Saturday, April 28, 2007

உரைத்தவன்!

என்னிடம் பேசவில்லை!
அவன் கூற்று!
அவனிடம் பேசியது,
இவனிடம் கூறவில்லை.


அவன்!
என்னிடம், உன்னிடம்,
எவரிடம்,
பேசியது, ஏசியது,
உரைத்தவனுக்கும்,
உனக்கும் வெளிச்சம்.

'கீதை உபசாரம்'

தெருவிற்காக வீட்டை அழிக்கலாம், ஊருக்காக தெருக்களை அழிக்கலாம், நாட்டிற்காக நகரத்தை அழிக்கலாம், மாநிலத்தை அழிக்கலாம். இவ்வாறு கீதை உபதேசத்தில் கூறப்பட்டுள்ளதாக, புதுவை ஏம்பலம் சட்டமன்ற உறுப்பினர், திருவாளர்.ராசாராமன், சட்டமன்றத்தில் துறைமுக விரிவாக்கத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசுகையில் தெரிவித்துள்ளதாக, நேற்றும் இன்றும் பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.


அவர் மேலும் பேசுகையில், தாய் குழந்தையைப் பெற நிறைய இரத்தம் சிந்துகிறாள். அதுபோல, ஊரை இழந்து, நாட்டை இழந்து, மக்களை இழந்து துறைமுக விரிவாக்கம் வேண்டும் என வக்காலாத்து வாங்கும் சட்டமன்ற உறுப்பினர், திடீர் ஞானம் எப்போது, எங்கே பெற்றார். தேங்காய்த்திட்டு அழிந்தாலும் பரவாயில்லை, நிலத்தடி நீர் உப்பு நீரானாலும் கேள்வியில்லை ஏன், ஒட்டுமொத்த புதுவையே பாழானாலும் தமக்கு கவலையில்லை என்பவர், ஏம்பலம் தொகுதி மக்களுக்கு மட்டும் என்ன செய்தார்? செய்வார்?


தலித் மக்கள் பிரதிநிதியாக உள்ள இவருக்கு, தேங்காய்த்திட்டு கிராமத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் தலித் மக்கள் வாழ்க்கையைப் பற்றி அக்கறை இல்லையா? மிகவும் பிற்படுத்தப்பட்ட, உழைக்கும் மக்கள் மீது பற்று இல்லையா? இவர்கள் அனைவரையும் அழித்து துறைமுகத்தை அமையுங்கள் என ஒரு வட நாட்டுக்காரனுக்கு, மக்கள் விரோத திட்டத்திற்கு ஆதரவாக, ஆலோசனை அளிக்கிறாரா? புதுவை அழிந்த பிறகு எந்த ஊரில் பிழைப்பு நடத்துவார்? போராடும் மக்கள், பொது மக்கள், வெளிப்படையாக மக்கள் மன்றத்தில் கேட்கின்றனர்.

Friday, April 27, 2007

'ஆய்ந்தாய்ந்து'

'ஆய்ந்தாய்ந்து' கொண்டதா? பழக்கம், பெரும்பாலும் நட்பாகி விடுகிறது! அறிந்தவர், தெரிந்தவர், நண்பராகி, நடுவீடு வரை நீண்டுவிடுகிறது. உள்ளதை எல்லாம் கொட்டி, 'உண்மை நண்பர்' என்றாகி விடுகிறது. ஒருவழி போக்கு என்பதும் கூட, நெடுவழி சென்ற பின்பே வெளிச்சம். படித்தவர் என்பவர், பக்குவம் அடைந்தவர்! எதற்கு? யாருக்கு? ஊரில் நடப்பது, உனக்கு என்ன? எனக்கு என்ன கூலி? இலாபம்? நேரம் வீணாகுது, காலம் கடக்குது, இடத்தைப் பிடி! இருக்கும் காலத்தை இழந்தவர்! சுய முயற்சி உடைந்தவர், போனது போகட்டும். என்ன பலன்!

கடவுளா?

'சட்டை எடுப்பது போல்',
சட்டத்தை கையில் எடு!
ஏன்?
'காக்கிச் சட்டை' மட்டும்
கடவுளா?

Tuesday, April 24, 2007

...உனக்கே

ஒளி குன்றினாலும்,
ஒலி குன்றவில்லை,
கூன் இட்டாலும்,
திமில் பார்வை,


பொழுது புலர்வது,
உனக்குப் பின் தான்.
'கவிழ்த்து வைத்த கோழி',
'அவிழ்த்து விட்ட முடி'
உன் உவமை,
உனக்கே.

Monday, April 23, 2007

சமதர்மவாதி...

சமரசவாதி! சமதர்மவாதி!
'நம் கொள்கைதான்,
அவர்,அங்கேயிருக்கிறார்'
அனைவரையும்,
அரவணைத்துச் செல்கிறார்.


கேட்டதை,
ஏன்? பல சமயங்களில்,
கேட்காததைக் கூட,
நினைத்துப் பார்க்க
முடியாததைக்கூட,


ஆச்சரியத்துடன்,
அகல விழிகளில்,
அகலாத நினைவாக,
ரசிகர் மன்றம்,
தோற்கும் பாணியில்,


பாதையில்,
பதாகைகளில் நடிப்பு,
விஞ்சும்,
வீதிகளில் நாள்தோறும்.
தினசரிகளில்,
அரங்கேற்றம்.


சென்ற பணி,
ஆராதிக்கவா?
ஆமோதிக்கவா?
தன்னை இழந்து,
கொள்கை மறந்து,
மரத்து,


அமைப்பின் ஈர்ப்பில்,
கடைசி வாய்ப்பு,
வாய்ப் பூட்டு,
தாமாக,
பழம் பெருமை,
மக்கள் விளாசுகிறார்...

நரி....

மரம் எடுப்போம்!
மரம் வைப்போம்!
சாலைகள் செய்வோம்!
பெரிதாக, பெரிதாக,
உருவாக்கிய பாதையை,
உருமாற்றுவோம்!


தடுப்பினை உடைப்போம்,
'தடந்தோள்களால்'
உயர்த்துவோம்,
ஊடே,
உயர்வோம்.


செடி வைப்போம்,
புதிது புதிதாக,
வாங்கிய பணம்,
வீங்கிய செல்வர்,
உயர வேணாமா?
தேர்தல் காலத்தில்,
உதவ வேணாமா?


ஊழல் சுவரொட்டி,
ஒட்டினால் பயமா?
துண்டறிக்கை ஊரெங்கும்,
பரப்பினால்,
கவலை,செலவு,
உங்களுக்குத்தான்!


சி.பி.ஐ.க்கே,
கவலைப்படாதவர்!
'மக்கள் போராட்டக்குழு',
உங்களுக்கு,
பயந்து விடுவோமா?


நரி,
'நாங்கள்'
'பனங்காட்டு நரி',
சல சலப்புக்கு,
அஞ்சுமா?

Sunday, April 22, 2007

கண் திறப்பு...

பூர்விகம், பரம்பரை,
இருப்பது இதுதான்,
இழந்தது ஏராளம்.


குடும்ப நியாயம்,
பாட்டியிடம்,
அப்பனிடம்.


காப்பாற்று கெளரவம்,
கூடப் பிறந்தது,
உன்னைப் பெற்றது,
விட்டுவிடாதே.


அரை நூற்றாண்டு
கழிந்தது,
அவ்வளவும்,
கண் திறப்பு.

அணுசரி

அது சரி,
எனக்கு மட்டும் தானா?

திறமையானவன்?

ஏமாந்த பின்னும்.
பழம்பெருமை,
காப்பாற்ற,
இருக்கும் பெருமை,
இழந்தவன்.

புவிநாள்-செயல்..?

புவி நாள் இன்று!
வழக்கமான அறிக்கை,
செய்தித்தாள்,
வண்ண விளம்பரம்,
அமைச்சர்,
ஆள்பவர் நிழற்படம்.


'கியோட்டோ மாநாட்டு முடிவுகள்'
என்னவாயிற்று?
புவி சூடேற்றம் குறைந்ததா?
உருகும் பனித்தகடு ஐசுலாந்தில்,
துருவப் பகுதியில்.


கடல் மட்டம் உயருமாம்,
கரைப்பகுதிகள்,
காணாமல் போகுமாம்,
பசுபிக்கடலில்,
தாழ்வான தீவு நாடுகள்,
இல்லாது போகுமாம்.


ஆல்ப் பனிச்சிகரங்கள்,
பாதி உருகி,
ஐரோப்பிய நாடுகள்,
வெள்ளக் காடாகுமாம்.
சிலப்பகுதிகள்,
வறண்டு போகுமாம்.


இமயமலைச் சிகரங்கள்,
உருகிப்போகுமாம்
கங்கை, யமுனை,
வறண்டு போகுமாம்.
வளர்ந்த நாடுகள் பொறுப்பென்ன?
வளரும் நாடுகள் கருத்தென்ன?

Saturday, April 21, 2007

இயக்கம்...?

என்ன சொன்னேன்?
என்ன செய்தேன்?
ஏதும் தெரியவில்லை?
வேகமா? விவேகமா?
ஏதும் புரியவில்லை?


காலம் கடத்துவது,
களிப்படைவது!
கலங்குவது!


வேகம் கொள்வது!
வேலை செய்வது!
வெறுப்படைவது!


சீராக இயக்கம்,
சிறப்பாக செல்வது.
நாளாக, நாளாக,
நாடி, ஓடி, கூடி,
நாடி தளர்வது.

நிவாரணம்....

இடி இடித்தது!
மக்கள் கருகினர்!
ஆள் இல்லா,
தொடர்வண்டிப் பாதை,
ரயிலில்
வாகனம் மோதி,
மக்கள் பலி!


அரசு நிவாரணம்,
அடுத்தடுத்து தமிழகத்தில்.
தத்தெடுத்த மக்கள்
என்னவாயினர்?
வெடிவிபத்தில்.


செ(கு)ண்டூர் துயரம்,
மறையும் முன்,
நேர்ந்தது.
தொகையாக,
துயரங்களின் பயணம்!

Thursday, April 19, 2007

"பாலிசி"

ஒட்டாத உறவு!கிட்டாத நட்பு!
சாவுக்கும்,
வாழ்வுக்கும்,
திரும்பிப் பார்க்கும் உறவு!


திடீர் திருப்பம்!
அக்கறை விசாரிப்பு!
இல்ல அழைப்பு!
திருந்தி விட்டதா?
சமூகம்,
மிகவும்!


"ஒரு பாலிசி போடுங்க",


வியாபாரம்,
வெறுப்பு இல்லை! பகை இல்லை!
வணிகம் செய்!
நட்பு வேன்டும்!
உறவு வேண்டும்!

Tuesday, April 17, 2007

தாராளம்...?

நீர் நிலைகளை காக்க!
நீங்கள் மட்டுமா?
கரசூர், சேதாராப்பட்டு,
மக்கள் கேட்கிறார்!


சிறப்பு உங்களுக்கு!
மண்டலம் உங்களுக்கு!
இறப்பு, இழிவு,
"கமண்டலம்", எங்களுக்கா?


ஊரைச்சுற்றி மதில் சுவர்!
அடையாள அட்டை!
ஒரு வழிப்பாதை!
ஒடுங்கிச் செல்லவேண்டும்!
நடுங்கிச் செல்லவேண்டும்!


ஏரி என்ன ஆவது?
ஊசுட்டேரி நீர் பிடிப்பு பகுதி?
ஊசுட்டேரிக்கு உலை வைத்து,
வேலை நடக்க,
உங்களுக்கு கவலை வேண்டாம்!


மனை பிரிக்கலாம்!
மாடி கட்டலாம்!
ஓட்டல், உல்லாசம்!
ஓரிரண்டு கூடுதல் சாலைகள்!
கன ரக வாகனங்கள்!
கழிக்கப்படும் பொருட்கள்!
மண்டலத்தில் குவிக்கப்படும்!
மக்கள் "அனுபவிக்க"!


வயல் இல்லாமல்,
போயின் என்ன?
தென்னந்தோப்பு காணமல்,
போனால் என்ன?
சுண்ணாம்புச் சுரங்கங்கள்,
மழை நீரைத்தேக்கி,
வைத்தால் என்ன?


வியாபாரத் தண்ணீர்,
இருக்கவே இருக்கு,
உங்களுக்கும், எங்களுக்கும்.
சோறுக்கு கவலை இல்லை,
பயிறுக்கு கவலை இல்லை,
இறக்குமதி,
இருக்கவே இருக்கு.


உள் நாட்டில் இல்லையாயின்,
வெளி நாட்டில் கூடவா இல்லை!
இறக்குமதி வணிகம்,
தாராளம்,
தடை இல்லை!

....அன்னிய சக்தி?

"செர்னோபில்",
மறக்க முடியுமா?
ஓட்டை, உடைச்சல்,
வணிகம் ஓங்கி,
"உடைவைக் கடந்து",
உலக வணிகம்.


உள்ளுரில் வேகாதது,
அயலூரில்,
அலுப்பில்லாமல்.
வேக்காட்டு அரசியல்,
அரைக்கும் குறை.


தரையில் என்ன?
தண்ணீரில் தர,
"முன்னாள் தோழர்",
தாராளம்.


நீலக்கடல் சொந்தக்காரர்.
தொழிலும், நுட்பமும்,
தொலைவில் இருக்கலாமா?
2020ல்.


நீர் கிடைத்தால் என்ன?
"நீர்" இருந்தால் என்ன?
"நீயுட்ரான்" போல்,
நாடு, வளர்ச்சி,
முன்னேற்றம்!

...பிறை கண்டவர்!

என்ன பேசினார்?
தெரியவில்லை?
எனக்கும்.
அவருக்கும்.


உரத்து,
மெய்ப்பாட்டியல்.
தண்ணீர் புட்டியல்,
இடையிடையே.
தளரவில்லை.


குலை(றை)யவில்லை,
நிழற்பட வாய்ப்பு.
தொலைக்காட்சி பரப்பு.
அடுத்த நிகழ்ச்சி,
பட்டியலில்.


அலுப்பில்லை,
"ஆயிரம் பிறை கண்டவர்"
"கூப்பிடாவிட்டாலும்,
வருவேன்".
அகில இந்தியக் கட்சி.


"நாடாளுமன்றத்தில்,
நம் பிரச்சனை,
நாலு மாதமாக",
எங்கும்!
இங்கும்!

சாத்தியமா?

உன் எரிச்சல்,
உள் எரிச்சல்,
இலக்கு நானா?
உன் குழவி,
தாங்குவாளா?


இயலவில்லை!
எதுவும் என்றாகுமா?
நொடிந்தவர் ஆயிரம்,
முடிந்தவர் நாம்!
உடைந்திடலாமா?


கல்வி, கைப்பொருள்,
கரை சேர்த்திடுமா?
உறவு அணுக்கம்,
புளிப்பாகுமா?
புளித்ததெல்லாம்,
இனிப்பாகுமா?


புரியாத உன்னை,
நீ,
புரிந்து கொள்ள,
பொழுதெல்லாம்,
சகித்துக் கொள்ள,
சாத்தியமா?

Sunday, April 15, 2007

பேசிக்கொள்கிறார்கள்...

காவல் துறை, முன்கூட்டியே காவலர்களை அதிக எண்ணிக்கையில், நீண்ட தடிகளுடன் தலைக்கவசம் உட்பட அனைத்து தயாரிப்புக்களோடு, தேங்காய்த்திட்டு மக்களைத் தாக்குவதற்கு குவித்திருந்தனர்.


வெள்ளிக்கிழமை அன்று, அமைச்சரின் துறைமுக விரிவாக்கத் திட்டத்தை எதிர்த்து "வல்சராசு அமைச்சரின் சவ பாடை ஊர்வலம்", மக்கள் ஒரு போராட்ட வடிவமாக ஊருக்குள் நடத்தினர். இப்போராட்டத்தை பொறுத்துக்கொள்ளாத காவல்துறை, ஊருக்குள் புகுந்து மக்களை விரட்டிச்சென்று, ஆவேசமாக தடிஅடி நடத்தி, பலரை காயப்படுத்தியுள்ளது.


மேலும், அங்கு கூடியிருந்த போராடும் பெண்களை, மிக அசிங்கமான வார்த்தைகளில் திட்டி, மிரட்டியுள்ளதாகவும், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களால் செய்தி சொல்லப்படுகிறது. 800 பேர்கள் மீது குற்ற வழக்கும் போடப்பட்டு, தமது எசமான விசுவாசத்தை, புதுவை காவல்துறை வெளிப்படுத்தியுள்ளது.


புதுவையின் நீர் ஆதாரம் காக்கப்பட வேண்டும், மக்கள் வாழ்வாதாரம் பறி போகக்கூடாது, புதுவை காக்கப்படவேண்டும் என்று போராடும் மக்கள் மீது, அரசாங்கம் ஒட்டு மொத்தமாக ஒரு வழக்கு போடுவது, புதுவையின் வரலாற்றிலேயே அனைத்து நியதிகளையும் மீறியுள்ள நிகழ்வாகும்.


பரவலாக, மக்கள் இப்போக்கு குறித்து கண்டனக்குரல் எழுப்பி உள்ளனர்."மக்கள் நாயகம்" என்பது மக்களுக்கா? மக்களை ஆள்கின்றவர் பொருள் சேர்க்கவா? பிரபலமான அரசியல் கட்சிகளும், இடதுசாரிகளும் புதுவையில் இருகின்றனரா? போராடும் மக்கள் கேட்கின்றனர்!


நாங்கள் துறைமுக திட்டத்தை கொள்கை அளவில் ஆதரிக்கிறோம்! பாதிப்புகளை எதிர்க்கின்றோம்! எனும் குழப்பமான நிலையை இந்தியக் கம்யூனிசுடு கட்சி, துறைமுக விரிவாக்கத் திட்டத்தில் எடுத்துள்ளது."சிப்மெர்" தன்னாட்சியை வலுவாக எதிர்க்கும் மார்க்சிசுட் கட்சி, சேதராப்பேட், கரசூர் "சிறப்பு பொருளாதார மண்டல" திட்டத்தைப் பற்றி வாய் திறக்காத நிலைப்பாடு!


அரசியல் கட்சிகள், எவ்வாறு மக்கள் பிரச்சனையில் அக்கறை இல்லாமல்,ஆளும் வர்க்க அரசியலோடு கைகோர்த்து, மக்கள் விரோதமாக வெளிப்பட்டு வருகிறார்கள் என்று சமூக ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.

Saturday, April 14, 2007

1995ல் தேங்காய்த்திட்டு ஆறு...

எலிப்புழுக்கை விரவியது போல்,
எங்கும் சிதறிக்கிடக்கும்
சங்குகள்,
ஆற்றங்கரையில்.
இடையிடையே ஆலிகள்.


காற்றடிப்பினில்,
காணாமல்,
கரையில் சேரும்,
சிறு அலை நுரைகள்.


"அடுத்த கரையில்
கரைத்த சோப்பின் விளைவு,
இக்கரையில்",
சிறுவர்களின் சிந்தனை.


ஆம், சிறாரின் கற்பனை!
"வானல் சட்டி வடிவத்தில்,
ஆழம் உள்ள ஆறாம்",
"ஆனால், சற்று தொலைவினில்,
பானையைப் போல்,
வெடுக்கென்று,
இழுத்துக் கொள்ளும்,
பள்ளமும் இருக்குதாம்"


இவையெல்லாம்,
மீன்பிடித் துறைமுகம்,
ஆக்கியவுடன்.


கையகப்படுத்தப்பட்ட
நிலத்தில்,
வயல்கள் மாறி,
பச்சை நிறம் மாறி,
செம்மண் பரப்பு,
செந்நிறம் வாழ்கிறது.


கட்டிடங்கள் வரும்,
கார்கள் வரும்,
லாரிகள் ,டிராக்டர்கள்,
இவைகளுடன்,
கார்பன்டைஆக்சையுடு',
'மோனாக்சையுடு'
எல்லாம்.


கரை ஓரத்தில்,
தொகுப்பாக நின்ற தென்னைகள்,
தலையிழந்து, நிலைவீழ்ந்து,
தனிக் குடும்பமாய்.


மண் அரிப்பும்,
மாறியுள்ள,
பூகோள விதிகளாய்.
இவைகளுக்கு இடையில்,
கட்டுமரங்கள் விடுகிறார்,
மாலை ஆறு மணிவரைக்கும்.


வலையில் என்ன கிடைக்கும்,
"குசுமாம் பொடிகள்,
குண்டியை நனைக்குமா"?

எங்களுக்கு..

கொடுக்கைச் சுழற்றி,
கண்களை நிறுத்தி,
அரவம் கேட்டு,
கொடுக்கை முன்நிறுத்தி,
வலைக்குள்,
வெடுக்கென செல்லும் நண்டே!


ஆற்றங்கரையில்,
பூ தெளித்தது போல்,
ஆமணக்கு கொட்டை நிறத்திலே,
புள்ளிகள்,
முதுகில் தெளித்தது போல்.


ஆட்டம் போடும் நீங்கள்,
கொடுத்து வைத்தவர்கள்.
சொந்தமாக ஆளுக்கொரு,
வலையாவது உண்டு,
உங்களுக்கு!


எங்களுக்கு ???

தட்சணை..

நகைக்கடையா? கொலு பொம்மையா?
நாட்டின் செல்வம்,
எல்லாம்,
முடங்கி உள்ளதா?


இல்லை? இல்லை?
நகைக் கடை,
தொலைக்காட்சி விளம்பர,
பொம்மையா?


நாளெல்லாம்,
வாழவைக்கும்,
"தெய்வ" வீதி உலாவா?
இல்லை? இல்லை?


மணப் பெண்ணாம்!
நல்ல பணப் பெண்ணாம்!
மண நிலையமெங்கும்,
ஒரே பேச்சு!


வீடு அரண்மனையாம்!
சாதி வன்னியராம்!
சேலத்திலிருந்து,
பாலக்காட்டில் குடியேற்றமாம்!

Friday, April 13, 2007

அறம்...?

சூழ்நிலையால் குற்றம் இழைப்பவருக்கு, சமாதானம் உண்டு. குற்றம் இழைப்பதற்காக சூழ்நிலையை உருவாக்குபவருக்கு, சமாதானம் உண்டா? "குற்றத்தை வெறு குற்றவாளியை வெறுக்காதே" எனும் கருத்து, சூழ்நிலையை தமது தப்புகளுக்கு, முறைகேடுகளுக்கு, கேடயமாக எடுத்துக்கூறும் நபர்களுக்கு, பொருந்துமா?


உழைப்புக்கு மதிப்பில்லாது, அதை கெளரவ குறைவாக நினைக்கும் மனிதருக்கு, எவ்வகையிலாவது பொருள் சேர்ப்பது, செல்வம் குவிப்பது, போட்டி மனப்பான்மை, பெரிய வாய்ப்பாக அமைகிறது. ஆடுகள விதிகளை மீறி ஆக்கம் சேர்ப்பவர்களை, சேர்த்தவர்களை பார்த்து ஆசை விரிகிறது, அரவமில்லாமல்.


அடுத்தவன் சொத்தை ஆக்கிரமிப்பது; ஆள் கடத்தல் செய்வது; பொருள் கவர்வு; சட்ட விரோதமாக பொருள் சேர்த்தல், இன்ன பிற செயல்களில் ஆக்கம் சேர்த்தல்; ஆகிய பல தளங்களில், தங்கள் பயணத்தை மேற்கொள்வது போன்ற நிகழ்வுகளை, நாம் அன்றாடம் கவனித்து வருகின்றோம். இதில், பெரிய ஆள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள், தப்பு செய்யும்போது, இவர் ஏன் செய்யக்கூடாது? எனும் வாதம் மிகப்பரவலாக, சமூகத்தின் நாடியாக விளங்குகின்ற தன்மையை, நாம் காண்கிறோம்.


மனித இயல்பை மீறிய, பல முறைகேடுகளை செய்வது, அடுத்தவர் உரிமைகளை பாதிக்கும் செயல்பாடாகும். மட்டுமில்லாது, அரசியல் சமூகம் தனி மனித ஒழுங்கிற்கு விதித்துள்ள நியதிகளை மீறிய பண்பும் ஆகும். ஒழுங்கை ஏற்றுக் கொள்வதா? வேண்டாமா? அது என்ன அவசியமானதா?, எனது திறமையினால் 'உழைத்து' சொத்து சேர்ப்பது, சுய முயற்சியின் விளைவு இல்லையா?, போன்ற வாதங்கள், எதிர் வாதங்கள், ஏற்புடையதா? நியாயமானதா?


அறம் சார்ந்த பண்புகள் என்பதே, வாழ்க்கையில் சற்றும் தேவையில்லையா?

நரை..

என் சூரி கூறுகிறாள். "இந்த தாத்தாமுடி, உனக்கு வேண்டாம்பா". அவளுக்கு பிடிக்கலையாம். ஆம்! வயதாவது அவளுக்கு பிடிக்கலை! எனக்கு மட்டும் என்ன! முதுமை பயணத்தை ஒத்திவைக்க எவரால் முடியும்!.

ஓர் உண்மை அவள் மழலையில் வெளிப்பட்டது. மரபியல் ரீதியில் எனக்கு வாய்த்தது, என் அப்பா எனக்கு அளித்த "வாரிசு உரிமை". அதை எப்படி நான் மறுக்க முடியும்! அவர் எனக்கு எழுதிவிட்டு சென்ற சொத்துரிமை அல்லவா!

குழந்தைகள் பேச்சில், நல்ல ஆழமான புலன் அறிதல். நம்மில் பலருக்கு புரிவதில்லை, பல நேரங்களில்...

முருங்கை...

வெட்டினர்.
கிளைகளும், கீரையும்,
பிஞ்சும், பிளாக்காயும்.
உறுத்தின,கண்களை,
ஓழித்தனர்,
ஒய்யாரமாக.


"வெட்ட வெட்ட
முளைத்தேன்"
மதியைப்போல்,
முளைத்தது,
குழவி எகிறைப்
போல்.


பாதித்த நெஞ்சில்,
பால் வார்த்தது.
பதைத்த நெஞ்சிற்கு,
இதம் அளித்தது.


"ஒரு மாடு,
ஒரு முருங்கை
மரம்",
பொசுப்பு,
ஏற்படித்தியது.

Wednesday, April 11, 2007

எதிர்கொள்...

துன்பம்,
தாங்கிக்கொள்!
"ஏட்டில்",
"பாட்டில்"
என்றாலும்,
எதிர்கொள்.


வாழ்க்கையில்,
அன்றாட,
நிகழ்வுகளில்,
பொறுத்துக்கொள்.
இயல்வது இல்லை!
ஆயினும்,

ஓர் நொடியில்,
ஓராயிரம் உணர்வு,
"வலி மின்னலென"
தோன்றி மறையும்.


பதட்டம், நடுக்கம்,
சமாளித்து,
பழகிக்கொள்!
கொண்டதை விட,
என்ன நிகழும்?


இடுக்கண் தாங்கி
நில்!
இனி என்ன?
எதிர்கொள்!
ஏற்றம் தான்!

Tuesday, April 10, 2007

செண்டூர் துயரம்..

07.04.2007ல், திண்டிவனம் அடுத்த, நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செண்டூரில் "வெடிவிபத்து". "பாறை வெடிக்கும் வெடிகள் மனிதரை வெடித்தது"
16 பேர் சிதறினர், சின்னா பின்னமாகி, கருகி, உடல் சிதைந்து, வீழ்ந்தனர், தாம் பிறந்தமண்ணில்.


கண்ணெதிரே பயங்கர காட்சிகள். பேருந்துக்கு நின்றவர், புளியமரத்தில் புளி உலுக்கியவர், தேநீர் கடையில் இருந்தவர் உயிர்களை உலுக்கியது. இறந்தவர் பட்டியலில், வழியில் சென்றவர். வாகனத்தில் இருந்தவரும் படுகாயம். எதிரில், பக்கவாட்டில் இருந்த வீடுகள் சிதைந்தன, வீட்டின் ஓடுகள் உடைந்து, கொட்டியும் கொட்டாமலும், போர்க்கள காட்சி. உடைந்த தென்னை மரங்கள், கருகிய புளிய மரங்கள், வெடியின் விசையில், சாலையில் மூன்று அடிக்கு மேல் ஏற்பட்ட பள்ளம். சிதறிய வாகனத்தின் தகடுகள் சில்லி, சில்லியாக, மரங்களில் தைத்துள்ள வேகம். கிழிந்த சட்டைகள், துண்டு,துண்டாக, ஒற்றைச்செருப்புகள்,"அரையை விட்டு அனாதையாக கிடந்த அரைஞான் கயிறு", சிதறிய உடல்களின், சிதைந்த உயிர்களின், உறைந்த இரத்தம்...வீதிகள் எங்கும் சிதறி, விரவிய தசைகள், புளிய மரத்தில் தொங்கிய ஒற்றைக் கைகள்...நெஞ்சம் பதைக்கும் காட்சி!!அரசு எந்திரங்கள், தொடர் நடவடிக்கை இல்லை. பாதுகாப்பு ஏற்பாடுகள் தற்காலிகமாக, ஆட்சியர் அலட்சியம். எப்போதும் போல் பேச்சு, நிவாரணம். நிரந்தர தடுப்பு நடவடிக்கை, வெடிபொருள் வியாபாரிக்கு இருக்கவேண்டிய பொறுப்பு, விதிமுறைகள் கடைபிடித்தல், உறுதி செய்யப்படவேண்டும். மாநிலம் முழுவதும் எச்சரிக்கை நடவடிக்கைகள், துரித கதியில் எடுக்கப்படவேண்டும். அரசின் வெடிபொருட்கள் கையாளுதல், பராமரிப்புச் சட்டம் நடைமுறைப் படுத்தும் துறை அதிகாரிகள், இனிமேல் மிக கவனமுடன், கறாராக கடமையாற்ற வேண்டும். வெடிபொருட்கள் வியாபாரத்திற்கு இசைவு அளிக்கும் போது, பொதுமக்கள் வழ்விடங்களுக்கு அருகில், கிடங்கி அமைத்திட அனுமதி அளித்திடக் கூடாது. இழப்பீட்டுத் தொகையை அரசு அளிப்பது அல்லாமல், இழப்புக்குக் காரணமான வியாபாரியிடம் இருந்தும் பெற்றுத்தர வேண்டும். குற்றவியல் ஒறுத்தல் நடவடிக்கை, நீதி விசாரணை, விரைவுபடுத்தப்பட வேண்டும். அரசு செயல்பாட்டின் மீது, மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வண்ணம் நிவாரண நடவடிக்கைகள் உட்பட உருப்படியாய் அமைந்திட வேண்டும்.

Wednesday, April 4, 2007

கரையாளர்!

துயரம் தீரவில்லை.
சோகம் போகவில்லை.
500 மீட்டருக்குள்,
கடற் கரையில் வாழ்ந்திட,
அனுமதியும் இல்லை.
அலை அடித்தும் ஓயவில்லை.


மழை விட்டும்,
தூவானம் விடவில்லை.
ஆழிப்பேரலை அடித்து ஓய்ந்தும்,
அப்புறப்படுத்திய எங்கள் வாழ்க்கை,
விலகிய வெளிச்சம் போல்.
இருள் தொடர்கிறது இன்னமும்,
முகாமில்.


இல்லற வாழ்க்கை,
அந்தரங்கமும் அம்பலம்.
போதை ஏறி, பொறுக்காத,
ஆண் வர்க்கம்.
அத்து மீறல்,
அன்னியர் போல்.
குழந்தைகள் விழிப்பில்,
குடும்பத்தில் பிரச்சனை.
உளவியல் சார் சிக்கல்.


நொடிப்பில்,
உறுப்புகளை இழந்து,
விற்று,
மேலும் நொடிந்தோம்.
கடல் அரிப்பு,
கரை அரிப்பு,
வீடு ஒழிப்பு,
மரம் அழிப்பு.
குடி நீரும்,
கிணற்றில் இல்லை.


உப்பு நீரே உயர்ந்த்துள்ளது.
தண்ணீர் வாழ்க்கை,
கண்ணீர் வாழ்க்கை.
உணவகம், விடுதி,
உல்லாசம்.
இவற்றுக்கு இல்லை,
500 மீட்டர் அளவு கோல்.


வளர்ச்சி!
நாங்கள் அழிந்து.
மீன்கள் அழிந்து.
கரை அழிந்து,
கலை இழந்து,
நிலை குலைந்து,
நிற்க இயலாத வாழ்க்கை,
நீடித்திருக்கும்.


உடலில்,
உயிர் ஓடிக்கொண்டிருக்கும்.
கடிகார முள்போல்,
காலம் காட்டி,
எங்கள் கோலம்
தேக்கி.

Sunday, April 1, 2007

எவர் நலனுக்கு!

உருவா 1800 கோடியில், புதுச்சேரி தேங்காய்த்திட்டில் துறைமுக விரிவாக்கத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். தொழில் வளர்ச்சி மேம்பட, வேலை வாய்ப்பு பெருகிட, 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்திட இருக்கிறோம்.


அதற்கேற்ப, புதுவை மக்கள் தங்களை தகுதி படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என, புதுவை மாநில அமைச்சர், திருவாளர். இ.வல்சராசு அவர்கள் "கேரள சமாசம்" விழாவில் பேசினார். "தீபம் தொலைக்காட்சியில்" இச்செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. இத்திட்டங்களை எதிர்க்கக் கூடியவர்கள், குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், கூறியுள்ளதாக அறிய வருகிறது.


புதுவை மாநிலத்தில், கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக, "சிக்கன் குனியா காய்ச்சல்" பரவலாக, மக்களை வாட்டி வதைத்தது. அரசு பொதுமருத்துவ மனைகள் இதனை சரியாக சமாளிக்க முடியாத நிலயில், தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள் நல்ல வணிகம் செய்து வருகின்றன.


பொது சுகாதாரம் கூட, எமது பொறுப்பு இல்லை என அலட்சியமாக இருந்து வரும் அரசு, எவர் நலனுக்கு அமைக்கப்பட்டுள்ளது? மக்கள் கேட்கின்றனர். கல்வி பெருந்தொழிலாக, கடை வீதி சரக்கு போல், நடை வீதி பண்டங்கள் போல், சந்து, பொந்துகளில், குறுக்கும் நெடுக்குமாக கூவி விற்கப்படுகின்றது.


அங்கீகாரம் உள்ளதா? உட் கட்டமைப்பு வசதி உள்ளதா? என எவர் அறிவார்? இதற்கு சற்றும் சளைத்தவர் அல்ல நாங்கள் என சடுகுடு விளையாட்டு போல், மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஏரியைச் சுற்றி, ஏரியை வெட்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி, கழனிகளை சாய்த்து உருவாக்கப்படுகின்றன. எவர் நலனுக்கு? முதலீட்டாளர் ஊதியம் பெறுவதற்கு அல்லாமல், மக்கள் நலனுக்கா?


இயற்கையை அழித்து சூழலைக்கெடுத்து உருவாக்கப்படுவது அடிப்படையில் வளர்ச்சியா? குடிப்பதற்கு நீர் இல்லை? கொப்பளிக்க பன்னீரா? புதுவையின் மண்ணின் மைந்தர்கள், நைந்தவர்களாக, தங்கள் அடையாளங்களை, வந்தேறிகளிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

....தானம்!!

இரத்ததானம் செய்யுங்கள்!
அனைவரும்! விருப்பமாக!
வியாபாரம் நுழைவு,
வீதி சரக்கு போல்.


விழாக் கூட்டம் போல்
மொய்க்கும்.
வறுமை மாந்தர்,
எஞ்சிய குருதியும் ஏலம்.


ஏய்ப்புகளின் பிடியில்
இளைஞர்,
வாய்ப்பு இன்றி வாடுகின்றனர்.
வருவாய்த் தேடி.


விற்கிறார் குருதியும்,
உறுப்புகளும்,
தரகர் வழி.
ஏமாற்றம் மிஞ்சுகிறது.


பண்டம் தம்முடையது
ஆயினும்,
எடுக்கும் விலை இல்லை.
கொடுக்கும் விலையே,
கோலோச்சும்.


கொடுமையில்,
மகளிர், இளைஞர்,
அடிப்படை மக்கள்.
வேர்கள்,
வியர்வைகளுடன்.