Friday, February 20, 2015

மருத்துவமனையும் துப்புரவும்!

தற்செயலாக ஒரு நெருக்கடியின் பிடியில் அரசு மருத்துவமனை பக்கம் அடியெடுத்து வைக்க நேர்ந்தது.அவசர கதியில் தீவிர சிகிச்சைப் பிரிவு அல்லாடிக் கொண்டிருந்தது.

 மூத்த மருத்துவர்," என்னங்க வயசானவங்களை தனியே அனுப்பியிருக்கீங்க, அவுங்களுக்கு சிவியர் அட்டாக் தெரியுமா" என அழுத்தமான தொனியில் கேட்டுக்கொண்டிருக்க,செவிலியர் ஒருவர் கேஸ் ஷீட்டை காண்பித்து இதில் கையெழுத்து போடுங்க,

 நீங்க என்ன வேணும் என்று வினவிக்கொண்டு, மேலும் கீழும் என்னை நோட்டமிட்டார்.பிறகு நீங்க அனைவரும் வெளியில் நில்லுங்க என்று கதவை இழுத்து சாத்தி கடமை செய்தார்.

தாழ்வாரத்தில், அங்கும் இங்குமாக மனிதர்கள் குத்தம் காலிட்டு உட்கார்ந்து துயரத்தை பங்கிட்டுக் கொண்டிருந்தார். நின்ன கால் நிலைக்க, உட்கார மனமில்லாமல் நாற்காலியை அல்லது விசுப்பலகையைத் தேடினால் விசும்பல்தான் வரும்போல் இருந்தது.

எங்கும் அவைகளுக்கு இடமில்லை.நல்லதுதான் போங்க! இருந்தால் அங்கும் இங்கும் இழுப்பார்கள்,இடத்தை அடைத்துக் கொள்ளும் தொல்லை இல்லை இப்ப! கிடங்கி போல இடம் இருப்பதால் அடைத்து உட்கார்ந்து கொள்ளலாம், படுத்தும் கொள்ளலாம்.

இடையிடையே நோயாளிகளை சுமக்கும் சக்கர வண்டிகளும், கிரீச் கிரீச்சிட்டு ஏற்ற இறக்கமாக, வயதானவர்களைப்போல் தள்ளாடி, லிப்ட்டுக்கள் சென்றும், வெளியேறியும் வினோத பயணம்.

குப்பை கூடைகளுக்கு பொசுப்பில்லை, அங்கும் இங்குமாக, கட்டுத்துணிகளின் மிச்ச சொச்சம்,முகமூடிகளின் முத்திரைகள்,வெற்றிலைப்பாக்கு, சிகரெட்டுத் துண்டுகளின் சிங்காரம்,

 வீசி எறியும் பூக்கள், திண்பண்டங்கள், பொட்டலங்கள் என பலதிறப்பட்ட பொருள்கள் அங்கும், இங்கும் முரசறிவிக்கும் மருத்துவமனை வளாகத்திற்குள்.

முனகலுடன் ,முனகலாய்,கூச்சல் ஒலிகளை சுமக்கும் ஏசி எந்திரங்களின்
வெளியேறும் நீர்வீழ்ச்சிகள் ஓடையாய் எச்சில்கள் சுமந்து, ஈக்கள் பாக்கள் இயற்றும் பான்மை நம்மை நினைவுக்கு கொண்டுவரும்

 நீங்கள் அரசு மருத்துவமனையில்தான் இன்னமும் இருக்கின்றீர் என்று.

தகரக் கொட்டகைக்குள் தொலைபேசி எக்சேஞ்ச்,தாரை தாரையாய் தொங்கும் ஒட்டடைகள் வெளவாள் தோற்கும், உடைந்தும், பெயர்ந்தும்,உரிந்தும் நிற்கும் சுவர் ஓரங்கள்,சுதைப் பூச்சுகள்,கரப்பான் பல்லிகளின் அடைக்கலமாக

 .அட்டைப் பெட்டிகளை அடுக்கி வைத்து, படுக்கை அமைத்து தூங்கும் 'அயராத ஊழியர்கள்'-மருத்துவமனை காப்பாளர்கள்.

மருத்துவமனை உணவு நேரமாகும், சிற்றுண்டி வாங்கி வாருங்கள் என சாலையோர உணவகங்களுக்கு சலுகை காட்டிடும் ஊழியர்கள்,

செவிலியர்கள்.சிரித்தால் முத்து உதிரும் எனக் கவனமாக,உதிராமல் செயல்படும் உயரத்தில் சேவகம்.

விரட்டுவது, வெளியேற்றுவது, அதிகார தொனியில் அதட்டுவது, ஆர்ப்பரிப்பது: அரசாங்க மருத்துவமனை ஊழியம்!

No comments: