Monday, March 5, 2007

காணாமல் போகும் விளை நிலங்கள்-1

"காணாமல் போகும் வேளாண் நிலங்கள்". மு.முத்துக்கண்ணு, மக்கள் குடியுரிமைக் கழகம்.

1961ல், புதுச்சேரியின் மொத்த விளை நிலங்கள் 39,225 எக்டேராகும்.

அ) 0.5எக்டேர் நிலத்திற்கு குறைவாக நில உரிமை உள்ளவர் : 61%
ஆ) 0.50எக்டேர் முதல் 1எக்டேர் நிலம் உரிமை உள்ளவர் : 18%
இ) 1 எக்டேர் முதல் 2 எக்டேர் வரை நில உரிமை உள்ளவர்: 11%


இதில், 90% விழுக்காட்டினர், அதிக பட்சம் 2 எக்டேர் நிலம் மட்டுமே உடையவர்களாக இருந்தனர். 10% விழுக்காடு நில உடமையாளர்கள், 52% விழுக்காடு நிலத்தை உடமையாக கொண்டிருந்தனர். 90% சத நிலம் உயர்சாதி இந்துக்களிடம் இருந்தது. பெரும்பான்மை உழைக்கும் மக்கள் நிலமற்ற தாழ்ந்த வகுப்பினராகவே இருந்துள்ளனர். புதுவைப்பகுதி, நிலவுடமைச் சமூகமாக, கூர்மையான முரண்பாடுகளை உள்ளடக்கியதாக விளங்கிய உண்மை, புலப்படுகிறது.


ஐந்தாண்டுத் திட்டங்களின் கீழ் வேளாண்மைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி உதவிகள், மான்யங்கள், சலுகைகள் மேல்தட்டு, நிலவுடமை வர்க்கத்திற்கே சென்றடைந்தது.


1961ல், மாநிலத்தின் மொத்த வருவாயில், 28.6% விழுக்காடு, வேளாண்மையிலிருந்து கிடைத்தது. 44% விழுக்காடு மக்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்துள்ளது. 1971ல், நிலத்தில் பாடுபட்ட வேளாண்மைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, கூலித்தொழிலாளர் மற்றும் பயிரிடுவோர் சேர்த்து, 47,125ஆகும். இது, மொத்த தொழிலாளர்(1,05,203) எண்ணிக்கையில், 44.80% ஆகும். இவ்வாண்டில், பயிரிடப்பட்ட நிகர நில அளவு 19,032 எக்டேர் ஆகும்.


1960 களிலேயே நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய, சமூக நலச்சட்டங்களில் முக்கியமான, நில உச்சவரம்பு சட்டம், அரசியல் உள் நோக்கங்களுக்காக , காலந் தாழ்த்தப்பட்டு 1973ல் அமுலாக்கம் செய்யப்பட்டது. செல்வாக்கு படைத்த உயர் சாதியினர், சட்டத்தின் ஓட்டைகளில் இருந்து தப்பித்துக் கொள்ள போதிய கால அவகாசம் அளித்தது .அவர்களும் ஏட்டளவில், வேளாண்மை நிலங்களை, குடும்பத்திற்குள் முதலில் பகிர்வு செய்து கொண்டனர். பின்னர் விற்கவும் தொடங்கினர்.


1968-69ல், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பொய்த்தது. வறட்சியின் பிடியில் புதுவை சிக்கி தவித்தது. மத்திய நிலத்தடி நீர் வாரியம், ஆழ் துளை கிணறுகளை மூலக்குளம், மணப்பட்டு, கரசூர், மதகடிப்பட்டு, அகரம், மடுக்கரை மற்றும் காலாப்பட்டு பகுதிகளில் விவசாய, பாசன தேவைகளுக்காக அமைத்தது. முன்னதாக, பாசன வசதிகளுக்காகவும், குடி தண்ணீர் தேவைக்காகவும், பல இடங்களில் திறந்த வெளி கிணறுகள் தோண்டப்பட்டன.



