Sunday, April 1, 2007

எவர் நலனுக்கு!

உருவா 1800 கோடியில், புதுச்சேரி தேங்காய்த்திட்டில் துறைமுக விரிவாக்கத் திட்டம் நடைமுறைப் படுத்தப்படும். தொழில் வளர்ச்சி மேம்பட, வேலை வாய்ப்பு பெருகிட, 55,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்திடும் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்திட இருக்கிறோம்.


அதற்கேற்ப, புதுவை மக்கள் தங்களை தகுதி படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என, புதுவை மாநில அமைச்சர், திருவாளர். இ.வல்சராசு அவர்கள் "கேரள சமாசம்" விழாவில் பேசினார். "தீபம் தொலைக்காட்சியில்" இச்செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. இத்திட்டங்களை எதிர்க்கக் கூடியவர்கள், குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும், கூறியுள்ளதாக அறிய வருகிறது.


புதுவை மாநிலத்தில், கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக, "சிக்கன் குனியா காய்ச்சல்" பரவலாக, மக்களை வாட்டி வதைத்தது. அரசு பொதுமருத்துவ மனைகள் இதனை சரியாக சமாளிக்க முடியாத நிலயில், தனியார் மருத்துவர்கள், தனியார் மருத்துவமனைகள் நல்ல வணிகம் செய்து வருகின்றன.


பொது சுகாதாரம் கூட, எமது பொறுப்பு இல்லை என அலட்சியமாக இருந்து வரும் அரசு, எவர் நலனுக்கு அமைக்கப்பட்டுள்ளது? மக்கள் கேட்கின்றனர். கல்வி பெருந்தொழிலாக, கடை வீதி சரக்கு போல், நடை வீதி பண்டங்கள் போல், சந்து, பொந்துகளில், குறுக்கும் நெடுக்குமாக கூவி விற்கப்படுகின்றது.


அங்கீகாரம் உள்ளதா? உட் கட்டமைப்பு வசதி உள்ளதா? என எவர் அறிவார்? இதற்கு சற்றும் சளைத்தவர் அல்ல நாங்கள் என சடுகுடு விளையாட்டு போல், மருத்துவ மனைகள், மருத்துவக் கல்லூரிகள், ஏரியைச் சுற்றி, ஏரியை வெட்டி, நிலத்தடி நீரை உறிஞ்சி, கழனிகளை சாய்த்து உருவாக்கப்படுகின்றன. எவர் நலனுக்கு? முதலீட்டாளர் ஊதியம் பெறுவதற்கு அல்லாமல், மக்கள் நலனுக்கா?


இயற்கையை அழித்து சூழலைக்கெடுத்து உருவாக்கப்படுவது அடிப்படையில் வளர்ச்சியா? குடிப்பதற்கு நீர் இல்லை? கொப்பளிக்க பன்னீரா? புதுவையின் மண்ணின் மைந்தர்கள், நைந்தவர்களாக, தங்கள் அடையாளங்களை, வந்தேறிகளிடம் இழந்து கொண்டிருக்கிறார்கள்.

No comments: