Sunday, February 25, 2018

மெளனம் ஆட்சி செய்யும்!

பிள்ளையாகினும் சரி, பெரியவானாகினும் சரி; பிள்ளை பெற்றவனாகினும் சரி; குடும்பத்தலைவன் ஆகினும் சரி; உண்பதும் ; ஓடுவதும்; உழைப்பதும்; ஈட்டுவதும்;  நடுநிசிக்குப்பின் நீட்டுவதும்; சக்கர சுழற்சி வாழ்க்கை நிரல்.

நாளும், பொழுதும் நகர்ந்திட, நகர்த்திட, பிள்ளை வளர்ப்பு, குடும்ப பிணைப்பு கணினி கதியில் கரைந்திடும் செல்வமாக, விட்ட பிறகு பிடிக்க, விரட்டுவது, துரத்த விடியாத பொழுதுகள். விடியல் ஏக்கங்கள் விரைந்திடும் விடையளிக்காமல். விவரம் சொல்லாமல் விலக்கும் விசையுடன். இசையுடன், நசையுடன்.  இணங்காதிருப்பின் ,விசையுடன் விலக்கும் வாழ்க்கை புலம்.

கழிந்த நாளுக்குப்பின், கடிவாள முனைப்பு கவைக்குதவாதது. காலம் சென்ற பின், கலக்கமும், கை கொடுக்காது. கவலை மேலோங்க,மன இறுக்கம் தளர, மல்க நீர் துளிக்க, மள மளவென்று கொட்டிடும்' மழைக்கால மேகம்போல்'. தளர்ச்சியில், தணல் கிறங்கும், சமநிலையிலும்  புரியாத மனம், காரணங்களைக் கடந்து, உறுதியை உடைத்து,கலவோடு கனத்தில் வடிசோறு பானையை தாங்கி நிற்கும் நிலை சேரும் மீண்டும்.

 முன் நிலவரம், சில தாக்கங்கள் அதிர்வலைகள் எழுப்பி, உறுதி குலைத்தாலும், மறு கணம்சமைவு. மனம் சந்தடி கலைத்து சமாதானம் உள்நிறுத்தி, சமநிலை எய்தும். ஆரவாரம் அடக்கி ஆயுளை நிறுத்தி, மெய்யுணர்வு கொல்லும், மெளனம் ஆட்சி செய்யும்!

No comments: