Saturday, April 28, 2018

இழப்பு !

இறப்பு என்பது இயற்கை என்றாலும், துயரம், அழுகை, துடிப்பு ஆகிய உணர்ச்சிகள் நம்மை உலுக்கி விடுகின்றன. அதுவும், உறவுகளின் இழப்பு பலவித சங்கடங்களை ஏற்படுத்துகிறது.இயல்பு நிலை இழக்க வைக்கிறது.

நலக்குறைவினால் விளையும் இறப்பு, நமக்கு பல அனுபவங்களை உணர்த்துகிறது.இயற்கையை பேணாதது போலவே, இயற்கையின் அங்கமாகிய மனிதன் தன் உடல் நலத்தை பேணாது, மனம் போன போக்கில், மதி மயங்கி வாழ்கிறான்.பலவிதமான அவசியமற்ற பழக்க, வழக்கங்களுக்கு சிறையாகி, பின் இரையாகிறான்.

குடும்பப் பள்ளி அளித்திடும் கல்வி, அதன் வழி உருவாகிடும் முதற்கட்ட மனிதன், பள்ளியில் பக்குவப்படுத்தப்பட்டு, நடைபோட வேண்டும்.அதிலும், பல சிக்கல்கள். அமைந்திடும் ஆசிரியர், பள்ளிச் சூழல் ஆகிய புறநிலைகளின் செல்வாக்கு, மனிதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.

பலகீனங்களின் பிடியில், அதன் பழக்கத்தில் வளரும் குழந்தை மனதின், பல ஆண்டு வாழ்க்கைப் பயணத்தில், பல புதிய தடங்களை பதித்தாலும், முதல் இரண்டு கட்ட பட்டறிவு அவனை தடுமாற வைக்கிறது.

உணர்வு நிலையில் இவை யாவும் அறிந்தாலும், பின்னுக்கு இழுக்கும் பலம் வாய்ந்தது.சரியான வளர்ப்பு முறை, பள்ளிக்கல்வி முறை, கல்லூரி வாழ்க்கை ஆகிய தொடர் பயண நெடுகிலும், சீரான வாழ்க்கை; நெறிபடுத்தும் வாழ்க்கை மிக முக்கியமான வாழ்க்கைத் திருப்பங்கள் ஆகும்.

அடித்தளம் அமைத்திடும், பதியம் போடப்படும்  பருவங்கள் எனில் அது மிகையில்லை. வளர்ந்த வாழ்க்கையின் இறப்பும் இதை ஒட்டியே அமைகிறது என்கின்ற உணர்வும் பட்டறிந்தவர் அனைவரும் அறிந்திடும் உண்மையாகும்.

No comments: