Sunday, July 29, 2007

சந்திக்காப்பான்

"பொங்க வைக்கணும், பிள்ளைங்க தெருவிலே வெலையாடுதுங்க, வெளியே தெருவே போவுது. செத்தை ஒரு கத்தை வாங்கியாங்க, கண்ணாறு கழிக்கணும்"."நீங்க போங்க","அந்த மனுசன் எப்ப வந்தான், வாங்க ஆயாவை அழைத்துக்கொண்டு, சாயுங்காலம் இருட்டுறதுக்குள்ள, பொங்க வைக்கணும்".


குடும்பமே, நாலு மூலை சாலை சந்திப்பில் உள்ள அந்த திடலில், வீட்டுக்கு சில நூறு மீட்டர் தொலைவில், திரண்டது. ஆயாவின் தலைமையில், கழுவி, பொட்டு இட்டு, பூ வைத்து ஒரு அணி வேலை செய்ய, மறு அணி செத்தையை வைத்து கல் அடுப்பில் பொங்கல் தயாரிப்பு, குணிந்து ஊதாங்குழல் கூட இல்லாது, கண்ணைக் கசக்கிக் கொன்டு தயாராகும். வாழை இலையில் படையல் வைத்து, மணிஅடித்து, மகிமை சேர்த்து தெருவில் உள்ளவர், அந்த 'வண்டி மேட்டில்' உள்ளவர், அனைவரும் கும்பலாக, விசாலமானத் திடலில் ஞாயிற்றுக்கிழமைகளில், தவறாது நடைபெறும்.


கோட்டக்குப்பம் பாய்க்கடையின் எதிரில், கொண்டாட்டம். படையல் முடிந்ததும் அனைவருக்கும் பரிமாற்றம்," புதுப்பானையில் உள்ளது எல்லாருக்கும் குடுக்கணும், வூட்டுக்கு எடுத்துச்செல்லக்கூடாது" ஆயாவின் கண்டிப்பான உத்தரவு.


ஒவ்வொரு வாரத்திலும், ஞாயிற்றுக் கிழமைகளில் அலங்கரிக்கப்படும் "சந்திக்காப்பான்" பற்றிய பயம், பக்தி, வெகு நாளாக இருந்து வந்தது. மிகவும் பிற்காலத்தில் தான் அந்த 'சந்திக்காப்பான்', பிரெஞ்சுக்காரன் காலத்தில் வைக்கப்பட்ட மைல் கல் என்பது புரிய வந்தது.


காலச்சக்கரத்தின் ஓட்டத்தில், இப்போது 'சந்திக்காப்பானும்' இல்லை, பாய்க்கடையும் இல்லை , வண்டிமேடும் இல்லை, ரிக்க்ஷா வண்டிகளும் இல்லை, வண்டி மேட்டில் உரிமையுடன் திரிந்தவர்களின் வாரிசுகளில் ஒரு சிலர், தட்டு வண்டி ஓட்டுகின்றனர்.

Saturday, July 28, 2007

அமைதி

நெடுங்குன்றமென விண்ணுயர்ந்து செம்மாந்து நின்ற மரங்களை பதம் பார்த்து, முரித்து,விளைநிலங்களின் பச்சை மென் பயிர்கள் மீது வன்மம் காட்டி சென்றடங்கியது அமைதியாக, புயல்! வான் மின்னலின் எச்ச சிதறல்களாக வண்ணம் காட்டியது தாரகை விண்ணில்!

ஆனால், தற்போது இயற்கையின் சீற்றம் எப்போதும் நிகழாதது போல், இயல்பான அமைதி, அனைத்து இடங்களிலும் மேலோங்கி நிலவுகிறது!
வைகறைப்பொழுதில் தலைவனும், தலைவியும் நின்றனர் வயல்வெளியின் நடுவில்!!

சூறாவளியின் தாக்கத்தில், காயம்பட்ட இயற்கை எழிலின் நொடிப்பு குறித்து, மனதில் அசைபோட்டு நின்றார்! சில நொடிகள், ஆழ்ந்த இதம் அளிக்கும் அமைதியில்!

படை வீரன் கிழக்கு நோக்கினான்! தன் நெஞ்சிற்கினியாளிடம்," இருளைக்கிழித்து வெளிப்படும் ஞாயிற்றைப்பார்" என்று கூறினான்.

கலில் சிப்ரான்

தமிழ் வடிவம்-முத்துக்கண்ணு

Friday, July 27, 2007

தமிழ்மயமான பிரெஞ்சு சொற்கள்

புதுவை தமிழ் வழங்கும் பகுதியாகும்.சோழமண்டலத்தின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி எனவும், தொண்டை மண்டலத்தில் ஆட்சிப் பகுதியாகவும் விளங்கியது என பல சான்றுகள் கூறுவர்.


உரோமானியப் பேரரசுடன் வணிகத்தொடர்பு கொண்டு விளங்கிய அரிக்கன்மேடு, வீராம்பட்டினம் பகுதிகள் தொல்பொருள் வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. பிற்காலத்தில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் 350 ஆண்டுகள் இருந்து வந்த புதுவையில், தமிழ், மக்கள் மொழியாக பேசப்பட்டு வந்தாலும், பல சொற்கள் தமிழ் வடிவத்தில் புதுவையின் பூர்வீகக் குடிகளால் பேசப்படு எழுதப்பட்டு வந்துள்ளன.


ஆனால், இன்றைய தலைமுறையினர்க்கு இது பற்றிய செய்தி அறிவதற்கு வாய்ப்பில்லை. இன்றும் 70 வயதைக்கடந்த உள்ளூர் பெரியவர்கள் பேசும் பேச்சில்,"பீரோவுக்கு போறேன்", "இவன் கிசுத்தியம் போட்டுக் கேட்கிறான்", "பாருங்க இவன் கொம்பா வைக்கிறான்", "நான் ரெழிக்கு போறேன்", "ஒப்பித்தாலுக்குப் போறேன்", "எக்கோலுக்கு போகலையா","திரைசோர் போறேன் என்பன போன்ற பல சொற்கள் இன்னும்நடைமுறையில்உள்ளன.


மேற்குறிப்பிட்ட சொற்கள் மட்டுமின்றி, இன்னும் பல சொற்கள் தமிழ் வடிவமாகி, உணர்த்தும் பொருள் பின் வருவனவாகும்.


கிசுத்தியம்-- கேள்வி
கொம்பா------- சண்டை
ரெழி-------- மின்சாரத்துறை
ஒப்பித்தால்-- மருத்துவமனை
எக்கோல்------ பள்ளி
திரைசோர்---கருவூலம்
பீரோ----- அலுவலகம்
காண்------குழாய்
தளவாய்-- துணை ஆய்வாளர்
முழ்வார்---கைக்குட்டை
முசே---- ஐயா
பிரிகாதி---ஏட்டு
சொல்தா---- இராணுவ வீரன்
சோல்து------ மாதச்சம்பளம்
செக்கூர் பணம்----உதவித்தொகை
ரூய்----------- வீதி
மேரி-------- நகராட்சி அலுவலகம்
திரிபுய்னால்----நீதிமன்றம்

Thursday, July 26, 2007

தனிமைக்கு அப்பால்

எனது தனிமைக்கு அப்பால்
மற்றொரு தனிமை
அங்கே உறைகின்றவனின்
தனிமையைவிட
எந்தன் தனிமை
நெரிசல் மிகுந்த சந்தைக்கடை
எந்தன் தனிமை என்பது
சப்தங்களின்
ஒரு குழப்பம்


அப்பால் உள்ள தனிமையைக் காண
தவிப்பு மிக அதிகம்,
ஆனாலும்,
மிக இளம் வயது எனக்கு,
மேல் பள்ளத்தாக்கின் குரல்கள்
இன்னமும்
என் செவிகளை ஈர்க்கிறது


அவற்றின் நிழல்கள்,
எந்தன் வழியை தடுத்தது,
என்னால் செல்ல முடியவில்லை!

இம்மலைகளுக்கு அப்பால்,

வசீகரிக்கும் தோப்பு உண்டு!

அங்கே குடிகொண்டுள்ள
எனது அமைதி
வேறொன்றம் இல்லை!
சுழல் காற்றாகும்!
என்னை ஈர்க்கக்கூடிய
மகிழ்ச்சி,
ஒரு இல்பொருள்
காட்சியாகும்!


மிக இளையவன் நான்,
மிக கிளர்ச்சியானவனும் கூட,
புனிதமான,
அத்தோப்பினை நாட,


இரத்தத்தின் சுவை
என் வாயில்,
இன்னும் ஒட்டிக்
கொண்டிருக்கிறது


எனது முன்னோர்களின்
வில்லும், அம்பும்,
இன்னமும் எனது கைகளில்,
என்னால்
செல்ல முடியவில்லை!


இந்த சுமையான மனத்தினைத்
தாண்டி,
எந்தன் சுயேச்சையான மனம்
இழுக்கிறது,

என்னுடைய கனவுகள்
சுயேச்சையான
அகத்திடம்!


அந்திபொழுதில் சமர் செய்கிறது,
அகம்,
அதற்கு எம் கனவுகள்
யாவும்,
அந்திப் பொழுதின் போர்க்களம்


எம் விருப்பங்கள் யாவும்,
எலும்புகளின் ஒலிப்பாகும்
யான் மிகவும் இளையவன்,
எனது சுயேச்சையான மனமாக
இருந்திட,
மிகவும் வன்மம் கொண்டுள்ளேன்


எவ்வாறு சுமையான
எனது சுயத்தை
யான் கொல்லாது,
அல்லது
அனைத்து மனிதர்களும்
விடுதலை பெறாமல்,


யான் எனது சுயேச்சையான
மனதாக
மாறுவது எவ்வாறு?


இருண்மையில் எனது வேர்கள்
அழிந்துவிடாமல்,
எமது இலைகள் காற்றில்
கீதம் இசைத்து
எவ்வாறு பறக்க முடியும்?


எனது சொந்த அலகினால்
கட்டப்பட்ட கூட்டைவிட்டு,
எமது குஞ்சுகள்
வெளியில் கிளம்பாமல்,


எவ்வாறு என்னுள் இருக்கும்
சூரிய கழுகு
வெளிச்சத்தில் பறக்க முடியும்?

(-கலில் சிப்ரான்-

தமிழ் வடிவம் முத்துக்கண்ணு)

Sunday, July 22, 2007

சென்னை கருத்தரங்கம்

'போலி மோதல் படுகொலை எதிர்ப்பு கருத்தரங்கம்', 21.07.07, சென்னையில் நடைபெற்றது. கொச்பெட் சுரேசு, உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு) உட்பட, பலர் பேசினர்.


கூட்டத்தில் பேசியவர்களில் பெரும்பாலும், அரசை எதிர்த்து, காவல் துறையை எதிர்த்து 'போர் முரசம், அடிப்பது போல் முழங்கினர்.எவ்வித அரசியல் கருத்துக்களையும் பேசுவதற்கு, எழுதுவதற்கு இந்திய அரசியல் சட்டம் உரிமை அளித்துள்ளது. ஆயுதபாணி அரசியலை, சட்டங்கள் ஏற்கவில்லை.என்றாலும், இவ்வகை அரசியலை ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் மீது, அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது, இந்திய தண்டணைச் சட்டம் விதித்துள்ள முறைகளுக்கு முரணாக, மீறலாக அமைகிறது.


குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது, குறைந்த பட்ச பலத்தை பயன்படுத்துவது என்பது குறித்து, பல உயர் நீதி மன்றங்கள், உச்ச நீதி மன்றமும், பல வழக்குகளில் கண்டிப்புடன் காவல் துறை கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு குறித்து, தெளிவாக வழிகாட்டுதல்கள் அளித்துள்ளது.காவல் துறையானாலும், இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளை காலில் போட்டு மிதிப்பது, குற்ற விசாரணை நடைமுறை சட்டத்தை மீறுவது, எப்படி சரியானது ஆகும். 'சட்டத்தின் ஆட்சியை' அப்பட்டமாக மீறுவது, எந்த வகையில், 'சீருடைக்கு' ஒழுங்காகும்.

சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள அதிகாரம் எவர் கொடுத்தார்? சனநாயகத்தை மதிக்கும் மக்கள் கேட்கிறார்.

'தற்பாதுகாப்பு' உரிமை என்பது ஒரு குற்றஞ்சாட்டப்பட்டவரை 'முடித்துவிடுவது', என்கின்ற நோக்கத்தில், நடுநிலைமை இன்றி சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொள்வது, இந்திய தண்டனைச் சட்டப்பிரிவின் கீழ் கொலைக் குற்றம் ஆகும் என்பது வெளிப்படை. இருந்தாலும், நீதிமன்றத்திற்கு ஒவ்வொரு முறையும் செல்லும் வசதி பாதிக்கப்படும் மக்கள் பிரிவினரால் சாத்தியமா?

துப்பாக்கி, அல்லது ஆயுதம் ஏந்தாத, 'உடனடியாக ஆபத்து விளைவிக்கக்கூடிய திறன் இல்லாத', கருத்து ரீதியாக செயல்படும் அரசியல்காரர்கள் மீது, நவீன ஆயுதம் போன்ற கருவிகளை உபயோகிப்பது சமமற்ற அதிகார மீறலாகும்.

தற்போது, சமூக தணிக்கை போன்ற கருத்து ம்க்களிடையே வலுவூக்கம் பெற்று வரும் சூழலில், சீனா போன்ற நாடுகளில் 'சமூகத்திற்கான காவல்' எனும் மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில், ஆங்கிலேயர் உருவாக்கித் தந்த காவல் துறை சட்டம் இன்றும் அடிப்படை மாற்றங்கள் இல்லாமல் நடைமுறையில் உள்ளது சரியானது ஆகுமா?

Sunday, July 15, 2007

குட்டிச்சுவர்

அந்த நாட்களில் இருட்டியதும், கழிப்பு செய்திடும் இடம். விசாலமான மனை. இந்த தெருவிற்கும் அந்த தெருவிற்கும், பாதையுடன் கூடியது. இரண்டு பக்கங்களிலும் வீடுகள் அரணாக ,பூசணிக்கொடிகள் மனித உரங்களில் படர்ந்து இருக்க. பூசணி பூக்களின் வாசத்தில், பொழுது புலர்ந்தால், சாயுங்காலம் ஆனால், அந்த தெருவிலுள்ளவர்களின் இயற்கை அழைப்பிற்கு இடம் கொடுத்து வந்தது, வெகுகாலமாக. கூட்டம் கூட்டமாக 'வேதனையை தீர்த்த' வரலாறு. மறைந்த செய்தி.


அதற்கு அடுத்த தனுசுப் பிள்ளைத்தோட்டம், தென்னம் பிள்ளைகள் அடர்ந்த இடம். 'கழிப்பிடமாகவும்', 'பொழிப்பிடமாகவும்', பல தலை முறையினருக்கு பயன்பட்டு வந்தது. அதில் ஒரு பகுதியில், அனைத்து சாதியினரும், வேறுபாடு இல்லாமல் உதை பந்து, கிட்டிப் புல், 'லாக்', கைபந்து, சடுகுடு, பம்பரம், கோலிக்குண்டு விளையாட்டு, போன்ற பல விளயாட்டுகளில் நண்பர்களாக, சகோதரர்களாக பொழுது போக்கிய இடம், மாறியுள்ளது.


அந்தப் பகுதியில் காலங் காலமாக வாழ்ந்த மக்களுக்கு, பட்டா போட்டு கொடுத்த இடம், தற்பொழுது 'ஆனந்த இன்னாக', 'திருமண நிலையமாக', 'சற்குரு ஓட்டலாக' உருமாற்றம். எவ்வாறு?


பாலத்தின் கழிவு வாய்க்கால் மீது, கட்டிடம் கட்டும் அளவிற்கு, அரசு நிலத்தின் மீது மீறல், பட்டா செய்து கொடுத்த நிலத்தை கைப்பற்றி, வணிக நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாற்றங்கள், விளைந்த ஏமாற்றங்கள் எவருக்கு பலன் விளவித்தது?

Saturday, July 14, 2007

கவனம் எங்கே?

பூங்கா, பாரதியின் பெயர் இதற்கும். 'கா' என்றால் சோலை. அடர்த்தியான மரங்கள், செடிகள், தாவரங்கள், புல், பூண்டுகள் அமையப் பெற்ற நிழல் தரும், குளிர்ந்த சூழல். சீர் செய்கிறோம் என்று இடைவெளி அதிகப்படுத்தி, செயற்கைத் தரைகள் அமைத்து, கணக்குக்காக கவின் மிகு லபூர்தொனெ-பிரஞ்சு கவர்னர், அமைத்த பூங்கா.


' வளர்ச்சி', 'அழகுபடுத்துதல்' கோடிக்கணக்கில்.' இயற்கை சூறையில்' அத்தனை சூதும் அம்பலம். 'மக்கள் வரிப்பணம்'. 'திட்டமிட்டு ஏப்பம் விடும் அதிகாரம். அக்கறையற்ற சமூகம். இது ஒரு துளி. ஓராயிரம் நடக்கிறது நாள்தோறும். கேரளா போன்ற மாநிலத்தில், இது போன்ற முறைகேடுகள் நடக்க விடுவார்களா?


விழிப்புணர்வுக்கு கூட, வீதி இயக்கம் தேவையா? அரசியல் கட்சிகள் கவனம் எங்கே? மக்கள் கேட்கிறார்கள்!!

Thursday, July 12, 2007

விடைதருமா?

ஆற்றில் ''லாரிகள்''
அலை அலையாக
அள்ளும்,
'அல்லும் பகலும்'
ஆழப்படுத்தும்,
காயத்தை.


"குருதியென நீர் பிடிப்பும்''
படிப்படியாக வற்ற,
சோகை,
"எம்மிடம் தங்க''
''தொகை உம்மிடம் தேங்க''


"ஆற்றல் மறவர்"
தேறினார்,
அதிகாரத்தில்,
அலங்காரத்தில்,


" மேட்டுப்பகுதி மட்டும்
மட்டமா"
" வெட்டி வீழ்த்துகின்றனர்"
''செம்மண் உடல்"
"சிதைந்து பாதாளமாக"

கிளர்ச்சி

தகிப்பு, தவிப்பு
கொதிப்பு, குதிப்பு
சூடேற்ற உணர்வு,
சூழ்நிலை
மறப்பு

வாராது வந்த...

நேற்றும்,இன்றும் மழை. இடி,மின்னல். வழக்கத்திற்கு மாறான சுழல் காற்று. கனமழை. 'பணமழை பெய்யும்' மாநிலத்தில். தென்மேற்கு பருவ மழையா? இருப்பினும், ' கால் சேர்' மழை கூட இருக்காது. அம்மாவின் கணிப்பு.

'அங்குல அளவில்' வாழும் நம்க்கு, அந்த 'அளவை', மறைந்த வரலாறு. வெப்பம் தணிந்ததா? ஓரளவிற்கு. 'அச்சார உடன்படிக்கை'யாக கொள்ளலாமா. ஆசை அதிகம் மனிதனுக்கு. பெருமழை வேண்டுமாம்! பார்க்கலாம், அடுத்த வடகிழக்கு மழையின் போது.

உங்கள் 'வேள்வி' வினையாகுமா?

Monday, July 9, 2007

'பசியாருவோம்'

ஊரெல்லாம் பெய்யும் மழை உனக்கில்லை. உனக்குத் தொழிற்சாலை, தார்ச்சலை, 'கான்கிரீட்' கட்டிடங்கள், உயரமான கட்டிடங்கள், பெரிய, பெரிய திட்டங்கள். 'புல்வார் பெரிய மரங்கள் , அரிய மரங்கள்', போக்குவரத்துக்கு தடை, படிப்படியாக பக்குவமாக, 'களையெடுத்தோம்', விரிவுபடுத்தினோம்.

' செடி, கொடிகள்' நடலாம், அது போதாதா? சந்து, பொந்துகளில், நிகழ்ச்சி வைக்கலாம். விழா எடுக்கலாம். விளம்பரப்படுத்தலாம். ' தண்ணீர் தேவையை சமாளிக்க', கடல் நீரை குடி நீராக்கலாம். கோடி உருவாய்த்திட்டம், கவலை இல்லை. 'பகா, மெக' திட்டங்கள் கைவசம்.

'பசியாருவோம் பகிர்ந்து உண்ணுவோம்'.

Saturday, July 7, 2007

அணுகு முறை

ஊடக உலா ஊரெல்லாம் விசாரிப்பு. நாடகம் நம் பெருமை. வீதி நாடக

வீரியம். ஒப்புவமை இல்லா ஒப்பனை. ஒன்றிய ஓட்டம். அனைவரிடம் அசை.

நியதிகள் ஏதும், எனக்கு நிலை இல்லை. 'நீண்ட பயணத்தில்'. எதிரும் இல்லை,

புதிரும் இல்லை,' பனியும், போரும்', 'சனி சாம்ராச்சியமும்', சங்கடம் இல்லை,

'வடக்கும் இல்லை, தெற்கும் இல்லை, 'எண் திசைகள் இவ்வுலக ஆக்கம்',

அணுகு முறைகள் நூறு!!

அரிதாரம்

எவரும் இப்படியா?
இவரும்
இப்படியே!

அறியவில்லை அப்பொழுது,
அறிந்து கொண்டேன்
இப்பொழுது,

அறியாமை இதுகாறும்,
அதிகாரத்தில் இருந்தாலும்,
அனுபவம் இல்லை,

உமக்கு,
சமூக நடவடிக்கை யானாலும்,
சிறப்பு.

Friday, July 6, 2007

போகுமா?

உயர் சாதி
பெயர் தாங்க
எம்
மகிழ்ச்சி!

இப்படியாவது
போகுமா
நம் தாழ்ச்சி!

இரைச்சல்

கேட்டேன் அவரை
கேட்கிறதா?
எங்கே?
விழவில்லை எனக்கு.


விழுகின்ற விழிப்பு
விழைவு
இவருக்கு இல்லை!


ஏன் எவருக்கும்!
சந்தடி உலகில்
வந்தடி தெரியவில்லை,
விழவில்லை.


வாயிலும் புரியவில்லை!
இரைச்சல், புகைச்சல்,
'டர், புர்',
'உயிங்', 'குர், டர்',


பழகிய எனக்கு
மெல்லோசை,
பண்ணோசை,
தன்னோசை,
ஏதும் எட்டாது.


ஏமாற்றத்தை
தவிர,
பொறிகள் பொலிவு,
வலிவு,
இழப்பு,
புரியவில்லை.


மெல்ல சாகும்,
ஆற்றல் அடங்கும்,
அணு அணுவாய்.
'அலோபதி'யும் உதவா,
எந்த பதியும்.

Tuesday, July 3, 2007

மக்கள் கேட்கிறார்கள்?

தொழிற்சங்கத்தில் பொருளாதார கோரிக்கைகளுக்கு முண்டாசு கட்டி , முண்டி அடித்து போராட்டம் நடத்தும் தோழர்களில் எத்தனை பேர் சமூகப் பிரச்சனைகளுக்காக போராட முன்வருகிறார். 25 ஆன்டு கால எனது தொழிற்சங்க வாழ்க்கையில் அவர்களை மல்லு கட்டி அழைத்துச் சென்று நிறுத்தியதில் ஒன்றிரண்டு பேர்தான் தேறினார்கள் என்பது வெளிப்படை.


மத்திய தர வர்க்கம் புதுச்சேரியில் மிகவும் தன்னனலப் போக்கில் ஊறியுள்ளது, மக்கள் செயல்பாட்டாளர்களால் துல்லியமாக அறியப்பட்டுள்ள்து.


ஊழலற்ற நிர்வாகத்தை அளிப்பதில் தொழிற்சங்க உணர்வு உள்ள ஊழியர்களுக்கு பொறுப்பு இல்லையா? தாம் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே மக்களுக்கு அவர்கள் தேவையை பூர்த்தி செய்வதில் சமூக கடமை இல்லையா?. பெருகி வரும் 'விலைப்பட்டியல்', மின்சாரத்துறையில் குறைந்த பட்சம் உருவா500 கையூட்டு அளிப்பதாக உள்ள நடைமுறை, வருவாய்த்துறையில் திரட்டப்படும் இலஞ்சம், பத்திரப்பதிவாளர் அலுவலகத்தில் கையும் மெய்யுமாக பெறப்படும் 'மெய்யூட்டு', போக்குவரத்து துறையில் புரையோடிப்போய் இருக்கும் முறைகேடு, ஆரோக்கியமான ஒரு சமூகத்தின் வளர்ச்சி பாதையா?


மக்கள் கேட்கிறார்கள்? பதில் கிடைக்குமா?

Sunday, July 1, 2007

அரசியல்

கொடிப்பிச்சை
கொள்கை!
மடிப்பிச்சை
இழிவு!