Monday, April 14, 2008

"காக்கா பூன் வித்தை காட்டறியா"?

"காக்கா பூன் வித்தை காட்டறியா"? வெகு காலத்திற்கு முன் அம்மா பேச்சில் வெளிப்படும் எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக, வீட்டிற்குள் விளையாடிய சொற்றொடர்கள். தற்போது முதுமையின் போட்டியில், பயன்பாடு குறைந்த சொல்லாடல்கள்.

"மரமூஞ்சி,சிங்கிளி,போக்கத்தவன்,", "ஒரு ரூபா குடுத்துட்டு ஓயாம அடிப்பான்", வேலைக்காரன் திறமையை வெயிலில் பாரு" போன்ற எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் மற்றும் மரபுச் சொற்கள் பயன்பாடு இல்லாமல் வழக்கழிந்து போய் உள்ளன.

அப்பா, ஓயாமல் சிகரெட் பிடித்த காலத்தில், சார்மினார் பிரியர், காட்டமான புகை.அனைவரின் வற்புறுத்தல் இவற்றிற்கிடையே 'கத்தரிக்கோல் பிராண்டுக்கு மாறியவர். புகைப்புக்கு பின் தூக்கி எறியப்படும் பக்கைகளின் உள்ளே இருக்கும் "காக்கா பூன்" தாள், சல சல என சத்தம் எழுப்பும் 'சிகினா தாள்'

இவ்வாறு, சல சலப்பு செய்யும் செயலைக் குறிக்கும், பயன்பாடாக குறிக்கப்பட்டது. ஆங்கிலேய மொழி பயன்பாட்டில் "காக்கபோனி" ஒத்தது ஆகும் எனலாம்.

Saturday, March 22, 2008

சிறைக் கைதிகள்

மனித உரிமை மீறல்

சிறைக் கைதிகள் இந்தியர் ஆனாலும், பாக்கிசுத்தானியர் ஆனாலும் கொட்டடிகளில் ஆண்டுக் கணக்கில் வாடுவது, இறப்பது என்பது வெகு காலமாக வெளியில் தெரியாமல் உள்ளுக்குள்ளே நடந்து கொண்டிருக்கும் கொடுமை ஆகும்.சில காலமாக, அதுவும் இந்திய மனித உரிமைக் குழுக்கள், பாக்கிசுத்தான் மனித உரிமைக் குழுக்கள், இரு நாட்டு நண்பர்கள் கழகம் ஆகியவைகள் முன் முயற்சியில் குறிப்பாக, அசுமா சகாங்கீர் போன்ற, உலக நாடுகள் அறியப்பட்ட பாக்கிசுத்தான் மனித உரிமைப் போராளி ஆகியோரின் தொடர் அணுகு முறையினால் பலர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆயினும் இரு நாடுகளும் கைதிகள் பரிமாற்றத்தில் எடுத்து வைக்க வேண்டிய அடிகள் ஏராளம்.அங்கொன்றும் இங்கொன்றும் ஆக விடுவிக்கப்படும் கைதிகள் போக, அரச தந்திர மட்டத்தில் அக்கறையாக அமர்ந்து பேசி, கைதிகள், மீனவர்கள் ஆக இருந்தாலும் , எல்லை தாண்டி சென்றவர்கள் ஆக இருந்தாலும் கால க் கிரமத்தில், படை வீரர்கள் ஆக இருந்தாலும் அவர்கள் உயிருடன் இருக்கும் போதே விடுதலை செய்யப்பட வேண்டும்

மனம் குழம்பிய நிலையில் சிறைகளில் வாடும் நோயாளிகள் சம்பந்தமாக மிகுந்த மனிதாபிமனத்துடன் நடந்து கொள்ள வேண்டிய தார்மீகப் பொறுப்பு இரு நாட்டுத் தலைவர்களுக்கும் அதிகம் உண்டு.

Friday, March 21, 2008

நீளும்!

பெட்டி மாறும் இங்கே!
அங்கே!
கொட்டிக் குவிப்பார் இங்கே!
அங்கே!

குப்பை மேடுகள்
கூனிக் குறுகும்!
குறைகள்!

அணி சேர்க்கை!
இப்பக்கம்!
அப்பக்கம்!
காவடி சுமந்து!

பார்வையாளர்
சமரசம்!
இரு தரப்பும்
இருப்பைக் கொட்டி!

பாதாளம் வரை!
பாய்ந்தும்!
வேதாளம் மீண்டும்
முருங்கை மரம்!

கதை நீளும்!
காவியம் தோற்கும்!
பாவியம்!

நாயகம்!
சனங்களுக்கில்லை!

Thursday, March 13, 2008

வடுக்கள்!

புரிந்தேன் இல்லை!
உள்ளம்!

திறந்தேன் இல்லை!
நீ ஆயினும்!

மறந்தேன்!
மாயம்!

உள் வடுக்கள்!
உலகம் அறியா!

ஒளிர்ந்திடும்!
கண் சிமிட்டி!

அம்பலம்!

நாதியற்றாய்! நடுத்தெருவானாய்!
வீதியுற்றாய்! விதியை எண்ணி!
ஆதி காலந்தொட்டே!

அன்னியர் வருடியாய்!
புண்ணியர் பாதங்களில்!
பண்ணிய பாவங்களை
மறந்து!

போன பெருமையைப்
பேசிக் களித்தாய்!

எட்டி நின்று!
எழுந்து நிற்கும்
எம் தோழர்!

உமக்கு எட்டியாய்!
பெட்டி பாம்பானாய்!

மகுடியைத்தேடி
உம் ஆட்டம்!
பகடியைப் பாராது
பகடானாய்!

வல்லூறுகளின் வதையில்!
வாள் வலி தேடி!
நாடி நரம்புகளில்

சூடு ஏற்றி!
நம்பிகை அளித்து!

தும்பிகையானை
தொலைவில் வைத்து!
துமிக்கியின் முன்
எந்திரக் கூட்டங்களின்
முன்!

தந்திரம் பயின்று!
திறம் கூட்டி!
தமிழ் நிலம் காட்டி!

தன்னை இழந்து
மண்ணை மீட்கும்!
மாட்சிமைப் போரில்!

தன் பெருமை கூறி!
தன் நிலைக் காட்டாது
கவனமாக!
தமிழ் அடையாளம்
என்பாய்!

அடுத்தவன் சிரிக்க!
அம்பலம்!
உன் பெருமை!

Sunday, March 2, 2008

ஒத்தாசை !

எண்ண ஓட்டம்!
எந்திரத்தை தாண்டி!
மந்திரத்தை வேண்டி!

விசை அமுக்கினேன்!
வேகமாக!
நிமையங்கள்!
அவை செல்லும்!
விசையிலே!
திசையிலே!

எமக்காக ஒத்தாசை இல்லை!
எவருக்காகவும் !
சார்பு இல்லை!

அதன் வழிப் பயணம்!
அணு அளவும்!
பிசகாமல்!

உறுதியுடன்!

எல்லாம் இன்பமயம் அப்போது!
எல்லாம் உலகமயம் இப்போது!
உறவும் கூட வியாபாரம்!
கரவும் தரவும் கைகோர்த்து!
காலம் தோற்கும் வேகம்!

தடையேதும் இல்லை!
தாராளவாதம்!
எல்லைகளைக் கடந்து
தொல்லைகள்!

தொகை தொகையாக!
அறிந்திலோம் ஆயினும்!
துளிர்த்திடும் நம்பிக்கை!

துயரம் விரட்டிட!
தூளிகளை விட்டு!
இறங்குவோம்!
ஆளிகள் போல்
உறுதியுடன்!

உளவு செயற்கை கோள்!

குப்பைத் தொட்டி ஆக்கினாய்
பூவுலகை!
போதாது என்று
வெப்பம் சேர்த்தாய்!
வேகமாய்!

உலகைக் கெடுத்தது
போதாது என்று !
வெளியைக் கெடுத்து
வருகிறாய்!
யாருக்கும் தெரியாமல்!
ஊருக்கும் புரியாமல்!

உளவுக்காக விண்ணில்!
எண்ணிலா
செயற்கை கோள்கள்!
அடுத்த நாட்டின்
அந்தரங்கத்தை
அரவமின்றி
ஆயும் உணர்ச்சி!
காணும் கிளர்ச்சி!

குட்டு பட்டு விட்டால்!
குண்டு விட்டு!
கண்டம் பாய்ந்து !
தீக்கிரையாக்கும் வித்தை!


விண்வெளியைப் பாழ்படுத்தும்
தன்னதிகார வெறி !
அறிவியல் முதிர்ச்சி!
ஆராவரம்!
தொழில்நுட்பம்!

மண்பதை மாசு முடிந்தது!
விண்பதை மாசு ஆரம்பம்!
எதிலும் குப்பை சேர்க்கும்!
எம் திறமை!
வெளியிலும்!
கொடியேற்றம்!

Monday, February 25, 2008

"வழக்கறிஞர்"

கறுப்பு அங்கி மாட்டியதால்!
வெறுப்பும் கூடியதோ!
கொன்ற மதிப்புடன்!
சென்றது!
மன்ற மதிப்பும்!
நின்ற பெருமையும்!

தொழிலுக்கும்!

வழக்குத் தொழிலுக்கு
இழுக்கு சேர்த்தாய்!
செல்லும் போக்கு
வெளிப்படுத்தினாய்!

சட்டத்தை மீறும்
சக்திகளுடன் கூடினாய்!
குலவினாய்!
சகதிகள் வாழ்க்கையாய்!
கைதிகளுடன் !
கை கோர்த்து!

வீதி மன்றம் தொடங்கி
நீதி மன்றம் வரை!
நீட்டி நடந்தாய்!
அறிவை இழந்து!
வாளுடன் கோலுடன்!

வம்பு வழக்கு
செய்பவர் கூடி!
தெம்பு வழக்காடினாய்!
அன்பு இழந்தாய்!
அடிமை புத்தியாய்!
அய்ந்தாம் படையுடன்!

ஆயுதம் சுமந்தாய்!
ஆக்கம் சேர்த்தாய்!
போக்கை மாற்றி!
போய் விழுந்தாய்!

மாண்பு இழந்து!
மரியாதை தொலைத்து!
கூன் முதுகுடன்
கூண்டில் நின்றாய்!

வான் பழிக்கும்
வீண் பழி ஏற்றாய்!
வீதியில் நின்றாய்!
சாதி சனங்களை
தொலைத்து!

பாதை மாறி
பாதியானாய்!
பாழ்பட்டு நின்றாய்!

உம் தொழிலுக்கும்!
ஊறு விளைவித்தாய்!
நேயம் மறந்து!
தேய்ந்தாய்!

Sunday, February 17, 2008

அமைதியாக அழிந்து வரும் மொழிகள்

சான் நோபல் வில்போர்ட்

மொழியாக்கம்.மு.முத்துக்கண்ணு

தற்போது உலகில் மக்களால் பேசப்பட்டு வரும் மொழிகள் எண்ணிக்கை 7,000 ஆக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இவைகளில் பாதி , இந் நூற்றாண்ட்டின் இறுதிக்குள் அழிந்து போகும் ஆபத்தில் உள்ளன, என மொழி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உண்மையில், ஒவ்வொரு இரண்டு வாரத்திற்கும், ஒரு மொழி பயன்பாடு இல்லாமல் போவதாக கண்டறியப் பட்டுள்ளது.

சில மொழிகள், எஞ்சியுள்ள அம்மொழி பேசும் ஒருவரின் இறப்புடன், உடனடியாக மறைந்து போகின்றன. இதர மொழிகள், இரு மொழி கலாச்சார சூழலில் படிப்படியாக ,அழிந்து போகின்றன. குறிப்பாக, பூர்வீக மொழிகள், பள்ளியில் ஆதிக்கம் செலுத்தும் மொழி, சந்தையில் செல்வாக்கு செலுத்தும் மொழி, தொலைக் காட்சியில் ஆட்சி செய்யும் மொழிகளால், பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.

மிக விரைவாக மொழிகள் அழிந்து போகும் ஐந்து பகுதிகளாக, அண்மையில் ஆய்வுகள் மூலம் அறிய வந்துள்ளது. வடக்கு ஆசுத்திரேலியா, மத்திய தென் அமெரிக்கா, வட அமெரிக்காவின் உயர் பசிபிக் கடற்கரை மண்டலம், கிழக்கு சைபீரியா, ஒக்லகோமா மற்றும் தென் மேற்கு ஐக்கிய அமெரிக்க நாட்டின் பகுதிகள் ஆகும். இப்பகுதிகள் அனைத்திலும், பலவகையான மொழிகள் பேசும் பூர்வீகக் குடிகள் சொற்ப எண்ணிக்கையிலேயே உள்ளனர்.

இவ்வாய்வு, தேசிய நிலநூல் கழகம் மற்றும் அழியும் நிலையில் உள்ள வாழும் மொழிகள் ஆய்வு நிறுவனத்தின், கள ஆய்வு மற்றும் புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டது. இக் கண்டுபிடிப்புகள், தேசிய நிலம் மற்றும் மொழி குறித்த வலைப் பதிவில் விவரிக்கப் பட்டுள்ளது.

ஒழுங்காகுமோ?

இனம் அழிகிறது!
இன்றும் அன்றும்!
இலங்கையில்!

ஏன்? என்று கேட்பார்
இல்லை!
இங்கே!

நீ யார்?
உமக்கு அவர்
சொந்தம் இல்லையா?
பந்தம் தொல்லையா?

அடுத்தவர் உரிமைக்கு
விழா எடுக்கும்!
உம் முகம்!
பார்த்துக் கொள்
பளிங்கில்!

உலகத்திற்கு
உன் ஆதரவு!
உன் உறவுக்கு!
முகம் காட்ட,
தயக்கம் ஏன்?

தடை ஆயிரமாயிரம்!
சமாதானம்
ஆகாது!

உன் தடை!
உள் தடை!
உணர்ந்து கொள்!

நாம் அடித்தால் அநியாயம்!
அவன் அடித்தால் நியாயம் !
எப்படி?

உம்மவர் குழந்தைகள் உயர்ந்தவர்!
எம்மவர் குழந்தைகள் தாழ்ந்தவர்!
சமமற்ற போராட்டம்!
யார் பக்கம் நீ?

மனசாட்சியே!
உலக சாட்சியே!
உறங்கலாமா?

ஒரு கண் பார்வை
ஒழுங்காகுமோ?

Wednesday, February 13, 2008

"யானையைக் காப்போம்"

எலிகளாய் இருந்திருந்தால்
வலைகளில் தங்கியிருப்போம்!
நாய்களாய் இருந்திருந்தால்
தெருக்களில் திரிந்திருப்போம் !
பருக்கைகள் கிடைத்திருக்கும் !

எச்ச உணவு நிலைத்திருக்கும்
வாழ்க்கை ஓடியிருக்கும் !
கோவிலில் இருந்திருந்தால்
கோரம் நிகழ்ந்திருக்காது !

இயற்கையை நேசித்தோம் !
சூழலை சுவாசித்தோம் !
எம் இருப்பிடம்
எம்மை விட்டு
நீங்கியது !
தண்ணீரும் இல்லை!
உணவும் இல்லை !

தேடித் திரிந்தோம்!
விரட்டி அடித்தார்!
வேறு கதியில்லை!
குழவியைச் சுமந்தேன்!

சூழ்ந்த கதி!
தொடர்ந்த வாழ்க்கையை!
முற்றுப் புள்ளி வைத்தது !
தொடர் வண்டி!

எம்மைச் சிதைத்தது கூட
எமக்கு வலியில்லை!
எம் சந்ததியை,
கருவறையிலிருந்து
பிய்த்து எடுத்து ,
எம் கண் முன்னே ,
வெடித்து சிதைத்த,
உம் வெறி!
வெடிகுண்டும் தோற்கும்!

Friday, February 8, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை: தொடர்ச்சி

மூர்க்கத்தனமான கொலை பாதக செயல் அரங்கேறிய போது 4, 5 மணி நேரத்திற்கு, மாநிலத்தின் அரசியல் நிர்வாக அதிகார மையத்தின் பகுதியான கவுகாத்தியில், அரசாங்கத்தின் அதிகாரிகள், குறிப்பிடத்தக்க அளவில் வருகையில் இல்லை.

மாநில அரசாங்கம் கண்டு கொள்ளாமல் கொடூரமான 'கொலை பாதகச் சடங்கு' மலைவாழ் மக்கள் மீது நிறைவேற இடமளித்தது.வாக்கு வாங்கி அரசியலின் மிக மோசமான நிகழ்வாக இது அமைந்தது.

கோரிக்கை ஊர்வலம் வன்முறையில் ஈடுபடும் நோக்கம் ஏதும் இன்றி சென்றதாகவும், உறுப்பினர்கள் சிலரால் நிகழ்ந்த தாக்குதலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினர்.

அரசாங்கம் நேரிடையாகவும், மறைமுகமாகவும் வன்முறைக்கு துணை போனது பின்வருமாறு :

1. மலைவாழ் மக்கள் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டது அரசங்கத்தால் மறுக்கப்பட்டது.

2. கூட்டம் நடத்தும் போது போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படவில்லை

3. ஆர்ப்பாட்டம் செய்து ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டபோது, காவல்துறை அதனை கட்டுப்படுத்த, அனுப்பி வைக்கப்படவில்லை.

4. பாதிக்கப்பட்ட மக்கள் எண்ணிக்கையை குறைத்து காண்பித்து, வன்முறையாளர்களை அரசாங்கம் காப்பாற்றியது.

5. காயம்பட்டு மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட, சரியான மருத்துவம் செய்திடாமல், அவர்களை மருதுவமனைகளில் இருந்து வெளியேற்றியது.

6. ஆரம்பத்தில் கூடுதல் தலைமைச் செயலர் தலைமையில் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர் நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.சி.பி.ஐ விசாரணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

7.அதிக எண்ணிக்கையிலான வழக்குகள், ஆர்ப்பாட்டக்காரர்களான, மலைவாழ் மக்கள் மீது மட்டும் போடப்பட்டது. உள்ளூர்வாசிகள் மீது குறைவான வழக்குகளே போடப்பட்டன.

Thursday, February 7, 2008

பராக் மனித உரிமைகள் பாதுகாப்பு குழு அறிக்கை:

24, நவம்பர், 2007- கவுகாத்தியில் கற்பழிக்கப்பட்ட மனித சமுதாயம்

20 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர், 3 பெண்கள் கற்பழிக்கப்பட்டனர், ஒரு பெண் பலவந்தமாக நெடுஞ்சாலையில் ஆடை அவிழ்க்கப்பட்டு நடத்திச் செல்லப்பட்டார். சுமார் முன்னூறு பேர் காயம் அடைந்தனர். அதில் 10பேர் நிலை கவலைக்கு இடமாக உள்ளது.45 போராட்டக்காரர்கள் காணாமல் போயினர்.
இவை யாவும் குல், சந்தால், முண்டா ஆகிய பழங்குடியினர்-அசாம் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வரும் ஆதிவாசிகள் சமுதாயம் ஆகும்.

இவர்கள் 24, நவம்பர், 2007ல் திச்பூர், கவுகாத்தி பகுதியில் அரசு செயலகத்தை நோக்கி தமது நீண்ட நாள் கோரிக்கையான, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை ஊர்வலம் சென்றனர்.வழியில் ஊர்வலத்தினர் சிலர் வன்முறையில் ஈடுபட்டு, சட்டமன்ற விடுதியின் கடைசி வாயில் அருகே உள்ள கடைகள், வாகனங்கள் போன்றவற்றை அடித்து நொறுக்கினர்.பாத சாரிகள் சிலரும் தாக்குதலுக்கு உள்ளானார்.

சில உள்ளூர்வாசிகள் பழிக்கு பழியாக, ஆதிவாசிகளுக்கு பாடம் புகட்டும் முறையிலே, மனிதாபிமானம் மறந்து, வெறி கொண்டு, உள்ளே உறையும் மிருகம் , மிருகத்தனமாக, அப்பாவி மக்களை கொன்று குவித்தனர், அவர்கள் உடல்களை எட்டி உதைத்து மகிழ்ந்தனர்.

Monday, February 4, 2008

பொதிகளை மாற்றி!

கழட்டினேன் ,
கடினமாயினும்
மீண்டும்!
சுழலவில்லை!
சுழல் விதி
புரியவில்லை!

சுட்டினேன்,
சுறு சுறுப்பும்
கூடவில்லை!

சீர் செய் என்றேன்!
சீராக்கிட!
மீண்டும் நிறுத்திட!
நிலை மாற்றம்
இல்லை!

விலை கேட்கிறார்!
விடியாது!
முடியாது!

விதிகளை மாற்று!
சுதிகளை ஏற்று!
பொதிகளை மாற்றி!

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் வெற்றி - 2

தண்டனை அடைந்தவர்களில், மோதல் கொலை சிறப்பு தேர்ச்சியாளார் என்றழைக்கப்படும், சட்டிசுகர் பிரிசேழ் திவாரி மற்றும் நாசர் சித்திக் ஆகிய இருவரும், குடியரசுத் தலைவர் விருதும், சிறப்பு பதவி உயர்வும் அளிக்கப்பட்டவர்கள், என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

மக்கள் சிவில் உரிமைக் கழகம், சட்டிசுகார் கிளை அமைத்த, இந்த உண்மை அறியும் குழுவிற்கு, டாக்டர்.பினாய்க் சென் மற்றும் வழக்கறிஞர் அமர்நாத் பாண்டே உறுபினர்களாக இருந்தனர்.சர்குசா மாவட்டத்தில் முதல் போலி மோதல் வழக்கில், உண்மை அறியும் குழு, சந்தேகத்திற்கு இடமில்லாமல் பலியானவர்கள் சாதரண கிராமவாசிகள், தமது கைகளை மேலே தூக்கிய பிறகு, கொடூரமாக திவாரி மற்றும் சித்திக் தலைமையிலான காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டனர் என்பதை, தெளிவாக எண்பித்தது.

அமர்நாத் பாண்டே , மூத்த வழக்கறிஞரும் இந்திய கம்யூனிசுடு கட்சியைச் சேர்ந்தவரும் ஆவார். இவர், மோதல் கொலை தொடர்பாக நடவடிக்கை எடுத்திட அரசாங்கத்திடம் முறையிட்டு பலன் ஏதும் இல்லாத காரணத்தினால், சம்பந்தப்பட்ட வழக்கு மன்றத்தில் புகார் பதிவு செய்தார். எதிர் நிலையாக அரசாங்கம் ஆனது, குற்றவாளிகளான காவல் துறையினருக்கு பதக்கங்கள் அளித்து, மனித உரிமை அமைப்புகள், அரசியல் கட்சிகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நம்பிக்கை உணர்வு இழப்பு ஏற்படுத்தியது.

Saturday, February 2, 2008

போலி மோதல் வழக்கில் மக்கள் சிவில் உரிமைக் கழகத்திற்கு வெற்றி -1

மக்கள் சிவில் உரிமைக் கழகம் சட்டிசுகார் கிளை, தார்மீக சட்டரீதியிலான வெற்றியை, இன்று அம்பிகாபூர், முதல் குற்றவியல் நீதி மன்ற தீர்ப்பின் வழியாக பெற்றது. 5 அப்பாவி கிராமவாசிகள் "நக்சலைட்கள்" என்ற பேரில், கோத்தாரி காவல் நிலைய வரம்பில், சங்கெர்கர்க் பகுதியில், 05.03.2004ல் போலி மோதல் போர்வையில் கொல்லப்பட்டனர். இவ் வழக்கில் எட்டு காவல்துறையினர், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 302, 201 மற்றும் 34ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.

Friday, January 25, 2008

பித்தன்

கிழிந்த ஆடை!
கிழியாத உள்ளம்!
மெலிந்த உடல் !
மெலியாத எண்ணம் !
தெளிந்த செயல் !
தெளியாத மனம் !
அறியாத உலகம் !

Wednesday, January 23, 2008

வேகத் தடை

தடைகள் உடைபடும்
வீதிகளில்!
மேடும் சமமாகும்
மேதகு சவாரியில்!
மூன்றாம்
எழுச்சி ,
எமக்கு?

Sunday, January 20, 2008

காவல் துறை ஊழல்- 4

மும்பாய்: மரின் டிரைவ் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர், சுனில் மொரே, பதின் பருவ பெண்ணை, 21, ஏப்ரல், 2005ல், மேற்படி காவல் நிலையத்தில் கற்பழிப்பு செய்த குற்றத்திற்காக, 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளிக்கப்பட்டார்.உருவாய் 26,500 அபராத தொகையாகவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.


சண்டிகார்: போதை மருந்துகள் கடத்தும் கும்பலிடம் இலஞ்சம் வாங்கிய காவல்துறையினர் குறித்து , செய்தி தொலைக்காட்சியில் காண்பிக்கப் பட்டதை தொடர்ந்து, பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள் தொடர்புடைய நான்கு காவலர்கள் மீது, முதல் தகவல் அறிக்கை பதிந்தனர்.இரு காவலர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.


நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த, பிரபல குற்ற வழக்குகள்,நமது நாட்டின் நீதித்துறை அமைப்பு பற்றியும், தொடரும் ஊழல் நிலைமை குறித்தும் பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.

Saturday, January 19, 2008

காவல் துறை ஊழல்- 3

இனிவரும் பக்கங்களில் காவல் துறை ஊழல் தொடர்பான வழக்குகள் சிலவற்றை பார்ப்போம்:


மும்பாய்: 5 காவலர்கள் ராய்காட் பகுதியில் இருந்து மும்பாய்க்கு ஆயுதங்கள் கடத்த உதவியதின் காரணமாக, 1993ல் மும்பாய் 12 தொடர் குண்டு வெடிப்புக்கு காரணமாயிருந்தார்கள். என இப் பயங்கரவாத செயலுக்கு, 7 இலட்சம் இலஞ்சம் பெற்றுள்ளனர் 'தடா' வழக்கு மன்றம் என நிரூபித்தது


தில்லி: சராய் கலே கான் காவல் நிலையப் பொறுப்பு உதவி ஆய்வாளார், இலஞ்சம் வாங்கும் போது சி.பி.ஐ. காவலர்களால் கைது செய்யப்பட்டார். உருவாய் 20000 த்துடன் தப்பி ஓடிவிட்டார். பின்னர் அவரது அலுவலக மேசையில் இருந்து உருவாய் 50000 மற்றும் 100 கிராம் போதை மருந்து கண்டுபிடுத்து எடுக்கப்பட்டது .மற்றொரு திருட்டு வழக்கில் பிணையல் அளிப்பதற்காக, உருவாய் 2 இலட்சம் இலஞ்சம் , கைது செய்யப்பட்டவரின் தாயாரிடம் காவல் உதவியாளர், கோரி இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. இலஞ்சத் தொகை, தவணை முறையில் அளித்திட ஒப்புக்கொள்ளப்பட்டது.


உத்தரப்பிரதேசம்: 3 காவலர்கள் வழிப் போக்கரான கணவன் மனைவியை, 'பெரிய நொய்டா பகுதியில்' வழி மறித்து துன்புறுத்திய வழக்கில், சிறை தண்டனை அளிக்கப்பட்டனர். இவர்கள் மீது, இந்திய தண்டனைச் சட்டம், பிரிவுகள் 323ன் கீழ் காயம் ஏற்படுத்துதல், 354- குற்றம் ஏற்படுத்தி பெண் ஒருவரை மானபங்கப் படுத்த முயற்சி செய்வது, 504-அமைதியை குலைக்கும் நோக்கில் அவதூறு செய்வது, 506- அச்சுறுத்தல், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Thursday, January 17, 2008

காவல் துறை ஊழல்- 2

தமது நலன்களுக்காக அரசியல் தலைமை தவறான அதிகாரிகளை உயர்ந்த காவல் துறை பதவிகளில் அமர்த்தி காரியம் சாதித்துக் கொள்கிறது.பொதுவாக ஊழல் என்பது, இலஞ்சம் வாங்குவது,பண பரிவர்த்தனை அல்லது தப்பு செய்பவர்களுக்கும் காவல்துறை அகிகாரிகளுக்கும் இடையில் நிகழும் மதிப்பு மிக்க பொருள் கை மாறுவது ஆகிய செயல்களை உள்ளடக்கியது ஆகும்.


இதர குற்றங்கள் போலி மோதல் கொலைகள்,பாலியல் துன்புறுத்தல்,காவல் குற்றங்கள்,வதை செய்தல் தொடங்கி கள்ளத் தனமாக ஆயுதங்கள் பயன்படுதுவது முதலியனவாகும்.


அதிகப்படியான ஊதியம்,மேம்படுத்தப்பட்ட பயிற்சி, போன்ற ஊழலை போக்கும் வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் நடைமுறைப் படுத்தியும் ஊழல் ஒழிந்த பாடில்லை.உள்துறை அமைச்சகத்தின் வரவு செலவுத் திட்டத்தில் 67% சத வீதத்திற்கு மேல் காவல் துறைக்கு செலவு செய்யப்பட்டாலும், அவர்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க நடத்தையியல் மற்றும் மனப்போக்கில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.


இத்தொகை அல்லாமல் கடந்த மூன்றாண்டுகளாக காவல்துறை நவீன மயத்திற்காக உரு. 800 கோடிக்கு மேல் மாநிலங்களுக்கு செலவு செய்யப்பட்டு வருகிறது.இருப்பினும் காவல் அணிகளில் எந்த மட்டத்திலும், நடத்தையியல் முன்னேற்றமும் அரிதாகவே உள்ளது.


ஒரு வகையில் காவல் துறை ஊழலும், குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதால்,அதன் செயல் மனித உரிமைகள் மீறலே ஆகும். தற்பாதுகாப்பு என்பது பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது. மேலும், காவல் பாதுகாப்புகள் அதிகரிப்பு, தவறான காவல் துறை வழக்குகள் என்பது அரசியல் சட்டம் பிரிவு 21ன் கீழ் உறுதி செய்துள்ள குடி மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது ஆகவும் அமைகிறது.


போலி மோதல் குற்றங்கள் அதிகரிப்பு, அதிகரித்து வரும் சிறைச்சாலை மரணங்கள் தேவையற்ற, காலதாமதமாகும் புலனாய்வுகள்,குடிமக்களிடையே பாதுகாப்பற்ற சுழலையும் பாதிப்புக்கு உள்ளாகும் சூழலையும் மிகவும் அதிகரித்து உள்ளது.


Tuesday, January 15, 2008

காவல் துறை ஊழல் - அர்சிரிகா சிங் -1

ஊழல் என்றால் என்ன?
காவல் அதிகாரத்தை தனிப் பட்ட அல்லது காவல் துறை அமைப்பின் நலனுக்கு அலுவல் ரீதியாக ஒரு காவல் துறை அதிகாரி பயன்படுத்தும் போக்கு, ஊழல் என்று வரையறை செய்து கொள்ளலாம். எளிதாக புரிந்து கொள்ளக் கூடிய செய்தி அல்ல இது. பல சிக்கலான அம்சங்களை கொண்டுள்ளது. ஒரு அம்சத்தில் அனைவருக்கும் புலப்படக் கூடியது, உலக நாடுகளின் பல பகுதிகளிலும் 'விரிவடைந்து சிறக்கிறது'.
எளிதில் புரிந்து கொள்ள ஏதுவாக,

1.அக நிலையில் நடக்கும் ஊழல்
2.புற நிலையில் நடக்கும் ஊழல்

என பிரித்து ஆராயலாம்.

முதலாவதாக, காவல்துறையின் உள்ளே ஒன்றுக்கு மேற்பட்ட அதிகாரிகளுக்குள் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,அக நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

அடுத்து, காவல் துறையின் அதிகாரி ஒருவர் அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவர்களால் பொதுமக்களிடம் செய்து கொள்ளப்படும் சட்ட விரோத ஒப்பந்தங்கள் மற்றும் செயல்கள் ,புற நிலையில் நடக்கும் ஊழல் ஆகும்.

காவல்துறை ஊழலில் மிக முக்கிய கூறாக, அதிகார மீறல் அமைகிறது. தன் இலக்கிலிருந்து வழுவி குற்றங்களை தடுப்பதற்கு பதிலாக, ஊக்குவிக்கச் செய்கிறது. துறை நிர்வாகத்தின் ஒவ்வொரு அடுக்கு நிலையிலும், ஊழல் மலிந்து திறமையான, வலிமையான செயல்பாட்டிற்கு தடையாக விளங்குகிறது.

முகாமையான காரணங்களில் ஒன்றாக, தொழில்சார்ந்த திறமையுடன் செயல்படாது , பெரும்பாலும் காவல்துறையினர் அரசியல்மயமாகி நிற்பது ஆகும். அரசியல்வாதிகளால் ஈர்க்கப்பட்டு, பலகீனமான, ஊழலில் திளைத்த அதிகாரிகள், ப தவி அமர்த்தம், மாற்றல் ஆகியவற்றிற்கு உடன் பட்டு, தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பொது நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர்.

- தமிழ் வடிவம் -

Monday, January 14, 2008

மோதல் சாவு கலாச்சாரம்- 4

துறை சார்ந்த குற்றங்கள், குறிப்பாக கோழைத்தனம், உத்தரவுளை மதிக்காத போக்கு, கீழ்ப்படியாமை ஆகியவைகள், குடி மக்கள் உரிமைகள் மீறப்படும் பெரிய குற்றங்களிலிருந்து வேறு படுத்தி கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும். காவல்துறையினர் மீதான கடுமையான புகார்கள் குறித்து, குறிப்பாக, மோதல் கொலைகள் தொடர்பாக, ஒரு சுயேச்சையான, காலக் கிரமத்திற்குள் விசாரணை நடத்தக் கூடிய, அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் உள்ள அமைப்பிடம், அளிக்கப்பட வேண்டும்.

செப்டம்பர் 2006 ல், காவல்துறை சீர்திருத்தம் பற்றி உச்ச நீதி மன்றம் அளித்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பில், காவலர் மீது எழும் புகார்கள் குறித்து விசாரிக்கும் சுயேச்சையான அதிகார அமைப்பு அரசாங்கங்கள் அமைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.வெளிப்படையான நடைமுறையில் காவலர்கள் மீதான தீவிரமான புகார்களை விசாரித்திடக்கூடிய, 'காவலர் புகார்கள் விசாரணைக்குழு உறுப்பினர்களை' தேர்வு செய்து அமைத்திட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இவ் வழிகாட்டு முறைகள், நேர்மையான முறையில் நடைமுறைப் படுத்தப்பட்டால், 'வளர்ந்து வரும் மோதல் கொலை' கலாச்சார அலைப் பெருக்கத்தை கட்டுப்படுத்திட முடியும். தமது எட்டாவது அறிக்கையில், தேசிய காவல் ஆணையம்,"காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 132 மற்றும் 197ன் கீழ் அளிக்கப்படும் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்" என்று பரிந்துரை செய்துள்ளது.


இயற்றப்படும் எந்த ஒரு புதிய காவல் சட்டத்தின் பிரிவுகளிலும், காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் போட முன் அனுமதி பெறுவது என்பது ,இடம் பெறக்கூடாது. விரைவான தீர்வு நடவடிக்கை மேற்கொள்வதற்கு இது பெருந்தடையாக உள்ளது. காவல்துறை நிகழ்த்தும் கொலைகள் தொடர்பாக வழங்கப்படும் வீரப்பதங்கங்கள், விரைவான பதவி உயர்வுகள் போன்ற கண்ணியமற்ற, இகழ்ச்சிக்குரிய நடைமுறை, நிறுத்தப்பட வேண்டும்.


எந்த ஒரு காவல்துறை நடவடிக்கையும்,சுயேச்சையான, நம்பகத்தன்மையுள்ள துறை விசாரணை செய்யப்பட்டு ,மோதல் கொலைகள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட அதிகாரம், சட்ட ரீதியிலானாதா மற்றும் நியாயமானதா என்றால் ஒழிய அதனை பாராட்ட இயலாது.



இறுதியாக, சனநாயக அமைப்பு என்ற அடிப்படையில் பார்க்கும் போது, நமது அரசியலமைப்புச் சட்டத்தில் குறித்துள்ளவாறு, மக்களின் வாழ்க்கை மற்றும் கண்ணியம் ஆகிய பண்புகளில் மிக உயர்ந்த தரத்தை உறுதி உத்தரவு செய்ய வேண்டிய தலையாய பொறுப்புணர்ச்சி ,அரசியல் தலைமைக்கு உண்டு என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்

இவ்வாறு செய்வதின் வாயிலாக, விதிமுறைகளை சமமாக மதிக்கும் சமுதாயத்திற்கு, நாகரிக வாழ்க்கையின் இன்றியமையாத விழுமியங்களை காக்கும் சமுதாயத்திற்கு, ஒரு பெரிய சேவை செய்வது போல் ஆகும்

Sunday, January 13, 2008

சுருங்கிய வாழ்க்கை!

ஒதுங்கினேன்
ஈரத்துடன்!
கொட்டும் மழையில்
கட்டிடம் அருகே!

கால் போன போக்கில்
கடந்தேன்!
கழனியில்லாமல் !
வாய்க்கால் வரப்பு காணாமல் !

நெல் வெளியும் புல் வெளியும்
சுருங்கியது!
சுவடில்லாமல்!

கவடு மாந்தர் கவர்ந்தனர்!
'காலனிகள்' எழுப்பி
எம்மை மறந்தனர்!

தீவனந்தேடி தினந்தோறும்
அலையும்
கோவண வாழ்க்கை!

சுற்று வழி விலகி -2

நன்கு அறிந்த எம் இல்
படுக்கை அறை
கதவு மூடல்
அனுபவ அறிவை
உறுதிப்படுத்தும்.
மூடிய விழிகளில் சந்தேகம்
வெள்ளமென மீளும்,

படுக்கையில் முகம் பதிய
வீழ்ந்து,
படுக்கை அறையில்
மெல்ல நிகழ்ந்திடும்
தலை கீழ் மாற்றம்.

அவன் குரல்,
சினந்த சொற்கள்
மீண்டும் மீண்டும்
என்னை நிந்திக்கிறது.

கூரையில் தெளித்திடும்
மென் மழைத்துளிகள்
கூடிக் கரைந்திடும்
குருவியின் கீதம்.

வெளி விளக்கொன்று
அணைகிறது
மரக்கிளை நிழல்
திட்டு திட்டாக:
திரைச் சீலையில்,
சுவர்களில்
மேற் கூரையில்
மீண்டும் மெல்ல
ஒரு தலை கீழ் மாற்றம்,

அடுத்து:
விசையுடன் வீசும்
காற்று
ஒவ்வொரு முறையும்
தம் பதிவை
பலகணியில் பதித்து
செல்லும்

நினைவுகள்
எம் நனவு நிலையைத்
தட்டி எழுப்பும்
இளமையின் விருப்பு
வெறுப்பற்ற நிலையும்
கற்றலில் கிளர்ச்சியும்,
ஒரு காலத்தில்
கை அளவு அறிவுக்கு
பசியுடன்
ஒருவருக்கொருவர்
அங்கீகாரம் தேடி

அடங்கா வேட்கை
காரின் கதவு
இரைச்சலுடன்
மூடல்,
விசையுடன் கணத்த
காலடி
ஓசைகள் கடக்கின்றன
தாழ்வாரம் கடந்து
மங்கிய ஒளியில்.

பளிச்சிடும் மஞ்சள் ஒளியின்
வெள்ளிக்கீற்று
அடுத்த அறையின்
கதவின் கீழ் வழி
நுழைகிறது
இது போழ்து
உறங்குவது போல் பாசாங்கு
என்னால் செய்ய இயலுமா?
சூடான அவர் சொற்கள்
மறப்பேனா நான்?
மறப்பேனா நான்?

அவரின் உடல் எடை
நெருங்குகிறது
கத கதப்பு அளித்து
படுக்கையில்

- மொழி பெயர்ப்பு

Saturday, January 12, 2008

சுற்று வழி விலகி -1

இலையுதிர் காலம்.
குறுகிடும் பொழுதுகள்
கோடையின் நீட்டிப்பை
குறிப்புணர்த்தும்,

நினைவூட்டல்.
எவையும் எப்போதும்
கடந்து விடவில்லை
உண்மையில்,
நாம் எண்ணுவதைப் போல்.

நம் காலத்து உறவு
நிறைவானதாக முதிர்ச்சியானதாக
அமைந்திட வேண்டும்.

முரட்டு அன்பும்
ஆழ்ந்த உடன்பாட்டின்மையும்
நாம் பட்டறிவது
நமக்கு தேவையில்லை.

நிறமற்ற விழு ஞாயிறு
மலைப் பகுதியில்,
மேலும் குளிர்ந்து சய்ந்திடும்
மாலைப் பொழுதில்.

சேனிசு போசுடாக்-
- ஆசுத்திரேலியா- மொழி பெயர்ப்பு

Saturday, December 29, 2007

மோதல் கொலை கலாச்சாரம--3

தேசிய மனித உரிமை ஆணையம் மேற்பார்வை உள்ள அமைப்பாக, குற்றம் இழைப்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கூடியதாக இருந்தாலும், போதுமான மூல வளங்கள் இல்லாததின் காரணமாக, புலனாய்வு செய்யக் கூடிய ஊழியர் பற்றாக்குறை உள்ளதின் காரணமாக, பரிந்துரை செய்யக் கூடிய சட்ட அதிகாரம் மட்டும் உடையதாக விளங்குகிறது.

இதன் விளைவாக, காக்கி உடையில் உள்ளவர்கள் துறை ரீதியான ஒழுங்கு நெருக்கடிகள் மற்றும் புற நிலை அமைப்பின் மேற்பார்வையிடல் அதிகார அழுத்தமும் இன்றி, செயல் படுகின்றனர். மேலும் அரசாங்க ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்திட, குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டம் பிரிவுகள் 132 மற்றும் 197 ன் கீழ் மத்திய அரசு அல்லது மாநில அரசு ஆகியவைகளிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

அரசு அனுமதி பெறுவது என்பது அவ்வளவு எளிமையானது இல்லை. உடனடியாக நடக்கக் கூடியது இல்லை.எனவே மோதல் பெயரில் கொலைகள் செய்திடும் ,நிகழ்த்திடும் குற்றச்சாட்டுகள் எழும் காவல் துறை அதிகாரிகள, எவ்வித பாதிப்பும் இன்றி, எழுதப்படாத விதி விலக்காக திகழ்கின்றனர்.

அரசாங்கத்தின் அனுமதி ஒருவேளை கிடைத்தாலும் குற்றம் இழைப்பவரை கூண்டல் ஏற்றி தண்டனை அளிப்பது என்பது ,ஒரு நெடிய பல ஆண்டுகள் நீடிக்கும் நீதி மன்ற போராட்டமாகவும், பெருந்தடையாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும்போது, குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் பல கட்ட பதவி உயர்வுகள், அல்லது பணியில் இருந்து ஓய்வு பெற்று இருப்பார்.

காலத்தின் தேவை
மோதல் கலாச்சாரத்தை போக்கி, பொறுப்பு கலாச்சாரத்தை காவல் துறையினர் மத்தியில் உருவாக்குவது என்பது பெரு முயற்சி ஆகும். இதற்கு பல முனை அணுகுமுறை தேவைப்படும். மிகப் பெரிய பிரசனை ஆயினும், இதிலிருந்து நம்மால் ஒதுங்கியிருக்க முடியாது.

நமது சனநாயக கொள்கைகளைக் காத்திட வேண்டுமெனில், மோதல் கொலைகள் சட்ட ரீதியான மற்றும் நியாயமான காவல்துறை பணி எனும் சிந்தனப் போக்கு காவல்துறையினர் மத்தியில், அரசியல்வாதிகள் மத்தியில் மற்றும் பொது மக்கள் மத்தியில் நீடிக்கும் வரையில் மாற்றத்திற்குரிய தடைகள் ஏராளம். கடுமையான துறை விசாரணை அமைப்புகள் உடனடி தேவையாகும்.

காவல்துறை சட்டங்கள மற்றும் காவல்துறை சீர்திருத்தம் தேவை.காவல்துறை குறிப்பேடுகள் தேவை. காவல் துறையினரால் இழைக்கப்படும் குற்றங்களை வகைப்படுத்தி, அதன் தீவிரத்திற்கு ஏற்ப குற்றம் இழைத்த காவல் அதிகாரியின் பதவி நிலைக்கேற்ப, நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகளை, நிர்ணயம் செய்திட வேண்டும்.


மோதல் கொலை கலாச்சாரம்- 2

நாட்டில் மோதல் கொலை கலாச்சாரம் மேலோங்கி இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது, காவல்துறை, கொலை நிகழ்த்தும் சீருடையில் உள்ளவர்களுக்கு பரிசுப்பொருட்கள், பணமுடிப்பு,பதக்கம் ஆகிய வெகுமதிகள் அளித்து அவர்கள் கொலை நிகழ்த்த ஊக்கப்படுத்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுவது என்கின்ற போர்வையில் அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பரிசுப் பொருட்களை அறுவடை செய்து மகிழ்ந்தனர். காவல்துறையின் அத்து மீறல் குறித்து புலன் ஆய்வு இன்றும் நிலுவையில் உள்ளது. கிளர்ச்சிக்காரர்கள் மீது பஞ்சாப் காவல் துறை நிகழ்த்திய பயங்கரம் காவல்துறையின் ஒழுங்கை மட்டுமில்லாது, பொது ஒழுங்கையும் வெகுவாக கெடுத்துள்ளது.

காவல்துறையின் அதிகார மீறல் போக்குகள், அதன் விளைவுகள் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. காவல் மரணங்கள் பஞ்சாப் மாநிலத்தில் அதிகமாக காணப்படுவது, இச்சூழலில் ஆச்சரியப்படுவதாக இல்லை!

இரண்டாவதாக, போலி மோதல் சாவுகள் பிரச்சனையில் பாரபட்சமற்ற, நம்பகமான புலனாய்வு செய்வதற்கான துறை ஏற்பாடு முற்றிலும் இல்லை. சரியான விசாரனை இல்லாமல், குற்றம் இழைப்பவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை அளித்திடுவது என்பது ,அதிக நம்பிக்கை அளிப்பதாக இல்லை.