1971ல், புதுச்சேரி மாநிலம் தொழில் துறையில் பின் தங்கிய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே, சில பகுதிகளை அரசு கையகப்படுத்தி,தொழிற்பேட்டைகளை அமைத்தது.

1.தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை 1962 51.00 ஏக்கர்
2.காட்டுக்குப்பம் தொழிற்பேட்டை 1969 15.50 ஏக்கர்



இதே கால கட்டத்தில், சிறு தொழில் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம், சலுகைகள் அளிக்கப்பட்டு, கழனி நிலங்களிலும், தோப்புத்துரவுகளிலும் கீழ்க்காணும் பகுதிகளில் அரசாங்கத்தால் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன.

3.மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை 1976 176.00 ஏக்கர்
4.சேதராப்பட்டு தொழிற்பேட்டை 1982 62.19 ஏக்கர்
5.கிருமாம்பாக்கம் தொழிற்பேட்டை 25.00 ஏக்கர்
6.திருபுவனை மின்னணுவியல் தொழிற்பேட்டை 50.00 ஏக்கர்

1974ல், புதுவை தொழில் முன்னேற்ற வளர்ச்சி மற்றும் முதலீட்டுக்கழகம் அமைக்கப்பட்டது. இதன் காரணமாக பிற மாநிலங்களிலிருந்து குடியேற்றம் அதிகமாகியது .குறைந்த வாடகையில் தொழிற் பேட்டைக்குள் கிடங்கிகள், குறைந்த வட்டிக்கு கடன்கள், போன்ற நிதி உதவி, தடையில்லா மின்சாரம், தண்ணீர், அரசின் வரிச்சலுகை, மான்ய உதவிகள் போன்ற பல சலுகைகள் பெறுபவர் எண்ணிக்கை அதிகமாகியது. இவ்வாறு விளை நிலங்களை அழித்து தொழிற்சாலைகளை அமைப்பதில் அரசாங்கம் எடுத்துக்காட்டாக விளங்கியது.

வேளாண்மை நிலங்கள் பெருமளவில் சில பெரிய நிலவுடமையாளர்களிடமே இருந்தது. விவசாயம் செய்யக்கூடிய வேளாண்மை மக்களிடம், மிகக்குறைவான நிலமே சொந்தமாக இருந்தது. மிகப் பெரும்பான்மையினர் விவசாயத் தொழிலாளர்களாக புதுவையில் இருந்தனர். அரசாங்கத்தின் ஆலோசனையின் பேரில், உடமை வகுப்பினர், பூர்வீக உணவுப் பயிர்கள் உற்பத்தியில் இருந்து விலகினர். கரும்பு, மணிலா, தென்னை போன்ற பணப்பயிர்களை உற்பத்தி செய்ய முற்பட்டனர்.


மான்ய விலையில் உரங்கள், பூச்சி மருந்துகள், டிராக்டர் போன்ற எந்திரங்களை பயன்படுத்தவும் தொடங்கினர். வேளாண்மையை எந்திரமயமாக்கி, பயிர்த்தொழிலில் செறிவாக ஈடுபட்டிருந்த விவசாயத் தொழிலாளர்களை விலக்கி வைத்தனர். நில அடமான வங்கிகள், வணிக வங்கிகளின் குறுகிய கால, நீண்ட கால கடன் உதவிகள் பெற்று, வணிக ரீதியில் பயிர்த்தொழிலில் ஈடுபட்டனர்.


இக்கட்டான, இக்கால கட்டத்தில் வேளாண்மையை மட்டுமே சார்ந்திருந்த, வேளாண்மை கூலித் தொழிலாளர்கள் வாழ்க்கை வறுமையிலேயே இருந்தது. கரையாம்பத்தூர், பனையடிக்குப்பம் போன்ற கிராமங்களில், இவர்கள் தம் வாழ்க்கைப் போராட்டமாக, கூலி உயர்வு கோரி பல நெடிய, தீரமான போராட்டங்களை நடத்தினர்.

No comments: