Sunday, March 11, 2018

விழிப்பு!

நேற்றிரவு வெகுநேர விழிப்பு. சல்லிக்கட்டு-ஏறு தழுவல், தமிழரின் வீர விளையாட்டு, திட்டமிட்டு மூன்றாண்டுகளுக்கு மேல் தடை, உயிர்வதை காரணம் காட்டி, 'பீட்டா' அமைப்பின் வழக்கில் உச்சநீதி மன்ற நடவடிக்கை.ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில், கட்சி அரசியல் கங்கணம் கட்டி, இவ்வாண்டு தை மாதம் உறுதியாக சல்லிக்கட்டு நடைபெறும் என்று ஊடகங்களில் உற்சாக உத்தரவாதம் அளிக்கும்.

ஆளும் கட்சி வீச்சுரை,'இன்று ரொக்கம் நாளை கடன்' என்னும் அறிவிப்பாக, வெகு மக்களை புதிய கோணங்களில் திசைத் திருப்பும், ஏமாற்றும். காவிரி படுகையில்- கடைமடைப் பகுதியில் வேளாண் மக்கள் எதிர்கொள்ளும் துயரம், கொடுமை எழுத்தில் அடங்கா! சொல்லியும் மாளாது

.பயிர் காக்க உயிர் தொலைத்த உத்தமர்கள் பெட்டிச் செய்தியாக சில நாள்.தரவுகளை காத்திட தர்மத்தை விலை கொடுக்கும் அரசுகள், அரசியல் பலன்கள் இழந்திட விரும்பாது, சில ஆயிரங்கள் இழப்பீடு, இன்னல் போக்குமா?

நாடாளுமன்றமும், நிர்வாக அமைப்பும், நீதிமன்றமும் ஒரு மாநில அடித்தள மக்களுக்கு ஆதரவாக செயல் முனைப்பு காட்டாது, உணர்ச்சி பூர்வமான செய்திகளுக்கு உரம் போட்டு, மக்கள் கவனத்தை திசைத் திருப்பும் நடவடிக்கையை வெகு நேர்த்தியாக திட்டமிட்டு அரங்கேற்றுகிறது.

வேளாண்மையை ஒழித்திட்ட முந்தைய அரசு,உழவுத்தொழிலை ஒழித்திடு இன்றைய அரசு, உணவு உற்பத்தி மக்கள் நுகர்வுக்காக அல்ல ஏற்றுமதிக்காக என திட்டமிட்டு, பணப்பயிர்களை, மண்ணுக்கு பொருந்தாத வேளாண் விளைச்சல் பயிர்களை நடைமுறைப் படுத்தி, நாசமாக்கியது மட்டுமில்லாமல் இறக்குமதியை நம்பி, உள்ளூர் விவசாயத்தை படிப்படியாக ஒழித்து

தொழிற்சாலைகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, பன்னாட்டு பெரு நிறுவனங்கள் இயற்கை வளங்களை சூறையாட, மனித வளங்களை கூலி உழைப்பாளிகளாக்கிட, நுட்பமாக, சாமர்த்தியமாக,  கை கோர்த்து களப் பணியாற்றி வருகிறது.

இவ் வடிப்படையில்தான், தேசிய இனங்களின் கலாச்சார அடையாளங்களை, ஒவ்வொன்றாக, மொழி அழிப்பு/சிதைப்பு, விளை நிலம் ஒழிப்பு, மரபு ரீதியிலான கால்நடைகளை ஒழித்தல்,, வீர விளையாட்டுகளை முடக்குதல், தடை செய்தல் போன்ற பல்வேறு பரிமாணங்களில், கலாச்சார வல்லாண்மையை, பன்முகத் தன்மையை பாழ்படுத்தும், நாசப்படுத்தும் நயவஞ்சக செயல்களை, வாக்கு வங்கி அரசியல், முழு பலத்துடன், வலதுசாரி தேசிய வெறியாக, நிறைவேற்றி வருகிறது

(சல்லிக்கட்டு போராட்ட சமயத்தில், 15 சனவரி, 2017இல் எழுதியது. தற்போது பதிவு காண்கிறது)

No comments: