிக்காய் மூட்டைகளாக சிதறும்' ஒடுக்கப்படும் பெரும்பான்மை சாதி மக்களை, மிகவும் நுணுக்கமாக, தைரியமாக ஏமாற்றி பிழைப்பு நடத்தி வருகின்ற்னர். இந்நுட்பத்தை புரிந்து கொள்ள இயலாது, சுதேசி அடிமைகளாக பல்லாண்டு காலமாக இத்தொழிலாளர்கள், விறகு கட்டைகளாக தங்களை இழந்து கொண்டிருக்கிறார்கள்.

விடியல் இவர்களுக்கு
எப்போது?

Friday, February 16, 2007

சுற்றுலா வளர்ச்சி...!

நிலம் இருந்தால்
என்ன!
போனால்
என்ன!
மரங்கள் வீழ்ந்தால்
என்ன!
வீழ்த்தப்பட்டால்
என்ன!

குளங்கள்
தூர்ந்தால் என்ன!
தூர்த்தப்பட்டால்
என்ன!

99 ஆண்டு குத்தகை,
விடுதி அவசியம்
இல்லையா!

அறை போடலாம்,
'பீர்' அடிக்கலாம்,
கும்மாளம் போடலாம்,
குட்டி சொர்க்கம்
இல்லையா!

சுற்றுலா தலம்!
வழிபடும் நிலம்!
நிறைய தேவை!
'எங்ககெங்கு காணினும்'
உயரமான உணவகங்கள்!
சக்தி அளிக்கும்
இல்லையா!

வெளியாளுக்கு
மகிழ்வளிக்கும்
உல்லாசபுரி!
அதிகம் வேண்டும்!

தண்ணீர் கிடைக்கவில்லை
என்றால்என்ன!
'தண்ணி' கிடைக்கும்
இல்லையா!

பற்றாக்குறை
'பாருக்கு' இல்லை!
தெருவெங்கும்
தாராளம்!
குடமுழுக்கு பொருளாக!

ரசிகர் மன்றம் குளிர
'டின்னாக' புட்டியலாக
' அபிடேகம்'
திரையரங்கு ஆள் உயர
விளம்பரங்களில்!

'பாண்லே' பாலுக்கும்
கிராக்கி!
குடம் குடமாக
முழுக்கு!
இளைஞர் முன்னேற்றம்!
வளர்ச்சி!
இனிமையான புதுவையில்!

தள்ளுவண்டியில்
நடமாடும் 'பீர்' திட்டம்!
மக்களின் உடனடித்தேவை!
சுற்றுலா மேம்பாட்டில்!
ஒரு மைல் கல்!

"நொய்டா"

அரசாங்கம் இருக்கிறதா?
காவல்துறை இருக்கிறதா ?
நிர்வாகம் இருக்கிறதா?
நீதித்துறை இருக்கிறதா?

வீதிக்கு வந்த குழந்தைகள்,
வீட்டிற்குத்திரும்பவில்லை!
நூற்றுக்கணக்கில்!

புகார் அளித்தார்.
வாங்கவில்லை
காவல்துறை,

விரட்டியடித்தார்
பெற்றோர்களை!

சோகம்,துயரம்
தொடர்ந்தது,
புகைமூட்டம் போல்!

விம்மினார்,விசும்பினார்,
விடியவில்லை!

சாய்க்கடையில்,
கழிவுநீர்
போக்கில்,

மனிதப்பிஞ்சுகள்
குவியல்,குவியலாக!

இதயம் கனத்தது!!

Thursday, February 15, 2007

துளிகள்...!

துளிகள்தான்
துயரமில்லை!
சொட்டுகள்தான்
சேதமில்லை!


இரைச்சல்
கூடும்
பகல்நேரங்களில்,
இழப்பு ஏதும்
இல்லை!


இரைச்சல் ஒடுங்கும்
இரவிலோ
உளைச்சல்,
கூடிடும்,
உள்ளத்தில்
வீழ்ந்திடும்!

வீணாகும் ஒவ்வொரு
சொட்டும்,
வெங்காய வெடிகளே
!

நிலவுக்குருடர்..?

மின்வெட்டுக் காலங்களில்தான்
உன் வெளிச்சம்,
எங்களுக்கு,
அழகைத் தேடும்
அவலம்!


மனித வெடிகள்...!

சாவுகளே அஞ்சும்
காவுகள் !
ஆயுதங்களே தோற்கும்
ஆயுதங்கள் !

ஆழ்ந்திடு...!

அகத்தையும்,புறத்தையும்
இணைத்திடு!
புதிய இணைய தளம்
ஏற்றிடு!
உன் நெஞ்சில்,
பல மின்னஞ்சல்
செலுத்திடு,
செப்பமாக!
வலைப்பின்னல்கள்
தளையில்லாது,
நிலைத்திடு!
நெஞ்சை நிமிர்த்து!
புதிய கனணி
நீ!
மீமிசை எந்திரம்
நீ!
மீண்டும் வாசிக்க
முனைந்திடு!
அகவயத்தில்
ஆழ்ந்திடு.

நிலை..!

எரிமலையாக வெடிக்கும்
சிதறும்,
பனிமலையாக
உருகும்,
இரு வேறு நிலையும்
உன்னிடத்தில்.

அதிர்வுகள் இல்லாத
நிலை இல்லை
அணுப்பொழுதும்.

உணர்தல் ஓங்கி
ஒலிக்கும் போது,
ஓயாத புலம்பல்,
விசும்பல்,
ஓரிடம் நில்லாது
சேரும்.

Wednesday, February 14, 2007

மீறல்...

நரிமேடு!
நல்லமேடு!
நம்மவரின்
சுடுகாடு.

ஊருக்குபக்கமாக,
மரங்கள்,வாய்க்கால்,
கழனிகளுக்கு
மத்தியில்
உயரமான மேடு.


கோழி 'கொம்பா',
கத்திகட்டி,

கட்சிகட்டி,
வாரத்தில்
கண்கொள்ளாக் காட்சி,
பொழுது போக்கு

மறைந்த காட்சி.

மேடும் இல்லை
கோடும் இல்லை
மரங்களும்,
கழனிகளும்,
வாய்க்காலும்,வரப்பும்
இல்லை.


நரியும் நாயும்,
ஊர்வ்ன, பரப்பன ,
சுவடு இல்லை,
சுறு சுறுப்பான
மனித முயற்சியில்.


வீதிகளூம் வீடுகளும்
கழிவு நீர் வாய்க்கால்களும்
எச்சமாய்


மீறல்
அழுத்தமாக
....

Monday, February 12, 2007

என்றோ !

நீதி மன்றம் !
நடுவர் மன்றம் !
அற மன்றம் !
வழக்காடு மன்றம் !
குன்றமென நிமிர்ந்து
நிற்க,
குறைவின்றி
பணிமுடிக்க
கூடிடும் நாள்
என்றோ!

மகளிர் உரிமை!

மகளிர் உரிமை!
வதைக்குஎதிரான
இயக்கம்!

மனித உரிமைக் கல்வி
பயிற்சி, பட்டறை,
பயிலரங்கு!
உலகமயஎதிர்ப்பு !
வகுப்பு வாதஎதிர்ப்பு!
சனநாயகம் காக்கும்
முழக்கம்!

சமையல் மகளிருக்கு
வீட்டில் இல்லை
விடுதலை!

பணியாளர் மகளிர் ஆயின்
பதவி நிலைப்பு இல்லை
கழிவறை கழுவ,
கூட்ட,ஆயா வேலை
செய்ய,இயலும்
எனில்,
ஆயிரம்
மாதந்தோறும்.

நம்பிக்கை அளிக்கும்
மகளிர் உரிமை!

Sunday, February 11, 2007

இவைகளுக்கிடையில்...

காகிதங்கள்,தாள்கள்,
புத்தகங்கள்,
சுவடிகள்,கோப்புகள்,
துண்டறிக்கைகள்,
குவியல்கள்,
இவைகளுக்கு இடையில்
நானும்,

ஒவ்வொரு நாளும்
கடக்கின்றன,
ஓயாமல்,
கழிந்தாலும்,
கழித்தாலும்,
கூடுத்லாகும்.
வகுத்தாலும்,
பெருக்கமாகும்,
இவைகளுக்கு இடையில்............

பதட்டம்

பச்சை விளக்கு
எல்லையைத் தாண்டி
நாள் தோறும் பதட்டம்.
சிவப்பு விளக்கு
நிதானம்.
மஞ்சள் விளக்கு
பரபரப்பு.
போக்குவரத்து
கைகாட்டி
முன்,
வழி பார்த்து
நிறங்களின
உத்தரவிற்காக
நிற்கும்
வண்டிகள்.
உறுமும்,
உள்ளங்கள்
விரைந்திடும்
நாடகம்...

பாவத்தின் சம்பளம்...?

சம்பளம் தா
இரட்சிப்பவனே!

கிராமங்கள்...?

"இந்தியா கிராமங்களில்
வாழ்கிறது"
கிராமங்கள்...?

காட்சி!

விடியலைத்தேடும்
விழிகள்,
விடுகதையாய்
மொழிகள்,
அடுமனை
நெஞ்சம்,
ஆர்த்தெழ
கெஞ்சும்,
பார்த்த
காட்சி,
தோற்கும்
மாட்சி.

Saturday, February 10, 2007

ஏக்கம்!

"கூவி அழைத்தேன்
பாவிகள்
வரவில்லை"
"சாவி
உன்னிடம்
இல்லை"