Wednesday, February 28, 2018

வாதம்!

சமூகமே வாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதோ! தனி மனித உடல்/உயிர் நாடிகளில் வாத நொடி மிகுந்தால் நோயாக அறியப்படுகிறது.சமூகத்தின் உடலில்/உயிர் நாடியில் ஒன்றல்ல, ஓராயிரம் வாதங்கள் மேலோங்கி நிற்கிறது. சாதி வாதம், சமயவாதம்; கட்சி வாதம்; பிராந்திய வாதம் எனப் பலப் பல.அண்மையில், ஆண்டையின் கண்டுபிடிப்பு-பயங்கரவாதம்.இதற்கு அருமருந்து தருவார் யார்? எவ்வகை மருத்துவம் பயனளிக்கும்/ விடை காண தெரியாத மக்களிடையே, விடையறிந்தவர் உள்ளார்! அவர்தான் வலதுசாரி தேசியவாதம்.

'அமைதி காத்திடுங்கள்', 'அடங்கிப் போங்கள் , 'வீட்டிற்குத்திரும்புங்கள்', 'சுத்தமாக இருங்கள்',' அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி',' அதிர்ச்சி அடையாதீர்கள்', 'புனல் மின்சாரம்', 'அனல் மின்சாரம், 'அணு மின்சாரம்' ஆகியவை உங்கள் நலனுக்காக, புலம்பித் திரியாதீர்கள், 'கார்ப்பரேட்டு நிறுவனங்கள்' உண்டு, கலங்கி நிற்காதீர்கள். 'பாக்கெட் உணவு உண்டு', சமைத்து துன்பப் படாதீர்கள்.

தனிப்புத்தி!

என்னை வெளிப்படுத்த தெரியவில்லை, எண்ணற்ற செயற்பாட்டில். இவ்வளவு காலமும்.உழைப்பும், பயனும் உனக்கு பயன்பட்டதோ இல்லையோ?, சுற்றத்திற்கும், சூழலுக்கும் சுருதி சேர்த்து, வயப்பட்டது வக்கனையாக்,கரைந்த சேமிப்பும், கட்டுறுதி உடல் நலக் குறைவும், கவலை நோய் முதல் நாடியாக காலத்தை வென்றது.உடன் பிறந்தோரும்,உன்னருமை உணருவார் இல்லை.ஊர்ப் பேச்சின் உள்ளமே அவர் எல்லை.

சுமந்த பொதியை சோதிப்பவர் கூட்டத்தின் எண்ணிக்கை கூட்டுவார்.இங்கொன்றும், அங்கொன்றுமாக  பேசுந்திறன் காட்டுவார் பேதமை மாந்தர், பெருமைக் குரியவர்.முதுமை காலத்திலும் தனி வழியாக, தம் போக்கு மேம்பட தாளம் சேர்க்கும்; வகை புரிந்தவர்.

அவருக்குத்தான் புரியவில்லை என்றால்
உனக்கும் தான்,
ஊருக்குந்தான்.

பிறழ்நிலை மாந்தர் பேச்சு
யாவும்,
உம் புரிதல் வளையம் ஏற்கும்.

உள்ளது என்றாகி உலா வரும்
பொதுப் புத்தியாக.

தனிப்புத்தி தளம் சுருங்கி,
தாளம் போடும்
தன்னிச்சையாக.

Tuesday, February 27, 2018

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009


என்ன ஆச்சு!
எல்லாம் வெற்றுப் பேச்சு!
ஆர்ப்பாட்டமும் ஓய்ந்துப் போச்சு!

இயக்கங்களும் எட்டிப் போச்சு!
மயக்கம் கெட்டிப் போச்சு!
மக்கள் நம்பிக்கை
அற்றுப் போச்சு!

மாநிலம் ரொம்ப கெட்டுப் போச்சு!
கல்வி உரிமை! கானல் உரிமை ஆச்சு!
கவலைகள் கூடிப் போச்சு!


(புதுச்சேரி மாநிலத்தில், கல்வி உரிமைச் சட்டத்தின் நிலைமை குறித்தது.)

விடிந்திடும் பாடு!

மூச்சடக்கி முன்னேறு!
பேச்சடக்கி பெருமை சேரு!
வீச்சடக்கி வினையாற்று!
விடிந்திடும் பாடு!

காவற்பெண்(டு)!விழிக்க வைத்தாள்,
வீதியில் குக்கல்
வீர்ய ஒலிப்பில்.

அச்சம் அடர்ந்திட,
ஆள் அரவம்
நிழலாட.

தனியே துயிலும்
தாய்,
முதுமையின் அரவணைப்பில்.

தாழ் தளத்தில்,
தாழ்நீக்கி சென்றிட
தடுத்தாள்.

சாளரத்தில் விழிகள்
பொருத்தி,

நடுநிசி கரைந்திட,
துயில் தொலைத்து
சோர்ந்தாள்.

'தம்' பிடி!

'தம்' பிடி
'தம்பிடி' சேர்த்திட,

தம் பிடி இறுகிட
'தம்' பிடி,

வரும்படி உயர்ந்திட
'தம்' பிடி,

வரும் படி உயர்ந்திட
'தம்' பிடி,

உருப்படி தேறிட
'தம்' பிடி,

உயர்படி ஏறிட
'தம்' பிடி,

உள்ளபடி உணர்ந்திட
'தம்' பிடி,

நல்லபடி கூடிட
'தம்' பிடி...........

Monday, February 26, 2018

கள்ள லாட்டரி!விட்டதைப் பிடிக்க
விட்டில் பூச்சியாக,

நோட்டைக் கொடுத்து
சீட்டு வாங்கி,

நொந்து போகும்
உழையர் கூட்டம்.

'வெள்ளையும் சள்ளையுமாக'
வியாபாரம்.

கப்பம் கட்டி
தெப்பம் விடுகிறான்.

தேர்போல வாழ்க்கை
தேர்தலில் நிற்கிறான்.

'மீன் விற்ற காசு நாறாது'
என்கிறான்!

காவலன்!தொடுப்பவனை தடுப்பான்
அவன் யார்?

கெடுப்பவனை விடுப்பான்
அவன் யார்?

இழைப்பவனிடம் இளிப்பான்
அவன் யார்?

கொடுப்பவனை கொண்டாடுபவன்
அவன் யார்?

புளித்ததோ!

வெகு காலம் பழகியவர். உடல் நலிவுற்ற நிலையில் பார்க்காது, பலரிடம் வேலை இருக்கிறது, இயலவில்லை என்றார், அவர் நினைவாக.

வந்து பார்க்கவில்லை
என்பதால்,
நொந்து விடவில்லை,
நொடிந்தும் விடவில்லை.

பார்த்திருந்தால் பக்குவம்
சேர்த்திருந்தால்,
பண்பட்டிருப்பார்,
படி தேறியிருப்பார்.

பழக்கம் தொடர்ந்திருப்பார்
பரவாயில்லை,
பல அலுவல் மாந்தர்.
பழையது புளித்ததோ!

Sunday, February 25, 2018

பொல்லாத மனம்.

கோபம், சினம் என்றறியப்படும் உணர்ச்சி, எதிர்மறைப் போக்காக நம்மை சிதறடிக்கும் கணநேரம் சூறாவளி, கொந்தளிப்பு சூழலாகும்.பல சந்தர்ப்பங்களில் பாதிப்பை பிறர் பகிர்ந்திட, அறநூல் தெளிவுரை எடுத்துக்காட்டில், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடுக்கப்படும் பதிவேற்றங்களில், 'பிடித்திருக்கிறது' என ஆதரவு சொடுக்கு போட்ட பின்னரும், சருக்கல் அடைந்து, உடைவு ஏற்படுத்தி, இடைஞ்சல் சேர்த்து,அழுத்தம் கூடி, சமாளித்திட இயலாது.

சுழன்றடிக்கும் கொம்பை அலைக்கழித்திடும் புயலாக,சுருதி லயம் இழந்து, தாளம் தப்பி, தப்பாட்டம் நிகழும்.'மனம் போன போக்கில் குணம் போகும் ' என்பார். குணம் கெட்டால், அதிலும் தினம் கெட்டால், சூழல் தாக்கம் சூடேற்றி,கோடையின் கொடுமையை , தகிப்பை கொட்டும்போது, வெம்மை தாளாமல், செல்லிடம் இளப்பம் அறிந்து, பொரிந்து தள்ளும் பொல்லாத மனம்.

உள்ளம் உலைக்களமாக, தொடர் துறுத்தியில் நெருப்பேற்ற, தொழிற்கூட பணியாயின், இரும்பு வார்த்திட, இளகி வடிவமைத்திட இயலும்.இரும்பேதும் இன்றி, பணியற்ற பணிமனையில் ,வெற்றடுப்பு விசையுடன் கணப்பை மேலேற்றிடும்.குளிர்ந்த நீராக, தன்னுணர்வு தண்மை அடைந்து, தடுமாற்றம் புரிகிறது.தருணம் விடிகிறது.தகிப்பு குறைகிறது.உள்ளொலி உருப்படியாய் உயர்ந்திட ஒவ்வாமை யாதென முயற்சி முழக்குகிறது.

விரி உணர்வு

கட்டுப்படுத்தாதே!
எவரையும் மட்டுப்படுத்தாதே!

முட்டுக் கொடுக்காதே!

விட்டுக் கொடுத்து விள(க்)கிடு

விடை காணட்டும்
பொறுத்திடு.

வீண் வாதம் தவிர்த்திடு
விரி உணர்வு ஏற்றிடு.

மறுமொழி

வயதான தாய் ஒரு நண்பர் வீட்டில். வயது 80தை கடந்து, கூன் விழுந்து, விந்தி,விந்தி நடந்து செல்வார்.இடையிடையில், லொக், லொக் என்ற இருமல் துணை நிற்க. வீட்டினர் அவரது தேவயை பூர்த்தி செய்தாலும், சோம்பிடாது சுறு,சுறுப்பாக ஒத்தாசையாக இருப்பார். சில தருணங்களில், உதவி என்ற நிலையில் அவருக்கு உபாதை ஏற்படும்போது, அக்கறை உள்ளவர், "வீட்டில், சும்மா இருக்கக் கூடாதா?" "இவ்வளவு பிரச்னை ஆகியிருக்காதே" எனும் போது, அவர் அளித்த மறுமொழி கீழ்க்கண்டவாறு எழுத்தில் வடிந்தது.

சும்மா இருக்க முடியாது
சுமையா நிற்க முடியாது
வாய் திறவாமல் முடியாது
சொம்பளக்க முடியாது
வம்பளக்காமல் விடியாது.

ஓயாது!
ஓடுகின்றாய்! ஒடுகின்றாய்!
ஓயாது
தலை சாயாது.

தேடுகின்றாய்! தேடுகின்றாய்!
தொலைக்காது.

பாடுகின்றாய்! பாடுகின்றாய்!
உணராது.

கூடுகின்றாய்! கூடுகின்றாய்!
கிளைக்காது.

வாழ்க்கை நிரல்!


உப்பிடும் உறவை
உதறித் தள்ளும்
சப்பிடும் கொட்டை
சங்கதி போல
தம் கதி அறியா
தனிநபர் பலர்
தடுமாறி வா(டு)ழும்.  

மெளனம் ஆட்சி செய்யும்!

பிள்ளையாகினும் சரி, பெரியவானாகினும் சரி; பிள்ளை பெற்றவனாகினும் சரி; குடும்பத்தலைவன் ஆகினும் சரி; உண்பதும் ; ஓடுவதும்; உழைப்பதும்; ஈட்டுவதும்;  நடுநிசிக்குப்பின் நீட்டுவதும்; சக்கர சுழற்சி வாழ்க்கை நிரல்.

நாளும், பொழுதும் நகர்ந்திட, நகர்த்திட, பிள்ளை வளர்ப்பு, குடும்ப பிணைப்பு கணினி கதியில் கரைந்திடும் செல்வமாக, விட்ட பிறகு பிடிக்க, விரட்டுவது, துரத்த விடியாத பொழுதுகள். விடியல் ஏக்கங்கள் விரைந்திடும் விடையளிக்காமல். விவரம் சொல்லாமல் விலக்கும் விசையுடன். இசையுடன், நசையுடன்.  இணங்காதிருப்பின் ,விசையுடன் விலக்கும் வாழ்க்கை புலம்.

கழிந்த நாளுக்குப்பின், கடிவாள முனைப்பு கவைக்குதவாதது. காலம் சென்ற பின், கலக்கமும், கை கொடுக்காது. கவலை மேலோங்க,மன இறுக்கம் தளர, மல்க நீர் துளிக்க, மள மளவென்று கொட்டிடும்' மழைக்கால மேகம்போல்'. தளர்ச்சியில், தணல் கிறங்கும், சமநிலையிலும்  புரியாத மனம், காரணங்களைக் கடந்து, உறுதியை உடைத்து,கலவோடு கனத்தில் வடிசோறு பானையை தாங்கி நிற்கும் நிலை சேரும் மீண்டும்.

 முன் நிலவரம், சில தாக்கங்கள் அதிர்வலைகள் எழுப்பி, உறுதி குலைத்தாலும், மறு கணம்சமைவு. மனம் சந்தடி கலைத்து சமாதானம் உள்நிறுத்தி, சமநிலை எய்தும். ஆரவாரம் அடக்கி ஆயுளை நிறுத்தி, மெய்யுணர்வு கொல்லும், மெளனம் ஆட்சி செய்யும்!

Saturday, February 24, 2018

சொற்களஞ்சியம்

வெகுமதி அறிந்த நமக்கு 'கொழு மதி' தெரியாது.தாயின் பேச்சிலே புதுச்சேரியிலே பயின் ற பழகிய ,அழகிய மொழி, மரபுச் சொற்கள் வரிசையில் மற்றொரு பதம். 'நொளப்புள்ள' என குழந்தைகள்  குறும்புத் தனத்தை                        குறிப்பது- கையில் பிசைந்து, தரையில் போட்டு எடுத்து உண்பதை குறித்த, எமது தாயின் சொல்லாடல்.இன்றைய தலைமுறை அறியாத சொற்களஞ்சியம்.

'சுண்டக் காய்ச்சு' என்று பழங் குழம்பை பக்குவப்படுத்தி,அடுத்த நாள் சாப்பாட்டிற்கு பயன்படுத்தும் பழக்கம் இன்று அற்றுப்போச்சு!. 'சுடுசட்டி', 'சிடுமூஞ்சி',' நோனா வட்டம்', 'ராங்கி விடாச்சி',' ராப்பத்து', 'கோணகழி'(விடாதே), 'கொப்பு காது', 'காதுமட்டை', போன்ற எண்ணற்ற அருந்தமிழ்ச் சொற்கள், அகராதியிலும் காணக் கிடைக்காதது, தென்படாதது.

அருகி, அழிந்து வருகின்றன.தாயின் தலைமுறை மறைவோடு., மாண்டுபோகும் பதங்கள்,பக்குவங்கள். மீட்டெடுக்கும் முயற்சி யார் கையில்?

முடிக்கும் முன்,
.'வீங்கி வெடிச்சாப்போல', 'வாங்கி முடிச்சாப்போல', 'முடிச்சி அவிக்கி',' மொள்ள மாரி','கேப் மாரி', ;திருட்டு திருகிசுத்து', 'தீனீப்பண்டாரம்' போன்றவைகளும் நம் ஆய்வுக்குரியது.

வெளிச்சம் இல்லை!
வலியில்லா உடல் இல்லை
கிலியில்லா உள்ளம் இல்லை
பசியில்லா வயிறும் இல்லை
ருசியில்லா உணவும் இல்லை

தோல்வியில்லாமல் வெற்றி இல்லை
தோளில்லாமல் தோற்றம் இல்லை
காலில்லாமல் நடையில்லை
குடியில்லாமல் கோள் இல்லை

படியில்லாமல் வீடில்லை
பல்லில்லாமல் சொல் இல்லை
சொல்லில்லாமல் சுவையில்லை
சோகம் இல்லாமல் சுகம் இல்லை

வேகம் இல்லாமல் ஓட்டம் இல்லை
விவேகம் இல்லாமல் வெற்றி இல்லை
பாவம் இல்லாமல் மீட்பார் இல்லை
பக்குவம் இல்லாமல் சமையல் இல்லை

பழியில்லாமல் குற்றம் இல்லை
குற்றம் இல்லாமல் தண்டனை இல்லை
தண்டனை இல்லாமல் திருத்தம் இல்லை
திருத்தம் இல்லாமல் மாற்றம் இல்லை


மாற்றம் இல்லாமல் ஏற்றம் இல்லை
ஏற்றம் இல்லாமல் இறக்கம் இல்லை
இறக்கம் இல்லாமல் உயர்வில்லை
உயர்வில்லாமல் உழைப்பில்லை

உழைப்பில்லாமல் மனிதன் இல்லை
மனிதன் இல்லாமல் ஆட்சி இல்லை
ஆட்சி இல்லாமல் அரசு இல்லை
அரசு இல்லாமல் நாடில்லை

நாடில்லாமல் வீடில்லை
வீடில்லாமல் விடியல் இல்லை
விடியல் இல்லாமல்
வெளிச்சம் இல்லை........!

மடைமாற்றம்!

போகிப்பண்டிகை இன்று.பிறந்த ஆண்டு விரைந்திட பொங்கல் நாள் வரிசையில், விடுமுறை அனுபவிப்பில் விழாக்கோலம்,  இல்லங்கள் தோறும் தேவை.

அவரவர் இயன்மைக்கு ஏற்ப, சூழல் அனுசரித்து கொண்டாட்டம். 'பொன்னை வைக்கும் இடத்தில் பூவை வைப்பது' என்பார்களே,  எந்நிலையும் விருப்ப வெளிக்குள் அமைந்திடும் போது,மகிழ்ச்சி அளிக்கிறது.

சுய மகிழ்ச்சி,சுற்றத்தார் மலர்ச்சி, கூட்டங்களை சேர்த்து,பிணைத்திட வேண்டும்.வாழும் காலம் நொடியாகினும் விருப்பார்வத்துடன் பயணம் செல்ல பக்குவப்படுத்தி பயன்பெற வேண்டும்.

தன்னுணர்வே தலையாயது. தவிக்கும், தாவிக் குதிக்கும் மன உணர்வுகளை வரையறை செய்து, ஒழுங்கியற்றி ஓங்கிட வேண்டும்.நெருக்கடிகளையும், நெளிவு சுளிவுடன் சந்தித்து சமாளித்து, தகு தருணங்களாக மடைமாற்றம் செய்யும் மனப்பயிற்சி இன்றைய சமூகக்கொ ந்தளிப்பு,  ஆரவாரத்துக்கிடையில்  தவிர்க்க இயலாத அவசியம்.

Friday, February 23, 2018

காவிரி !

காவிரி தண்ணீர் குறைப்பு
கர்நாடகம் துள்ளிக் குதிப்பு.

வேளாண்மை தேவையில்லை,
தொழிற்சாலை போதும்
கிராமம் அவசியமில்லை.

நகரம் வாழ,
நாகரிகம் அழிய
நகர்த்திய தீர்ப்பு.

ஏற்றத்தாழ்வு அணுகுமுறை
ஏதிலியாய் தமிழன்.

சிறைக் காதலியாய் காவியுடன்
கைகோர்க்கும் கசடு முறை.

தமிழ்த் தேசிய தடுமாற்றம்
தாவிடும் உருமாற்றம்.

நீதி நாயகம் மயங்கிய போக்கு
தேச உடமை நகரத்தாருக்கே!
பண்பாடு உமக்கில்லை!
பயன்பாடும் ஊருக்கில்லை!
கடப்பாடு கர்நாடகத்திற்கே!


விடியல் காணா இருண்ட தேசம்
வெகுண்டெழ வேலையில்லை!
வேதனையும் தீரவில்லை!

உழவர் பாடும் நிலமும்
விழலுக்கு இறைத்த நீராக,
வெப்ப பூமியாக வெடித்திடும்
நாள்தோறும்.

அடையாளம் இழந்து
அதிகாரம் தொலைந்து
விளிம்பு நிலையில்.

வீதியின் சோதியாய்
வீடிழந்த சேதியாய்,
வாடி உழன்று வக்கற்று
திக்கற்று திசைமாறி,
திணை இழந்து மனை இழந்து.

புலப்பெயர்ச்சி
புகலிடம் தேடி,
வீழ்ந்திடும் கிராமம்
விழுங்கிடும் நகரம்........

காவிரியின் நாகரிகம்
காணாமல் போன வேகம்.
காலப் பெட்டகத்தின் கருவூலத்தில்
புதைக்கப்படும் நாள்
தொலைவில் இல்லை!

தொங்குகின்ற கத்தி இல்லை
இறங்குகின்ற கத்தி!
இம்சை அளித்திடும் உத்தி!!

மீட்சி!தனியே இருக்கப்
 பார்க்கிறாய்

தவிப்பு இயலாமல்
 கேட்கிறாய்.

தானாக மீண்டும்
 சேர்கிறாய்

காணாத காட்சி
வேர்க்கிறாய்,

கோணாத மீட்சி
 உ ணர்கிறாய்.

இங்கே! அங்கே!
இங்கே இருப்பது தெரியவில்லை!
எங்கே செல்கிறாய்?

அங்கே இருப்பது நான் இல்லை!
இங்கே மீண்டும் வருகிறாய்!

உள்ளே இருப்பது தெரியவில்லை!
வெளியே சென்று பார்க்கிறாய்!

வெளியே காண கிடைக்கவில்லை!
உள்ளே மீண்டும் வருகிறாய்!

Thursday, February 22, 2018

கவலை!"கந்தை குறித்து கவலையில்லை
சந்தை குறித்தே கவலை"

சந்ததி குறித்து கவலையில்லை
சந்தை கதி குறித்தே கவலை.

சந்தை வளர்ந்திட சந்தம் பாடுவோம்
எல்லைகளை கடந்து காவடி எடுப்போம்,
சிந்து பாடுவோம்.

எட்டிப் பார்ப்போம்
கட்டிச் சேர்ப்போம்,
கடன் பெறுவோம்.

கொட்டிக் கொடுப்போம்
உழைப்பை,
உரிமையை,
ஆதாரங்களை.

எதிலும் வியாபாரம்,
பருப்பிலும், வெறுப்பிலும்.

இருக்கும் போதும் வணிகம்
இறக்கும் போதும் வணிகம்..............

திகட்டிடும் பொழுது........ஊடக விவாதம்
மூடக விவாதம்.

போட்டி தலைப்பில்
மூச்சு முட்டி,

முனைப்பு  ஊட்டி,
முணகல்  கூட்டி     
தினசரி நிகழ்வு.

திகட்டிடும் பொழுது...........

Tuesday, February 20, 2018

'இசம்'


ஏதாவது 'இசம்', இதற்குள் அடங்கி அல்லது முடங்கி போகிறோம்.ஆரம்பம் முதல், அடுத்தடுத்து தெளிவாகிறோம் என்ற சமைவு, சமாதானம் ஒரு புறம் இருக்க, நம்மை அறியாது ஒரு சுழற்ச்சியில் பயணிக்கிறோம்.

அப்போதைய புரிதல் அளவறிந்து, மறுமுறையும், 'கொள்கை', 'கோட்பாடு','தத்துவம்' என்கின்ற சொல்லாடல்களுக்குள் சுகமாக. இப்படியே கழிந்துவிடும் வாழ்க்கை. ஈடேறாத எண்ணங்களின் சுமையில்.நிறைவற்ற மனம் நிலைகுலையும்.

சிற்சில  இடர்களும், சலனங்களும் அழுத்த விசையுடன் ஆர்ப்பரிக்கும் எண்ணக்கடலில். சூறாவளியாக சில காலம் கலங்கி, கலக்கி, பேரிரைச்சல் பேரிகையுடன். மின்னல், இடி முழக்கங்களுடன், சமநிலை அடைய தத்தளிக்கும், தவிக்கும்.

இயற்கையின் இயக்கவியல் துணை நிற்க, அமைதி வாரியாகும் பட்டறிவு பகலவன் வெளிச்சத்தில்.இருளகன்று, மருள் விலகி, இன்பம் பயக்கும்.
மனித மனத்தின் பரிமாண புலப்பாடோ?

Monday, February 19, 2018

விரைந்து வரவேண்டும் ...............


விரைந்து வரவேண்டும் ...............

எதுவும் வணிகம் ஆன சமூகச் சூழலில் ஆதாயம், இலாபம், உபரி முன் நிற்க, முந்தி ஊக்க, வினையாவும் வியாபாரம் என்றாகி, வீணாகிப் போகக்கூடாது எனும் பதைப்புடன் முண்டியடித்து,முன்னேற்றம் காண விரைந்திடும் சமூகம். கிளர்ச்சி வேகத்துடன், உணர்ச்சிகள் உந்திட வளர்ச்சிக்கான வகைகளை வகுத்திடும் நொடிதொறும், மனித சமூகம்.

அருள், அன்பு, வாழ்க்கை விழுமியங்கள் எனப் பல நூறாண்டுகள் பதியம் போட்டு அறிவுரைகளாக,அறவுரைகளாக ஆன்மீகம் குழைத்தும்,  நீதி நெறிகளாக பள்ளிகளில் தொடக்க காலங்களில் ஏற்றிய உணர்வுகள், உனர்த்திய உண்மைகள் நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஒதுக்கி, ஓரங்கட்டி, எதிலும் காசு சேர்க்கும்,பொருள் குவிக்கும் போக்கு ஒரு கலாச்சாரமாக எவர் மனதிலும் வேர்விட்டு வளர்ந்து, வேகமாக, உறவுகள், நட்புகள், பழக்க வழக்கங்கள் யாவும் செல்வக் குவிப்பு சாளரத்தின் வழியாக சிலாகிக்கும் குணம் செறிவாக மேலோங்கி கிளைக்கும்.சமூகம் தடம் புரண்டு, பன்னாட்டு நிறுவனங்களின் "உயிர்ப்பண்புகளை" தனி மனிதனை சென்றடைவதில் வெற்றி கண்டுள்ளது.

எதுவும் வணிக அணுகுமுறையில், மண உறவுகளையும் சேர்த்தே, மனித வாழ்க்கை  பெரும் பண்பாட்டுச் சீரழிவில் தம் அடையாளத்தை படிப்படியாக இழந்து வருகிறது. மாற்றாக சில முன்னெடுப்புகள் இருந்தாலும், பல்கிப் பெருகியுள்ள அழும்புகளுக்கு எதிராக நிற்கும் பெரும்பலம் இன்றி, பலகீனமாக கருத்தளவில்/ செயல் அளவில், சிறுபான்மை சக்தியாக நிற்கிறது, நம்பிக்கையுடன். சமூக, பொருளாதார, அரசியல் சக்திகளும்கூட, பண்பாட்டு தளத்தின் அடிப்படை தகர்த்து ,தம் கட்சி அரசியல் அதிகாரத்தை ஊன்றி, உறுதியாக்கி ஒற்றை பரிமாண தன்னதிகார போக்குகளை, வளர்ச்சி முன்னேற்றம், என வெகு மக்களை திசைத் திருப்பி வாழ்க்கையின் விளிம்பிலே நாளும் தள்ளிக் கொண்டிருக்கிறது.

இடதுசாரி, மக்களாட்சி சக்திகள், மக்கள் அரசியல் ஆகிய இயக்கங்கள், இதுபோன்ற போக்குகளை நன்கு பரிசீலனைக்கு உட்படுத்தி, கள ஆய்வு நிகழ்த்தி, தரவுகள் பெற்று, பண்பாட்டு கூறுகளை செம்மைப் படுத்தி, மாற்று அரசியலை, சமூக அடிப்படை கட்டமைப்பிலிருந்து வளர்த்து, செயற் திட்டங்களை வளர்த்திட வேண்டும்.வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி , மக்களை ஒருங்கு திரட்ட வேண்டும்.இவை எளிதான காரியமன்று, நெடிய பயணமாகும்.ஆனால், நிகழும் போக்குகளை, இழிவுகளை அப்படியே விட்டுவிட இயலாது.

மக்கள் சனநாயகத்தை, மக்களுக்கான செயற்படும் அதிகாரத்தை, ஆட்சியை அமைத்திட, சுரண்டல் வகைகளை, பன்முகங்களை உள்ளூர், மாநிலம்,  நாடு, சர்வதேசியம் இவற்றுடன் பிணைந்துள்ள நிலையை, வெளிப்படுத்தி, பல்வேறு தளங்களில், தலைகளில் அடிமைப்பட்டு, உரிமை இழந்து, வாழ்க்கை ஆதாரம் இழந்து, படிப்படியாக, கால உழைப்பாளிகளாக, சோகம், துயரம், இடர், பேரிடர் இழப்பு/ பேரிழப்பு ஆகியவைகளை தேச உடமையாக வாழ்ந்து நசிந்திடும், இந்திய மக்கள் விழிப்புணர்வு கொள்ள வேண்டிய தருணம் விரைந்து வரவேண்டும்.

பொருமி!புத்தாண்டு வாழ்த்து சொல்ல
புற்றீசல் மனிதர்,
விழுந்தடித்து விரைந்து சென்று,
முந்தி தள்ளி,

நீந்திக் கடந்து,
முகம் காட்டி,
பல் இளித்து, பக்கம் சாய்த்து,

முகநூல் பதிவு.
சுட்டுரை சுருதி சேர்ப்பார்,
கட்செவி கணக்கு கூட்டி
களம் காண்பார்.

போராளி பதாகை தாங்குவார்,
போலிமை மனிதர்,
பொல்லாங்கு பேசுவார்.

போதாத பொழுது,
பொருமியும் தள்ளுவார்........

Sunday, February 18, 2018

(ப)புதுக்கி....!

(ஒரு இயக்க நண்பர், ஒரு முறை தனிப்பட்ட முறையில் பேசிக்கொண்டு இருந்தபோது இவ்வாறு எழுதிக் காண்பித்தார்.வெகு நாள் உறங்கிக் கொண்டு இருந்தது
விழித்தது!)

தொண்டு நிறுவனங்கள் சில
குண்டு நிறுவனங்கள்,
உண்டு களித்திடும் உல்லாச போக்கிடங்கள்.

வண்டி வண்டியாய் காகிதங்கள்
வெளியீடு,
பந்தி பந்தியாய் பயிற்சிகள் நூறு,
ஒளி உமிழ் உணவகங்களில்
அரங்குகள் அலங்கரிப்பு.

பதாகை பின்புலத்தில் பளிச்சென்ற
முகங்களுடன்,
பந்தய ஊடகத்தின் புலப்பாட்டில்
புல்லரிப்பு.

உள்ளரிப்பு உலா சில காலம்,
ஊர்வல கோலம் பதாகை
செருக்குடன்.
புத்தாயிரம் ஆண்டின் முன்னேற்றம்
(ப)புதுக்கி....!

வெளிச்சம்!


அவரை மாற்ற முடியாது!
இவரை மாற்ற முடியாது!
அவரவர் வழி!
அவரவர் மொழி!
உன் வழி உணர்!
ஒற்றை பாதை ஆயினும்,
ஒய்யாரமாய் கடந்திடு.
உள்ளொலி(ளி) வெளிச்சம்
காட்ட(கூட்ட),
ஓரிரு கல் தொலைவு சென்றிடு!

Saturday, February 17, 2018

பேதம் இல்லை!
இயக்கவாதிகள் பெரும்பாலும் தற்புகழ்ச்சி, செருக்கு, தன்னதிகார மனப்பாங்கு மேலோங்கிட, வளைந்தும்,நெளிந்தும் வாழ்க்கையை செலுத்துகின்றனர். இதில் அவர், இவர் என்கின்ற பேதம் இல்லை!

 அவரவர் வேதமும் இதில் ஒன்றுதான்.அணிகள் வேறாயினும்,அம்சம் ஒன்றே! ஒத்திசைவில் இணக்கமாக அவரவர் சூழலில் ஆராவார கூட்டத்தினர் சூழ்ந்திட ஆளுமை!

இதில் சமூகம், மேம்பாடு யாவும் வாய்ப்பேச்சின் வகைகள்.தொகைகளுக்குள் மடங்கிவிடும் அமைப்புகளும்,முன்னோடிகளும் உண்டு.

உள்ளது அறிந்து ,உணர்வுடன் படிப்பினை பெற்று பயணிக்க வேண்டியுள்ளது. பாதைகள் பல கடந்த பின்னரும்,பயணம் புதிய சுவடுகளை பதித்து தொடர வேண்டியுள்ளது.

நெளிவும்,சுளிவும் நோக்கி அறிந்து, நோக்க உந்தம் பெற்று, போக்கு சீரமைத்து களைப்பாறி புறப்பட வேண்டியிருக்கிறது. புறப்பாடின் புலப்பாடு உள்வாங்கி, தெளிவுடன், தெம்புடன், தன்னுணர்வு,  தற்சார்பு அடைந்து!

Friday, February 16, 2018

நிற்க அதற்கு தக


அறிவுரைகள் ஆயிரம்,
தெளிவுரைகள் நூறாயிரம்.
பஞ்சமில்லை நூல்களுக்கு,
பகிர்ந்தளிக்கும் நண்பர்களுக்கு.
இலகுவான பதார்த்தம்,
சமூகத்தில், வலைதளத்தில்,
அவரவர் பங்களிப்பு.
நொடிகளில் நெடி இறக்கும்
நெஞ்சு நிமிர்த்தி,
நிழற்பட வெளிப்பாட்டில்.
நிற்கவில்லை சுயம்!
அதற்கு தக...!

விழுது

         

அழ வைத்த பொழுதுகள் எம்மை எழ வைத்த விழுதுகள்!

 உறங்கிய உணர்வுகளை, உள்ளடங்கிய உணர்ச்சிகளை வடிகால் ஆக்கியது!

வெளிப்படுத்தாத விம்மல்கள், தும்மல்கள் போல் வீறிட்டது.

 கண்கள் தாரை, தாரையாக, விசும்பல் சேர்த்து, அரவணைத்து

வெளிப்படுத்திய அன்பு, ஊற்றின் உன்னதமாக,உடல், உள்ளம் கனம் குறைந்து ,

பறவையின் இறகென இலகுவானது.

 இதற்குக் கூட உடல் நல சீர்கேடு, உன்னை உலுக்கி உண்மை உரைத்தது,

வாழ்க்கையின் புதிய அத்தியாயம்/முகவுரை முன்னிறுத்தியது.

(இதய அடைப்பு நோய் பாதிப்பில் உயிர் பிழைத்த பின்,
 வயதான தன் தாயை சந்தித்தபோது நேரிட்ட, ஒரு மகனின் உணர்வு)

'ஒகி''ஒகி' புயல் சேதம்,
உருக்குலைந்த மீனவ தேசம்.
ஒட்டு அரசியல் ஓரம் கட்ட,
ஓட்டு அரசியல் நேரம் கூட்ட,
வீட்டுஅரசியல் விம்மி ஏங்க,

வேதனையின் பிடியில்
வேங்கை இனம்.

விடிவு காணா சோகம்!
வடிவிழந்த தேகம்!

(டிசம்பர் 17, 'ஒகி' புயல் பாதிப்பில் உருக்குலைந்த கன்னியாகுமரி மீனவ மக்களின் வேதனை குறித்து, எமது வெளிப்பாடு)