Wednesday, March 21, 2018

வன விலங்குகள் ஆணையம்!

வனவிலங்குகளுக்கு எதிரான வன்மங்கள் தொடர்கதையாகிறது! மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாநிலப் பகுதிகளில். தொடர்ந்து பெட்டிச் செய்தியாக, பேசும் செய்தியாக ஊடகங்களில் சில நாட்கள்.வனத்துறை அதிகாரிகளுடன், மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனை; வனத்துறை அமைச்சர் நேர்காணல், அத்துடன் அடங்கிப் போகும்.

வனப்பகுதிகளில் உள்ள தோட்டப் பயிர்கள் நாசம்; குடியிருப்புகள் சேதம்; ஓரிருவர் சாவு ஆகியவற்றுடன், மனித உடமை அழிப்பு, உயிரிழப்பு செய்திகளின் அழுத்தம் அதிகமாக, வனவிலங்குகளின் இழப்பு; வாழ்விட அழிப்பு; உணவுப் பற்றாக்குறை; காட்டுப்பகுதிகளில் நிலவும் வறட்சி ஆகிய பிரச்னைகளில் தீர்விற்கு இதுவரை ஆக்கபூர்வ செயல் நடவடிக்கை அரசிடம் இல்லை!

பல தளங்களில், துறைகளில்; மேம்போக்காக செயல்படும் அரசு நிர்வாகம்; ஆட்சி அதிகாரம் இப் பிரச்னையிலும் நீண்ட நெடிய, நிலைப்பான தீர்வுகாண முனைப்பும், முன்னோடித் திட்டமும் இல்லை!

 மனிதர் வாழ்ந்தால் போதும், அவர் வாக்காளர், அடுத்தடுத்த தேர்தலில் அவர்களை எதிர் கொள்ள வேண்டும் என்ற உணர்வு, முந்துரிமை, விலங்குகள் தானே அவை! என்கின்ற அலட்சியம், அவை என்ன செய்துவிடப் போகிறது? என்னும் அலட்சிய மனப்பான்மை, போக்கு மேலோங்கி விளங்குகிறது.

சூழல் காப்பாளர்களும், சிறுபான்மை அளவில் தங்கள் எதிர்ப்புக் குரலை பதிவு செய்தாலும், அதன் வீச்சிற்கு ஆதரவு அளித்திடும் ஊடகங்கள் , மிகச் சிலவே! மனித உரிமை இயக்கங்களும், ஆர்வலர்களும், இத்தகைய கொடுமை அவர்களது அமைப்பு விதிகளுக்கு, செயற்பாட்டு வரையறைகளுக்குள் வரவில்லை என ஒதுங்கி வருகிறார்கள் அல்லது பதுங்கி வருகிறார்கள்!

மனித உரிமைக்கு பல ஆணையங்கள் உள்ளது போல், வன விலங்குகள் வாழ்வுரிமைக்கு ஆணையம் ஒன்று அரசாங்கம் அமைத்திட வேண்டும்.

வன உரிமைச் சட்டம், வனவிலங்குகள் பாதுகாப்பு வளையங்கள் ஆகியவற்றை முறையாக நிர்வகித்து, பாதுகாத்திட செயல்திட்ட ஏற்பாடுகள்,

மாவட்ட ஆட்சியர் , மக்கள் பிரதிநிதிகள், வனத்துறையினர் ஒருங்கிணைந்து, சூழல் பாதுகாப்பின்  ஒரு முக்கிய அம்சமாக வனவிலங்குகள் வாழ்விடப் பாதுகாப்பு உறுதி செய்திட வேண்டும் என்பதே,

 மனித நேயம் உள்ள சூழல் காப்பாளர்களின் ஒருமித்த கோரிகைக் குரல் ஆகும். அரசு செவி சாய்க்குமா?

No comments: