Thursday, March 8, 2007

"சிங்கிலியா, சிங்கிளியா"

அப்பாவுடன் வாழ்ந்த வாழ்க்கை அனுபவங்களை எவராவது நினைவு கூர்ந்தால், அவரைப்பற்றி கூறிடும் பண்புகளில், அம்மாவின் பேச்சுக்களில் வந்து விழும் சொற்களில், "ஒன் அப்பன் ஒரு சிங்கிளி, அவங்கிட்ட பேசமுடியுமா? எடுத்தெதுக்கல்லாம் அடி, உதை. அத வுடு ஓன் வேலெயப்பாரு". பெருமூச்சுடன், முடியாமல் முணகுவார்.


கோபக்காரர், தண்ணி போட்டுட்டா, தகராறு, வேகம் அதிகம். சாப்பிட முடியுமா? படிக்கமுடியுமா? படுக்கத்தான் முடியுமா? வீட்டில் உள்ள பண்டு பாத்திரங்கள், பானை சட்டிகள், வெளியில் தான். வீதிக்கு விருந்து!


இரு பத்து ஆண்டுகள், நினைவு நாள் இன்று. 'சிங்கிலியா','சிங்கிளியா என்ற ஆராய்ச்சி. தமிழ் அகராதியை வேறொரு சொல்லுக்கு பொருள் தேட முனந்த போது விழிகளை முன்னிறுத்தி, நினைவு அலைகளை, கடிகார சுற்று வட்டத்தில், பின்னோக்கி சுழல வைத்தது.


தொட்டாற் சிணுங்கியா அவர்? இல்லை, சில வேளைகளில் தொடாமலேயே சிணுங்குவார்! ஒரு வில் போல், வில் நாணாக, மிடுக்குடன், நிமிர்ந்த நடையுடன் வாழ்ந்த அவருக்கு 'சிங்கிலி' என்பது நிச்சயமாக பொருந்தாது. 'சிங்கிளி' என்பதுதான் பொருந்தும்.


இச்சொற்கள் வெளிப்பட்ட காலம், இடம், எல்லை ஆகிய பரிமாணங்களை ஆயும் போது, பண்ருட்டியைச் சேர்ந்த செந்திலும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சின்னப்பாவும் திடீரென என் முன்னே தோன்றினார்கள். அவர்களிடமும் பரிசீலனை தொடர்ந்தது. பண்ருட்டி பகுதிகளில், 70 வயதும் அதற்கும் மேல் உள்ள பெரியவர்களின் பேச்சில் 'சிங்கிளி நாய் போல் விழறான்' என்று குறிப்பிடும் பேச்சு வழக்கில் உள்ளது என்பது அறிய நேரிட்டது. ஆனாலும், திருச்சி மாவட்டங்களில், இது போன்ற சொல் வழக்குகள் பழக்கத்தில் இல்லை என்பதும் புலப்பட்டது.

No comments: