Wednesday, October 31, 2018

'ஞாயிறு'

'ஞாயிறு சந்தை', சில பர்லாங் தொலைவில்.பயண தொடக்கத்தில் சேர்ந்த முதல் கிழமை.காலையில் எழுந்து, துரிதமாகி, பாலாவுடன் குடை எடுத்துக் கொண்டு, காரில்.விசும்பின் துளிகள் பரவலாக மேலும் குளிரூட்டியது.

நிறுத்தம் அடைந்து, வரிசையாக கடைகள்:மீன் கடை, காய்கறி கடை,ரொட்டி, இனிப்பு கடை, காலணி/மூடணி கடை, ஒப்பனைப் பொருட்கள், பழக்கடைகள் வரிசையாக பிரஞ்சு மொழியில் கூவி அழைத்தனர், வாடிக்கையாளரை.
வண்டிகளில் இறக்கி, கூடாரம் அமைத்து, வண்ணக் கோலத்தில்.நம் ஊரில் காணாத காய்கறிகள், பழங்கள்.

'அவக்கெடா', போன்ற காய்/பழம், 'அவக்கேடு' என்று நினைக்காதீர். இலத்தின்_அமெரிக்க நாட்டிலிருந்து தோன்றிய வெள்ளரி ஒத்த தோற்றம்.ஆயினும் வெள்ளரி அன்று! அதை நறுக்கி, 'சலாத்' எனும் கலவை, தக்காளி நறுக்கித் துண்டுகள், மிளகுத்தூள் தூவி உணவுக்கு முன் சாப்பிடுகின்றனர்.வெண்ணய் போன்ற குழைவு/சுவை, புளிப்பும்/இனிப்பும் இன்றி, 62 ஆண்டு கால நாவின் சுவைக்கு, புதிய அனுபவம், சுவைத்து அறிந்திட முயன்றோம், முழுமையாக.

அதனூடே, இது என்ன காய்/பழம் என்ற சரித்திரம் அறியும் முயற்சி.மகளும் அளித்ததைக் கூற, மருமகனும் கூடுதல் விவரம் அளிக்க, விடை தேடும் மனம் இணையத்தை நாட; எண்ணங்கள் விரிந்திட, ஆவல் கூடிட.

காய் அல்ல, ஒரு வகை பழம், தெற்கு மத்திய மெக்சிகோவில் தோன்றியது.பூத்து காய்க்கும் தாவர குடும்பம்,'லாராசியே' என்ற தாவரவியல் பெயர் தாங்கியது.100 கிராம் பழத்தில், 160 கலோரி சத்து உள்ளது.

நம்மூர் பப்பாளி போன்ற வடிவம் அல்லது குண்டு சுரைக்காய் தோற்றம் என்றும் கூறலாம்.1.2 கிலோ வரை கூட ஒரு பழத்தின் அளவு இருக்கும்.மூன்று, நான்கு ஆண்டுகள் கழித்து காய்க்கும்/கனியும், சில 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் எடுத்துக் கொள்ளும்.மேலும், சில காய்க்காது போனாலும், கூடுதலான மரங்கள் தோன்ற, மகரந்த சேர்க்கைக்கு உதவிடும்.

உடலுக்குத் தேவையான, ஆரோக்கியமான கொழுப்பான -'மோனோ சேச்சுரேடட் கொழுப்பு' உள்ளடக்கியது.கொழுப்பை குறைத்து, இதய நலத்திற்கு ஏற்றது.குளிர் நாடுகளில், குளிர்ந்த காலத்தில், பனி தாக்காத வகையிலான, 'அவெக்கெடா' பயிரிட வேண்டும்.

தட்ப-வெட்ப, துணை தட்ப-வெப்ப, பருவ நிலைகளில் மட்டும் பயிரிட தோதானது.20லிருந்து, 40 அடிகள் வரை வளரும்.5 அல்லது 7 ஆண்டுகளில், 200லிருந்து 300 பழங்கள் தரும்..ஓராண்டு விட்டு அதிக மகசூல் அளிக்கும், 'அவெக்கெடோ' மரம்.ஆண், பெண் இரு பாகங்கள் உடையது.

இரண்டு நாட்கள் மட்டும் அதன் பெண் பகுதி மகரந்த சேர்க்கைக்கு இரண்டிலிருந்து, நான்கு மணி நேரம் திறந்திருக்கும்.இந்த ஒரு பழமே நமது சிந்தனையைத் தூண்டும், புரிதல் ஏற்படுத்தும் எனின்; மேலும் சில பழங்களைக் கண்டேன்.

அவை குறித்தும் அறிந்து கொள்ள  ஆவல் கொண்டேன்.அறிவார்ந்த அலசலுக்கு எல்லையேது?

 இது குறித்து அசை போட்டு, தக்காளிகள் பலவகை, பீச் பழங்கள் குண்டாகவும்,தக்காளி வடிவத்திலும்; கிவி பழங்கள்; பருத்த, தடித்த,நீளமான கத்தரிக்காய், ஒவ்வொன்று கால் கிலோவிற்கு குறையாமல்; கோசு நிறை பெரிது, எடை இலகுவாக;வெள்ளை உருளை அனைத்து காய் கறிகளும், ஒரு கிழமைக்கு உகந்த கொள்முதல் 20 'ஈரோ'க்குள் (பிரஞ்சு பணம் ஒரு ஈரோ உரு.85).

நமது ஊர் சந்தை கொள்முதல் ஒப்பீட்டில், சிக்கனமாகவே எமக்குத் தோன்றியது.நடுத்தர/கீழ் நடுத்தர வகுப்பினரின் வரவு செலவிற்கு ஏற்ற/உகந்த சந்தை.

பீச் பழம் தேர்வு செய்யும் தருணம், கொள, கொளவென்று இருந்தது.கடைக்கார பெரியவர், இரண்டு நாட்களுக்குள் சாப்பிட வேண்டும் என்று எச்சரிக்கை தந்தார்., பக்கத்தில் தக்காளி வடிவ பழத்தை சுட்டினார்.

இவர் கடை பின்னால், ஒரு வெள்ளை நிற 'வேன்', பிரெஞ்சு எழுத்துகளில் பளிச்சிட, "கேட்டலோனியா", என்கின்ற வார்த்தைகள், என்னை நிமிர வைத்தது.

"ஸ்பெயின்" நாட்டில், தன்னாட்சி உரிமைக்காக,, சனநாயக முறையில், வெகுண்டெழுந்து போராடிய மக்களின், உரிமை உணர்வு, எமது நினவலையில் நீண்டது.காய்கறிகள் ஸ்பெயினிலிருந்து விற்பனைக்கு, வருகின்ற விவரம் கேட்டறிந்தேன்.'பிளாஸ்டிக்' குவளைகள் இத்தாலியில் இருந்து விற்பனைக்கு விநியோகம் ஆவதையும் அறிந்தேன்.

சந்தையை இரண்டு, மூன்று சுற்றுகள். உடல் நடைகூட்ட, உள்ளம் சிந்தனை விரைவூட்ட, உணர்வுகள் ஊட்டம் பெற, திரும்பும் வழியில், ஒரு பெண்மணி, கையில் துண்டறிக்கையுடன், விநியோகம் செய்திட, உடன் ஒத்த ஒருவரும் கைகளில் துண்டறிக்கையுடன்.

பாலாவக் கண்டவுடன் அவர் பேசத் தொடங்கினார்.சில மணித்துளிகள் கழிந்த பிறகே, அது உசாவல் என்றறிந்தேன்.தொடக்கத்தில் நம்மூர் மத பிரசாரம் போல் நமக்குத் தோன்றியது.

நானும் ஒரு துண்டறிக்கையை வாங்கி, தத்து, பித்து என்று படிக்க முயன்று புரிந்து கொண்டது, முதாலளித்துவத்திற்கு எதிரான ஒரு கட்சி/அமைப்பு என்பதை"முதலாளியத்திற்கு எதிரான ஒரு புதிய கட்சி", என்பது எமக்கு புரிந்த மொழி பெயர்ப்பு, பிரஞ்சு மொழியில்,"nouveau parti anti-capitaliste",
என்று அச்சிடப்பட்டிருந்தது.

 என் ஆர்வம் அறிந்த பாலா, நடுத்தர வயதைக் கடந்த அப்பெண்மணி, பேராசிரியை என்றும், அவர் பெயர், 'கிளமோன்',பள்ளியில் கிளர்ச்சி எண்ணம் உடையவர் என்றறியப்பட்டவர்.பாடம் நடத்தும் சமயம், பொதுப் பிரச்னை குறித்து தொட்டு விட்டால், மணிக்கணக்கில், மாணவர்கள் பாடத்தை பிடிக்காமல், சில சந்தர்ப்பங்களில் அவரைக் கிண்டி விட்டு, கிளரி விட்டு, வேடிக்கைப் பார்ப்பார்கள் என்றான்.

படிக்கும் மாணவருக்கு "பூர்சு" என்கின்ற உதவித் தொகையை பிரஞ்சு அரசாங்கம் குறைத்தபோது, ஆயுதம் வாங்குவதற்கு நிதி இருக்கிறது.கல்விக்கு உதவிட நிதி இல்லை, என அரசைக் கண்டிக்கும் போராட்டத்தை நடத்தியவர், என்று அவரது அருமை, பெருமைகளை, அடுக்கிக் கொண்டே, காரில், வீடு திரும்பினோம்.

பிரஞ்சுமொழி சரளம் இருந்தால், அவரிடம் என் மனவுணர்வுகளை நேரிடையாக பரிமாறிக் கொண்டிருந்திருக்க இயலும். ஆதங்கம் அலை மோத, இரண்டாவது ஞாயிற்று சந்தை பட்டறிவு, இப்படியாக என்னுள் பலமான ஓட்டம்!

No comments: