Friday, February 23, 2018

காவிரி !





காவிரி தண்ணீர் குறைப்பு
கர்நாடகம் துள்ளிக் குதிப்பு.

வேளாண்மை தேவையில்லை,
தொழிற்சாலை போதும்
கிராமம் அவசியமில்லை.

நகரம் வாழ,
நாகரிகம் அழிய
நகர்த்திய தீர்ப்பு.

ஏற்றத்தாழ்வு அணுகுமுறை
ஏதிலியாய் தமிழன்.

சிறைக் காதலியாய் காவியுடன்
கைகோர்க்கும் கசடு முறை.

தமிழ்த் தேசிய தடுமாற்றம்
தாவிடும் உருமாற்றம்.

நீதி நாயகம் மயங்கிய போக்கு
தேச உடமை நகரத்தாருக்கே!
பண்பாடு உமக்கில்லை!
பயன்பாடும் ஊருக்கில்லை!
கடப்பாடு கர்நாடகத்திற்கே!


விடியல் காணா இருண்ட தேசம்
வெகுண்டெழ வேலையில்லை!
வேதனையும் தீரவில்லை!

உழவர் பாடும் நிலமும்
விழலுக்கு இறைத்த நீராக,
வெப்ப பூமியாக வெடித்திடும்
நாள்தோறும்.

அடையாளம் இழந்து
அதிகாரம் தொலைந்து
விளிம்பு நிலையில்.

வீதியின் சோதியாய்
வீடிழந்த சேதியாய்,
வாடி உழன்று வக்கற்று
திக்கற்று திசைமாறி,
திணை இழந்து மனை இழந்து.

புலப்பெயர்ச்சி
புகலிடம் தேடி,
வீழ்ந்திடும் கிராமம்
விழுங்கிடும் நகரம்........

காவிரியின் நாகரிகம்
காணாமல் போன வேகம்.
காலப் பெட்டகத்தின் கருவூலத்தில்
புதைக்கப்படும் நாள்
தொலைவில் இல்லை!

தொங்குகின்ற கத்தி இல்லை
இறங்குகின்ற கத்தி!
இம்சை அளித்திடும் உத்தி!!

No comments: