Tuesday, March 20, 2007

புதுவயில் மக்கள் எழுச்சி...பகுதி..1

கலிங்கா! சிங்கூர்! நந்திகிராம்! இவைகளின் வரிசையில், தேங்காய்த்திட்டு, புதுவையில் மக்கள் எழுச்சி!
தேங்காய்த்திட்டு கிராமத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைப்பது தொடர்பாக, சுற்றுச்சூழல் சட்டப் பிரிவுகளின் கீழ், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்த பொது விசாரணை, 14.02.07ல், புதுவை சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுக் குழு நடத்தியது. அ.இ.அ.தி.மு.கவின் அன்பழகன்,சட்ட மன்ற உறுப்பினர் அவர்கள் மட்டும், வம்பாக்கீரப்பாளையத்தைச் சேர்ந்த சிலருடன் துறைமுகத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பினர். இச்சம்பவத்திற்கு முன்பு, துறைமுக அமைப்பது குறித்து பலமான ஆட்சேபணைகளை ஊர் மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், அரசியல் கட்சியினர் சென்னை உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பை எடுத்துக்காட்டி, வாதிட்டனர். புதுவை மாவட்ட ஆட்சியர் திரு.தேவநீதிதாசு அவர்கள், மக்கள் எழுப்பிய வாதத்தின் நியாயத்தை உணர்ந்து, பொது விசாரணையைத் தள்ளி வைப்பதாக, கூடியிருந்த மக்கள் முன்பு அறிவித்தார்.



அதன் பிறகு, மரப்பாலம் சாலையில் அ.இ.அ.தி.மு.க. கட்சியை தவிர்த்து, ஊர் மக்கள், சமூக செயல்பாட்டாளர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்து கொண்ட, மிகப்பெரிய, எழுச்சியான பொதுக்கூட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் அடுத்த கட்டமாக, தேங்காய்த்திட்டு கிராம மக்கள் தங்கள் வீடுகள் அனைத்திலும் கறுப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.



போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் முயற்சியில், அடுத்த கட்டமாக, நாடாளுமன்ற உறுப்பினர்களையும், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், "தேங்காய்த்திட்டு நிலம் கையக எதிர்ப்புக்குழு"வினர் சந்தித்து, மக்கள் பிரச்சனயை விவரமாக எடுத்துக் கூறினர். தொகுதி சட்ட மன்ற உறுப்பினர், திரு.ச.சுப்ரமணியன் அவர்களையும் சந்தித்து பாதிப்பு குறித்து எடுத்து விளக்கினர். இதற்கிடையில், புதுவை நகராட்சிக் கூட்டத்தில் ஆழ்கடல் துறைமுகம் அமைப்பதை எதிர்த்து ஒருமனதாக தீர்மானம் இயற்றியும், புதுவை அரசுக்கு அனுப்பி வைத்தனர். மாநிலத் துணை நிலை ஆளூநர், தலமைச்செயலர் ஆகியோரையும் சந்தித்து சுற்றுச்சூழல் கேடு, ஒட்டு மொத்த புதுவையின் நீர் ஆதாரம், கடல் ஆதாரம் அழிந்து போகக்கூடிய நிலமை குறித்தும் விரிவாக விளக்கி, முறையிட்டு, மனுவும் அளித்தனர்.


இந்த கிராமாத்தில் 2500 குடும்பங்கள், "தலைமுறை தலைமுறையாக", பயிர்த்தொழில் நடத்தி, "கொத்தாகவும், கொடியாகவும்" வாழ்ந்து வருகின்றனர்.பசுமையான தென்னந் தோப்புகள், கத்தரிக்காய், வெள்ளரிக்காய், கீரை வகைகள், மரவள்ளி போன்ற பயிர் வகைகள் பயிரடப்பட்டு வரும், வளமான, ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள, நன்னீர் தாராளமாக மக்களுக்கு கிடைத்து வந்த, சிறிய கிராமமாகும். முன்னரே, மீன் பிடித்துறைமுகம் அமைக்க, 40 ஏக்கர் நிலத்தை அரசு எடுத்துக் கொண்டதின் காரணமாக, உப்பு நீர் பெருமளவு நிலத்தடி நீருடன் கலந்து விட்டது. கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டு 3 கி.மீ அளவிற்கு கடல் உள்ளே புகுந்து விட்டது. இதன் காரணமாக, பல மீனவ கிராமங்கள் பெரும்பாலும் பாதிப்படைந்தன. உப்பளம் சாலையில் இருந்து தேங்காய்த்திட்டுக்குச் செல்லும் பகுதியில் பன்னெடுங்காலமாக நீரோட்டத்துடன் படகு போக்குவரத்து இருந்த பனஞ்சாலை ஆறு, தற்போது சுவடு தெரியாமல் அழிக்கப்பட்டு, அதன் மீது தார்ச்சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.



19.03.07ல், "புதுச்சேரி துறைமுகக் கழகம்" எனும் பெயரில் பெயர்ப்பலகை வைத்து, "சுபாசு புராடக்ட்சு மற்றும் மார்கட்டிங் குழுமம்", அமாவாசை அன்று பூசை நடத்தியுள்ளனர். இதைப் பார்த்து தவித்த மக்கள், கொந்தளித்து, சாலை மறியல் செய்தனர். முன்னதாக, கட்டுமான பணிக்காக, பூசை செய்த இடத்தில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி, தங்கள் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தி, உப்பளம் பகுதியில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். திரு.இலட்சுமி நாரயணன், சட்ட மன்ற உறுப்பினர், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தோழர்.லோகு.அய்யப்பன் தலைமையில் திரண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். தமிழர் தேசிய இயக்க அழகிரி, மக்களுரிமைக் கூட்டமைப்பு சுகுமாரன், தலித் விடுதலைச் சிறுத்தைகள் பாவாணன் ஆகியோரும் மறியலில் கலந்து கொண்டனர். "நில கையக எதிர்ப்புக் குழு"வின் தலைவர், திரு. காளியப்பன், துறைமுக வேலை உயர்நீதி மன்ற உத்தரவை மீறி நடக்கிறது என்று காவல் துறையில் புகார் அளித்தார். துறைமுக எதிர்ப்புக் குழுவின் தோழர்கள் பாலமோகனன் உட்பட பலர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.



நேற்றைய செய்திப்படி, ஊர் மக்கள் 10 பேர் மீது காவல் துறையினர் வழக்கு போட்டுள்ளனர். 14 மீட்டர் கடலை ஆழப்படுத்தினால்,"சுனாமி" போன்ற ஆழிப்பேரலைத் தாக்குதலின் போது கடல் அலையின் விசை அதிகமாகி, 3 கி.மீ அல்லது 5 கி.மீ வரை கடல் நீர் உள்ளே வந்து விடும். தோராயமாக, 90 இலட்சம் கியூபிக் மீட்டர் கடல் மண் தோண்டப்பட்டு மேல் பரப்பில் கொட்டப்பட்டால், கிராமமே மூழ்கிப்போகும். வணிக ரீதியாகவும், இத்துறைமுகம் இலாபகரமாக இருக்காது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி, உலகிலேயே அதிகமான கடல் நீர் ஓட்டம் உள்ளது "கோரமண்டல் பகுதி" என ஆய்ந்து அறியப்பட்டுள்ளது.




நிலைமை இவ்வாறிருக்க, நந்திகிராம் படுகொலகள் நடந்து கொண்டிருக்கும் சூழலில், பூசை நடத்தி, ஒப்பந்தக்காரர் அரசு ஆதரவுடன் முனைப்பாக நின்று நேற்று (19.03.07) தொடங்கினர் அழிவு வேலையை! ஆற்று கிராமத்தில். ஆழ்கடல் துறைமுக அநியாய வேலையை! மக்கள் எழுச்சியை, எதிர்ப்பை சற்றும் பொருட்படுத்தாது, ஒற்றை ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் 2700 கோடி உருவாய் திட்டம். விளை நிலங்களில் பொதுமக்களை பாதிக்கக்கூடிய திட்டங்கள் குறித்து மிகப்பெரிய விவாதம் நாடாளுமன்றத்திற்குள்ளும், வெளியும் நடந்து கொண்டிருக்கும் வேளையில். பூனை போல், பூசை போட்டு வேளை தொடங்கியது எவ்விதத்திலும் முறையானதல்ல.

No comments: