Sunday, March 18, 2007

நினைப்புக்கும் கூட...

குண்டும், குழியுமாய் இருந்த சாலை!
சேறும், சகதியுமாய் இருந்த சாலை!
மண்ணும், மரங்களும் அடர்ந்த சாலை!
மாடு பூட்டிய வண்டிகள், போய் வந்த சாலை!
மனிதர்கள் நடந்து, கடந்து சென்ற சாலை!


மழைக் காலங்களில் குளங்களாக,
குட்டைகளாக, காட்சி தந்த சாலை!
காகிதக் கப்பல்கள் விட்டு மகிழ்ந்த சாலை!
தவளைக் குஞ்சுகள் தாவிக்குதித்த சாலை!
வெள்ளம் வந்து, மரக்கிளைகள்,
தென்னை மட்டைகள், விழுந்த வேளை,


பச்சைக் கிளிகள் நனைந்து, பறந்தும்,
பறக்காமல், பயந்த வேளை,
தூக்கணாங் குருவிகள், குடைசாய்ந்த காலம்,
தண்ணீர் பாம்புகள், தலையெடுத்து,
தென்னை ஓலை சுருக்கில்,
சிறுவர்கள் விளையாடிய காலம்,


வீழ்ந்த பூவரசம், ஒதியம்,
தென்னை ஓலைகள் வைத்து,
குடில் அமைத்து, பீப்பி செய்து ஊதி,
பூவரசம் பூவை தலையில் சூடி,
தாலிகள் செய்து மாட்டி,


குகை அமைத்து, குதூகலம் காட்டி,
மகிழ்ந்து விளையாடிய,
மழைக்கால சூறாவளிக்குப் பின்,
சுண்டல் செய்து, கிழங்கு வேகவைத்து,
கும்பலாக கூடி தின்ற வாழ்க்கை,


அடை சுட்டு, அடுத்த வீட்டுக்கும் கொடுத்து,
அன்பாக வாழ்ந்த, வாழ்க்கை,
நினைப்புக்கும் கூட, வந்ததின்று பஞ்சம்!

No comments: