Saturday, March 31, 2007

மயானக்கொள்ளை!

மயானக் கொள்ளை,
வெள்ளாளன் கோட்டை அழிப்பு.
மாகாளி வேடம் தரித்து,
ஆட்டுக் குலை வாயில் கவ்வி,
சூலத்துடன்.


பேச்சாயிகள், வேப்பிலைக் கொத்துடன்,
ஆட்டம் போட்டு,
ராசா வேடங்கள் தரித்து,
கத்தியுடன், கால் சலங்கைகள்
ஒலி எழுப்பி, கூட்டமாக,
உழைக்கும் பெரும்பான்மைச் சமூகம்,
ஊர்வலம்.


வீடு, வீடாக,
தண்ணீர் குடம் சாய்த்து,
தலை வாசல் கோலம் போட்டு,
பூசை செய்து மகிழ்ந்திடும்,
கலாச்சார நிகழ்ச்சி.


இம்முறை,
ஊர் தனியாக, குப்பம் தனியாக,
வெவ்வேறு நாளில் கொண்டாட்டம்.
அனுமந்தை கிராமத்தில்,
அந்தக் காலத்தில் கொண்டாட்டம்.
இரண்டு, மூன்று நாள்.


கிராம மக்கள் சாரி, சாரியாக,
குடும்பம் குடும்பமாக,
சோத்து மூட்டைக் கட்டி,
வந்திறங்கி, மாட்டு வண்டியை,
ஓரம் கட்டி,
இரவு நேரங்களில்,தென்னந்தோப்புகளில்,
விருந்து, கேளிக்கை.


விடிந்த பின்,
இட்லி, தோசை,
குளக்கரையில் சுட்டுத்தருவார்.
துட்டு தந்தாள்.


மறுநாள் மயானத்தில்,
உணவுப்பண்டங்கள் படைத்து,
சாமி ஊர்வலம் வர,
பழங்களும் சேர்த்து,
நாலா பக்கமும் வீசுவார்.


கொய்யாப்பழம், மாம்பழம், கொழுக்கட்டை,
கடலை,
நானாவித பண்டங்களும்.
பந்து பிடிப்பது போல்,
பக்குவமாக பிடித்துச் சேர்ப்பார்,
பைகளுக்குள்.


சிலர் பேய் பிடித்து,
ஆட்டம் போடுவார்.
"என்ன இது"?
என்று கேட்டால்,
அப்படித்தான்.
"நீ சின்னப்பிள்ளை உனக்குத் தெரியாது"
என்று பதில் இருப்பார்,
பக்குவமாக.


தலைமுடியைப் பிடித்து,
இழுத்துச் சென்று,
மரத்தில் அறைவார்,
குறியீடாக.
பேய் ஓட்டுபவர்.


விழா இடையில் வியாபாரம்,
சுறு, சுறுப்பாக.
விளையாட்டு, வேடிக்கை.
சட்டி, பானைகள்,
சமையல் பாத்திரங்கள்,
கண்ணாடி வளையல்கள்,
பொம்மைகள்,போட்டோ நிலையங்கள்.


பஞ்சு மிட்டாய், கடல் பாசி,
கமர் கட்டு, தேங்காய் மிட்டாய்,
ஐஸ் மிட்டாய்,
கழைக்கூத்து.

No comments: