Sunday, April 29, 2018

சமூக நலன்?



உங்களால் என்ன செய்ய முடியும்? அவர் நிறைய பணம் வைத்திருக்கிறார்; செலவு செய்திருக்கிறார். மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி, அறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், புதுச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவ மனைகள், கல்வி கூடங்கள் ஏக்கர் கணக்கில் நன்செய் நிலங்களையும், புன்செய் நிலங்களையும் விழுங்கியபோது, நீங்கள் என்ன செய்தீர்?  எங்கு போனீர்?

 புதுச்சேரி, திருவண்டார்கோவில் அருகில் மருத்துவக் கல்லூரி விளை நிலங்களை ஏப்பம் விட்டு எழும்பியபோது என்ன செய்தனர் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள்.இந்தப் பாதையின் தொடர்ச்சியாக, ஊசுட்டேரி தெற்குப் பகுதியில், ஏரிக்குத் தலைவாசலில், லட்சுமி அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி அமைத்து உருவாக்கி வந்தது.

 இதில் என்ன தவறு? ஏன்? இதை எதிர்க்க வேண்டும் அவர் கிறித்துவராக,வன்னியராக இருப்பதால், அவர் வளர்ச்சி பொறுக்கவில்லை! நீங்கள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வர வேண்டுமா?

இப்படியெல்லாம், பல பேச்சுகளை நாங்கள் சந்தித்து, கடந்த காலங்களில் சூழல் காக்கும், மக்கள் திரல் போராட்டங்களை முன்னெடுத்தும், அரசாங்கம் மசியவில்லை!

 கலிதீர்த்தாள்குப்பம் பகுதியில், மணக்குள விநாயகர் மருத்துவமனை/மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்றவைகளும் விளை நிலங்களை விழுங்கியவைதான்.புதுச்சேரி, கனகச் செட்டிக்குளம் பகுதியில் புன்செய் நிலப்பகுதியை விழுங்கிய, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்லூரி  இந்த வரையறைக்குள் வருகின்ற வணிக கல்வி முயற்சி/முன்னெடுப்புகள் தான்.

  புதுச்சேரி மாநிலத்தைச் சுற்றி, திருக்கனூர், திருபுவனை, கிருமாம்பாக்கம், கொரவளிமேடு, பாகூர், பரிக்கல்பட்டு போன்ற கிராம விளைநிலப் பகுதிகள், கல்வி வியாபாரத் தொழிற் கூடங்களால் உருமாறி, உருக்குலைந்து, கிராமியப் பொருளாதாரத்தை, நீர் நிலைகளை, ஆதாரத்தை மெல்ல,மெல்ல, அழித்து அடையாளம் தெரியாமல் ஆக்கிவிட்டன.

கல்விக் கூடங்கள் போதும், கழனிக் கூடங்கள் வேண்டாம் என்கின்ற மன மாற்றத்தை, நில வணிக நோக்கில், விளைபொருள் இலாபகரமாக இல்லாத வேளாண்மச் சூழலை பயன்படுத்தி, ஏற்படுத்தி உள்ளது முதலாளி வர்க்கம்.

படித்தவர்கள், பதவியில் இருப்பவர்கள் வைத்திடும் வாதம் வேடிக்கையானது. எல்லாம் முடிந்து விட்டது, விவசாயம் வேலைக்கு ஆகாது. பத்தாண்டுகளில் புதுச்சேரியில் நீர் கிடைக்காது. மிகுந்த தட்டுப்பாடு ஏற்படும். நிறைய பணம் குவித்தவர்கள் காசு கொடுத்து தங்கள் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வார்கள்.

அரசியல் உயர்மட்டத்தில் ஆலோசனை சொல்லக் கூடிய நீரியல் நிபுணர்களுக்கு இது தெரிந்துதான் நடக்கிறது. நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சி வறண்ட நிலமாக ஆக்குவதில் கற்றறிந்தவர்களின் கயமை வள்ளுவருக்கும் ஏற்புடையதல்ல!

கட்சி அரசியல் முழுநேர பிழைப்பினர், ஒரு சிலரை தவிர்த்து, தொழில் வளர்ச்சி, முன்னேற்றம் என கல்வி நிலையங்களில் பெருமளவில் முதலீடு செய்து, உழைப்புச் சுரண்டலில் கொள்ளை இலாபம் ஈட்டுகின்றனர்.

இயற்கையே தாய், அதனை அழித்து, விளைநிலங்களை பாழடித்து, ஏரிகளை தூர்த்து, குளங்களை மாய்த்து உருவாக்கப்படும் வளர்ச்சி எவ்வளவு விலை கொடுத்து எவரின் நிலை கெடுத்து என்பதை நீண்டகால சமூக நலன்களின் அடிப்படையில் ஆய்ந்தறிதல் வேண்டும்.

காலச் சக்கரம் விரைவாக சுழல்கிறது.காடுகளை அழித்தது;கழனிகளை அமைத்தது; நீர் நிலைகளை கெடுத்தது, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் மணற்சாலைகளை, கான்கிரீட் சாலைகளாக, மூலை முடுக்கில் எல்லாம், சந்து பொந்துகளில் அமைத்தது சாதனைப் பட்டியல் அன்று. அது வேதனைப் பட்டியல்.பெய்யும் மழை நீர் பூமிக்குள் செல்லவிடாது, தடுப்புச் சுவர்களாக, அரண்களாக மாறி, சூழல் சீர்கேட்டை விரிவு படுத்தியுள்ளது.



No comments: