Sunday, November 30, 2008

மார்கழி....

நிர்வாணம் தந்தே
பழக்கப்பட்ட எங்களுக்கு
நிவாரணம்
எவ்வாறு ?

மழை, வெள்ளம்,
மின் விநியோகம்,
குடி தண்ணீர் இன்மை,
வீடு இழப்பு,

வேலை இழப்பு,
காலியான கிராமம்,
கால் நடை பாதிப்பு,
மக்கள் பாதிப்பு.

ஆண்டுதோறும்
வருவது தான்,
இவ்வாண்டும்,
ஆய்வுக்குழு

வழக்கம் போல்
பத்திரிக்கைச் செய்தி,
படச்செய்தி,
வண்ணச்செய்தி.

நாள்தோறும் கட்சிகள்
கருத்துரை,
ஆட்சியின் மறுப்புரை
வழக்கம் போல்

கிலோ அரிசி,
மண்ணெண்ணய்,
மருத்துவ முகாம்
பெட்டிச் செய்தி,

பிறகென்ன
மார்கழி....

பாவி!

மண்ணை புரிந்து கொள்ளவில்லை!
தன்னை அறிந்து கொள்ளவில்லை!
திண்ணை ஒழிந்தும் அதன்
திசைவழி மாறவில்லை!

ஏறு மாறாய் வாழும்!
ஏற்றமில்லாத் தமிழன்!
தோற்றத்தை தாங்கி!
தொய் தமிழன்!

கூவித் திரியும் காவி!
கூன் முதுகு நிமிரா பாவி!

Friday, November 28, 2008

மழை மரம்!

தங்க வைக்க இடம் பள்ளி!
சமுதாயக் கூடம்!
பாதித்தவருக்கு!
உணவுப் பொட்டலம்!

துணி மணி!
இழப்பீடு!
துக்கம் தீர்க்க
ரொக்கம்!

விழுந்த எம்மை!
தூக்கி நிறுத்த!
ஆள் இல்லை!
ஆதரவும் இல்லை!

அறுத்து!
அடக்கம் செய்யும்
வேலை!
அமர்க்களம்!

இடையூறு எங்களால்!
பயணம் தடை
எங்களால்!

வீடு இடிந்தது எம்மால்!
விடுதி இடிந்தது எம்மால்!
கெடுதி நேர்ந்தது எம்மால்!

நிவாரணம் எமக்கு இல்லையா?

Monday, November 24, 2008

புரிவாய்!

மட்டி மனிதனுக்கு!
கொட்டி
தீர்க்கிறது!

வெட்டி குளத்தில்
தேக்கிட!

தூர்வாரி!
நீர் நிறையச் சேர்த்திட
துப்பு இல்லை!

சாலைகள் வீண்!
பாதைகள் பள்ளம்!
குண்டும்! குழியும்!
பழிச்சொல்!

ஊடகங்களில் நாடகம்!
நாள்தோறும் அலறல்!
அலசல்!

மனிதம் தர மறுப்பது!
மாநிலங்கள்
தடை விதிப்பது!

இயற்கைக்கு
என்றும் இல்லை!

அளிப்பது
ஏராளம்!
தாராளம்!

எல்லைக்கோடு!
காவல் கல்!
என்னுடையது!
உன்னுடையது!
என்னும் வண்ணத் திரை!

நமக்கே உரிமை!
அனைவருக்கும் இல்லை!

அரசியல் புரிவாய்!

Friday, November 21, 2008

உலகுக்கு வழி காட்டும்!

வல்லரசு ஆக வேண்டும்!
படை பலம் கூட வேண்டும்!
கருவி பல வாங்க வேண்டும்!
காசு பணம் சேர்க்க வேண்டும்!

வாங்கிய ஆயுதம்
தூங்கியே இருக்கலாமா?
சாங்கியத்துக்கு பாவிக்க
வேண்டாமா?

உள் நாட்டில் வேலை
அதிகம் இல்லை!
அண்டை
அடுக்களைக்கு அனுப்பி
வைக்கலாமா!

சோதனை முயற்சி!
சாதனை கூட்டலாமா!
வெளி நாட்டு
வேதனை தீர்க்கலாமா?

சீவ காருண்யம் பேசும்
' சிவகாசி'
'சிந்து நதி'
நாகரீகம்
'ஆசிய சோதி'

உலகுக்கு வழி
காட்டும்!
தமிழா!
உனக்கு?

Thursday, November 20, 2008

எச்சரிக்கை!

மாடுகளுக்கு எச்சரிக்கை!
கடற்கரை எங்களுக்கு!
அந்த பக்கம் போகாதே!
அழகைக் கெடுக்காதே!

மாடுகளுக்கு எச்சரிக்கை!
கடை வீதி பக்கம் வராதே!
கடை அழகைக் கெடுக்காதே!

மாடுகளுக்கு எச்சரிக்கை!
கழனிப் பக்கம் வராதே!
உழவை நீ கெடுக்காதே!


மாடுகளுக்கு எச்சரிக்கை!
தெருக்களில் நீ திரியாதே!
போக்கு வரத்தை குலைக்காதே!

சரி!

பால் உமக்கு வேண்டாமா?
சாணம் உமக்கு வேண்டாமா?
கோமியம் உமக்கு வேண்டாமா?
வேளாண்மை எமக்கு அயன்மையா?

Wednesday, November 19, 2008

எரியும் கொள்ளியில் எந்த கொள்ளி நல்ல கொள்ளி !

உருசிய நாட்டுத் தலைமை அமைச்சர் இந்தியாவிற்கு வருகிறார். மேலும், இரண்டு அணு உலைகள் தருகிறார். ஏற்கனவே, தமிழ்நாட்டில், கூடங்குளத்தில் விரைவு ஈணுலைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து இவை வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில், அணு உலைகள் குறித்து போதிய விழிப்புணர்வு உள்ளது. அண்மையில், மிகவும் பாதுகாப்பான அணு ஆற்றல் தொழில்நுட்பம் உள்ள நாடான பிரான்சு நாட்டு அணு உலைக் கழிவுகள், செர்மனி நாட்டில் கமுக்கமாக கொட்டப்படுவதைஎதிர்த்து, செர்மனியர்கள் பெருமளவில் போராட்டத்தில் ஈடுபட்டதை, நாம் அறிவோம்.

இந்திய போன்ற நாட்டில், மண்ணையும், மக்களையும் வெகுவாக பாதிக்கின்ற சீர் கேடுகள் குறித்து பேசுவது, எழுதுவது என்பது பெரிய அளவில் இல்லை. அவ்வாறு, முனைப்பாக செயல்பட்டாலும், எதிர்க் கட்சியாக இருக்கும்போது ஒன்றை சொல்வது, ஆளும் கட்சியாக மாறிய போது, எதிர் நிலை எடுப்பது, கண்கூடாகும்.

கூடங்குளத்தில் அணு உலைகள் அமைத்திட, முன்னாள் சோவியத் ஒன்றியத்துடன் கை கோர்த்து, இந்திய அரசு செயல்பட்டபோது, அதனை எதிர்த்து, ஊடகவியலாளர் ஞானி, அந்தன் கோம்சு போன்றவர்கள் தமிழ் நாட்டில் குரல் தந்தனர். அப்போது, எதிர் கட்சி வரிசையில் வீற்றிருந்த கலைஞர் அவர்களை, தமிழ் நாட்டில் அமைக்கவிருக்கும் அணு உலைகளுக்கு எதிராக, மனித சங்கிலி போராட்டம் நடத்திட ஆலோசனை வழங்கினர். அவரும், அணு உலைகளின் கொடுமையை எதிர்த்து, தமது கட்சியினரிடையே சிறந்த பரப்புரை மேற்கொண்டார் என்பது வரலாறு ஆகும்.

முன்னாள் சோவியத் நாட்டு செர்னோபில், அமெரிக்க ரோடு தீவு பேரழிவுகளின் வாயிலாகவும், சப்பான் போன்ற நாட்டில் அணு உலைகளில் தொடர்ந்து நிகழும் விபத்துகளினாலும், அந் நாட்டு மக்களிடையே, அணு ஆற்றல் குறித்த போதிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.தற்போது நிலவும் சூழலில், இது பற்றி அரசியல் கட்சிகளிடையே,குறிப்பாக, மக்கள் நலன் சார்ந்த, நீண்ட கால பயன்கள் தொடர்பான சிந்தனை, அறவே இல்லை என்றே சொல்லலாம்.

காக்க!

சட்டம் ஒழுங்கு
காக்க!
கையில் தடியும்!
இடுப்பில் துமிக்கியும்!
உம் வசம்!

அமுக்கி வாசிக்க!
அதிகாரம்!
அளித்திட்ட
கவசம்!

நீதி வழங்குவது!
உம் வசம்
இல்லை!

நீதி மன்றமும்
நின் அவதாரம்
இல்லை!

வீதியில் நீதி!
விதி என்றாவதில்லை!

மோதல் போக்கு!
தவிர்!

காதல் கொள்!
கடமையில்!

அணு உலை!

உலக நாடுகள்!
விரிக்கும் வலை!
ஆளும் வர்க்கம்!
ஆராயாது!
எடுக்கும் நிலை!
மக்கள் ஆயுளுக்கு
வைத்திடும் விலை!

அம்போ!

கடை மடைக்கு
விடை இல்லை!
விடிவும் இல்லை!
இப்போதும்!

சம்பா பயிர்!
அம்போ!
சிவ சம்போ!
எப்போதும்!

ஆண்டுதோறும்
மாண்டு போகும்
மகசூல்!


தண்ணீருக்கு வழி இல்லை!
கழனி உழவன்!
கண்ணீருக்கு வழி உண்டு!
காலங் காலமாக!

காவிரி உனக்கு
இல்லை!
கட்சிகளுக்குத்தான்!

அப்பயிர்!
கருகக் கூடாது !
அல்லவா!

Tuesday, November 18, 2008

.........சரணம் கச்சாமி!

நீ என்ன சொல்ல!
நான் என்ன கேட்க!
அலட்சியம்!
என் இலட்சியம்!
ஆங்கிலேயனிடம்
கேள்!

என்னிடம் கொடுத்துச்
சென்றான்!
ஏற்றுக் கொண்டேன்!
உன்னையும் சேர்த்து!
அடிமையாக!

அதிகாரம்! ஆட்சி!
அனைத்தும்!
என்னிடம்!
கிருமமாய்!
நடந்து கொள்!

தருமத்தின் ஆட்சி!
தாமரைப்பூ
மாட்சி!
சரண் அடைந்து விடு!

Sunday, November 16, 2008

செம்மொழி!

எங்க ஊரு தாண்டி!
பெங்களூரு!
அதையும் தாண்டி!
ஆந்திரம்!
வரிசையில்!
வங்காளம்!

எனக்கும் தா!
பீடம்!

அய்க்கியம் காக்க!
அனைவருக்கும்
உண்டு!

Friday, November 14, 2008

ஆசு

எதற்கும் சமைவு!
களவுக்கும்!
உளவுக்கும்!

காசு என்றால்!
ஆசு இல்லை!

காத தூரம்!
கடக்கும் தூரம்!

எரியூட்டு!

முடிந்ததை முணகாதே!
இறக்கி வைத்ததை
ஏற்றாதே!

மீண்டும் தொடங்கு!
மீண்டும் ஏற்று!
எரியூட்டு!

பதம் பார்!
இறக்கி வை!

பகிர்ந்துண்ண
பரிமாறு!

பசிப் பிணி
வேரறு!

பதை மாற்று!

இயற்கை!

நண்பர் எனக்கில்லை!
அன்பர் அவருக்கில்லை!

நெருங்கிப் பழகி
நெருடல்!

விலகிப் பழகி
விரோதம்!

நெருங்கியும்!
நெருங்காமல்!
பழக்கம்!

பட்டும்!
படாமலும்!
என்பார்!

இரு வேறு உலகத்து
இயற்கை!

காவு கேட்கிறார்!

சட்டத்தை எடுத்தேன்!
கைகளில்!
சாத்து! சாத்தினேன்!
சட்டை செய்யாமல்!

சந்தடி அடங்கும்
வரை!
காக்கி காவலுடன்!
பாக்கி வைக்காமல்!

நெஞ்சில்!
பகமை தேக்கி!

சட்டத்தை
ஆள வேண்டியவர்!
சட்டத்தரணி!

சாவுமணி
அடிக்கிறார்!
காவு கேட்கிறார்!

நட்பை மறந்து!
கல்வியை மறந்து!

Wednesday, November 12, 2008

'ஆண்ட பரம்பரை'

மீண்டும்.......

மீட்சி!
ஆதிக்க சாட்சி!
அரங்கேற
மாட்சி!

மாண்ட பரம்பரை
மீண்டும்........
'மடி'யுடன்!
படியிறக்கம்!

ஆண்டவனின்
சுட்டு விரலில்!
காலச் சக்கரம்!

மாண்டவர்
உயிர்த்தெழார்!

Saturday, November 8, 2008

கல்லறை கலக்கம்

வாழ்ந்த போது
வாய்க்காத
அமைதி!

வீழ்ந்தபோதும்
நீடிக்கவில்லை!
நீள் துயில்!

துயரம் எம்மை
துரத்தியது!

தோண்டியது!
விமர்சனங்கள்
அல்ல!

பயிலிடம் தொடங்கிய
தாழ்வு!
இறப்புக்குப் பின்னும்!
இன்பம் தேடியது!

கூட்டுவாய்!

கல்லறை உடை
சில்லரை கிட்டும்!

சிலைகளை உடை!
தலைமை பாராட்டும்!

மனிதரை கொளுத்து!
தியாகி ஆவாய்!

எதிர்காலத்தில்
ஓய்வூதியம்!

அரசு மரியாதை!
ஆனந்த மார்க்கம்!

களப்பிரர் காலத்தை
எழுப்புதல் செய்கிறாய்!

பண்டைய இழிவை!
பகடையில் உருட்டுகிறாய்!

பசை உணர்வை!
திசை திருப்புகிறாய்!

நசையாகாது!
நாய் வால்
போக்கு!

நோய் போக்குவாய்!
நலம் கூட்டுவாய்!

Thursday, November 6, 2008

அற்புதம்!

எம் இனம் அழிகிறது!
தமிழன் அல்ல!
மனிதன்!

இந்தியனுக்குத்தான்!
என்
இறக்கம்!
உனக்கு அல்ல!

தமிழனுக்கு
அல்ல!
மனிதனுக்கும்
அல்ல!

அப்படித்தானே!
எம் தேசியம்!
சர்வ தேசியம்!
கற்பிதம்!

காலம்! காலமாக!

Tuesday, November 4, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்- 5

1982ல், 'அடிப்படை மனித நேய' மாத இதழ் தலையங்கத்தில், மக்கள் சிவில் உரிமைக் கழக உறுப்பினர்களிடையே அடிப்படை மாற்றத்தை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு சில மாதங்களுக்கு முன், மக்கள் சிவில் உரிமைக் கழகம் மற்றும் சி.எப்.டி. இந்திய அளவில் மாநாடு ஒன்றை, அய்தராபாத் நகரில் நடத்தினர்.

இது ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சிக்கலில் இது போன்ற சிவில் உரிமைக் குழுக்களுடன் இணந்து செயல்படுவது, சமூக மட்டத்திலும், அமைப்புகளின் சிவில் உரிமை ஆகியவற்றைக் காத்திட, மிகவும் அவசியம் ஆகிறது என்று தலைவர்களிடையே, உணரப்பட்டது.


இவை போன்றதொரு மாநாடு, மாநில அளவில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. சில மாநாடுகளில் தார்குண்டே அவர்களும் கலந்து கொண்டது குறிப்பானது ஆகும்.

1982ல் மகாராட்டிர மாநிலம் துலியாவில், உடமைகள் இழந்து, பொருளாதார நிலையில் நலிவுற்ற மக்களுக்காக பாடுபடும் ஒரு குழு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில், நானும் அவரும் கலந்து கொண்டோம். தமது 75 அகவையிலும் அவர் இக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

Sunday, November 2, 2008

தார்குண்டேவை நினைவு கூர்வோம்! பகுதி 4

அக்டோபர், 1980ல், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் அமைப்பு மாநாடு, புதுதில்லியில் நடைபெற்றது. மேற்குவங்கத்தை ஆண்டு வந்த இடதுசாரி அரசு, மாநில அமைப்பின் பொறுப்பு, தங்கள் வசம் இருக்க வேண்டும் என கோரினர். இக் கோரிக்கையை எந்த சிவில் உரிமைக் குழுவும் ஏற்க இயலாதது. அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கொண்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம் சுயேச்சையாக செயல்பட முடியாது.

இதற்கிடையில், சோவியத் ஒன்றியம் ஆப்கானிசுத்தான் நாட்டின் மீது மேற்கொண்ட ஆக்ரமிப்பை எதிர்த்து, தார்குண்டே அவர்கள் தலைமையில் எதிர்ப்பு பேரணி நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மார்க்சிசுடு கட்சியினர் மத்தியில் எதிர்ப்புணர்வை ஏற்படுத்தியது.

இப் பிரச்சினையை தீர்த்திட சமதர்ம கட்சியின் மூத்த தலைவர் மதுலிமாய் அவர்கள் நடத்திய கூட்டத்தில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர்கள் மற்றும் மார்க்சிசுடு கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். எனினும், மார்க்சிசுடு கட்சியினர் சனநாநாயக மற்ற நிலையில் இருந்து வளைந்து கொடுக்கவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

பிற மாநிலங்கள் ஆன மகாராட்டிரம், பஞ்சாப் அகிய இடங்களிலும் மேற்கு வங்கத்தில் உள்ளது போல், இதர சிவில் உரிமை அமைப்புகள் செயல்பட்டு வந்தன. தார்குண்டே அவர்களின் முடிவின்படி, இவ்வமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டது.

அவரின் முடிவின்படி, நான், சனதாக் கட்சியில் செயல்பட்டு வந்த டாக்டர்.ஒய்.பி.சிப்பர் அவர்களை மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் வேலையை எடுத்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.

அவர், அமைப்பின் நிர்வாக செயலாளராக தமது இல்லத்தில் அமைந்துள்ள அலுவகத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறார். 1985ல், சபல்பூரில் நடைபெற்ற மாநாட்டில், அவர், மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளராக, பேராசிரியர்.திலீப் சாமியுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.